ஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை
அமெரிக்காவின் ஹொலிவூட்டில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன். பல விருதுகளைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்த மிரமக்ஸ் (Miramax) எனும் நிறுவனத்தை நிறுவியவர். பின்னர் 2005 இல் தனது பெயரிலே வைன்ஸ்டீன் கம்பனி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறவனத்தை ஆரம்பித்து நிர்வகித்து வந்தார். 2017 ஐப்பசி மாசம் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் வைன்ஸ்டீன் தம்மைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தனர். இதனை ஆரம்பத்தில் வைன்ஸ்டீன் மறுத்தார். அதனையடுத்து மேலும் பல பெண்கள் வெளிப்படையாக வைன்ஸ்டீனுக்கு எதிராகப் பேட்டியளித்தனர். தம்மிடமிருந்த ஆதாரங்களையும் வெளியிட்டனர். இதுவரை காலமும் கண்டும் காணாமலும் ஹாலிவூடில் புரையேறிப் போயிருந்த ஆண் மேலாதிக்கத்தை சந்திக்கு இழுத்து வந்தனர். தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே இது போன்ற பாலியல் பலாத்காரங்களைத் தாம் பொறுத்துக் கொண்டிருந்ததாக வருத்தத்துடன் தெரிவித்தனர். இனிவரும் பெண்களாவது தமது சுயமரியாதையை இழக்காமல் ஆண்களுக்கு சமமாக மதிக்கப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்தனர்.
இந்தப் பெண்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அலிசா மிலானோ என்ற நடிகை ட்விட்டர் சமூகவலைத் தளத்தில் #நானும்கூட (#Me Too) எனும் குறியீட்டுச் சொல்லை பிரபலப்படுத்தினார். “நானும் கூட பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டேன்” என்று அர்த்தப்படவும் “நானும் கூட பாதிக்கப்பட்ட இப்பெண்களை ஆதரிக்கிறேன்” என்று அர்த்தப்படவும் இந்த குறியீட்டை அவர் பயன்படுத்தினார். இந்தக் குறியீடு தரணா பேர்க் (Tarana Burke) என்ற அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளரினால் 2006 ஆம் ஆண்டு பெண்ணுரிமைக்காகவும் அவர்களின் மீதான பாலியல் பலாத்காரங்களுக்கு எதிராகவும் ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரைகாலமும் ஹொலிவுட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த பெண்கள் எல்லோரையும் இந்தக் குறியீடு இணைத்தது. இந்தக் குறியீட்டை மையமாக வைத்து பல விழிப்புணர்ச்சி மாநாடுகளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. பல பெண்கள் தமக்கு நடந்த அநியாயங்களை வெளிப்படையாக தனியாகவும் கூட்டாகவும் ஊடகங்களில் வெளிப்படுத்தினர். இது அமெரிக்கப் பெண்கள் மத்தியில் “பாலியல் துன்புறுத்தல்கள் சகித்துக் கொள்ளப்படக் கூடியவையோ மறைக்கப் படக்கூடியவையோ அல்ல” எனும் மனமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அவற்றை எதிர்த்து நிற்க தேவையான துணிச்சலை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளதது.
வைன்ஸ்டீனைப் பொறுத்தவரை அவருக்கு எதிராக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். வைன்ஸ்டீனை அவரது சொந்த நிறவனமே பதவியிலிருந்து விலக்கியது. அதன்மூலம் அவர் ஏறத்தாழ முழுச்சொத்துக்களையுமே இழந்துள்ளார். இவரைப் போன்றே அமெரிக்க அரசியலிலும் சமூகத்திலும் செல்வாக்கு செலுத்தி வந்த பலர் தமது பதவிகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளனர். அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க வெள்ளை மாளிகை ஆலோசகர் றொப் போட்டர் (Rob Porter) இதற்கு நல்ல உதாரணமாவார்.
