மீண்டும் ஒரு ஏமாற்றத்தை நோக்கி… அன்றாடவாழ்வியலில் ஈடுபாட்டுஅரசியலைத் தேடல்



அறிமுகம்:

ஜனாதிபதிதேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஆயத்தங்கள் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிங்கள பௌத்ததை தமது உயிர் மூச்சாக எண்ணி செயற்படும் கட்சிகள் இந்த ஆயத்தங்களில் உணர்வுபூர்வமாக ஈடுபடுவதில் ஆச்சரியமில்லை. தமிழ் தேசியம் கதைப்போரும் இந்த ஆயத்தங்களில் ஈடுபடுவது தான் பெரிய ஆச்சரியம்.

இலங்கைவாழ் குடிகள் அனைத்தும் அடிப்படைஉரிமைகள், அடையாளங்கள், அபிலாசைகளுடன் வாழ, பொருத்தமான ஒரு ஜனாதிபதியை இத்தேர்தல் மூலம் பெற்றுவிட வேண்டும் என்பது யதார்த்தமான கனவா? வல்லரசுகளின் அரசியல் ஆதிக்ததுக்குள் சுதந்திரம் என்பது சாத்தியமா? இளையதலைமுறையினரின் பங்களிப்பு எங்கே? 2009 இல் இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் போரின் பின் எத்தகைய தலைமைத்துவம் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது?இந்த வரலாற்று உதாரணம் நடைபெறவுள்ள தேர்தலை நம்பிக்கையுடன் நோக்க ஏதாவது வாய்ப்பை வழங்குகிறதா?

கட்சி அரசியலைக் கடந்து, பாராளுமன்றக் கதிரை அரசியலைக் கடந்துஇந்த ஜனாதிபதித் தேர்தலை பகுப்பாய்வுடன் நோக்குவது இன்றைய தேவை.

சிங்களபௌத்த ஆதிக்கமும் சிறுபான்மையும்:

சிங்களபௌத்த ஆதிக்கத்தை உறுதிசெய்யத் தவறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. பெரும்பான்மையாக உள்ள சிங்கள பௌத்தத்தை சார்ந்தோரது எதிர்பார்ப்பு சிங்கள பௌத்தத்தையே ஆதரிக்கவும் மற்றவற்றை நிராகரிக்கவும் கற்பிக்கப்படுகிறது, பழக்கப்படுத்தப்படுகிறது, வழக்கமாக்கப்படுகிறது.

இலங்கையின் குடிகள் சிங்கள பௌத்தர்கள் மட்டுமல்ல. இனம், சமயம்,மொழிஎன நோக்கும் போது சிறுபான்மையினர் பலர் வாழ்கின்றனர். ஒருவர் ஜனாதிபதியாகும் போது அவர் இலங்கைக் குடிகள் அனைவருக்கும் ஜனாதிபதி. சிங்கள பௌத்தர்களின் அடையாளம், அபிலாசைஎன மட்டும் ஆட்சிசெய்வது முறையல்ல.

2009 இல் இராணுவ ரீதியாக உள்நாட்டுப்போர் நிறைவுற்றது. அதன் பின் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சிங்கள பௌத்த ஜனாதிபதி ஆட்சி செய்ய, சிறுபான்மைத் தமிழர்கள், வாக்களித்தனர். இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டதா? இல்லை. போரினால் ஏற்பட்ட நிலப்பறிப்பு, அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டோர்… போன்ற பிரச்சினைகள் கூட தீர்க்கப்படவில்லை. உள்நாட்டுப் போருக்கு காரணமான இனப்பிரச்சினையும் கூட தீர்க்கப்படவில்லை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை குறைந்தா? இல்லை. 2009 க்கு முன் எப்படி ஒடுக்குமுறை காணப்பட்டதோ அதே அடிப்படையிலேயே 2009க்கு பின் தற்போது வரை தொடர்கிறது. இந்த யதார்த்தத்தில் சிங்களபௌத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் கட்டமைப்பு ஒடுக்குமுறையில் பங்குபற்றுவது தேவையா?

சிங்களபௌத்த ஆதிக்கத்தை தொடர்வதாக வாக்களிக்கும் ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களித்து விட்டு, சிங்கள பௌத்த ஆதிக்க ஒடுக்கு முறையை எப்படி விமர்சிப்பது? சிங்களபௌத்த ஆதிக்கத்துக்கு வாக்களித்துவிட்டு சிங்களபௌத்தத்தை எப்படி எதிர்ப்பது?

