தேசியவாதம் - சமூகம்
தேசிய இனமொன்று சுயாட்சி கோருவதாயின் தனக்கென கட்டமைக்கப்பட்ட அரசியல், சமூகம், பொருளாதாரம், தாயகம் என்பவற்றுக்கு உரித்துடையதாக இருக்க வேண்டும். கடந்த இதழில் அரசியல் பற்றி பார்த்தோம். இந்த இதழில் சமூகத்தை பார்ப்போம்.

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் சமூகக் கட்டமைப்பை சிதைத்தாலே போதுமானது. சிங்கள ஆதிக்கம் தமிழரின் சமூகக் கட்டமைப்பின் மீது இப்போது தொடுத்துள்ள போரும் இத்தகையதுதான்.

இளைஞர்கள் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்ப்புக் கொள்ளாதிருக்கும் பொருட்டு சமூகப் பிறழ்வுகளைத் (போதை, மதுபானம், புகைப்பாவனை, பரத்தையர் ஒழுக்கம்) தூண்டிவிடுதல்; அவை அவர்களின் கைகளுக்கு இலகுவாகக் கிடைக்கும்படி செய்தல்; தமிழர்களுக்குள் முன்னர் புரையோடிக் கிடந்த சாதி, சமயம்சார் பேதமைகளை தூண்டிவிடுதல்; இளைஞர் குழுக்களை தவறாக வழிநடத்தல் எனத் தொடரும் இந்தப் போரில் தமிழ் சமூகம் சிக்கி சின்னாபின்னமாகி போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

பொதுவாக தமிழருக்குள் நிலவிய சாதிய பாகுபாட்டை மூன்று காலகட்டங்களில் நோக்கலாம்

1. போருக்கு முந்திய காலம்

2. போர்க் காலம்

3. போருக்குப் பிந்திய காலம்

போருக்கு முந்திய காலம்

போருக்கு முன்னர் தமிழ் இனம் சாதியபாகுபாட்டால் பலவாக பிரிந்து கிடந்தது. இதனை மையப்படுத்தியே அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன. தொகுதி வேட்பாளர்களை சாதிய செல்வாக்கே தீர்மானித்தது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் உச்சம் பெற்ற சூழ்நிலையில் தேசியம் குறித்த சிந்தனைகள் மேலோங்கியது. ஆனால் இதற்கு பெரும் தடையாக சாதியம் இருந்தது. எனினும் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்டவர்கள் சாதிய வேறுபாடுகளை களைய முனைந்தனர். இதன் ஒரு பகுதியாகவே சமூகப் புரட்சி, இலக்கியப் புரட்சிகள் தமிழர் தாயகத்தில் முனைப்புப் பெற்றன.

போர்க் காலம்

போர்க் காலத்தின் ஆரம்ப கட்டத்தில் சாதியப் பிரச்சினை முற்றாக முடிவிற்கு வராத போதிலும் அது பெரும் பிரச்சினையாக நீடித்திருக்கவில்லை. போரின் உச்சத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள், இடப்பெயர்வுகள் என்பன சாதியப் பாகுபாட்டை தற்காலிகமாக மறையச் செய்தன. இந்நிலையில் விடுதலைப் புலிகள் சாதி மறுப்புத் திருமணங்களை அமைப்புக்குள்ளும் சமூகத்திலும் நடத்தினர். ஆனாலும் சமூகக்கட்டமைப்பில் திருமண உறவுகளால் சாதியப்பாகுபாட்டை முற்றாக உடைக்க முடியவில்லை. ஆயினும் போர்க் காலத்தில் சாதியம் மறந்த நட்பும் ஒற்றுமையும் தமிழினத்தில் மேலோங்கியிருந்தது என்பதே உண்மை.

போருக்குப் பிந்திய காலம்

தமிழ்தேசிய சிந்தனையால் மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட சாதியப் பாகுபாடு மெல்ல மெல்ல தூண்டிவிடப்பட்டது. இதில் பேரினவாதத்தினதும் அயல் வல்லரசினதும் புலனாய்வு சக்திகளின் அரூபக் கைகள் வலுவாக உள்ளன. மீண்டும் சாதியம் குறித்த சிந்தனைகள் தமிழ் இனத்திற்குள் செருகப்பட்டது. தவிர, விடுதலைப் புலிகளால் சாதி மறுப்புத் திருமணம் செயது கொண்டவர்களில் சிலர் அதே சாதியத்தை காரணம் காட்டி பிரியவும் தொடங்கினர். இவ்வாறான நிலையில் சமய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சாதியம் மீண்டும் கட்டமைக்கப்படுகின்றது.

வரணி, சாவகச்சேரி சம்பவங்கள் இதற்கு உதாரணம். மேலும், கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழுடன் வெளியாகும் இந்திய நாளிதழில் சாதியத்தைத் தூண்டும் விதமான விளம்பரங்கள் வெளியாகின்றன. தமிழர் தாயகத்திலும் அத்தகைய விளம்பரத்தைப் பிரசுரிக்க சிலர் முயன்றுள்ளனர். இங்கிருந்து வெளியாகும் நாளிதழ்களிலும் இவ்வாறான முறையில் விளம்பரங்களைப் பிரசுரிக்க சிலர் அணுகியிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும். ஆனால், அந்த நாளிதழ்களின் ஆசிரியர்கள் இத்தகைய விளம்பரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். ஆனாலும், தமிழர் தாயகத்தில் சாதியத்தை மையமாகக் கொண்டு சில விடயங்கள் நகர்த்தப்படுகின்றன. இவை நாளடைவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.

