சிறிமா அம்மையாரின் பாணியில் பயணிக்கும் நல்லாட்சி அரசாங்கம்


2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியுடன் இலங்கை மண்ணில் துப்பாக்கிச் சத்தங்கள் மௌனமாகின என்பது உண்மைதான்.

ஆனால் துப்பாக்கிச் சன்னங்களும்,  பீரங்கிக் குண்டுகளும் மழையெனப் பொழிந்த செல் குண்டுகளும் விளைவித்த அனர்த்தங்களில் இருந்தும்  அவலங்களில்  இருந்தும் தமிழ் மக்கள் இன்றும் மீள முடியாதுள்ளனர்.

1. உறவுகளை இழந்தோரின் அழுகுரல் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றது.

2. காணாமல் ஆக்கப்பட்டோரை  கண்டு அறிந்து தருமாறு உறவுகள் கதறி அழுதுகொண்டிருப்பது இன்னும் தொடர்கதையாக உள்ளது.

3. போரின் போது பறந்த துப்பாக்கிச்  சன்னங்களையும் செல் துகள்களையும் குண்டுத் தகரங்களையும் தமது  உடல்களில் சுமந்து அது தரும் வலியால் துடித்து அழும் துயரம் தொடர்ந்து கொண்டிக்கின்றது.

4. குடும்பத் தலைவர்களை இழந்து கைம்பெண்ணான பெண்கள்  குடும்பத்தைக் கொண்டு நடத்த இயலாமலும்,  பிள்ளைகளின் பசியினைப் போக்க முடியாதும் உள்ள தாய்மாரின் அழு குரலும் இன்னும்  ஓய்ந்தபாடில்லை.  தமிழினத்தின்  விடுதலைக்காக உயிரைப் போக்கிக் கொள்ளவும்   கலங்காதவர்கள், தயங்காதவர்கள் இன்று கலங்கி அழுது நிற்பதும் ஓயவில்லை. மொத்தத்தில்  துப்பாக்கிகள் மௌனமாகிய மண்ணில் எழுந்த அவலக் குரல்களும்,  வேதனை, முனகல் சத்தங்களும்,  கலங்கி அழும்  அஞ்சா நெஞ்சங்களும் அன்றாடக் காட்சிகளாக உள்ளன.

2009 ஆம் ஆண்டு கிளிநொச்சி இலங்கையின் படைத்தரப்பினரிடம் வீழ்ச்சியடைந்தபோது “அடுத்து என்ன?” ( றுர்யுவு  Nநுஓவு?)   என்ற கேள்வி கொழும்பில் நிலை கொண்டுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள், நியாயமான நீதியான புத்திஜீவிகள் மட்டத்தில் பெரும் கேள்வியாக எழுப்பப்பட்டது.   ஒரு சில இராஜதந்திரிகளில் குறிப்பாக இந்திய தூதரகத்தைச் சார்ந்தோர் போரின் முடிவுடன் உருவாகும் புதிய சூழலில் நடத்தப்படும் தேர்தலில் தமிழ் மக்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி இன விவகாரங்களுக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பைச் சாத்தியமாக்கும் நிலையை அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்க முன்வரவில்லை. அன்றைய ஆட்சியாளரின்  நகர்வுகள் தீர்வை நோக்கியதாக அன்றி எதிர் மறையாக இருந்தமையினால் “அடுத்து என்ன?” என்பது  மறக்கப்பட்ட ஒரு விடயமாகப் போனது.

ஆனால் இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது  வருகையும்  ஜனாதிபதியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும்  உருவாக்கிய நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் வருகையுடன்  “அடுத்து என்ன?” என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடையே பெருமளவில் பரவலாக  ஏற்படத் தொடங்கியது. தமிழ்  மக்களின் இந்த எதிரப்பார்ப்பு குறித்த  ஆவலை மேலும் தூண்டும்  வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்   ஐயா அவர்கள் 2016 க்குள் தீர்வு  வரும்  என்று மிக உறுதியாகக் கூறியது அமைந்தது. இதற்குச் சாதகமான  சமிக்ஞைகளை ஜனாதிபதி, பிரதமர் உட்பட பலர் வெளிப்படையாகவே கூறத் தொடங்கினர். நல்லாட்சி  அரசாங்கத்தின் பேச்சுக்கள், அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குறிப்பாக தமிழரசுக் கட்சியை நல்லாட்சி மீது அதீத நம்பிக்கை கொள்ள வைத்தது. மறுபுறம்  புலம்பெயர் தமிழர் அமைப்புகளிலும்  மனமாற்றத்தை ஏற்படுத்துவதில் நல்லாட்சி அரசாங்கம் கணிசமான அளவு வெற்றியையும் கண்டது. இந்த ஒரு  பின்னணியில் இலங்கை மண்ணில் நடப்பது என்ன?

