ஆட்சி மாற்றத்தில் மக்களின் உரிமை
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இரண்டாண்டுகள் கடந்து விட்டன. எனினும் தமிழ் மக்களுக்கு எதிராக மீறப்பட்ட மனித உரிமைகளுக்குப் பொறுப்புக் கூறுவதற்கான விருப்பு, இன்றுவரையில் தெற்கிடம் இல்லை. இது நிதர்சனமாகத் தென்படுகின்றது. தமிழ் மக்களுக்கென ஓர் அரசியல் தீர்வினை ஏற்பதில் அரசாங்கத்திடமும் சிங்கள சமூகங்களிடமும் எந்தளவு தூரம் விருப்பின்மை காணப்படுகின்றதோ அதேயளவுக்கு மீறப்பட்ட மனித உரிமைகளுக்குப் பொறுப்புச் சொல்வதிலும் அரசாங்கத்திடம் பொறுப்புணர்வு இல்லை. இதனை நீதிவேண்டிநிற்கும் தமிழ் மக்கள் அனுபவரீதியில் கண்டுள்ளனர்.
அரசியல் தீர்விற்கான முயற்சிகள் நாட்டைப் பிரிப்பதற்கான விடயம் என தெற்கில் விமர்ச்க்கப்படுகின்றது. அது போன்று மீறப்பட்ட மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கன முயற்சிகளை, படையினரைக் காட்டிக்கொடுப்பதற்கான நகர்வு எனக் கோசமிடப்படுகின்றது. இதிலிருந்து இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான நீதியும் நிலைநாட்டப்படாது என்பதைக் கண்டுகொள்ளமுடிகின்றது. கூறப்படுகின்ற நல்லிணக்கம் சார் முயற்சிகள் யாவும் நாங்கள் எதனை நல்லிணக்கம் எனக்கூறுகின்றோமோ நிர்ணயிக்கின்றோமோ அதனை சகித்துக்கொண்டு ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்ற ஒரு வகை அடக்குமுறை அனுபவத்தையே தமிழ் மக்கள் மீது சமகாலத்தில் வலிந்து சுமத்தப்படுகின்றது.
இன்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மருதங்கேணி என வடக்கின் பல இடங்களிலும் தொடர் போராட்டத்தினை நடத்திக்கொண்டிருக்கின்றனர். அது போன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. சிறைகளுக்கு உள்ளே கைதிகளும் சிறைகளுக்கு வெளியே மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டங்களை நடத்துகின்றனர். இராணுவத்தினரால் நிலங்கள் அபகரிக்கப்பட்ட கேப்பாபிலவு, இரணைதீவு மக்கள் தமது நிலங்களை விடுவிக்க தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறான தற்போதைய தொடர் போராட்டங்கள் எல்லாம் அரையாண்டை விஞ்சிவிட்டது. எனினும் நல்லாட்சி என தமிழ் மக்களின் ஒத்துழைப்புடன் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து இவ் எரிகின்ற பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.
மகிந்த ராஜபக்சவிடம் தீர்வுகளுக்கான வெளிகள் காணப்படவில்லை என்பதே தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தில் பங்கெடுத்ததற்கான அடிப்படையாக இருந்தது. அதற்காக அவர்கள் தமது வாக்குரிமை என்னும் ஜனநாயக ஆயுதத்தினைப் பயன்படுத்தினர். அவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அரசாங்கம் மக்களின் பிரச்சினைகள் போராட்டங்களாக உருவெடுத்தபோதும் அதற்கு நீதியான தீர்வினை முன்வைக்கவில்லை என்ற விமர்சனம் வெளிப்படையானது. மக்கள் தமக்கெதிராக மீறப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பல மாதங்களாகப் போராடியும் அரசாங்கம் பராமுகமாகக் காணப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ் மக்களின் அடுத்த கட்டம் எது என்ற கேள்வி எழுந்துள்ளது என்பதே உண்மையாகும்.
