ஆசிரியர் பார்வை


இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவத்துக்கும், நீதிக்கும், சமாதானத்துக்குமான போராட்டம் இன்று புதியதொரு வளர்ச்சிக் கட்டத்தை எய்தியுள்ளது.  சமத்துவமின்றி நீதி கிடைக்காது. நீதியின்றி சமாதானம் நிலவ முடியாது. சமாதானமின்றி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதோ நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பதோ நடக்க முடியாது.  இதனை வலியுறித்தியே தந்தை செல்வா எமது போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். அதுவே ஒரு காலகட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கையாக மாறியது. ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது. சர்வதேச அரங்கில் ஏற்பட்டமாற்றங்கள் காரணமாக சமஷ்டிக் கோரிக்கையாக இன்று வந்து நிற்கிறது.

சமத்துவம், நீதி, சமாதானம் என்பவற்றை அடைவதற்கு தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் என்பவற்றில் வளர்ச்சி ஏற்படவேண்டும்.  இவ்வளர்ச்சி எவ்வாறு அடையப்படலாமென்பது தொடர்பில் ஒரு தொலைநோக்கு கருத்துருவாக்கமும் திட்டமிடலும் இருக்க வேண்டும். மறுபுறத்தில் சிங்கள பேரினவாத அரசு சிறுபான்மையினரை அடக்குவதற்கான கருத்துருவாக்கத்தையும் நீண்ட காலத்திட்டத்தையும் செவ்வனே செய்து வருகிறது.  ஆட்சி செய்பவர்கள் மாறினாலும் திட்டங்கள் மாறவில்லை.  தமிழ் மக்கள் மத்தியிலும் இக்கருத்துருவாக்கத்துக்கும் திட்டமிடலுக்கும் ஓர் உரையாடல் களத்தைஏற்படுத்துவதே நிமிர்வின் பிரதான நோக்கம்.

செய்திகளை விடுத்து அவற்றுக்குப் பின்னால் உள்ள மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். இந்தப் பொறிமுறையை எம்மக்களின் உரிமைக்காகப் போராடும் சக்திகளிடையே பரவலாக்க வேண்டும். முக்கியமாக கிராமிய மட்டங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் சமூக ஆர்வலர்களிடையே இதனை கொண்டு செல்ல வேண்டும்.

இதன் ஒரு அங்கமாகவே சாதாரண மக்களிடையே தற்போது முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு தொடர்பிலான தெளிவுபடுத்தலை மேற்கொள்வற்கு அது தொடர்பான கட்டுரைகளை நிமிர்வு பிரசுரித்து வருகிறது. இந்த உரையாடலில் மக்களின் அபிலாசைகளுக்கு ஒரு களத்தை வழங்க நிமிர்வு முனைகிறது. இதனூடாக அரசியல் தலைவர்கள், சர்வதேச சக்திகளின் முன்னிலையில் தமிழ் மக்களின் கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டு அவை அங்கீகரிக்கப் பட வேண்டுமென நிமிர்வு ஆசைப்படுகிறது. இதுவரை 6 இதழ்கள் வெற்றிகரமாக வெளிவந்துள்ளன. இந்த நேரத்தில் எம்மோடு தோளோடு தோள் கொடுத்து நின்ற கட்டுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

சனசமூகநிலையங்களுக்கும், பாடசாலைகளுக்கும் நிமிர்வை தொடர்ந்தும் அனுப்பி வருகிறோம்.  ஏதாவது சனசமூக நிலையங்களுக்கு நிமிர்வு இதழ் கிடைக்காமல் இருந்தால், அவர்கள் எம்மோடு தொடர்பினை ஏற்படுத்தி தங்களின் சரியான முகவரியை அனுப்பும் பட்சத்தில் நிமிர்வை தொடர்ச்சியாக அனுப்ப நடவடிக்கை எடுப்போம்.

தமிழ் மக்களின் அரசியல், சமூகம் சார்ந்து பல கட்டுரைகள் நிமிர்வில் வெளிவந்துள்ளன. வல்வை. ந. அனந்தராஜ் அவர்களால் எழுதப்பட்ட வடமாகாணகல்வி அபிவிருத்தி தொடர்பிலான கட்டுரைகள் எம் கல்விச் சமூகத்தின் பலத்த ஆதரவை பெற்றன. தொடர்ச்சியாக கல்வி அபிவிருத்திக்கும் களம் அமைத்துக் கொடுப்போம் என்பதை இங்கே கூறிக் கொள்கிறோம்.

நிமிர்வை பல தளங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. தொடர்ந்து பக்கங்களையும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த மாதத்திலிருந்து நிமிர்வு இணையதளம் www.nimirvu.org என்ற முகவரியில் இயங்கத் தொடங்கியுள்ளது. அங்கு இதுவரை வெளிவந்த கட்டுரைகளைப் பார்வையிடலாம். கட்டுரைகளுக்கு உங்கள் பின்னூட்டங்களையும் பதிவு செய்யலாம்.  தொடர்ந்து உரையாடுவோம்.

செ.கிரிசாந்-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.