இந்த பெண்கள் இயக்கம் பாலியல் துன்புறுத்தல் என்பதுடன் நின்று விடாது “ஊதியத்திலும் ஆண்பெண் சமத்துவம் வேண்டும்” என்ற போராட்டத்திற்கும் வித்திட்டுள்ளது. மொத்தத்தில் இந்த இயக்கம் “தாம் பெண்களுக்கு என்னவும் செய்யலாம், அவர்கள் அவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்ற அமெரிக்காவின் ஆண்மேலாதிக்க மனப்பாங்கை ஓர் ஆட்டம் காண வைத்துள்ளது. ஒரு சமூகப் புரட்சியை ஆரம்பித்து வைத்துள்ளது. இதன் இறுதி விளைவுகளை மதிப்பிட இன்னும் சிலகாலம் தேவை.
நாம் விரும்பியோ விரும்பாமலோ நமது கலாச்சாரம் பண்பாடுகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்தும் பல விடயங்கள் அமெரிக்காவிலேயே ஆரம்பிக்கின்றன. அமெரிக்காவில் ஒரு சமூகமாற்றத்துக்கே வித்திட்ட #நானும்கூட என்ற குறியீட்டுச் சொல் அமெரிக்காவுடன் நின்றுவிடவில்லை. கனடா, ஐரோப்பா, அவஸ்திரேலியா போன்ற மேற்குலக நாடுகளில் எல்லாம் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்ச்சி எமது நாட்டிலும் எட்டப்பட்டுள்ளதா குறிப்பாக தமிழ்ப் பெண்கள் மத்தியில் எட்டப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே.
போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கில் பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் காண்கிறோம். போரின் பின்னர் புற்றீசல்கள் போல பல நிறுவனங்கள் வடக்கு கிழக்கிலே ஆரம்பித்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்டும் பொருளாதாரத்தில் பின்தங்கியும் உள்ள பல பெண்கள் இந்த நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அவர்கள் தமது ஆண் மேலதிகாரிகளால் மனோவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறார்கள். எத்தனையோ தடவைகள் பெண் ஊழியர்களை தமது வாடிக்கையாளர்கள் முன்னாலேயே மோசமான வார்த்தைகளினால் ஆண் மேலதிகாரிகள் திட்டுவதை நாம் கண்டிருக்கிறோம். இவை சகித்துக் கொள்ள முடியாதவை. இவ்வாறான செயற்பாடுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய காத்திரம் இந்த #நானும்கூட இயக்கத்துக்கு உள்ளது. தமிழ்ப் பெண்களும் இது தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்ளவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.
தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் நிலை
“பெண்களின் பெருமையை உயர்த்தும் நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது” என்ற வகையில் பெண்களை இனரீதியாக, பால்ரீதியாகவோ, சாதிரீதியாகவோ ஒதுக்காமல் அவர்களும் ஆண்களைப்போல இந்த சமுதாயத்தில் சமத்துவம் ஆனவர்கள் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறாக ஏற்றுக்கொள்ளுகின்ற தன்மை தமிழ் சமுதாயத்தை பொறுத்தவரையில் இன்னமும் பின்தங்கியே காணப்படுகின்றது. காலம்காலமாக பெண்கள் அடிமைப்படுத்தபட்டும், அவ் அடிமைத்தனத்தின் போது ஆண்களின் மேலாதிக்கம் உயர்ந்தும் காணப்பட்டு வருகின்றது. எனினும் இந்நிலைமையை அகற்றுவதற்கு 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் பெண்விடுதலை வீரர்களும், சமுதாயத்தில் அனைவரும் சமன் என கருதும் சமுதாய சிற்பிகளும், கவிஞர்களும், அரசியல்வாதிகளும் பலகாலமாக போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு வேடிக்கையான விடயம் யாதெனில் “பெண்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என பாடுபட்டவர்களும் ஆண்களே! அதே நேரம் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களும் ஆண்களே” ஆக பெண்களின் விடுதலை, அடக்கு முறை போன்ற விடயங்களில் கூட ஆண் வர்க்கத்தினரின்; தலையீடு காணப்பட்டது. பாரதியார் பாடிய பாடல்களில் அனேகமானவை பெண்கள் விடுதலை தொடர்பாகவே வெளிவந்திருக்கின்றது. நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையையும், வேதனையும் கண்டு பெண்விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களையும் பாடினார்.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையந் தளைக்குமாம்
பூணு நல்லறந் தோடிங்கு வண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்”
உண்மையில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாரதியார் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் சமத்துவமானவர்கள் என்றும், இந்து சமயத்தில் சிவனும் சக்தியும் எவ்வாறு சமனானவர்களோ அதே அளவிற்கு எமது தமிழ் சமுதாயத்திலும் பெண்களும், ஆண்கள் சமன் என்று கூறினார்! ஆம் பாரதியாரின் ஒவ்வொரு வரியும் பொற்தகட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று தான். என்றாலும் 21ஆம் நூற்றாண்டில் அடி எடுத்து வைத்தும் இன்றும் பெண்களும் ஆண்களும் சரிநிகர் சமன் என்பதனை ஏற்பதற்கு பலர் முன்வரவில்லை. என்பதே யதார்த்தம்.