மக்களின் வளமான நிலங்களில் குடியிருந்த இராணுவம் அந் நிலங்களை விட்டு விலகுவதற்கு பணம் கோருகின்றது. இதற்கு பணம் வழங்க அமைச்சரவையும் கடந்த வாரம் அனுமதியளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையிலேயே மக்களின் காணிகளையும் கடலிலும் தாம் நிலைகொண்டுள்ளதாக படைத்தரப்புத் தெரிவித்துவந்தது.
பாதுகாப்பு என்பதை துப்பாக்கி கொண்டு நிறுவப்படும் இராணுவ முயற்சிகள் என்ற வட்டத்திற்குள்ளேயே இலங்கை அரசு கருதுகின்றது. உண்மையில் தேசிய பாதுகாப்பு என்பது மனோவியல் பாதுகாப்பு, மக்கள் நிறைவான வாழ்க்கையினை உறுதி செய்வதற்கான பொருளியல் பாதுகாப்பு, வளர்ச்சி, சமூகநலன், உறுதிநிலை என பரந்ததோர் விடயமாகும். இவை எதுவும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் விடயத்தில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. குறிப்பாக வடக்குக் கிழக்கில் மக்கள் எப்பாடு பட்டுக்கொண்டிருந்தாலும் துப்பாக்கியின் பலத்தினை நிலைநாட்டுவதற்கான தளமாகவே பாதுகாப்பு என்ற எண்ணக்கரு நடைமுறைப்படுத்தப் படுகின்றது. அடிப்படையில் இது பாரதூரமான மனித உரிமை மீறலாகும். இவ்வாறாக தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதன் காரணத்தினை தனியே மனித உரிமைகள் சார்ந்த விடயமாகவும் மட்டுப்படுத்த முடியாது. அதற்கு மேலான பரிணாமங்களும் இதற்குள் உள்ளன.
ஒரு இனத்தின் பொருண்மிய பலத்தினையும் அவர்களது வாழ்வாதாரத்தினையும் இல்லாது அழித்துவிடும் ஆற்றலும் இந் நிகழ்ச்சி நிரல்களுக்குள் இருக்கின்றமை மறுப்பதற்கில்லை.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனநாயகச் சூழலுக்கும் மனித உரிமை மேம்பாட்டுக்கும் ஏற்றவாறு எதுவுமே நடக்கவில்லை என நாம் குருட்டுத்தனமாக பேசிவிடவும் முடியாது. அந்தவகையில், அடிப்படையில் சில விடயங்கள் நடந்துள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சியில் வலோத்காரமாக இராணுவ வசம் கொண்டு வரப்பட்ட காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. அது போன்று, சில ஜனநாயகமயமாக்கல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் வாயிலாக மனித உரிமைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சில முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால், நடைபெற்ற இவ்விடயங்களை வைத்துக்கொண்டு திருப்தி கொள்வதற்கு முடியாதுள்ளது.
காரணம், போருக்குப் பின்னர் மக்கள் எதிர்பார்த்த அல்லது மக்களுக்குத் தேவைப்பட்ட அளவுக்கு ஜனநாயக மாற்றங்களையும் மனித உரிமை மேம்பாட்டினையும் அரசாங்கம் முன்கொண்டு செல்லவில்லை.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் நேரடி இராணுவ வன்முறைகளும் கடத்தல்களும், துப்பாக்கிப் பிரயோகங்களும் குறைவடைந்துள்ளன. அத்துடன் வன்முறைகளினூடான இராணுவ மயமாக்கம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயினும் மாறாக மென்பாங்கான உத்திகளுடன் கூடிய இராணுவ மயமாக்கம் விஸ்தரிக்கப்பட்டே வருகின்றது. ஆட்சி மாற்றத்தின் முன்னர் இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை விஸ்தரிப்பதற்கு அரச நிர்வாக அதிகாரிகள், சிவில் சமூகங்கள், மக்களிடத்தில் வலோத்காரமான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தனர்.
