போர் பதட்டங்களுக்கு பின்னாலுள்ள அரசியல்


இன்றையஉலகம் ஒருபாரிய யுத்தத்தை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. அனைத்துப் பிராந்தியங்களிலும் போர்ப் பதட்டம் நிலவிக் கொண்டே இருக்கின்றது.  இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்பு பாரிய யுத்தங்களின்றி சிறிய யுத்தங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்தன.  அதே சூழல் இன்றும் காணப்படுகின்றதா,அல்லது வல்லரசுகள் அணுவாயுதத்திற்கு அஞ்சுகின்றனவா என்ற சந்தேகங்கள் மேலெழுந்துள்ளன.

புதிய உலக ஒழுங்கு 1989 இல் உருவாகியது.  அப்போது அமெரிக்கா தனிவல்லரசாக பேரெழுச்சி பெற்றது.  2001 செப்ரம்பர் தாக்குதலுக்கு பின்பு அமெரிக்காவின் பொருளாதாரமும், இராணுவமும் சரிவடையத் தொடங்கியது.  2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியுடன் அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்காண படிப்படியாக உலகப் போட்டியில் வேறுசக்திகள் முனைப்புச் செலுத்த ஆரம்பித்தன.  இது உலகில் பலதுருவ அரசியலை ஏற்படுத்த முனைந்தது. அதில் வன் அதிகாரத்தின் செல்வாக்கு குறைந்து மென் அதிகார உத்திகள் முதன்மையடைய ஆரம்பித்தன. அதில் சீனாஅதிக கரிசனை கொண்டது.  ஆனாலும் அமெரிக்கா தனது அரசியல்-இராணுவ பலத்தையும் நிறுவனமயப்படுத்தப்பட்ட உலகளாவிய கட்டமைப்பையும், நாணயத்தின் வலிமையையும் கொண்டு தனது நிலையைபலப்படுத்த முயலுகிறது.  எனவே இன்றைய உலகமானது அமெரிக்க, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ஜப்பான் என்ற பல அரசுகளின் ஒழுங்குக்குள்ளால் இயங்குகிறது.

ஆனாலும் அமெரிக்கா தனது பிடியைத் தக்கவைக்கவும் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவும் முயலத்தவறவில்லை.  இதனால் உலகில் ஒரு பாரிய வெற்றிடம் ஏற்றபடக்கூடிய நிலையை நோக்கி பல நாடுகள் காத்திருக்கின்றன.  சீனா மென்அதிகார வெற்றிக்காக காத்திருக்கின்றது.  இதனால் ஒரு போர்ப்பதட்டத்தை பிறநாடுகளுக்கூடாக கையாள முனைகிறது.  அதில் ஒன்றாகவே வடகொரியாவின் போர் நடவடிக்கையை நோக்க முடியும்.

சிரியா விவகாரம் அமெரிக்க-ரஷ்யப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.  அதுவும் ஏறக்குறைய ஒரு யுத்தத்திற்கான பதட்டத்தை ஏற்படுத்தியது.  அதனால் ஏற்பட்ட அச்சுறுத்தல் பிராந்தியமட்டதில் மட்டுமல்லாது அதனைக் கடந்தும் ஐரோப்பாவுக்குள்ளும் பதட்டத்தைதந்தது.  அது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாகவே காணப்படுகின்றது.  ஐரோப்பாவும், ஐ.எஸ் மீதானதாக்குதலைப் பற்றிய தீவிரத்தை முதன்மைப்படுத்த முயலுகிறது.


அடுத்த கட்டார் விவகாரமும் மேற்காசியாவில் ஒருபோர்ப் பதட்டத்தை தந்துள்ளது.  மேற்காசிய நாடுகளை அமெரிக்கா தூண்டிவிட்டதன் பிரதிபலிப்பாக கட்டார் விடயம் அமைந்துள்ளது.  கட்டார் மீது எத்தகைய அழுத்தத்தினை கொடுத்தாலும் அதன் இருப்பினைப் பாதுகாக்கும் உத்திகளை அது கொண்டிருப்பதனால் கட்டார் சரணடையாது.  அதற்கு சீனாவும் ரஷ்யாவும் மறைமுக ஆதரவு கொடுத்துள்ளன. ஆனால் கட்டார் மீதான மேற்காசிய சக்திகளின் நடவடிக்கை அதன் எதிர்காலத்திற்கு ஆபத்தானது. கட்டார்-ஈரான் உறவும் கட்டாரில் காணப்படும் அல்ஜசீரா தொலைக்காட்சியின் நடவடிக்கையுமே அமெரிக்கசார்பு சக்திகளுக்கு உள்ள பிரச்சினை.