 தமிழ் மக்களின் அடையாளத்தைக் கரைந்து போக செய்தல் 

இலங்கை மண்ணில் தமிழ் மக்களை கரைந்து  கலைந்து போக வைக்கும் விடயங்கள்  மிக வேகமாக காத்திரமாக வெளியில் தெரியாதவாறு முன்னெடுக்கப்படுகின்றன.  2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தற்போதைய மாகாண எல்லைகளை மறுசீரமைப்பதற்காக குடிப்பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் தீட்டபப்ட்டு செயல் வடிவம் கொடுக்கப்படுகின்றன.  அதாவது 2030 அளவில்  தாயகக் கோட்பாட்டைச்  சிதைத்து புதிய புவிசார் குடிப்பரம்பலுடனான  அரசியல் மாற்றத்திற்குள் வடக்கு கிழக்குப் பகுதியை உள்வாங்குவதே  மேற்கூறிய அரசியல் நகர்வின் நோக்கமாகும்.

காலத்தை இழுத்தடித்தல் 
   
இலங்கை வரலாற்றில் காலத்தை இழுத்தடிக்கும்  தந்திரோபாயத்தை ஆட்சி பீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் செய்து வந்துள்ளன.
   
தமிழர் தரப்பு விடயங்களில் இழுத்தடிப்பை மேற்கொள்ளும் அரசாங்கங்கள் தமது இலக்கை நோக்கி மிக வேகமாக காய்களை நகர்த்துவதில் பின் நிற்பதில்லை.  அதாவது காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயம் தமிழ் மக்கள்  சார்ந்த விடயங்களிலும் சிங்கள மக்கள் நலன் நோக்கிய விடயங்களிலும் வேறுபாடு இல்லாமல் இருக்குமானால் ஆபத்தில்லை.

ஆனால் தமிழர் விவகாரத்தில்  இழுத்தடிப்புக்களை மேற்கொள்ளும் அதே வேளையில் தமிழர்களுக்கு விரோதமான போக்கினை விரைவுபடுத்துவதானது தமிழ் மக்களுக்குப் பாரிய பாதிப்பினை உருவாக்குவதாக அமைந்து விடுகின்றது.

தமிழ் மக்கள் முன் உள்ள சவால்கள் : 1963 ஆம் ஆண்டின் நிகழ்வுகள்

தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற சவால்களைப் பார்ப்பதற்கு முன்னர் 1963 ஆம் ஆண்டில் என்ன நடைபெற்றது தமிழ் மக்களுக்கெதிராக எத்தகைய சதி நடைபெற்றது என்பதை சற்று பார்ப்போம். ஏனெனில் தமிழ் மக்களுக்கெதிரான வரலாறு மீண்டும் பின் நோக்கி 1963 ஆம் ஆண்டினை நோக்கி திசை திரும்பியுள்ளது.  அமைதியாக இருந்த வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மீது சிங்களம் மாத்திரம் கொள்கையை மிக காத்திரமாக  நடைமுறைப்படுத்தும் கட்டளையுடன் நெவில் ஜயவீர அவர்கள் (NEVILLE JAYAWEERA) சிறிமா அம்மையாரால் 1963 ஆம் ஆண்டு அரச அதிபராக யாழ். மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டார். சிங்களம் மாத்திரம் கொள்கைக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பு அடுத்த 25 வருடங்களில் துப்பாக்கி ஏந்திய கலகமாக  மாற்றமடையும். அதனை எதிர்கொள்வதற்கு அப்போதே அதாவது 1963 லேயே ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என நெவில் ஜயவீரவுக்கு அறிவுறுத்தப்பட்டது. அது மாத்திரமல்ல தமிழ் தொழில்சார் நிபுணர்களான சட்டத்தரணிகள், வைத்தியர்கள் போன்றோர் தமிழர்  விவகாரத்தில் கொண்டுள்ள கட்டுப்பாட்டை இழப்பர். அந்த இடத்தை தீவிரவாத இளைஞர்கள் கையேற்பர். எனவே தற்போதே சங்கிலித் தொடர் போன்று வடமாகாணத்தில் படை முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையும்  வழங்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி வரும் கள்ளக் குடியேற்றவாசிகளைப் பிடித்தல் மற்றும் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி மேற்கொள்ளப்படும் கடத்தலைத் தடுத்தல் போன்ற இரு தேசியப் பிரச்சினைகளை முறியடிபப்தற்கே படைமுகாம்கள் தேவை என்ற வாதத்தை முன் நிறுத்தி படைமுகாம்கள் நிறுவுவதை நியாயப் படுத்தப்பட்டது.