இதன்படி, மக்களின் நாளாந்த விடயங்களில் அழையா விருந்தினராக படைத்தரப்புப் புலனாய்வாளர்கள் தம்மை அடையாளப்படுத்தும் விதமாக உள்நுழைந்து கொள்வர். அவர்கள் மக்களின் நடவடிக்கைகளை அவதானிப்பது, அச்சுறுத்துவது, படம் பிடிப்பது போன்ற அநாகரீக செயல்களிலும் ஈடுபட்டனர். எனினும் தற்போது இராணுவத்தினரின் அவ்வாறான அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இராணுவத்தினர் சிவில் சமூக நடவடிக்கைகளில் தாமே ஈடுபடுகின்றனர். இது பாரிய பிரச்சினையாகும். இது தந்திரோபாய இராணுவமயமாக்கமாகும். மகிந்த காலத்தில் இராணுவத்தினர் புண்ணாக இருந்தனர் என்றால் மைத்திரி காலத்தில் அவர்கள் புற்றுநோயாக மாறியுள்ளனர் என இதனை நோக்கமுடியும்.
இராணுவத்தினரை பாதுகாப்பு துறைசார் விடயங்களுக்கே அரசு பயன்படுத்தவேண்டும். மாறாக அவர்களை சிவில் சமூக கட்டமைப்பின் பணிகளுக்குள் ஈடுபடுத்த வேண்டிய தேவை கிடையாது. மேலும், இராணுவத்தின் இன்றைய அணுகுமுறை அவர்கள் இராணுவ மயமாக்கம் மற்றும் பாதுகாப்புக்கெடுபிடி காரணங்களுக்காக மக்களினை துன்புறுத்துகின்றனர் என்றில்லாவிட்டாலும் போருக்குப் பின்னர் நடைபெற வேண்டிய ஜனநாயகமயமாக்கலை இவ்விடயம் பாதிக்கின்றது.
இராணுவத்தினர் சிவில் சமூக ஒத்துழைப்பாளர்களாக மாறி செயற்படுகின்ற விதம் மக்களின் ஜனநாயக உரிமைகளை படைத்தரப்பு மீறுகின்றது என்பதனை வெளித்தெரியாது மேற்கொள்வதற்கான உத்தியுடன் தயாரிக்கப்பட்ட மென்வலுவாகவே பார்க்கமுடிகின்றது.
இன்றைய சூழலில் நல்லிணக்கம் என்ற வார்த்தைக்கு கவர்ச்சியூட்டப்படுகின்றது. நல்லிணக்கத்திற்காக விழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றில் இனம் சார்ந்த விடயங்கள், அடையாளங்கள், இனத்தின் இருப்பிற்கான அடிப்படைகளையும் துறந்துவிட்டு வாழ்வது தான் நல்லிணக்கம் என்ற போலி கட்டுரு வாக்கம் மேற்கொள்ளப்படுகின்றது.
யுத்த காலத்தில் இலங்கை அரசானது பயங்கரவாதம் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்குள்ளாக தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை உலக அரங்கில் வெறுக்கப்படும் ஒன்றாக முத்திரை குத்தியது. யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் அசைவியக்கத்தினைத் தடுப்பதற்கு மக்கள் நலனில் கிஞ்சித்தும் கரிசனை கொள்ளாத தேசிய பாதுகாப்பு என்ற வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்தி ஒடுக்குமுறைகளை கையாண்டது.
அதுபோன்று நல்லிணக்கம் என்ற வார்த்தையும் அதிகளவில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றது. இன்றைய நடைமுறைகளைப் பார்க்கையில் இது தெளிவாகவே தென்படுகின்றது. நல்லிணக்கத்திற்காக ஏற்படுத்தப்படவேண்டிய மேம்பாடுகளை இதயசுத்தியுடன் இலங்கை அரச இயந்திரமாக இருக்கலாம் அல்லது தென்னிலங்கை சிவில் சமூகங்களாக இருக்கலாம் மேற்கொள்ளத் தயாரின்றியே இருக்கின்றன. அரச அதிகாரம் சொல்லுவதை அவ்வாறே நல்லிணக்கம் என கேட்டுக் கொள்ளுங்கள் என்பது ஆட்சியாளர்களின் கருத்தாகவுள்ளது. இவைகள் மக்களின் சிந்தனைச் சுதந்திரத்தினையும் மட்டுப்படுத்திவிடுமோ என்பதே இன்று பெரும் பிரச்சினை.
தியாகராசா நிரோஷ்-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-
Post a Comment