வீதியை அபகரித்த ரயில்வே!- காங்கேசன்துறை மக்கள் அதிர்ச்சி


காங்கேசன்துறையில் அமைந்துள்ள கல்லூரி வீதியானது யாழ்ப்பாண வீதியையும் பருத்தித்துறை வீதியையும் இணைக்கும் “ட” வடிவில் அமைந்த முக்கிய வீதியாக உள்ளது. இதன் இரு முனைகளிலும் இரு பிரசித்தி பெற்ற பாடசாலைகள் அமைந்துள்ள காரணத்தால் கல்லூரி வீதி எனப் பெயர்பெற்றது. இந்த வீதியானது கல்லூரி வீதியில் வசிப்பவர்களது உபயோகத்துக்கு மட்டுமன்றி தையிட்டி, ஊறணி, மயிலிட்டி போன்ற பிரதேசங்களில் வசிப்பவர்களது முக்கிய இணைப்பு வீதியுமாகவும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

இக் கிராமங்களும் காங்கேசன்துறை பட்டினசபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களே. காங்கேசன்துறை நகர் மத்தியில் அமைந்த பாடசாலைகள், சந்தை, பஸ் நிலையம், புகையிரதநிலையம், கடைதெருக்கள், காவல் நிலையம், தபாற் கந்தோர், பட்டின சபை என்பனவற்றிற்குச் சென்று கடமைகளை நிறைவேற்ற உபயோகிக்கப்படும் வீதியாகவும் கல்லூரி வீதி அமைந்துள்ளது. கலைமகள் வீதி, கேசரிவீதி, சிவகுருநாதவீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, மூன்றாம்; குறுக்குத் தெரு, என்பவற்றுடன் மேலும் ஓரிரு வீதிகளும் கல்லூரி வீதியில் திறக்கின்றன.


இக்கல்லூரி வீதி அமைந்துள்ள பிரதேசம் அண்மைக்காலத்தில் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்து பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் காணியை பார்க்கச் சென்ற போது மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் நடேஸ்வராக் கல்லூரியை அண்டிய முனை சிவகுருநாத வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, சோதி வீதி வரையும் இராணுவத்தின் இருப்புக் காரணமாக மூடப்பட்டிருந்தது. அதேவேளை காங்கேசன்துறை மகாவித்தியாலத்தை அண்டிய பகுதியானது பழைய சிதைவடைந்த, துருப்பிடித்த நிலையிலுள்ள ரயில் பெட்டிகளினால் மூடப்பட்டிருந்தது. இப் பெட்டிகள் கல்லூரி வீதியையும் தாண்டி ஓரிரு காணிகளிலுள்ளும் தள்ளப்பட்டிருந்தன. இதன் காரணமாக கல்லூரி வீதியினுள் நுழைவதற்கு வேறுகாணிகளினூடாகவே சிரமங்களின் மத்தியில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இராணுவ நிலையங்களை விடுவித்த போதும் ரயில் பெட்டிகள் அகற்றப்படவில்லை. புகையிரததிணைக்களத்தின் அசமந்த போக்கின் காரணமாக சில மாதங்களாக மக்கள் சிரமத்திறகுள்ளாகினர்.

பல்வேறு கோரிக்கைகளின் பின்னர் ரயில் பெட்டிகள் அகற்றப்பட்ட போதும் கல்லூரி வீதி திருத்தப்படாமலே இருந்ததது. ஓரிரு வாரங்களாக கல்லூரி வீதியின் இருமருங்கிலும் இதனைத் திருத்துவதற்கான கல், மண் என்பன சேகரிக்கப்பட்டதைக் கண்டோம்.

புதிய பாதை வரப்போகிறது என எதிர்ப்பார்த்திருந்த மக்களுக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுப்பதான நிகழ்வு ஓகஸ்ட் 8ம், 9ம் நாள்களில் நடைபெற்றது. கல்லூரி வீதியானது புகையிரதத் திணைக்களத்தால் முற்றாக மூடப்பட்டுத் தான் தோன்றித்தனமாக இரு வளைவுகளுடன் குறுகிய பாதையாகத் திசை திருப்பப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

 
 மிகக் குறுகிய தூரத்தினுள் அமைய உள்ள இரு வளைவுகள் உழவு இயந்திரம், பஸ், லொறி போன்ற பெரிய வாகனங்கள் எவையும் திரும்ப முடியாதவாறும் ஒன்றை ஒன்று விலத்திச் செல்ல முடியாதவாறும் அமைக்கப்படுகிறது. இவற்றின் மூலம் இப்பாதையின் ஊடாக செல்லும் பாதசாரிகள்  மற்றும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கப்படுவதுடன் இன்னோரின்ன அசௌகரியங்களையும் உண்டாக்கும் என்பதை கொஞ்சமும் கவனத்தில் எடுக்கவில்லை.

உலகில் எங்கும் பாதுகாப்பற்ற பாதைகளை மக்களின் போக்குவரத்திற்கு பாதுகாப்பான வீதியாக மாற்றுவதையே நாம் காணக்கூடியதாக உள்ளது. இங்கு மட்டும் தான் போக்குவரத்திற்கு பாதுகாப்பான நிலையிலுள்ள பாதையை பாதுகாப்பற்ற சிரமமான பாதையாக மாற்றியுள்ள விந்தையை காணக்கூடியதாக உள்ளது.

மக்களின் பாதிப்புக்கள், சிரமங்கள் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சில நூறு வருடங்களுக்கு மேலாக நேர்ப்பாதையாக பாவிக்கப்பட்ட இககல்லூரி வீதியை தான்தோன்றித்தனமாக மாற்றுவதில் ஈடுபட்டவர்கள் என்ன காரணத்தைக் கூறினாலும் இவை மக்களின் போக்குவரத்தின் பாதுகாப்பையும் மக்களின் உரிமையையும் மீறும் செயலாகவே கருத வேண்டியுள்ளது. இது அப்பட்டான மனித உரிமை மீறலே.

     எனவே உடனடியாக பொதுமக்கள் விரும்பாத நடவடிக்கையை கைவிட்டு கல்லூரி வீதியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை உரிய அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.  இதுவே பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை, தையிட்டி, ஊறணி, மயிலிட்டி மக்களின் வேண்டுதலாகும்.
வைத்திலிங்கம் தவராஜா-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.