எப்போது நீதி கிடைக்கும்?


தமிழர் தாயகத்தில் தொடர்ந்து மாதக் கணக்கில் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கான நீதிதாமதப்பட்டுக் கொண்டே செல்கிறது. அரசாங்கமோ தங்களை தக்க வைப்பதிலும், தென்னிலங்கையில் ஏற்படும் சலசலப்புக்களுக்கு எதிர்வினையாற்றியுமே காலத்தைக் கடத்தி  வருகிறது. ஐநாவின் நீதிக்கான பொறிமுறைத் தூண்களில் முக்கியமானது பொறுப்புக் கூறல் ஆகும். அதனை எம் மக்களுக்கு இந்த அரசாங்கம் நீதியாக வழங்குமா என்பது தான் பெரும் கேள்விக்குறியாகும்.

மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பும் கடந்த    நான்கு மாதங்களுக்கும் மேலாக, காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியைக் கோரி சொந்தங்களால் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்களின் பிள்ளைகள் எங்கே எனக் கேட்டே மேற்படி போராட்டம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகள் தங்கள் பிள்ளைகள், சொந்தங்களைப் பற்றி கண்ணீரும் கம்பலையுமாக பகிர்ந்து கொண்ட விடயங்கள் அவர்களது சொல்லாடலிலேயே வருமாறு.        

அருளானந்தம் பற்றிமா புஸ்பராணி - தாளையடி
எனது மகன் ஜோன்சன் இதயதாஸ். இவரை கடைசி சண்டை மூட்டம் காணலை. வெடிச்சத்தத்துக்குள்ளையும், செல்லடிக்குள்ளையும் தப்பி ஓடி நாங்கள்  படகில ஏறேக்கே, இவரும் உள்ள ஏறினவர் எண்டு நம்பித் தான் நானும் உள்ள ஏறினனான். ஆனால், உள்ள பார்க்கேக்க மகனை தவறவிட்டுட்டன். பிறகு நான் ஒவ்வொரு தடுப்பு முகாமா தேடித்திரிஞ்சன். அவற்றை தொடர்பு ஒண்டும் கிடைக்கேல்ல. பிறகு நான் முகாமுக்குள்ள இருந்து வெளியால வந்து பேப்பரிலை தவறிய என் மகனை காணேல்லை என்று போட்டன். பேப்பரிலை என்ரை போன் நம்பரையும் போட்டபடியால் பேப்பரிலை போட்ட 3 ஆம் நாள் என்ரை நம்பருக்கு மகன் எடுத்து அம்மா நான் சுகமாக இருக்கிறன். என்னைத் தேட வேண்டாம் என்று சொன்னார். எங்க தம்பி இருக்கிறாய்? என்று கேட்க எனக்கம்மா இருக்கிற இடம் ஒண்டும் தெரியல்ல என்று சொல்லி அழுதழுது உடுப்புகளில்லை, சாப்பாடு
இல்லை என்று பெரிய கவலைப்பட்டுக்கொண்டு தன்னை கொஞ்சப்பேரோட வைச்சிருக்கிறாங்கள். நீங்கள் தேடியலையாதீர்கள். என்னைக் காட்டமாட்டாங்கள். என்ன நடக்குமோ தெரியாது. பார்ப்பம் கடைசி மட்டும் இருந்து பார்ப்பம் என்று சொன்னவர். அதற்கு பிறகு மகனின் எந்த தொடர்பும் இல்லை.

திரு. கவுரியேற்பிள்ளை செல்வரத்தினம்
 நாங்கள் மாத்தளனில இருந்தனாங்கள். மகன்ர பேர் சுதாகர். அவர் எங்களிற்கு முன்னால ‘சாலை’ என்ற இடத்தில இருந்தவர். 2009 சண்டைகள் வலுத்துக்கொண்டு வர நாங்கள் கடலால பருத்தித்துறைக்கு வந்திட்டம். பிறகு மகன்ர எந்த விபரமும் இல்லை. போகாத இடமும் இல்லை. இப்ப இங்கயும் இருந்து போராடுறம். இன்னும் விடிவுதான் இல்லை.

