கிழக்கில் சாதிக்கும் சோலை உற்பத்தி நிறுவனம்







போரின் பேரழிவுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் ஒன்றான கிழக்கும் பெருமளவுக்கு எதிர்கொண்டது. இறுதிப் போரின் பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் எவ்வாறு அதிகளவில் உருவானதோ, அதே போல் நேரடியாக போரின் தாக்கத்தால் கிழக்கிலும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் அதிகளவில் உருவாகின. இந்த நிலையில் ஏராளமான  குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில் அதனை ஓரளவுக்கு தீர்த்து வைக்கும் நோக்கில் உருவானதே   மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனம் ஆகும். எல்லோரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்பதனை நிதர்சனமாக பார்க்கக் கூடியதாக உள்ளது.

விவசாயிகளின் விளைபொருள்களை சந்தைப்படுத்தவும், சிறு தொழில் முயற்சியாளர்களின் உள்ளுர்உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலுமே இவ்வமைப்பு உதயமானது. மக்களுக்கு பல்வேறு பொருளாதார வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கோடு சிறு உற்பத்தி விற்பனை நிலையம், விவசாய உள்ளீடுகள் விற்பனை நிலையம், இயற்கை பசளை விற்பனை நிலையம், சோலை நஞ்சற்ற மரக்கறி விற்பனை நிலையம்   உள்ளிட்ட பல கட்டமைப்புக்களை உருவாக்கியுள்ளது.  மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனம் உருவாக்கிய உள்ளுர்  உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம்  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சோலை என்கிற பெயரில் இந்நிலையம் வந்தாறுமூலையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இதன் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வரும் கே.எஸ் ரவிச்சந்திரனுடன் பேசினோம். எங்களது பிரதேசங்களில் கடந்த கால யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் இருந்தார்கள். அவர்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இருந்தார்கள். பெண்களை தலைமைத்துவமாக கொண்டியங்கும் குடும்பங்களும் இருந்தன.  சரியான தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் தொடர்ந்தும் வறுமைக்குள் தள்ளப்பட்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள்.  300 க்கும் மேற்பட்ட மக்கள்   மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கின்றார்கள். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்தின் மயிலம்பாவெளியில் இருந்து வாகரை வரையிலான உயிலங்குளம், வந்தாறுமூலை, சித்தாண்டி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இந்த சம்மேளனமானது 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விவசாய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்திலும் முறையான வியாபாரப் பதிவும் இதற்கு இருக்கிறது. இதனூடாக நடுத்தர விவசாயிகளையும் சிறு உற்பத்தி முயற்சியாளர்களையும் இணைத்து மேம்படுத்துவது தான் எங்களின் நோக்கம். இதனூடாக உள்ளுர் உற்பத்திகளின் விற்பனையை மேம்படுத்துகிறோம். விவசாயப் பண்ணைகளை உருவாக்குகிறோம். பெண்களுக்கு பழத்தோட்டங்கள், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியவற்றில் உதவிகளைச் செய்து வருகிறோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயப் போதனாசிரியராக கடமையாற்றும் சுதாகரனே மேற்படி திட்டங்களுக்கு எல்லாம் உயிர் கொடுத்தவர் ஆவார்.

சோலை உற்பத்தி நிலையம் ஊடாக வெள்ளை அரிசி மா, சிவப்பரிசி மா, உளுத்தம் மா, சத்து மா (போசாக்கு மிகுந்த 8 தானியங்களை உள்ளடக்கியது), தினை அரிசி, வரகு, குரக்கன் மா, பருத்தித்துறை வடை, எள்ளுப்பாகு, குறிஞ்சா இலைப்பவுடர், நாவல் விதை மா, பொரிவிளாங்காய், ஊறுகாய்கள், பனங்கட்டி, தோசை மாவு, யாழ்ப்பாண உற்பத்திகளான நெல்லிக்கிரஷ், மாதுளம்பழச்சாறு, முந்திரிகைச்சாறு, நன்னாரிச்சாறு, நல்லெண்ணெய், கச்சான் அல்வா, பனை உற்பத்திகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம். எமது உற்பத்திகளை சந்தைப்படுத்தலில் தான் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வரகின்றோம். இலங்கையின் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் இந்த உற்பத்திப்பொருட்களை ஏற்றுமதி செய்ய ஆர்வமாக இருக்கின்றோம்.

