நிமிர்வுகள் - 9- நிலைமாறும் கதிரைகள் !
அப்புக்காத்தரும்…. அன்னம்மாக்காவும்.;..
அப்புக்காத்தர்: இஞ்ச உந்தக் கதிரையில கொஞ்ச நேரம் இருக்கலாமே…?
அன்னம்மாக்கா: கொஞ்ச நேரம் தான் என்றால் இருக்கலாம்… பிரச்சினையில்லை...
அப்புக்காத்தர்: அதேன் அப்படி… இது உங்கட கதிரையே…?
அன்னம்மாக்கா: கதிரைகள் நிரந்தரம் இல்லைக் கண்டியளோ…?
அப்புக்காத்தர்: என்ன… ஏதோ சொல்ல வாற மாதிரிக்கிடக்குது?
அன்னம்மாக்கா: என்னத்தைச் சொல்லுறது...'நிலைமாறும் உலகில், நிலைக்கும் என்ற கனவில்’எண்டு பாடவேண்டியது தான்...
அப்புக்காத்தர்: அதெண்டாச் சரிதான்…ஆனால் எல்லாருக்கும் விளங்குதில்லையே...
அன்னம்மாக்கா: கதிரையில இருக்கப் போறது கொஞ்சக் காலம் தான் எண்டு நினைச்சு அதில இருக்கேக்கை நல்லதுகளை மட்டும் செய்து கொண்டுவந்தாச் சரி...
அப்புக்காத்தர்: ஏறின உடனேயே என்னை விட்டா ஆள் இல்லையெண்டு கண்மண் தெரியாமல் திரிஞ்சால்…
அன்னம்மாக்கா: அடுத்த முறைக்கு எல்லாம் தலைகீழாய்த்தான் போகும்…
அப்புக்காத்தர்: சனங்கள் இடைக்கிடை எண்டாலும் தங்களிட்ட இருக்கிற மூளையைப் பாவிக்கும்தானே…
அன்னம்மாக்கா: எல்லாரும் ஒன்றாய் இருக்க வேணும், ஒற்றுமையாய் செயற்படவேணும் எண்டு தாரக மந்திரம் சொல்லி…
அப்புக்காத்தர்: ஒன்றாய் கிணற்றுக்கை குதிக்க வேணும் எண்டாலும் சனமெல்லாம் விசுவாசத்தில பின்னால குதிக்குமெண்டு, முன்னால ஓடுறவை இன்னமும் நம்பிக்கொண்டிருக்கினமோ..?
அன்னம்மாக்கா: எங்களுக்கு என்ன வேணுமென எங்களிட்ட கேட்காமல். இது தான் உங்களுக்கு நல்லது.. உங்களுக்குப் பிடிக்கும் எனக் கடை பரப்பிற வியாபாரம் தான் எல்லாம்…
அப்புக்காத்தர்: அதெண்டாச் சரிதான்.. கடைக்காரர் தாறதை வாங்கி வாங்கி.. எங்களுக்கு என்ன தேவை எண்டதே மறந்து போச்சு
----------+------------------+------------------+-------------------------
நெம்பு
நிமிர்வு மாசி 2018 இதழ்-
Post a Comment