உள்ளூராட்சி தேர்தல் முடிந்தது: இனி?




உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி குருபரன் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய  கருத்துக்கள் முக்கியமானவை.  இந்த தேர்தல் சுட்டி நிற்கக் கூடிய மிக முக்கியமான செய்தி தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கக் கூடிய கட்சிகள் வெறுமனே அரசியல் தீர்வு, பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்களை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது மக்களின் தேவைகளையும், உட்கட்டமைப்புக்களையும் அபிவிருத்தி செய்வதனையும் அது தொடர்பிலான அரசியல் நிலைப்பாடுகளையும்  கவனத்தில் கொள்கின்ற  கட்சிகளையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.  தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பன்மைத்துவத்தை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இன்று எனக்குத் தெரிந்து அரசியல் தீர்விலோ, பொறுப்புக் கூறலிலோ சர்வதேசத்திலோ, உள்ளூரிலோ பெரியளவிலான மாற்றங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. எங்களது உள்ளக கட்டமைப்புக்களை சீர் செய்து கொள்வதற்கான இந்த நேரம் தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமானது. இதனை தென்னிலங்கை மைய தேசிய கட்சிகளிடமோ, அதனோடு ஒட்டியிருப்பவர்களிடமோ விட்டு விட முடியாது. ஏனெனில் அது தமிழ்மக்களினுடைய அரசியலை அவர்களின் நலன்களை முன்னிறுத்தியதாக இருக்க முடியாது.

அதனால் இன்றைய தேவை மாகாண சபையாக இருக்கலாம். உள்ளூராட்சி சபையாக இருக்கலாம். தமிழ்த் தேசிய அரசியலினுடைய சமூக உட்கட்டுமானத்தை மீள நாங்கள் கட்டியமைத்துக் கொள்வதற்கான ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்து நாங்கள் நகர வேண்டி இருக்கிறது. வெறுமனே ஜெனீவாவை நோக்கிய அரசியலாகவோ அல்லது கொழும்பை நோக்கிய அரசியல் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளை நோக்கி எங்களது அரசியல் இருப்பது போதுமானதல்ல. உள்ளூராட்சி சபைகள் மக்களுடன் மிகவும் நெருங்கிச் செயற்படும் அமைப்பாகும். கிராமத்தின் அபிவிருத்தியை தவிர எந்தவித தனிப்பட்ட அரசியல் நோக்கங்களும் இல்லாதவர்கள் திறமையாக செயற்படுத்திய உள்ளூராட்சி சபைகள் முன்பு இருந்தன.  ஆனால், இன்று உள்ளூராட்சி சபையானது நவீன அரசியலில் அடுத்த கட்ட அரசியலுக்கான முதல்படியாக பார்க்கப்படும் நிலைமை தான் உள்ளது. உள்ளூராட்சியில் சிறப்பாக பணிபுரிவதே தங்கள் வாழ்க்கைப்பணி என்று சொல்லி வருபவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் உள்ளூராட்சி சபைகளின் வகிபாகம் குறைத்து மதிப்பிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

கடலோனியா நாட்டில் உள்ள  பெரும் பலமே இந்த உள்ளூராட்சி சபைகள் தான்.  உள்ளூராட்சி சபைகள் மூலமாகத் தான் அவர்கள் பெரும் மக்கள் எழுச்சியை சாத்தியப்படுத்தி இருந்தார்கள். ஏன் இந்தியாவின் ஆம் ஆத்மி கட்சி தன் ஆரம்ப காலங்களில் அடிக்கடி மக்கள் கலந்தாய்வு கூட்டங்களை நடாத்துவது, அதில் ஒன்று திரட்டி எடுக்கப்படும் விடயங்களை ஒரு கொள்கையாக நாடாளுமன்றில் நிறைவேற்றுவது வரை ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட நடவடிக்கையை முன்னெடுத்தமையை காணக் கூடியதாக இருந்தது. உள்ளூராட்சி சபைகளில் மக்களினுடைய பங்களிப்பு அவர்களின் ஊடாட்டம் மிகவும் முக்கியமானது. தமிழ்த் தேசத்தினுடைய சமூக உட்கட்டுமானங்கள் திருப்பி வலுவடைவது முக்கியம். இவ்வாறாக குருபரன் கருத்து தெரிவித்தார்.   

அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து எழுதிய பத்தியொன்றில் பின்வருமாறு கூறுகிறார்.  “தேசியம் எனப்படுவது அதன் செயல் வடிவத்தில் மக்களை திரளாக்குவதுதான். ஒருவர் மற்றவருக்கு கீழானவரோ மேலானவரோ அல்ல. அனைவருமே சமமானவர்கள் என்ற ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது மக்களை ஒரு திரளாகக் கட்டியிருந்தால் அவர்கள் இப்படிச் சிதறிப் போயிருக்க மாட்டார்கள். தேர்தல் முடிவுகளிலிருந்து மெய்யான தமிழ்த்தேசியத் தரப்புக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பாடம் இது.

ஒரே நாடு ஒரே தேசம் என்ற சுலோகத்தை முன்வைத்து உள்நுழையும் கட்சிகள் காசை அள்ளி வீசி சலுகைகளை வழங்கி சாதியை, மதத்தை இலக்கு வைத்து மக்களை சிதறடிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இனிவரும் தேர்தல்களில் மேலும் அதிகரிக்கக்கூடும். தமிழ்த்தேசியச் சக்திகள் விட்ட வெற்றிடத்தைத்தான் அதாவது தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கப் போதாமையால் ஏற்பட்ட வெற்றிடத்தைத்தான் ஏனைய கட்சிகள் பயன்படுத்தியிருக்கின்றன.”