அதே பாணியில் அதாவது 1963 இல் கிளர்ச்சி ஏற்படக் கூடாது என்பதற்காக படை முகாம்களை அமைத்த இலங்கை அரசாங்கம் மீண்டும் ஒரு தீவிரவாதம் மேல் எழக்கூடாது என்பதை இலக்காகக் கொண்டு வடக்கில் மீண்டும் படை முகாம்களை ஸ்திரப்படுத்துவதிலும் நவீன மயப்படுத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றது. 1963 இல் கள்ளக் குடியேற்றம், கடத்தல் போன்றவற்றைக் காரணம் காட்டிய இலங்கை அரசு இன்று போதைவஸ்து கடத்தல், வட பகுதியில் வன்முறைக் கலாசாரம் போன்ற பல்வேறு விடயங்களை முன் வைத்து படை முகாம்களைப் பலப்படுத்தி வருகின்றது. இரு விடயங்களுமே அமைதியாக இருந்த மக்கள் மீது  திணிக்கப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே உள்ளன.

தமிழ் மக்கள் 1963 அரசியல் நிலைக்குத் திரும்பிவிட்டனர். ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சம~;டி நிர்வாக அலகுடன் தமது அரசியல் பயணத்தைத் தொடர்வதற்குத் தயாராக இருக்கின்றனர்.  அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றது.

ஆனால் இலங்கை அரசின் கட்டமைப்பு தமிழ் மக்கள் மீது இன்னொரு அடக்கு முறையை  கட்டவிழ்த்துவிட காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. இந்த நகர்வுகள் இலங்கையில் நிலையான, நீடித்த சமாதானத்தைத் தோற்றுவிக்கவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கவும் உதவப் போவதில்லை.

நீடித்த, நிலையான சமாதானமும்,  இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும், நல்லுறவும் அரசியல் தீர்விலேயே தங்கியுள்ளன.

நல்லாட்சியின் பிதாமகன்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமிழர் விவகாரம் குறித்து முன் வைக்கும்  வார்த்தைகள் உறுதி மொழிகள் என்பன தகர்ந்து போகும் வார்த்தைகளாகவோ, தகர்க்கப்படும் உறுதி மொழிகளாகவோகப் போய்விடக் கூடாது.

அமைதியை விரும்பும் தமிழ் மக்களின் வேண்டுதல்களுக்கு  அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும். எனவே இலங்கை அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்காது விரைந்து தீர்வை முன்வைக்க வேண்டும்.  

 தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தரப்பினரும் இலங்கை அரசாங்கத்தை  வற்புறுத்தும் அதே வேளை சர்வதேச சமூகத்துக்கூடாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கை அரசியலில் முகமூடிகள் 

இலங்கை அரசியலில் முகமூடிகள் மாறி இருக்கின்றன. 1963 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்று இலங்கையின் ஆட்சி பீடத்தில் பலர் மாறி மாறி அமர்ந்துள்ளனர். இன்று தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் உருவாகியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில்  ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களும் பிரதம மந்திரியாக ரணில் விக்ரமசிங்கவும் அமர்ந்துள்ளனர்.   ஆனால் அரச நிர்வாக பொறி முறையும், கொள்கை வகுப்பாளர்களும், அவர்களது நிகழ்ச்சி நிரலும் மாற்றத்துக்குட்படாது அப்படியே உள்ளன. ஆட்சியில் இருப்போர் வெளிப்படையாக எதைப் பேசினாலும் நடைமுறையில்  இந்தக் கட்ட மைப்பு எந்த விதமான நெகிழ்வுத் தன்மையையோ அல்லது மாற்றத்தையோ அல்லது புதிய அணுகு முறையையோ வெளிக்காட்ட முன் வரவில்லை.

