எழுக தமிழும் தமிழ் மக்களும்



Image result for eluka tamil 2019 photo
இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்து 71 வருடங்களாகி விட்டன. தமிழின அழிப்பு யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் சென்று விட்டன. சிங்கள அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தமிழர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் ஏமாற்று வாக்குறுதிகளைத் தந்து சிங்களக் கட்சிகள் ஆட்சி பீடங்களுக்கு ஏறுவது மட்டுமே காலாதிகாலம் நடைபெறுகிறது.

அரசியல் ரீதியாகவும், அகிம்சைரீதியாகவும் மட்டுமல்ல தமிழர்கள் தமது உரிமைகளை பெறுவதற்காக 30 வருடங்களாக ஆயுத ரீதியாகவும் போராடினார்கள். அப் போராட்டத்தை இலங்கை அரசு பல நாடுகளின் உதவியுடன் மௌனிக்க வைத்தது. தமிழ் மக்களின் போராட்டங்களை வலுப்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் நோக்கில் எழுக தமிழ் நிகழ்வுகள் 2016 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலும் 2017 இல் மட்டக்களப்பிலும் தமிழ் மக்கள் பேரவையால் நடத்தப்பட்டன. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று கூறி பன்னிரண்டு நாட்கள் தமிழர்களின் விடியலுக்காய் உண்ணா நோன்பு இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பு இரண்டாம் நாள் நினைவு நாளில் 2019 ஆண்டு எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.

5000 க்கும் குறையாத மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டார்கள். இம்முறை ஒப்பீட்டளவில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியில் பங்கேற்றமை குறைவு தான். ஆனாலும், பேரணியும், பொதுக்கூட்டமும் சிறப்பாகவே இடம்பெற்றது.  யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சமூக அமைப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மக்கள் எல்லோரும் தமிழன் என்ற ஓர் அடையாளத்துடன் அணிதிரண்டார்கள்.

எழுக தமிழ் பேரணியின் ஒரு பகுதி நல்லூர் முன்றலில் இருந்தும் மற்றைய பகுதி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும் ஆரம்பமாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்து ஓர் அணியாகத் திரண்டது. அது உரிமைக் கோசங்களுடனும், எழுக தமிழ் பாடல்களுடனும் யாழ் முற்றவெளியை சென்றடைந்தது. அங்கு எழுக தமிழ் பேரணியின் கோரிக்கைகள் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரினால் பிரகடனப்படுத்தப்பட்டன. அதில்

1. தமிழ் பகுதிகளில் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து

2.சர்வதேச போர் குற்றவிசாரணையை நடத்து

3.தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்

4.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்து

5.வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து

6.இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக் குடியமர்த்து

போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களின் உரைகளில் பின்வரும் விடயங்கள் பேசப்பட்டன. முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். தமிழ் மண் சிதைவுற்றுள்ளது. தமிழரின் குடித்தொகை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. வடக்கிலிருந்து கிழக்கு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட மக்கள் என்ற மனநிலையுடன் எமது தாயகம் தேர்தல் அரசியற் சக்திக்குள் மூழ்கியுள்ளது. நம்பிக்கையற்ற நடைப் பிணங்களாய் ஈழத்தமிழ் மக்கள் அரசியற் பாலைவனத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்கு முறைக்கு எதிராக போராடிவரும் தமிழ்த் தேசமானது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சந்தித்த பொழுதும் தனது அடிப்படையான கூட்டுரிமைகளில் எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது.

இவ்வாறான சூழலில் இன்றைய எழுக தமிழ் 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் பொதுமக்கள், அமைப்புக்கள், புலம்பெயர் சமூகம், நட்புறவு சக்திகள் மற்றும் அரசியற் கட்சிகள் என அனைத்து தரப்பினரின் பங்குபற்றுதலுடன் தமிழ்த்தேசிய எழுச்சியாக எழுந்து நிற்கிறது. இப்பேரெழுச்சி  எமது மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களின் ஒன்றுபட்ட எழுச்சியாகவும், பல்வேறுபட்ட நாடுகளில் உலகத் தமிழர்கள் முன்னெடுக்கும் ஒருமைப்பாட்டு எழுச்சியாகவும் எழுந்து நிற்கிறது. தென்னிலங்கைக்கும், இலங்கைதீவின் மீது கரிகனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்லி நிற்கின்றது.

இலங்கையில் தமிழர்கள் இன்று மிக மோசமான சூழலை எதிர்கொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுகிறது. இராணுவ நிலைகளை அதிகரித்தல், அதனைச் சுற்றி பௌத்த விகாரைகளையும் சிங்கள குடியேற்றங்களையும் நிறுவுதல் உட்பட எமது வழிபாட்டு தலங்கள், பண்பாட்டு மையங்கள் இல்லாமலாக்கும் செயற்பாடுகள் நடத்தப்படுகின்றன.  வனபரிபாலன திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கனிமவியல் திணைக்களம், கமத்தொழில் திணைக்களம் உல்லாசப் பயணத்துறை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீண்டகாலமாக இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஆனால் சிங்கள அரசுகள் தமிழ் மக்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற முத்திரையை குத்தி வேறு நாட்டுப் பிரஜைகளைப் போன்று நடத்தி எமது சகல உரிமைகளையும் பறிக்கிறது. இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். ஆனால் முதலில் தமிழர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எழுக தமிழ் போன்ற தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் தமிழ் கட்சிகள் பல துண்டுகளாக அரசியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் இவ்வாறான போராட்டங்களில் தமிழன் என்ற ஒரே அடையாளத்துடன் ஒன்று சேர்ந்தால் மாத்திரமே எமது பிரச்சனைகளை சர்வதேசம் வரை கொண்டு சென்று தீர்க்க முடியும். யுத்தம் முடிந்து பத்து வருடங்களிலே பல துண்டுகளாக தமிழ்க் கட்சிகள் பிரிவடைந்து செல்வதன் அவசியம் என்ன? தனிப்பட்ட குரோதங்களுக்காக புதிய கட்சிகளை தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாது தொடங்குவதில் எந்த பலனும் இல்லை.