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கு அடுத்தடுத்த நிலைகளில் தென்னிலங்கை கட்சிகளும் பெற்றிருக்கின்றன.   இந்த நிலையை எம் மத்தியிலுள்ள சிவில் சமூகங்கள், புத்தியீவிகள் கவனமாக ஆராய வேண்டும். சமூகத்தின் அடிக்கட்டுமானங்களில் எழுந்துள்ள மாற்றம் முக்கியமானது. ஆனால், அது எந்தளவுக்கு எம் சமூகத்தின் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யப் போகின்றது என்பது மிகவும் முக்கியமானது. தேர்தல் முடிவுகள் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளில் எந்தவொரு அரசியல்க்கட்சியும் தனித்து அரசாங்கம் அமைக்க முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.  இது தமிழ்மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.  தமிழ்த்தேசியத்தை முன்வைத்து தேர்தல்களில் வாக்குகளைப் பெற்ற பின்னர் மக்கள் கொடுத்த ஆணையை மறந்து தமக்குச் சரியெனப் பட்டவாறு செயற்பட்ட கட்சிகளை மக்கள் மீண்டும் பூமிக்கு அழைத்து வந்துள்ளனர்.  அதேவேளை பாரம்பரியமாக வாக்களித்து வந்த தலைமையை விடுத்து தாம் புதிய தலைமைக்கு தயார் எனவும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

தென்னிலங்கை மையக்கட்சிகளும் அவற்றைச் சார்ந்த கட்சிகளும் பெற்றுள்ள கணிசமான வாக்குகள் தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளன. இக்கட்சிகள் பெற்ற வாக்குள் பெரும்பாலும் அரசாங்கத்தால் கிடைக்க கூடிய சலுகைகளின் அடிப்படையிலும், சாதி மற்றும் பொருளாதார காரணிகள் அடிப்படையிலும் கிடைக்கப் பட்டுள்ளன.  தேசியம் சார்ந்த கொள்கைகளை விடுத்து இந்தக் காரணிகளை முன்வைத்து தமிழ் மக்களைப் பிளவு படுத்துவது தென்னிலங்கை கட்சிகளால் கையாளப்படும் ஒரு தந்திரமாகும்.  இதனை முறியடித்து இந்த வாக்காளர்களை மீண்டும் வென்றெடுக்க வேண்டிய கடமை தமிழ் தேசிய கட்சிகளுக்கு முன்னுள்ள தலையாய கடமை.

ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகளோ ஆட்சியமைப்பதற்காக எவருடனும் பேரம் பேசலாம் என்று பேரம் பேசி வருகின்றனர்.  தமிழ் தேசியம் என்ற அடிப்படைகொள்கையளவில் இணங்கிக் கொள்ளக் கூடிய கட்சிகள் கூட தாம் ஒன்றிணைவதற்கு பல முன்னிபந்தனைகளை வைக்கின்றன.  கட்சிகளின் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களும் தமது தனிமனித விருப்புவெறுப்புகளை முன்வைத்து தேசத்தின் நலத்தை இரண்டாம் பட்சமாக்க முற்படுகின்றனர்.  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கொள்கைகளுடன் முற்றுமுழுதாக இணங்குகின்ற கட்சியுடனேயே கூட்டு என தூய்மைவாதம் பேசி வருகிறது.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை நீக்கினாலேயே அவர்களுடன் இணையலாம் என்று அரசியலைத் தனிமனித ஆளுமைகளுக்கு சுருக்கவும் முயற்சிக்கிறது.

அதேபோன்று வடக்கு கிழக்கு இணைப்புக்கு உடன்படாத கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்கத் தயாரில்லை என்று கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறி வருகிறது.  ஆனால் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு இணைப்பு அல்ல இன்றைய தலையாய பிரச்சனை.  அநியாயமாக அவர்கள் காணிகள் பறிக்கப் படுவதும் வாழ்வாதாரங்கள் சிதைக்கப் படுவதுமே அவர்களது தலையாய பிரச்சனை.  இவற்றை நிறுத்தவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இணங்கிப் போகக்கூடிய கட்சிகள் சேர்ந்து கிழக்கில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.  எனவே தமது ஏனைய கொள்கை முரண்பாடுகளைக் பின்தள்ளி விட்டு இந்த ஒரு கொள்கையின் அடிப்படையிலாவது கட்சிகள் ஒன்று படவேண்டும்.  இவ்வாறு ஒன்றிணைந்து செயற்படும் போது ஏனைய கொள்கை முரண்பாடுகள் தொடர்பாகவும் புரிந்துணர்வு ஏற்படவும் ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்கவும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

இதேபோலவே வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒத்துப் போகக்கூடிய ஒருசில கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து ஆட்சி அமைக்க முன்வரவேண்டும்.  தென்னிலங்கைமையக் கட்சிகளும் அவை சார்ந்த தமிழ் கட்சிகளும் தமிழ்த்தேசியத்துக்கு விடுக்கும் சவால்களை முறியடிக்க காலத்தின் தேவை கருதி இணங்கி வருவது முக்கியம்.  இவ்விணக்கப்பாடுகள் வேண்டுமென்பதற்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதல்ல.  ஆனால் இலங்கையில் ஓர் இனமாக தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்வதற்காக ஒரு பொது வேலைத்திட்டத்திலாவது இக்கட்சிகள் இணைந்து செயலாற்றுவது முக்கியம்.

ரஜீவன்
நிமிர்வு மாசி  2018 இதழ்-




No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.