தடுக்கி விழுந்தாலும் கைவிடாத காலணி உற்பத்தி தொழில்



காலணி உற்பத்தியானது எமது பிரதேசங்களில் குறைந்தளவே நடைபெறுகிறது. பொதுவாக காலணி இறக்குமதியை நம்பியே இங்குள்ள பல காலணிக் கடைகளும்  உள்ளன. மேலும், பெரும்பான்மையான கடைகளில் மலிவு விலையில் தரமற்ற காலணிகளே கிடைக்கின்றன. 

முன்னர், யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் வதிரி கிராமத்தில் தான் காலணியை சிறுகைத்தொழிலாக தயாரிக்கும் பல குடும்ப கைத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. இப்போது காலணி உற்பத்தி துறை இந்தப்  பகுதிகளில் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது.

நாங்கள் இன்று பார்க்க இருப்பது அறிவாலயம், இமையாணன் கிழக்கு,  உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள காலணி தயாரிப்பு நிறுவனம்.  சிறு தொழில் நிறுவனத்தை ஒன்றரை இலட்சம் ரூபாய் முதலீட்டுடன் 2007 ஆம் ஆண்டில் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நடாத்தி வருகிறார் சின்னத்தம்பி செந்தில்வேல். அவர்களிடம் பேசியதில் இருந்து பல்வேறு தகவல்களும் கிடைத்தன.


நான் 12 வருடங்கள் DSI கொம்பனியில் வேலை செய்தேன். அந்த அனுபவத்திலேயே இந்த தொழிலைத் தொடங்கினோம். நாங்கள் தொழில் ஆரம்பித்து முதல் வருடத்திலேயே 16 பேர் வரை எமது நிறுவனத்தில் தொழில் செய்தனர்.  ஒரு நாளைக்கு 100 சோடி, 150 சோடி என்று கடைகளுக்கு விநியோகித்திருக்கின்றோம்.

2011 இல் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் கொழும்பு BMICH இல் நடாத்தப்பட்ட    தேசிய மட்ட கண்காட்சியில் மாகாண ரீதியிலான விருதுகள் வழங்கப்பட்டன.   அதில் வடமாகாணத்தில் இருந்து சிறந்த முயற்சியாளராக எங்களது பாதணி உற்பத்தியகம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாமிடம் கிடைத்தது. விருதுகள் கொடுத்த உற்சாகத்துடன் தொடர்ந்து நல்ல வருமானத்துடன் இயங்கி வந்தோம். 


கிளிநொச்சியில் உள்ள காலணியகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாவுக்கு மேல் பொருள்களை வழங்கி இருந்தோம். அந்தக்கடை எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து சாம்பலானது. நாங்கள் விநியோகித்த காலணிகளும் எரிந்து சாம்பலாகி விட்டன. இதனால் அங்கிருந்து வரவேண்டிய பணம் வராததால் நிர்க்கதி நிலைக்கு ஆளானோம். இதன் போது எழுந்த நிதிப்பிரச்சினைகளை சமாளிக்க நுண்நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்களிடமும் அறா வட்டிக்கு கடன்களை வாங்கி மேலும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டோம்.   

நாங்கள் இங்கு பல சவால்களுக்கு மத்தியில் தான் காலணி உற்பத்திகளை செய்து வருகின்றோம். எனது மனைவியும் பல்வேறு பட்ட வகைகளிலும் எனது தொழிலுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றார்.  தென்னிலங்கையில் இருந்து வரும் உற்பத்திகளின்விலை குறைவாக இருப்பதால் இங்குள்ள காலணியகங்கள் அந்த உற்பத்திகளை வாங்கியே விற்கிறார்கள். பொதுமக்களும் அவற்றையே வாங்கி செல்கின்றார்கள். ஆனால் அவற்றின் தரம் குறைவாகவே உள்ளது. நாங்கள் மிகவும் தரமாக உற்பத்திகளை செய்தாலும் விற்பனையில் பின்தள்ளப்படும் நிலையிலேயே உள்ளோம்.

தென்னிலங்கையில் ஆடை உற்பத்தி போல் நிறைய பெண் வேலையாட்களை வைத்து காலணி உற்பத்திகள் பெருமளவில் மேற்கொள்ளப்படுவதால் அவர்களால் விலையை குறைத்து விற்க முடிகிறது. நாங்கள் அதிக பணத்தைச்  செலவளித்து மூலப்பொருள்களை வாங்கி முடிவுப்பொருள்களாக மாற்றும் போது அதிக செலவாகிறது.  இதனால் மலிவாக கொடுக்க முடிவதில்லை.

எங்கள் காலணிகளை இங்கேயுள்ள கடைகளில் விற்கக் கொடுக்கும் போது அதில் ஏதும் பிரசினைகள் வந்தால் நாங்களே வாங்கி திருத்தி கொடுக்கிறோம். இதனால் எங்களிடம் உள்ள நேரடி வாடிக்கையாளர்களும் மகிழ்வடைகின்றனர்.

இப்போது ஒருநாளைக்கு சராசரியாக 25சோடி காலணிகளைத் தயாரித்து வருகின்றோம். இப்போது எங்களுக்கு உள்ள பிரதான தடை முதலீடு தான். 20 இலட்சம் ரூபாய் முதலீடு இருந்தால் எங்கள் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும்.   எங்களுக்கு இப்போதுள்ள பெரும் சவால் முதலீடாகும். முதலீடு சரியான முறையில் இருக்குமானால் நிதிச் சுழற்சிக்கு எப்போதும் கையில் காசு இருக்கும். தொழிலையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும்.  வங்கியிலும் கடனுக்கு பதிவு செய்திருக்கின்றோம். அங்கிருந்தும் கடன் கிடைக்கும் பட்சத்தில் காலணித் தொழிலை மேலும் சிறப்பாக முன்னேற்ற முடியும்.

மூலப் பொருள்களை வாங்கினால் உடனே அதற்கு காசு கொடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் முடிவுப்பொருள்களை விற்கும் போது பெரும்பாலான கடைக்காரர்கள் இரண்டு, மூன்றுமாத காசோலைகளை தருகிறார்கள். இதனால் உடனடியாக பணம் கைக்கு வருவதில்லை. இதனால் சரியாக பாதிக்கப்பட்டு வருகின்றோம்.

கடந்த இரு மாதங்களுக்குள் 4 கண்காட்சிகளுக்கு சென்று எங்கள் பொருள்களை காட்சிப்படுத்தினோம்.  இதனால் எமது பொருள்களுக்கு அதிகமான விளம்பரமும் விற்பனையும் கிடைக்கிறது. கண்காட்சிகளில் எனது மனைவியே முன்னின்று பொருட்கள் விற்பனையிலும், அறிமுகப்படுத்துவதிலும் ஈடுபட்டார்.   எமது காலணிகளை வாங்கும் வாடிக்கையையாளர்கள் மிகவும் தரமாக உள்ளது எனச் சொல்லி வாங்கும் போது மகிழ்ச்சியளிக்கின்றது. கண்காட்சிகள் எங்களுக்கு புத்துணர்வை தருகின்றன. தொழிலில் என்ன சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தை  ஏற்படுத்துகின்றது.


தொடர்புகளுக்கு - 0764736481
தொகுப்பு -துருவன் 
நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.