மறக்க முடியா மனிதநேயம்
2001ஆம் ஆண்டு சித்திரை மாதம் எம் சொந்தங்கள் முள்ளிவாய்க்காலில் ஒரு குறுகிய நிலப்பரப்பில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் மீது பல்குழல் ஏவுகணைகளும் ஆட்டிலரி குண்டுகளும் விமானத் தாக்குதல்களும் சரமாரியாக நடந்து கொண்டிருந்தன. கொத்து கொத்தாக அப்பாவி மக்கள் செத்துக் கொண்டிருந்தனர். வெளியுலகுக்குத் தெரியாதவாறு இந்த இனவழிப்பை நடத்தி முடிக்க பேரினவாத அரசாங்கமும் அதனது பங்காளிகளும் கங்கணம் கட்டி செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அந்த நோக்கத்தை இலகுவில் அடைய முடியாதவாறு அவர்களின் காலில் தைத்த சிறுமுள்ளுப் போல தொந்தரவு செய்து கொண்டிருந்தார் மாரிகொல்வின் (Marie Colvin)அம்மையார்.
மாரி கதரீன் கொல்வின் பிரித்தானிய பத்திரிகையான சன்டே ரைம்ஸ் (The Sunday Times) ) பத்திரிகையில் கடமையாற்றிய ஓர் அமெரிக்க பத்திரிகையாளர். அவருடைய ஆறாவது நினைவு தினம் இந்த மாசிமாதம் 22ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டது. அடக்குமுறை அரசுகள் பல நாடுகளில் நடந்திய யுத்தங்களில் பொதுமக்கள் படும் துயரங்ளை வெளியுலகுக்கு தெரிவித்த துணிச்சலான பத்திரிகையாளர் மாரிகொல்வின். “மக்கள் கடைநிலைக்குத் தள்ளப்பட்டு தாங்கவொண்ணா துன்பத்துக்கு ஆளாக்கப்படும் போது அவர்ளின் சாட்சியாக இருப்பதே எனது கடமை” என்று மாரிகொல்வின் கூறியிருந்தார்.
சிறிலங்காஅரசாங்கம் பத்திரிகையாளருக்கு விதித்திருந்த தடையையும் மீறி தன்னுடைய உயிர் பாதுகாப்பை துச்சமாக எண்ணி எமது மக்களின் துயரங்களை ஆவணப்படுத்துவதில் மும்மரமாக இருந்தார். முள்ளிவாய்க்காலில் நடந்து கொண்டிருந்த இனவழிப்பை வெளியுலகத்துக்கு செய்திகளூடாகவும் புகைப்படங்களூடாகவும் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தார் மாரிகொல்வின்.
சிறிலங்கா அரசின் இந்த எல்லையற்ற இராணுவ தாக்குல் மாரிக்கு புதியதல்ல. அதன் கொடூரத்தை நேரடியாக எதிர் கொண்டவர் இவர். 2001 சித்திரை 16 இல் புலிகளின் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து கொண்டிருந்த பொழுது இராணுவத்தின் எறிகுழல் குண்டுத் (RPG) தாக்குதலில் அகப்பட்டு தனது இடது கண்ணை இழந்தார். இவ்வாறாக உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதைத் தெரிந்து கொண்டும் துவண்டு போகாமல் 2009ஆம் ஆண்டு சித்திரை மாதம் வரை எம்மக்களின் துயரங்களை சர்வதேசத்துக்கு ஆவணப்படுத்தியவர் மாரிகொல்வின். வன்னிக் காடுகளிடையே பலமைல் தூரங்களைக் கால்நடையாக கடந்து தன்னலம் கருதாது எம்மக்களின் துயரங்களைப் பதிவு செய்தார். போரின் கடைசிக் கட்டங்களில் அரச படைகள் செய்த போர்க்குற்றங்களையும் செய்தியறிக்கைகளாகவும் காணொளிகளாகவும் ஆவணப்படுத்தினார். இவரது ஆவணப்படுத்தல்கள் இங்கிலாந்தின் சனல் 4 (Channel 4) தொலைக்காட்சியினர் தயாரித்த ஆவணப்படங்களில் இடம்பெற்றன.
சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் போரில் சிக்குண்டுள்ள அப்பாவி மக்கள் படும் துயரங்களை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டியது தனது கடமை என மாரிகொல்வின் கருதினார். சிரிய அரசாங்கம் இலங்கையில் சிங்கள அரசாங்கம் நடத்திய போர் உத்திகளை அப்படியே பிரதிபண்ணிக் கொண்டிருப்பதைக் காணலாம். அரச எதிர்ப்புப் போராளிகளின் பகுதிகளைச் சுற்றிவளைப்பதும் அப்பிரதேசங்களுக்கு உணவுத்தடை மருந்துத்தடை விதிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தொடர்பாக எந்தவித கரிசனையும் இல்லாமல் ஆட்டிலறித் தாக்குதல்களும் விமானக் குண்டுவீச்சுக்களும் சிரியாவினாலும் அதன் தோழமை அரசுகளாலும் அப்பகுதிகளில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. சிரிய அரசாங்கம் வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்கு விதித்திருந்த தடையை மீறி போராளிகளின் பகுதியிலிருந்து செய்திளை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில் இவரது இருப்பிடத்தைத் தெரிந்து கொண்ட சிரிய அரசாங்கம் அவர் இருந்த கட்டடத்தின் மீது 2012 மாசி 22 ஆம் திகதி ஆட்டிலறி தாக்குதல் நடத்தியது. நலிவுற்ற மக்களுக்காகவும் அடக்குமுறை அரசுகளுக்கு எதிராகவும் உலகெங்கும் ஓங்கி ஒலித்த மாரி கொல்வின் அம்மையாரின் குரல் மௌனித்துப் போனது.
மனிதத்தின் மீது அடக்குமறை அரசாங்கங்கள் நடத்தும் அநியாய தாக்குதல்களை உலகத்தில் எந்த மூலையில் அது நடந்தாலும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று பாடுபட்டவர் மாரிகொல்வின். குறிப்பாக இலங்கையில் எமது மக்களின் துயரங்களை வெளியுலகுக்கு கொண்டு சென்று தமிழ் மக்களின் நீதிக்கும் சமத்துவத்துக்குமான போராட்டத்துக்கு வலுச்சேர்த்தவர் மாரிகொல்வின். அவர் இன்றும் இருந்திருந்தால் எமது மக்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் ஒரு முக்கியமான குரலாகவும் சாட்சியாகவும் இருந்திருப்பார். அவரின் இழப்பு எமது மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும். அவருக்கு அஞ்சலி செலுத்துவது தமிழர் எல்லோரதும் கடமை.
நிமிர்வு மாசி 2018 இதழ்-
Post a Comment