தமிழ் சமுதாயத்தினை பொறுத்தவரையில் பெண்கள் சரிநிகர் சமமாக மதிக்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க மறுபுறம் பெண்களுக்கு தமிழ் சமுதாயத்தில் ஒரு நிலையான பாதுகாப்பில்லை என்பதும் வருத்தத்திற்குரிய ஒன்று எனலாம்.
அடிக்கடி எனக்குள் ஏற்படுகின்ற பெரிய குமுறல்களில் ஒன்று என்னவெனில் தமிழ் சமுதாயத்தில் பெண் எவ்வாறு ஒடுக்கப்பட்டவள் ஆனாள் என்பது தான். ஏனெனில் ஏனைய நாட்டில், ஏனைய இனங்களில் காணப்படாத பெரும் அடக்கு முறை எவ்வாறு தமிழ் சமுதாயத்தில் கொண்டு வரப்பட்டது என்ற அந்த ஆய்விற்காக நாம் வட இலங்கை தமிழ் சமுதாயத்தை ஒருமுறை பின் நோக்கி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.
சுதந்திரத்திற்கு முற்பட்ட வட இலங்கை வரலாற்றை பொறுத்தவரையில் தமிழ் சமுதாயத்தில் சாதிமுறை வேரோடி இருந்தது. தற்போதும் அவ்வாணிவேர் எமது சமுதாயத்தில் வேர் கொண்டே இருக்கின்றது. 1834ஆம் ஆண்டு சைமன்காசிச்செட்டி என்பவர் “The casters, custom, manners and literature of Tamils” என்ற நூலில் எமது சமுதாயத்தில் கிட்டத்தட்ட 65க்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதாகவும் இலங்கை தமிழருடைய சாதி அவர்களின் பெயர்களில் உள்ளடக்கப் பட்டிருப்பதனையும் வெளிப்படுத்தியிருந்தார்.
