திலீபனின் வழியில் மக்கள்




* பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் இருப்போர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

என்கின்ற தியாக தீபம் திலீபனது முக்கிய கோரிக்கைகள் இரண்டும் திலீபன் இறந்து 32 ஆண்டுகள் கடந்தும் சிங்கள அரசு நிறைவேற்றவில்லை. பார்த்தீபன் இன்றும் பசியோடு தான் இருக்கிறான்.


இன்று யுத்தம் மௌனிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், சிங்கள அரசு தனது பௌத்த ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்தியே வருகின்றது. அதன் பிந்தைய சாட்சி தான் முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் ஆக்கிரமிப்பாக அமைக்கப்பட்ட விகாரையும், அந்த விகாரை பிக்கு இறந்த பின்னர் நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியடியில் எரித்த சம்பவங்களுமாகும். தமிழர்களது உணர்வுகளை கிஞ்சித்தும் மதிக்காமல்  புத்தபிக்குகள் நடந்து கொண்ட விதம் மீண்டும் ஒரு கலவரத்துக்குள் நாட்டை கொண்டு போய் சிக்க வைக்கும் நோக்கிலேயே இருந்தது.


இன்னமும் நூறு வரையான தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களில் பலர் எவ்வித குற்றமும் செய்யாதவர்கள். பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்தி பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறைகளில் இந்த நிமிடம் வரை வாடிக் கொண்டிருக்கின்றனர்.

எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகளும் அரசியற்கைதிகளின் விடுதலை தொடர்பில் அழுத்தமான நிபந்தனைகள் எவற்றையும் விடுத்ததாகத் தெரியவில்லை.  அரசியலகைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று போராட்டங்களை கூட முன்னெடுக்கவில்லை. அரசியல் கைதிகள் சிறைகளில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஐந்தாறு நாட்கள் கடந்த பின் தான் எங்கள் ஊடகங்களிலும் முன் பக்கத்தில் செய்திகள் வெளியாகின்றன. அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்களுக்கு கூட எங்கள் ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை.   அரசியல்வாதிகளும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்கள். மீண்டும் அவர்கள் தொடர்ந்தும் சிறைகளில் வாடுவார்கள்.   அவர்களின் குடும்பங்களின் நிலையோ யாருக்கும் தெரியாது. பல தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் இன்றும் இருண்ட சிறைகளின் நான்கு   சுவர்களுக்கு மத்தியில் தான் உள்ளது.


இம்முறை திலீபனது தியாக நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடந்து முடிந்துள்ளன. வவுனியாவில் இருந்து தமிழ்த்ததேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "திலீபன் வழியில் வருகின்றோம்" என்கிற தொனிப்பொருளில் அமைந்த நடைப்பவனி நல்லூரை வந்தடைந்தது.

இந்நடைப்பவனியில் தமிழ்த்தேசியக் கட்சிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் உணர்வுடன் கலந்து கொண்டனர். திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த இடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற போது வயதான தாய்மார்களின் கதறல்கள் வானைப்பிளந்தன. தாயக விடுதலைப் போருக்கு தனது இரண்டு பிள்ளைகளை கொடுத்த தாயார்  முதலாவதாக ஈகைச்சுடரினையும், மலரஞ்சலியினையும் செலுத்தினார். தொடர்ந்து நினைவுத்தூபியடியில் இடம்பெற்ற மலர்வணக்கத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மலர்வணக்கத்தை செலுத்தி இருந்தனர். பாடசாலை மாணவர்கள், இளையோர் திலீபனது தியாகத்தை எண்ணி கவிதை, பேச்சுக்கள் பேசினர்.


 தமிழர் நில ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் செய்துவருகின்றது சிங்கள பேரினவாதம். அதற்கு திலீபனது அகிம்சை வழியும் சரிவரவில்லை. அதன் பின்னரான ஆயுத வழியும் சரிவரவில்லை. அப்படியாயின் இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் தங்களுக்கான நிலத்தில் ஒரு தேசமாக, இறைமையுடனும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழ்வது எப்படி?

இந்தக் கேள்விகளைத் தான் இன்றும் மக்கள் மனங்களில் நிறைந்திருந்து கேட்கிறார் திலீபன். ஆயுதவழியில் வேண்டாம் அமைதியாக இருங்கள் உங்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துவிடும் என உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் கூக்குரலிட்டவர்கள் இன்று போர் முடிந்து பத்து ஆண்டுகளின் பின்னரும் என்ன சொல்லப் போகின்றார்கள்?

சர்வதேசம் இன்றுவரை நாடுகளின் நலன்கள் என்றே காய்களை நகர்த்துகின்றது. தேவையில்லாமல் எதுக்கு சிறீலங்கா நாட்டையும் அதன் அரசையும் பகைப்பான் என கருதுகின்றது. இவ்வாறான நிலையில் தான் தமிழர் பிரதிநிதிகள் வருடா வருடம் ஜெனீவாவுக்கு காவடி தூக்குகின்றார்கள்.

திலீபனின் நினைவேந்தல் இடம்பெறும் காலப்பகுதியில் ஏராளமான மக்கள் தினமும் வந்து  நல்லூரில் உள்ள நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தி விட்டு செல்வதனை பார்க்க முடியும்.  திலீபம் இன்னமும் உயிர்ப்புடன் தான் உள்ளது. மக்களும் அவன் பின்னால் தான் உள்ளார்கள்.  இதுதான் மறைக்கமுடியாத உண்மை.


அமுது 
நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.