இன வன்முறையை நோக்கி நகரும் கிழக்கு மாகாணம்


கிழக்கு மாகாணத்தில் யுத்தத்திற்கு பின்னரான போக்கு தமிழ் மக்களை அடிமைகளாக உணரவைத்துள்ளது. அதிகாரமற்ற அரசியல், ஆளுமைஅற்ற தலைமைகள், பாரபட்சமான அபிவிருத்தி, வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, காணி அபகரிப்பு, ஒரு இனத்திற்கு சார்பான அரசநிர்வாக கொள்கை, தமிழ் மக்களின் அனைத்து நிர்வாகங்களின் மீதான ஆக்கிரமிப்பு, என தமிழ் சமூகத்தின் மீதான அத்துமீறல்கள் இன்று இளைஞர்கள்  மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பீட்டளவில் கிழக்குமாகாணத்தில் உள்ள தமிழர்கள் முஸ்லீம் சமூகத்தை விடமிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அரசியல் அதிகாரங்கள் உட்பட அரச நிர்வாகம் வரை அனைத்தும்  முஸ்லீம் தலைமைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லீம்களுக்கான முதலமைச்சராகவே செயல்பட்டுள்ளார். ஆதை தட்டிகேட்க முடியாத கையாலாகாத தலைவர்களாக தமிழ் அரசியல் தலைமைகள் உள்ளனர்.

முஸ்லீம் சமூகத்திற்கு உள்ள காணி பிரச்சினை மற்றும்  முஸ்லீம்கள் தங்களது பிரதேசத்தைதனி இஸ்லாமிய பிரதேசமாக வைத்துக் கொண்டு தமிழர்களின் பிரதேசத்தில் காணிகளை கொள்வனவு செய்வது வியாபார நிலையங்களை கொள்வனவு செய்வது, காணி அபகரிப்பில் ஈடுபடுவது போன்ற விடயங்கள் தமிழ் சமூகம் முஸ்லீம் சமூகத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இல்லாது செய்துள்ளது.

இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய தமிழ் அரசியல் வாதிகள் கை கட்டி வேடிக்கை பார்ப்பது இளைஞர் மத்தியில் ஒருவித ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு கிழக்கில் அநீதி நடப்பதாக இளைஞர்கள் உணர்கிறார்கள்.

இதன் வெளிப்பாடுகள் இன்று சமூக வலைத்தளங்களில் பிரதிபலிப்பதுடன் யார் யாரையெல்லாம் இனவாதிகள் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்களோ அவர்களை தேடி சென்று அவர்களது இனவாதத்தை இன்று ஆயுதமாக பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக போய்விட்டது.

கிழக்கில் நடப்பது அதிகார மோதலோ அல்லது ஆட்சி அமைப்பதற்கான சண்டையோ அல்ல. இது இரண்டு இனத்தின் இருப்புக்கான போராட்டம்.

இதில் கடந்த  60 ஆண்டுகாலமாக சிங்கள அரசுடன் போராடி இருப்பதை எல்லாம் இழந்த தமிழ் சமூகம் இன்று முஸ்லீம் சமூகத்திடம் போராடி மிஞ்சி இருப்பதையும் இழப்பதாக உணர்கின்றனர்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இயலாமை தமிழ் இளைஞர்களையும் மாற்று சக்திகளையும் களத்தில் இறங்க தூண்டியுள்ளது. இது ஒரு சாதாரண விடயமல்ல இலங்கையில் இரத்த ஆறு ஓடவேண்டும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெடிக்க வேண்டும் என்று செயற்படும் வெளி சக்திகள் கிழக்கில் உள்ள இந்த கொந்தளிப்பான சூழ்நிலையை பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே தமிழ் முஸ்லீம் தலைமைகள் இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.  குறிப்பாக தமிழ் சமூகத்தின் நியாயமான யதார்த்தமான எண்ணங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் இஸ்லாமியவாத சிந்தனைகளை கைவிட்டு கிழக்கில் இரண்டு சமூகங்களும் சமத்துவத்துடன் வாழும் சூழலை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

அதைவிடுத்து தமிழ் சமூகம் எப்படிப் போனாலும் பரவாயில்லை, இஸ்லாமிய சமூகம் வாழ்ந்தால் போதும் என்று முஸ்லீம்களோ முஸ்லீம் சமூகம் எப்படி போனாலும் பரவாயில்லை தமிழ் சமூகம் வாழ்ந்தால் போதும் என்று தமிழர்களோ சிந்திப்பார்களாக இருந்தால் அது அழிவிற்கே வழிவகுக்கும்.

குறிப்பாக கிழக்கில் நடக்கும் காணி அபகரிப்பு பாரபட்சமான அபிவிருத்தி குறித்து தமிழ் முஸ்லீம் தலைமைகள் கவனம் செலுத்தாது மக்களை மோதவிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது வேடிக்கை பார்ப்பது தொடருமாக இருந்தால் கிழக்கில் குழு மோதல்கள் உருவாகி பின்னர் அது இனமோதலாக மாறக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.

அதிலும் இந்த விடயத்தில்  சிங்கள சக்திகளுடன்  தமிழ் இளைஞர்கள்  சேர்ந்து செயற்பட முயற்சிப்பது வன்முறை ஒன்று உருவாகுவதற்கான களநிலையை அதிகரித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை பொறுத்த மட்டில் வடக்கு தமிழர்களுக்கு, கிழக்கு முஸ்லீம்களுக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.

இதற்கு ஏற்றால் போல் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசியல் தீர்வு ஒன்றை பெறுவதென்றால்  முஸ்லீம் கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை வலியுறுத்தி கிழக்கில் முஸ்லிம்களினால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பை கண்டும் காணாது இருந்து விடுகின்றனர்.


இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழர்களின் எதிரியாக இருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழர்களின் கதாநாயகனாக மாறியுள்ளார். அதாவது கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இன ரீதியான முரன்பாட்டை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க சில சக்திகள் முயற்சிக்கின்றார்கள் என்பது அம்பிட்டிய தேரரின் செயற்பாடுகள் ஊடாக தெரியவந்துள்ளது.

வரும் முன் காப்போம்... அடிமைப்பட்ட சமூகம் கிளர்ந்தெழும் போது அது வன்முறையாக மாறலாம்.

தீரன்-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.