அரசியல் கைதிகளின் விடுதலை மக்களின் பொறுப்பு
அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது அவர்களின் சொந்த விவகாரமல்ல. தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாகத் தான் அவர்கள் அரசியல் கைதிகள் ஆனார்கள். அரசியல் கைதிகளது விவகாரத்தைப் பொறுப்பேற்க வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ்மக்களுக்குமுரியது எனப் பிரபல அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், சிரே~;ட சட்டத்தரணியுமான சி. அ. யோதிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்மக்கள் இந்தப் பொறுப்பிலிருந்து ஒருபோதுமே விலகிட முடியாது. அரசியல் தலைமைகள் வேண்டுமானால் விலகிப் போகலாம். ஆனால், மக்கள் இந்த விடயத்தில் விலகிப் போக முடியாது. அவர்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் போராட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஸன் ஆகியோர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று 08.08.2017 பிற்பகல் 3.30 மணி முதல் யாழ். பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
‘அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவோம்’ எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புடன் இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகிய அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
யாழ்.பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். சத்திரத்துச் சந்தியை அடைந்து மீண்டும் பஸ் நிலையம் சென்றடைந்தது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்!, எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்!, எங்கள் பிள்ளைகளைப் பயங்கரவாதியாக்காதே! உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்ட டில்ருக்ஸனின் தந்தை ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சி. கா. செந்தில்வேல் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த- 20 வருடங்களுக்கும் மேலாக எமது சமுதாயத்தின் முக்கிய அங்கமாகவுள்ள இளைஞர்களையும், முதியோர்களையும், பெண்களையும் பயங்கரவாதப்பட்டம் சூட்டி சிறையில் தடுத்து வைத்திருக்கும் கொடுமையான சூழல் நிலவி வருகிறது.
கடந்த காலத்தில் ஆட்சி புரிந்த மகிந்த அரசாங்கம், அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் போன்று தற்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கமும் எமது உறவுகளை விடுவிப்பதற்குக் காத்திரமான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
மக்கள் எழுச்சியின்றி, போராட்டங்களின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது. சிறையில் நீண்டகாலமாகத் தமது உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் துன்பத்துடனும், துயரத்துடனும் வாழ்கின்றவர்களின் குரலை பலப்படுத்துவதற்கு நாமனைவரும் அணிதிரள வேண்டும்.
ஆகவே, சமூக, அரசியல் அக்கறையுள்ளவர்கள், தேசிய இனப் பிரச்சினையில் அக்கறையுள்ள அனைவரும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்ந்தும் நடாத்த வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு விடுதலை இல்லை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடருதல் போன்ற பல்வேறு அநீதிகள் எங்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன
இவ்வாறான போராட்டங்கள் இலங்கை அரசின் கண்களை ஈர்க்காவிட்டாலும், போராட்டங்களை வீச்சாக நடாத்துவதன் மூலம் சர்வதேச அரங்கில் அழுத்தங்களை அதிகப்படுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கூட இன்று அசமந்தப் போக்குடன் செயற்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதன் மூலம் தான் இலங்கை அரசாங்கத்திற்கு நாம் உரிய அழுத்தத்தை நாங்கள் பிரயோகிக்க முடியும்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், சர்வதேச நீதி விசாரணை மூலம் எங்களுக்கு நீதி வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், அரசியல் தீர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளை நாங்கள் தொடந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிப்போம், அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு என ஆட்சியதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்குவோம் எனச் சர்வதேசத்திற்கும் வாக்குறுதியளித்துள்ளது.
காணாமற் போனவர்களுக்கு நீதி கோரியும், காணாமற் போனவர்களை விடுவிக்குமாறு கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்று வந்தாலும் தற்போதைய அரசாங்கம் இன்னமும் சரியானதொரு தீர்வை முன்வைக்கவில்லை. காயப்பட்ட எமது மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லவில்லை. இலங்கையின் பொலிஸ்மா அதிபர் மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அப்பட்டமான பொய். இந்தப் பேச்சை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவருடைய வயது- 24. மற்றவர்களுடைய வயது-18. அவ்வாறெனில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவிற்கு வந்த போது அவர்களுடைய வயது எத்தனை? அவர்கள் பயங்கரவாதிகளா ?
வடக்கில் பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கியிருப்பதாகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு இராணுவத்தை வெளியேற்றுவதற்கான போராட்டத்தை மறுபக்கத்துக்குத் திரும்புவதற்கான முயற்சி தானிது. இந்தப் பேச்சை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இலங்கை ஆசிரியர் சங்கம் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கெதிராகத் தொடர்ந்தும் போராடுவோம். அரசியல் கைதிகளை விடுவிக்கும் வரை ஓயாது குரல் கொடுப்போம் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல் வாதியுமான சி.கா.செந்தில்வேல் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயலாளரும், சட்டத்தரணியுமான செ.பெரேரா, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.யோதிலிங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முக்கிய செயற்பாட்டாளர் டொமினிக் பிரேமானந்த், வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் தலைவர் எஸ்.சஜீவன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி கிளிநொச்சி, வவுனியா ஆகியவிடங்களிலும் அன்றைய தினம் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
செல்வநாயகம் ரவிசாந்-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-
Post a Comment