அரசியல் கட்சிகளில் ஏற்பட்ட வெறுப்பினாலும் மனவிரக்தியினாலும் தமிழ் மக்கள் தாமாகவே பல போராட்டங்களை முன்னெடுத்து வருக்கிறார்கள். காணி விடுவிப்பு, கேப்பாபிலவு நிலமீட்பு, காணாமல் ஆக்கப்பட்டவரைத் தேடும் போராட்டங்கள், அரசியல் கைதிகள் விடுதலைக்கான போராட்டம், நீராவியடிப் பிள்ளையார், கன்னீயா வெந்நீரூற்று, கல்முனை வடக்கு பிரதேசத்தை தரமுயர்த்தல் என பல போராட்டங்களை மக்கள் தன்னிச்சையாக முன்னெடுத்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையற்ற தன்மை உருவாக தமிழ்த் தலைமைகளின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம்.

இந்த நாட்டில் சிங்கள மக்களைப் போன்று தமிழர்களும் தமது பூர்வீக நிலங்களில் சகல உரிமைகளையும் பெற்று வாழவே விரும்புகின்றனர். சின்னா பின்னமாகிப்போயுள்ள எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்பி நாமும் உங்களைப் போன்று வளமான ஒரு வாழ்வியலில் வாழும் வகையில் ஒரு இடைக்கால விசேட பொருளாதார கட்டமைப்பை சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து உருவாக்குங்கள் என்று மத்திய அரசாங்கத்திடம் கேட்கின்றோம். எம்மை நாமே ஆட்சி செய்து சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு எமக்கு இருக்கும் சுயநிர்ணய உரிமையினை ஏற்றுக்கொள்ளுங்கள், அங்கீகரியுங்கள் என்று எமது சிங்கள முஸ்லீம் சகோதரர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். எமது மக்கள் என்ன தீர்வை விரும்புகின்றார்கள் என்பதை அவர்களின் கருத்தை அறியும் ஒரு சர்வசன வாக்கெடுப்பை எமது மக்கள் மத்தியில் நடத்தி முடியுங்கள் என்று அரசாங்கத்தை கேட்டு வைக்கின்றோம்.

சிங்கள சகோதரரும் தமிழ் மக்களும் இந்த நாட்டில் காலம் காலமாக உள்ளூர் சுதேச மக்களாக வாழ்ந்து வருபவர்கள். எமது சகோதர இனமான உங்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் நாம் என்றைக்கும் தடையாக இருந்ததில்லை. நீங்களும் வாழ வேண்டும் நாமும் வாழ வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். நீங்கள் தற்போது எமக்கு எதிராக மேற்கொண்டு வரும் எல்லா செயற்பாடுகளையும் நிறுத்தி எமது சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பீர்கள் என நம்புகின்றோம். சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுவது உலகத்தின் மூத்த இனங்களில் ஒன்றான எமது தமிழ் இனத்தின் இருப்பும் அடையாளமும் இலங்கைத் தீவில் பல தசாப்த கால இன முரண்பாடு காரணமாக இல்லாமல் போகும் நிலமை ஏற்பட்டிருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். சர்வதேச மன்னிப்புச் சபை சட்டங்கள், கோட்பாடுகளில் உடன்படிக்கை அடிப்படையில் உங்களுக்கு தார்மீக கடைப்பாட்டை உணர்ந்து செயற்படுங்கள். இணைத்தலைவர்களின் இவ்வாறான உரைகளைத் தொடர்ந்து பல கட்சித்தலைவர்களும் அங்கு உரையாற்றினார்கள்.

எழுக தமிழ் பேரணியானது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக நடத்தப்பட்டது. இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்ற தருணத்தில் எந்த ஜனாதிபதி வேட்பாளரும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கோ அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுத் தருவதற்கோ எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை. மாறாக அவர்கள் சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று ஆட்சியமைப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

தற்போதைய ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக இருந்து வருகிறது. பல தடவைகள் ஐ.தே.க. அரசு மீதான  நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முறியடிப்பதற்கு காரணமாக த.தே.கூ. இருந்தும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான எந்த கதவுகளும் திறக்கப்படவில்லை. தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டார்கள். இதைப் புரிந்து இனிவரும் தேர்தலில் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வாய்ச் சொல்லால் பொய்யான வாக்குறுதிகளை தருபவர்களை விடுத்து மக்களின் பிரச்சனைகளை சரியாக அணுகித் தீர்க்க கூடியவரை தெரிவு செய்ய வேண்டும்.

தமிழ் மக்கள் அனைவரும் எழுக தமிழில் தமது உணர்வுகளை ஒன்றாக நின்று ஒற்றுமையை அரசியல்வாதிகளுக்கு புரிய வைத்துள்ளார்கள். இதைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் நலனில் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறை கொள்ள வேண்டும். இல்லா விடில் தமிழ் மக்கள் தேர்தலில் நம்பிக்கையற்றவர்களாகி அதைப் புறக்கணிக்கும் ஒவ்வாத சிந்தனைக்குத் தூண்டப்படுவார்கள். இதுதான் இன்றைய நிலவரம்.


பானு
நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.