அந்த வகையில்  தமது காலத்தில் தேசிய இன விவகாரத்துக்குத் தீர்வைக் காண்பதா அல்லது சிங்களப் பெருந் தேசியவாதத்துடன் முரண்படாமல் போவதா என்பது தான் நல்லாட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவருக்கும் முன் உள்ள பெரிய சவாலாகும்.

இது போன்ற ஒரு சவாலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையிலேயே சந்திரிகா அம்மையார் தான் கொண்டு வந்த இன விவகாரத் தீர்வையே கைவிட நேர்ந்தது  என்பதை இங்கு சுட்டிக் காட்டுதல் பொருந்தும். தற்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முற்றாகப் பலவீனம் அடைந்து போவதா அல்லது ஓரளவுக்குக் கீழ் பலவீனமாகிப் போய்விடாமல் இருப்பது நல்லதா என்பதே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ள கேள்வியாகும். ஜனாதிபதியும், பிரதமரும் தமக்கெதிரான சக்தி இருக்கின்றது என்பதை உலகத்துக்குக் காட்ட மகிந்த ராஜபக்ஸ அணி அவர்களுக்குத் தேவைப்படுவதாகவே அவர்களின் இன்றைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.

அமைதியாக  இருந்த தமிழ்ச் சமூகத்தின் மீது சிங்கள மொழியைத் திணிக்கின்றனர். அதற்கு சாத்வீக வழியில் எதிர்ப்புக் காட்டப்பட்ட போது இராணுவ முகாம்களை அமைக்கின்றனர். 1963 இல் நடைபெற்றது 2009 க்குப் பிறகு அமைதி திரும்பியதாகக் கூறப்படும் வடக்கில் மீண்டும்  அரங்கேற்றப்படுகின்றது.  அதாவது இராணுவத்தின் பிரசன்னத்தையும்,  இராணுவ முகாம்களின் இருப்பையும் நியாயப்படுத்தும் வகையில் தற்போது, வடக்கில் போதைப் பொருள் கடத்தல், குடாநாட்டில் இடம் பெறும் குற்றச்செயல்கள், காடைத்தனங்கள்,  வாள் வெட்டுக்கள் போன்றவைகள் காரணங்களாகக் காட்டப்படுகின்றன.   அத்துடன் மக்களை அச்ச நிலைக்குள் தள்ளி இராணுவப் பிரசன்னத்தை மக்கள் கோரும்படி தூண்டப்படுகின்றது.
 
இதில் விசித்திரம் என்னவெனில்  ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொலிஸ், இராணுவம் நிலை கொண்டுள்ள வடக்கில் மேற்கூறிய கடத்தல், போதைவஸ்து பாவனை, பாலியல் வல்லுறவு, காடைத்தனம், வாள்வெட்டுக்கள் போன்றன பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டை மீறி எப்படி நடைபெறுகின்றது என்பது தான்.

அந்த வகையில்  இதற்குப் பின்னால் உள்ள அரசியல், இராணுவ நலன்களை உணர்ந்து கொள்வதற்கு தமிழ் மக்களுக்கு அவ்வளவு க~;டமாக இருக்காது என்பதை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒத்துக்கொள்ளும்.

அப்படியாயின் தமிழ்ச் சமூகம் தனக்குத்தானே புதிய இரத்தத்தைப் பாய்ச்சிக் கொண்டு புதுப் பிரசவம் எடுக்க வேண்டும்.

தமிழர் விவகாரம் சர்வதேச உறவுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக உள்ளது.

தமிழர் விவகாரம்  குறித்து சர்வதேச உறவுகளில் ஏற்படும் மாற்றங்களே தமிழர் விவகாரத்துக்கான தீர்வினையும், இலங்கை மீதான அழுத்தத்தையும் உருவாக்கும் என்பதை தமிழர் தரப்பு உணர வேண்டும்.

அந்த வகையில் தமிழர் தரப்பினரின் ராஜதந்திர நகர்வுகள் இலங்கை அரசாங்கங்களையும் சர்வதேச சமூகத்தையும் வெற்றி கொள்வதாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பங்களிப்பை மறுப்பதற்கில்லை.

வி.தேவராஜ்-மூத்தபத்திரிகையாளர்-
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.