அந்தளவுக்கு தமிழருடைய வாழ்க்கையில் தோன்றிய சாதி அமைப்பு முறையே பெண் ஒடுக்கு முறையின் அடித்தளத்திற்கு காரணமானது. சாதீயத்தில் உயர்சாதிப் பெண்கள் உயர்ந்தோராகவும், சாதியில் தாழ்ந்த பெண்கள் தாழ்ந்தோராகவும், பார்க்கின்ற வழக்கத்தில் இருந்து பெண்களின் ஒடுக்குமுறை வரலாறு ஆரம்பிக்கப்பட்டது எனலாம். பெண்களின் நடை, உடை, பாவனை என்பது சாதிப்பிரிவை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
உயர்சாதியினர் எனப்பட்ட பெண்கள் சீலையை இடுப்பில் கட்டி கால்களினூடாக இழுத்து சொருகிக் கொள்வார்கள். அதாவது தாறுபாச்சி கட்டுதல் போல கட்டிக்கொள்வார்கள். இவ்வாறு அணிந்து கொள்ளும் சேலைகளுக்கு உயர்சாதிப் பெண்கள் மேற்சட்டையும் அணிந்து கொண்டனர். ஆனால் அடித்தட்டு மக்கள் என சாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள் சேலையை குறுக்கு கட்டாக கட்டியிருப்பார்கள். சில சந்தர்ப்பங்களில் தாழ்ந்த சாதிப்பெண்கள் தமது உடம்பின் மேற்பகுதியை மூடுவதற்கு சில சமூகம் அனுமதி அளிக்கவில்லை. “கந்தை உடையினர் குறுக்குக்கடவினார்” என காதலியாற்றுப்படை உள்ளிட்ட இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
இதனைவிட ஆபரணங்கள் அணிவதிலும்கூட பெண்களிற்கு தமிழ் சமுதாயம் கட்டுப்பாட்டை விதித்திருந்தது. குறிப்பாக பெண்களின் ஆடை, அணிகலங்களைப் பார்த்து அவர்கள் இன்ன சாதியினர் என்று கூறுகின்ற அளவிற்கு பெண்களின் தகுதியை அவர்களின் ஆடை அணிகலன்களே தீர்மானித்தது எனலாம். உயர்சாதியினர் தாலியும், அட்டியல், பிலாக்கி, மூக்குத்தி, கடுகபணிக்கொலுசு, சிமிக்கி, மொடுசங்கிலிச்சிலம்பு, தூக்கு கடுக்கன் என பலவிதமான ஆபரணங்களை அணிந்து கொண்டனர். ஆனால் ஒடுக்கப்பட்ட பெண்கள் இத்தகைய ஆபரணங்களை அணிந்தாக தெரியவில்லை. அணிவதற்கும் அனுமதியும் வழங்கப்படவில்லை.
அன்று நடந்தவற்றைப் பார்த்து ஒருவித கோபம் எமது தமிழ்சமுதாயம் மீது வரலாம். ஆனால் ஆரம்பகாலத்தில் இவ்வாறான பல நெருக்கடிகளுக்கும், பாகுபாட்டிற்குள்ளும் பெண்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை எண்ணுகின்ற போது மனம்படுகின்ற வேதனையை வார்த்தைகளால் கூறமுடியாதுள்ளது. ஆனால் பலருக்கு தெரியாத ஒரு விடயம் என்னவெனில் “எமது தமிழ்சமூகம் சாதியின் பெயரால் கூறு போடப் பட்டதே எமது பலவீனத்திற்கு நாமே தோண்டிவிட்ட முதலாவது குழி” பிரிவினை என்பது எமது சமுதாயத்தால் எப்போதோ ஏற்படுத்திவிடப்பட்ட ஒன்று. ஆனால் அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் சமுதாயம் பெண்களுக்கான அங்கீகாரத்தை வழங்க இன்னும் முன்வரவில்லை என்பது மனவேதனைக்குரியது.
தமிழ் சமுதாயத்தில் பெண்களுக்கென விதிக்கப்பட்ட உரிமைகளும் கடமைகளும் கூட அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதனையே மறுபடியும் நினைவூட்டுகின்றது. “பெண்களுக்கு விவாகமே உபநயமாகும். கணவனுக்கு பணிவிடை செய்தலே குருவழிபாடாகும். சமையல் முதலிய வீட்டு வேலைகளே அக்னி காரியமாகும்” இவ்வாறு இன்னென்ன கடமைகளுக்காக மட்டும் இவர்கள் படைக்கப்பட்டார்கள் என்பதை அழுத்தி கூறி ஆரம்பகால தமிழ் சமுதாயம் பெரிய கட்டுப்பாட்டை பெண்கள் மீது சுமத்தி இருக்கின்றது.