கண்டியில் இந்த ஆண்டு நடந்த உள்@ர் உற்பத்திகளுக்கான தேசிய மட்டப் போட்டியில் எங்கள் உற்பத்திகளுக்கு இரண்டாமிடம் கிடைத்தது. இந்த உற்பத்திகளால் போரால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களும், பின்தங்கிய கிராம மக்களும் பெரும் பயனடைந்து வருகின்றனர்.

இவை தவிர சோலை விவசாய உள்ளீட்டு உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம், சோலை இயற்கை பசளை தயாரிப்பு நிறுவனம், சூழல் நட்பு சுற்றுலா, பண்ணை திட்டம் ஆகிய செயற்றிட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கவீனமான முன்னாள் போராளியான தங்கேஸ்வரன் சிரட்டை, மரங்களைப் பயன்படுத்தி நேர்த்தியாகவும், அழகாகவும் பல்வேறு   கைப்பணிப் பொருட்களையும் செய்து அசத்தி வருகிறார்.

மட்டு வடக்கு விவசாய உற்பத்தியாளர் சம்மேளனம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கருதி  இன்னும் பல திட்டங்களை செயற்படுத்த இருக்கின்றது. எல்லோரும் ஒண்றிணைந்து இப்படியான நல்ல திட்டங்களுக்கு ஆதரவளித்தால் இன்னும் வேறு வேறு புதிய மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்நகர்த்த முடியும். கிழக்கின் தரமான இந்த உற்பத்திகளும் சர்வதேச சந்தையை எட்டவேண்டும் என்பதே எம் எல்லோரினதும் விருப்பமாகும்.

தொடர்புகளுக்கு: ரவிச்சந்திரன்-0774047369





மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சத்துமா

கிழக்கின் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் குழந்தைகள், சிறார்கள் பெரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்கொண்டு வரும் நிலையில் குறித்த சத்துமா முயற்சி மிகவும் முக்கியமானது.  சோலை விற்பனை நிலையத்தில் அதிகம் விற்பனையாவதும் இந்த சத்துமா தான்.

குறித்த சத்துமாவுக்கான திட்டங்களை திறம்பட  உருவாக்கி செயற்படுத்திய திருமதி ரவிச்சந்திரன் நாகேஸ்வரியுடன் பேசினோம்,  கடலை, பயறு, உளுந்து, சோளம், சிவப்பரிசி, எள்ளு, கௌப்பி ஆகியவற்றை கழுவி வெயிலில் காயவைப்போம். பின்னர் அவற்றை வறுத்து ஒவ்வொன்றாக மா அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைப்போம்.  அதன்பின் எல்லா மாக்களையும் சேர்த்து தரமான சத்து மாவை தயார் பண்ணுகிறோம். முதன் முறையாக செங்கலடி பிரதேச செயலகத்தில் உள்ள ஊழியர்களிடம் இந்த மாவை அறிமுகப்படுத்திய போது நல்ல வரவேற்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு கிலோவுக்கு மேற்பட்ட சத்துமாவை அந்த ஊழியர்களிடம் விற்று வந்தேன். குழந்தைகள், சிறார்கள், வயதானவர்கள் எல்லோரும் இந்த  ஆரோக்கிய மாவை விரும்பி சாப்பிடுவதாக அவர்கள் சொன்னார்கள்.  250 கிராம் சத்துமா 130 ரூபாவுக்கு விற்பனை செய்கிறோம். இதனால் ஏழை எளிய மக்களும் விரும்பி வாங்குகிறார்கள். அதனைத் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். மட்டக்களப்பு நகரசபை விவசாய உற்பத்தி கண்காட்சியிலும் எனது சத்துமாவுக்கு முதலிடம் கிடைத்தது. 18 முயற்சியாளர்கள் அதில் பங்கேற்றிருந்தார்கள்.    பின் கொக்கட்டிச்சோலை , சத்துருக்கொண்டான், கண்டி ஆகிய இடங்களிலும் இடம்பெற்ற முயற்சியாளர் கண்காட்சிகளில் பங்கேற்று பல பரிசில்களையும் பெற்றிருக்கிறேன். இந்த சத்துமாவை கிழக்கு மாகாணம் மட்டுமல்ல இலங்கை முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் எண்ணம் இருக்கின்றது. சற்தைப்படுத்தல் வாய்ப்புக்கள் கைகூடி வந்தால் எல்லாம் சாத்தியமாகும் என்கிறார் மகிழ்ச்சியுடன்.

தீசன்
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.