தமிழர்கள் சாதியத்தை  மையமாகக் கொண்டு பிரிக்கப்பட்டதைப் போன்று சமயத்தை அடிப்படையாகக் கொண்டும் பிளக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு மொழி பேசும் மக்களாக இணைந்த இஸ்லாமியர்கள் தங்களை தனியான ஒரு இனமாகவும் தனியான சமய, சமூக கட்டமைப்புக்களைக் கொண்டவர்களாகவும் காட்டி போராட்டத்திலிருந்து விலகினர். ஆயினும் சமாதான பேச்சுக்களில் தங்களை பிரதிநிதிகளாக இரு தரப்பிலும் நிலை நிறுத்திக்கொள்ள இவர்கள் முயற்சிகளை எடுத்திருந்தமை வரலாறு.

போர்க் காலத்தில் கிறிஸ்தவ மதகுருமார்களின் பங்களிப்பு மகத்தானது - போற்றுதற்குரியது. ஒரு கட்டமைப்பின் கீழ் அவர்கள் இயங்கியமையால் மக்கள் பணியே தம்பணியென சிறப்பாக செயலாற்றியிருந்தனர். அதேநேரம் இடப்பெயர்வுகளின்போது மத வேறுபாடுகளின்றி ஆலயங்கள், தேவாலயங்களில் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இதேவேளை தமிழ்த் தேசியத்தை வலுவூட்டுவதில் கிறிஸ்தவ மத குழுக்களின் பங்களிப்பு கனதியாக இருந்தது. இதனால் மத பாகுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களால் அவர்கள் நேசிக்கப்பட்டார்கள். முக்கியமாக மன்னார் முன்னாள் ஆயர் வண. இராயப்பு யோசப் ஆண்டகை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை. தமிழ்த் தேசிய உணர்வு மிக்க கிறிஸ்தவ மதகுருமார்கள் முக்கிய பதவிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்ட இந்த அகற்றம் தமிழ் இனத்தை வெகுவாகவே பாதித்துள்ளது. இதன் வெளிப்பாடே மன்னாரில் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பும் அதனைத் தொடர்ந்து பரவலாக ஏற்பட்ட கிறிஸ்தவ - இந்து மத முரண்பாடும்.

கிறிஸ்தவ இந்து மத முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து  தனித்தனி மத பிரிவுகளாக கலந்துரையாடல்களை நடத்தியிருந்தமை பற்றி இங்குள்ள வார இதழ் ஒன்று தனது கட்டுரையில் சுட்டிக் காட்டி இருந்தது.

இதேவேளை தமிழர்கள் அதிகமாக பின்பற்றும் இந்து, கத்தோலிக்க மதங்களை தவிர்த்து இப்போது வேறு சில கிறிஸ்தவ மதங்களும் உள்நுழைகின்றன. அந்த மதங்களுக்கு எதிராகப் போராடுகிறோம் என கிளம்பியுள்ள இலங்கை சிவசேனா, மற்றும் பெயரிடப்படாத ஒருசில தீவிர இந்துமத அமைப்புகள் மதப் பிரிவினைகளை ஏற்படுத்துவதில் முன்நின்று செயற்படுகின்றன. இதற்காக பேரினவாத சக்திகளிடம் கைகோர்க்கவும் அவர்கள் தயங்கவில்லை.

இந்நிலையில் இந்து, கத்தோலிக்க மதங்களை பலவீனப்படுத்த கிறிஸ்தவ அமைப்புக்கள் முனைகின்றன. அவை போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வறுமையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு மதத் திணிப்பை ஏற்படுத்துகின்றன. இவ் வேலையில் நான்கைந்து கிறிஸ்தவ மத நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இந்த அமைப்புகளின் பிரதான தலைமைப் பீடங்கள் தென்னிலங்கையிலேயே உள்ளன. அவற்றின் உத்தவுப்படியே இங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நமது சமூகக் கட்டமைப்பில் மிக முக்கியமாக குறி வைக்கப்பட்டுள்ளவர்கள் இளைஞர்களே. தமிழர் தாயகத்தில் நாளாந்தம் பத்திரிகைகளில் செய்திகள் வருமளவுக்கு வாள்வெட்டு - வன்முறைக் கலாசாரம் பெருகியுள்ளது. இந்தக் குழுக்களின் பின்னணியில் தென்னிலங்கை நிதி நிறுவனங்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இருப்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபணமாகியுள்ளது. ஆனாலும், அடாவடிக் குழுக்கள் சுதந்திரமாகவே இன்னமும் உலவுகின்றன.

 பொருளாதாரம் நலிந்த சமூகத்தவர்களாக கலாசார திணிப்புகளுக்கும் கிளறப்படும் பிரிவினைகளுக்கும் தூபமிடப்படும் மதப் பிளவுகளுக்கும் தமிழ் சமூகம் முகங்கொடுத்து வருகிறது. தமிழ் சமூகம் புதியதொரு சமூகப் புரட்சி நோக்கி நகர்கின்றபோதும் சிங்கள – பௌத்த பேரினவாதம் அதனைத் தடுப்பதில் அதிக சிரத்தை காட்டி வருவது கண்கூடு.


ஐங்கரன்
நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.