தமிழ் சமுதாயத்தை பொறுத்தவரையில் பெண்கள் தனித்தியங்க முடியாதவளாக சித்தரித்து அதன் படி பெண்களை ஆண்களுக்கு கீழ் வைத்திருந்ததை பார்க்கலாம். அதாவது பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும், திருமண பருவம் அடைந்தபின்னர் கணவனாலும், மூப்பிலே புத்திரனாலும் காக்க படுபவளாக இருக்க வேண்டும். இந்நியதியை மீறுகின்ற பெண்கள் ‘பிறந்த குலம் புகுந்த குலம் இருண்டிருக்கும் வகையை உண்டாக்குகின்றாள்’ என பார்க்கப்பட்டாள். இதன் மூலம் பெண்கள் ஏனையொரில் தங்கி வாழ வேண்டியவள் என்ற அத்தியாயம் ஆரம்பகாலம் முதலே போடப்பட்டுவிட்டது. இதனால் பெண்கள் தாமாகவே தனித்து செயலாற்ற முடியாதவள் என்ற போர்வையை தமிழ் சமுதாயம் அவளிற்கு அளித்துவிட்டது. இவ்வாறு சமூகத்தில் பெண்கள் வாழ்வதற்கே பல்வேறு தடைகள் என்றால், அவர்கள் எவ்வாறு சமூகத்தில் முன்னேறுவது? என்பது சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.
முன்னேற்றத்திற்கு அடிப்படையாக திகழக்கூடிய கல்வி உரிமை கூட ஆரம்பத்தில் மறுக்கப்பட்டிருந்தது. அத்தோடு சமூகத்தில் வழக்கம் ஒன்று காணப்பட்டது. “பெண்கள் குடும்பத்தைவிட்டு வெளியே வந்து கல்வி கற்பது என்பது வழக்கமில்லை” என்றும் “படித்த பெண்கள் ஆடவர்களை மதிக்கமாட்டார்கள்” என்ற எண்ணம் ஆரம்பகால பெண் கல்விற்கு தடையாக காணப்பட்டது. இருப்பினும் மருத்துவம் செய்வதற்கும், பெண்களிற்கு பிரசவம் பார்ப்பதற்கும் பெண்களே தேவை என்ற எண்ணத்தினால் மருத்துவிச்சி என்று பெயருடன் பெண்கள் மருத்துவம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சில தேவைகளின் நிமிர்த்தம் தான் பெண்களுக்கு சில உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை உண்மையில் முட்கள் நிறைந்த பாதைதான். ஏனெனில் சாதாரணமாக ஒரு சமுதாயத்தில் ஒரு மனிதன் வாழக்கூடிய அடிப்படை உரிமையான- பேச்சுரிமை, கல்விஉரிமை, சமத்துவம் உள்ளிட்ட உரிமைகள் எவையும் பெண்களுக்கு ஆரம்பகால தமிழ் சமுதாயம வழங்கவில்லை. அதற்கு காரணம் சமுதாயத்தில் அக்காலத்தில் இறுக்கமாக பேணப்பட்ட நடைமுறைகளே ஆகும். இருப்பினும் இந்த நிலைமை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களில் மாற்றமடைய தொடங்கியது. அம்மாற்றம் சாதாரணமாக நடைபெற்ற ஒன்றல்ல. பல போராட்டங்கள், பல புரட்சிகள் மூலமே வென்றெடுக்கப்பட்டது.
(மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த தொடர் கட்டுரை ஆக்கம் பிரசுரமாகிறது. அடுத்த இதழில் பெண்கள் உரிமைகளும் அதற்கான போராட்டங்களும் எனும் தலைப்பில் பெண்கள் தமது அடக்குமுறைக்கெதிராக முன்னெடுத்த போராட்டங்களைப் பற்றி கதைப்போம்.)
செல்வி. டினோசா ராஜேந்திரன்
உதவி விரிவுரையாளர்-வரலாற்றுத்துறை
யாழ் பல்கலைக்கழகம்
நிமிர்வு மாசி 2018 இதழ்-
Post a Comment