எனவேகட்டார் விவகாரம் நீண்டகாலவிளைவைஏற்படுத்தக் கூடியது.  அபாயமானது.  இது ஒருபோரைஉடனடியாகஏற்படுத்தாதுவிட்டாலும் எதிர்காலத்தில் ஈராக்,லிபியா, போன்றஅனுபவத்தைஏற்படுத்திவிடும்.  அதுமட்டுமன்றிமேற்குலகம் விரும்பும் ஆட்சிமுறைக்குள் கட்டார் செல்லவேண்டும் என்றகோரிக்கைகட்டாருக்குமேற்கு இலக்குவைத்துள்ளதென்பதையேகுறிக்கிறது.

அடுத்த தென்சீனக்கடல் பகுதி முழுமையான போர்ப்பதட்டத்திற்கும் பரஸ்பரம் எச்சரிக்கைக்கும் உட்டபடுத்தப்பட்டுவருகிறது.  சீன-அமெரிக்க மோதலுக்கான நேரடிக்களமாக தென்சீனக்கடல் விளங்குகிறது.  இதில் சீனாவின் அணுகுமுறை அமெரிக்காவின் அணுகுமுறைக்கு சமமானதாகவே அமைந்துள்ளது.  இருதரப்புகளும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடனேயே செயல்பட விளைகின்றன.  இவர்களின் நடவடிக்கைகள் சர்வதேசக்கடல் சட்டத்தைமீறும்  நிகழ்வுகவாகவே பதிவு செய்யப்படுகின்றன.  இராணுவ-வர்த்தக போக்குவரத்து மையம் என்பதைவிட கடல்வளங்களை இலக்கு வைத்து சீனாவின் எழுச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் களமிறங்கியுள்ளன.

அடுத்த சீனா-இந்திய எல்லையும் பாகிஸ்தான்-இந்திய எல்லையும் யுத்த சூழலுக்குள் நகர்கிறதா என்பது பிரதான கேள்வியாகும்.  இரண்டு எல்லைகளும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் எல்லைகளாகவே உள்ளன.  பாகிஸ்தான்-சீனக் கூட்டு இந்தியாவை ஆபத்துக்குள் நகர்த்தும் விதத்தில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.  இதில் இந்தியாவின் எதிர்முனைவுகளை அமெரிக்கா ஊக்குவிக்கும் கரிசனையுடன் செயல்பட விளைகின்றதையும் உணரமுடிகின்றது.  பிரதமர் மோடியின் அமெரிக்க இஸ்ரேல் பயணங்களுக்கு எல்லை சார்ந்த மோதலே பின்புலத்திலிருந்தது.

எனவே உலகம் ஒரு யுத்த விளிம்புக்குள் அகப்பட்டுள்ளது.  அதனை தீர்மானிப்பதில் பெரும் வல்லரசுகள் கவனம் செலுத்துகின்ற போதும் நேரடியான யுத்தத்தில் ஈடுபடதயக்கம் காட்டுகின்றன.  அதனால் சிறிய அரசுகளுடன் யுத்தத்தைநகர்த்திவிட்டு தமது வீரத்தை உலகத்திற்கு காட்டி வல்லரசாக வலம்வர விளைகின்றன.  ஆனால் அதற்கு வலுவான காரணம் அணுவாயுதப் போரேயாகும்.  உலகிலுள்ள அனைத்துப்  பெரும் போர்களும் தவிர்க்கப்படுவதற்கு அணுவாயுதமே காரணமாகும்.  அணுவாயுத யுத்தம் என்பது அழிவின் முடிவாகவே அமையும் என்பதனால் அடுத்துள்ள மென், வன்  அதிகார மோதல்களே நெருக்கடிகளை தணிவிக்கும் கருவிகளாக உலகத்தில் வளர்ந்துள்ளன.  அதாவது வன் அதிகாரத்திற்கு எல்லை போட்டு நாடுகளை அதற்குள் செல்ல முடியாது தடுத்து வருகிறது மென் அதிகாரம்.  இதனால் வன் அதிகாரம் அதிக நெருக்கடியை கொடுத்தால் நாடுகள் மென் அதிகாரத்திடம் சரணடைந்துவிடும் என்ற அச்சமொன்று வன்அதிகார சக்திகளுக்குள் எழுந்துள்ளது.

பாரிய யுத்தங்களைத் தவிர்க்கும் வல்லரசுகளும் அவற்றை முன்னிறுத்தி சிறிய அரசுகளும் செயல்படும் உலகமொன்று இயங்க ஆரம்பித்துள்ளது.  ஆனால் சிறிய அரசு ஒன்று முனைப்பு பெறும் பட்சத்தில் பாரிய யுத்தம் ஒன்று ஏற்படலாம்.  அதற்கான சூழலை உலகம் முதன்மைப்படுத்திவிட்டது.


கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்-


நிமிர்வு ஆடி 2017 இதழ் No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.