சுதந்திர தினமும் தமிழ்மக்களும்
எமது நாடு 1505-1948 வரையான 400 ஆண்டு காலம் வரை காலனித்துவ ஆட்சியில் இருந்தது. காலனியாதிக்க அரசுகள் தமது மதங்களையும் ஆங்கில கல்வியையும் எம் மக்களிடையே திணித்தார்கள். கட்டாய மதமாற்றம் இக்கால கட்டங்களில் அதிகம் இடம்பெற்றது. இவர்களது காலத்தில் வாழ்ந்த மக்கள் தமது மதங்களை சுதந்திரமாக வழிபடமுடியாத நிலை காணப்பட்டது. வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்வு சீர்குலைந்த நிலை காணப்பட்டது. ஆனால் இக்கால கட்டங்களில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் இனங்களிடையே இன மத சண்டைகள் ஏற்படவில்லை எனக் கூறலாம்.

எமது அயல் நாடான இந்தியா வெள்ளையர்களின் ஆட்சியிலிருந்து 1947 ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திரம் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக 30 ஆண்டுகள் மேலாக மகாத்மா காந்தி உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தினர்.  இதனால் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முன்வந்தது. ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு பாரிய போராட்டம் நடக்காமலே வெள்ளையர்கள் தாங்களாக முன்வந்து 1948 பெப்ரவரி 4 ம் திகதி சுதந்திரம் கொடுத்தார்கள்.

அவர்கள் எமது நாட்டிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சென்றாலும் அவர்களின் காலத்திலிருந்து முறைமைகள் சட்டதிட்டங்கள் கல்வி வழிபாட்டு முறைகள் போன்ற பல விடயங்கள் எம்மோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. தமிழரைப் பொறுத்தவரை இயல்பு வாழ்க்கையில் காணப்பட்ட சீரழிவு நிலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. சொல்லப் போனால்  சுதந்திரத்தின் பின்னர் அவர்களின் நிலை தாழ்மையடைந்துள்ளது.  அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப் படுவதும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

1948 பெப்ரவரி 4 ம் திகதி “யூனியன் ஜாக்” கொடி கீழே இறக்கப்பட்டு இலங்கையின் தேசியக்கொடியான சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. இக்கொடியில் சிங்கம் பொறிக்கப்பட்டு இருந்தது. இது இலங்கை ஒரு சிங்கள தேசம் என்பதைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இலங்கையில் மற்றொரு தேசிய இனமான தமிழர்களையும் குறிக்கும் வகையில் வடிவமைப்பு மாற்றப்படல்  வேண்டும் என்று தமிழர்களால் வற்புறுத்தப்பட்டது. இக்கோரிக்கை அக் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சுதந்திரம் அடைந்ததனால் தான் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளையர்களின் ஆட்சியின்போது ஓரளவுக்கு இருந்த உரிமைகளும் பறிபோயின. தேயிலை, இறப்பர் தோட்டங்களில் வியர்வை சிந்தி நாட்டின் அபிவிருத்திக்காக உழைத்த 10 இலட்சம் மலையக தழிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு  “நாடற்றவர்” என்று அறிவிக்கப்பட்டனர். இது இலகுவில் மறந்து விடவோ மறுத்து விடவோ முடியாத துன்பகரமான நிகழ்வாகும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தமிழர்கள் ஒவ்வொரு முறையும் சிங்கள ஆட்சியாளர்களை நம்பி ஏமாற்றத்தையே சந்தித்திருக்கிறார்கள். எந்தவொரு சிங்கள ஆட்சியாளர்களாலும் தமிழர்களுக்கு எந்தவொரு அதிகாரமும் வழங்கப்படாது என்பது நிதர்சனமாகின்றது. அன்று செல்வநாயகம் தமிழர் வாழ்கின்ற பகுதி ஒரு மாகாணமாகவும் சிங்களவர் வாழ்கின்ற பகுதி இன்னொரு மாகாணம் ஆகவும் இரண்டுக்கும் பொதுவாக மத்திய அரசும் இருக்க வேண்டும் என கூறினார். மாநிலங்களில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி மூலம் தமிழர்களின் நலனை காப்பாற்ற முடியும் என்று கூறி புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் இதுவரை காலத்திலும் அவ்வாறான ஒரு செயற்பாட்டுக்கும் சிங்கள இனவாத அரசுகள் முன்வரவில்லை.

சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும். அதனால் இனவாத கருத்துக்களை கூறி இனங்களிடையில் விரிசலை மேலும் ஏற்படுத்த சிங்கள ஆட்சியாளர் முனைகிறார்கள். தமிழர்களையும் தமிழ் அரசியல் வாதிகளையும் தமது பகடைக்காய்களாக வைத்திருக்கிறார்களே தவிர அவர்களின் உரிமையும் அதிகாரங்களையும் கொடுக்க முன்வருவதில்லை. அவ்வாறு முன் வந்தாலும் இன வாத அமைப்புக்கள் அவர்களை விடுவதில்லை. தமிழர்களும் காலம் காலமாக நம்பி கானல் நீர் போன்ற பொய்யான தோற்றம் போன்று வாழ வேண்டிய சூழலுக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறாக 60 வருடங்கள் சிங்களஅரசிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை எமது தமிழ் தலைமைகள் மறந்து போயினவா?  இன்றும் அவர்களிடமிருந்து எம் மக்களுக்கான தீர்வு கிடைக்குமென்ற நப்பாசையில் தமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளே ஏமாற்றி பிழைப்பு நடத்துவது எந்த வகையில் நியாயம்.

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் பண்டாரநாயக்கவால் 1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் மொழிப்பிரச்சினைக்கு ஆரம்பமாய் அமைந்தது. அன்று முதல் தமிழ்மக்களை ஒடுக்கும் செயல் ஆரம்பமானது. தமிழ் இனத்தை அழித்தொழிக்க வேண்டும் அல்லது நாட்டிலிருந்து விரட்டவேண்டும் என்ற நோக்கில் சிங்கள அரசுகள் ஆரம்பத்திலிருந்தே கலவரங்கள், தாக்குதல்கள், துப்பாக்கிச்சூடுகள், எறிகணைவீச்சுகள், சித்திரவதைகள் என்று பல சதிகளை செய்தார்கள்.

1956 ஆனி 11 – 16 வரை கல்லோயாவில் உள்ளூர் பெரும்பான்மையான சிங்களகுடியேற்றவாதிகள் மற்றும் கல்லோயாக் குடியேற்றத்திட்டசபையின் ஊழியர்களும் இணைந்து அரசவாகனங்களில் வந்து 150ற்கு மேற்பட்ட தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்றார்கள்.  1956 இல் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் படுகொலைகள் இன்றும் தொடர்கின்றன. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் அதிகபடுகொலைகள் பல காலகட்டங்களில் இடம்பெற்றன. இறுதியுத்தம் 2009ல் பலஆயிரம் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டார்கள். பலஆயிரம் பேர் இருக்கிறார்களோ இல்லையோ என்ற நிலையில் பல குடும்பங்கள் முடிவற்ற நிலையில் நாள் தோறும் துன்பகரமாக வாழ்கிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடி ஒரு வருடத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இவ்வளவு காலமும் நடந்த இனவழிப்புகளுக்கு நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தால் கூட தமிழ் மக்கள் ஓரளவுக்கு ஆறுதல் அடைவார்கள். ஆனால் எந்தச் சிங்கள அரசும் தமிழர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதியை பெற்றுத் தரமாட்டார்கள் என்பது தான் யதார்த்தம். கடந்த காலப் படிப்பினையும் அதுதான்.

இன்றும் வடக்கு கிழக்கை இராணுவமயமாக்கும் வகையில் சிங்களப்படை அணிகள் குவிக்கப்படுதல் நடந்து வருகிறது. சிங்களகுடியேற்றம், பௌத்தமயமாக்கல், நிலஅபகரிப்புகள், இராணுவ நினைவிடங்களை தமிழர் பகுதிகளில் நிறுவுதல் என்பன தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இவ்வாறு தமிழர் உரிமைகளும் அரசியல் ரீதியான போராட்டமும் மழுங்கடிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே வேற்று நாட்டவர் போல் நடத்தப்படும் பொழுது எந்த முகத்தோடு தமிழர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவார்கள்?

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்குரிய உரிமைகள் கொடுக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு சமமாக சகல உரிமையும் பெற்று வாழும் நிலை ஏற்படும் வரை எத்தனை சுதந்திர தினம் வந்தாலும் அது தமிழர்களுக்கு கறுப்பு நாளாகவே இருக்கும். இந்த வருடம் பெப்ரவரி 4 ம் திகதி 70 வது ஆண்டு சுதந்திர தினமும் இதற்கு விதிவிலக்கல்ல.


பானு
நிமிர்வு மாசி  2018 இதழ்-


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.