திருமதி மகேந்திரதாஸ் ரஞ்சினிதேவி
 2009 சித்திரை கடைசியில எங்கட மூத்தமகள் காயப்பட்டு நாங்கள் கப்பலால இங்கால வந்திட்டம். என்ர இளைய மகள் பிரியவாசனா எங்களோட வரவில்லை. எங்கட நிறைய சனங்கள் அவவைக் கண்டவையளாம். இதுவரை பிள்ளையின் ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் முகாம் முகாமாக தேடியலைந்தும் அவவைக் காணேல்ல.

திருமதி ச.சத்தியகலா
எங்கட தங்கச்சி சபாரத்தினம் சசிகலாவைக் காணேல்ல. கடைசிச்சண்டை நேரத்தில மாத்தளன் பகுதியில சனங்கள் கண்டதுகளாம். இப்ப எங்கையெண்டு ஒரு தொடர்பும் இல்லை. அவ இருக்கிறாவோ இல்லையோ என்று எங்களிற்குத் தெரியாது. அவவின்ரை முடிவை அறிந்து கேட்டுத்தரணும். அதுதான் இந்த போராட்டத்தில இருக்கிறன்.

திருமதி சிவஞானசுந்தரம் கன்னிகா பரமேஸ்வரி
 2009 இல வன்னிக்குள்ளயிருந்து  இங்கால வவுனியா முகாமிற்கு வருகிற போது என்ர மகள தவறவிட்டுட்டன். அவஎங்க இருக்கிறா? என்ன மாதிரி எண்டு கண்டுபிடிச்சுத்தர வேணும். என்ர பிள்ளையை நான் சாகுறதுக்குள்ள காண வேணும்.

திருமதி சுப்பிரமணியம்
 சுப்பிரமணியம் மகேஸ்வரி (வயது23) 2009 மாசி மாதத்தில காணாமல்  போனவர். எங்கட சொந்த இடம் மருதங்கேணி வடக்கு தாளையடி. ஒருக்கா வீரகேசரிப் பேப்பரில பூசாவில இருக்கிறதா பெயர் வந்தது. இப்ப எங்க இருக்கிறா எண்டு ஒரு தகவலும் தெரியாது. இண்டை வரைக்கும் நாங்கள் சலிக்காமல் தேடிக் கொண்டு இருக்கிறம்.

திருமதி வேதாரணியம் வள்ளிப்பிள்ளை
என்ர மகனிற்குப் பெயர் வேதாரணியம் சிறீரங்கநாதன். 2009ம் ஆண்டு நாலாம் மாதம் இருபதாந்திகதி எங்கட பகுதிக்குள்ள ஆமி வந்திட்டாங்கள். இவர் முள்ளிவாய்க்காலில அண்ணா இருக்கிறார் எண்டு முள்ளிவாய்க்கால் பகுதிக்குப் போய்விட்டார். அதற்குப்பிறகு அவருடைய எந்தத்தொடர்பும் எங்களிற்கு இல்லை. என்ர மூத்தமகன்  பங்கருக்குள்ள இருக்கேக்க செல் விழுந்து செத்துப்போட்டார். அவரின் பெயர்  கதிர்காமதாஸ். ஆவரை அடக்கம் செய்து போட்டு அண்ணியாக்களை கப்பலில ஏத்திபோட்டு இளையமகன் தனிய நின்றவர். அம்மா தங்களை தனிய விட்டுவிட்டு போய்விட்டா என்று அழுதபடி நின்றவராம். பிறகு எங்கை என்று தெரியாது. என்ர பிள்ளை இருக்குது. எங்கேயோ இருக்குது. எங்கை எண்டு சொல்லாயினமாம். அது தான் நாளும் வலியாக உள்ளது. நித்தமும் கண்ணீருடன் வாழ்க்கை நகர்கிறது.

தாய்மாரின் கண்ணீருக்கு விடிவு எப்போது? தமிழ் மக்களும் இந்த நாட்டு மக்கள் என்று எப்போது உணரப் போகிறது அரசாங்கம்?
     
தொகுப்பு: சித்ராதரன் 
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.