சிங்களபௌத்த ஆதிக்க அவதாரங்கள், தேர்தல் பரப்புரையில், சிறுபான்மையினரை தாம் கவனிப்போம் என கூறுவதை செவிமடுத்தவுடன் அவர்களே எமது விடுதலையாளர்கள் என கூறுவதும், பின்னர் அவர்கள் ஒடுக்கும்போது அவர்களுக்கு வாக்களித்தமை எமது தவறு எனக்  கூறுவதும் சந்தர்ப்பவாதம் நிறைந்த தமிழ் அரசியல் வரலாறு.

சிறுபான்மையினர் சிலர், அவர்களது இருப்பை உறுதி செய்ய சிங்கள பௌத்த ஆதிக்க அரசைசார்ந்து, சேர்ந்து ஒத்துழைப்பதை தமது பொருத்தமான போக்காக கொண்டுள்ளனர். சிறுபான்மையினரான வடக்குகிழக்குசார் தமிழர் இத்தகைய சார்பு அரசியலுக்கு எதிரானவர்கள் என்பது வரலாறு.

சிங்களபௌத்த ஆதிக்கவாதத்தை எதிர்த்து, தமது உரிமைகள் மற்றும் அடிப்படைகளை உறுதி செய்யப் போராடுவது தமிழரின் வரலாற்று அடையாளம்.சிங்களபௌத்த ஆதிக்கத்தை நிராகரித்து, ஒரு பொதுவான தமிழ் வேட்பாளருக்கு தமிழர்கள் அனைவரும் வாக்களிப்பது பொருத்தம் எனும் கருத்து முன்வைக்கப்பட்ட போது பல்வேறு அபிப்பிராயங்கள் முன் வைக்கப்பட்டன.

யார் பொதுவேட்பாளராகும் தகுதியுடையவர் எனும் தேடல் ஆரோக்கியமானது. தமிழர் உள்ளக ஆய்வைச் செய்து, இளையதலைமுறையினரை அரசியலுக்குள் இயல்பாக பங்களிப்புச் செய்ய இடம் விடவேண்டும். பொதுவேட்பாளருக்கு தமிழர் அனைவரும் வாக்களித்தால்தோல்வியடையும் ஜனாதிபதிவேட்பாளர் வென்று விடுவார் என ஒரு கருத்து முன் வைக்கப்பட்டது. வரலாறை நோக்கினால், தமிழர்களின் அக அழிப்பையும் புற அழிப்பையும் திட்டமிட்டு கட்டமைப்பு ரீதியாக செய்தவர்களில் யார் அவதாரமெடுத்தாலும் தமிழருக்கு தொடர்ந்தும் அழிவே. இந்த உண்மையை மறுப்பது அர்த்தமற்றது.

தமிழரின் இருப்புக்கான பொருத்தமான போராட்டப்போக்கு– ஒருதேடல்:

நவதாரளவாதத்துக்கு (neo-liberalism) பலியாக்கப்படும் நாம், முதலாளித்துவ ஒடுக்குமுறையைக்  கடந்துவாழ்வது அவசியம். சாதியம், ஆணாதிக்கம் போன்றவை முழுமையாக ஒழிக்கப்பட்டால் மட்டுமே சுதந்திரத்தை உள்ளக ரீதியில் அனுபவிக்கலாம்.

தமிழர்கள் அவர்களது அடையாளத்தையும் அடிப்படைகளையும் நிலைநிறுத்த மேற்கொண்ட சுயநிர்ணயப் போராட்டம் அகிம்சை வழியிலும் முன்னெடுக்கப்பட்டது, ஆயுதப் போராட்டமாகவும் நடைபெற்றது. இரண்டுமே பொருத்தமான போக்காக அமையவில்லை. இதனால் பொருத்தமான வழியைத் தேடுவது இன்றைய தேவை. மக்கள் திரளின் இருப்புக் குலையாமல் தொடர்ந்து நிலைக்க, போராடும் மக்களாக, பொருத்தமான வழியில் போராட வேண்டும்.

உள்நாட்டுப் போருக்கு பின்னான காலத்தில் தமிழரின் ஈடுபாட்டு அரசியல்:

நீண்ட உள்நாட்டுப் போரின் பின் எத்தகையமாற்று நோக்கை தமிழர்கள் யோசிக்கலாம் என்பதைப் பற்றியே சார்புஅரசியலை விரும்பாத தமிழர்களின் அரசியற் சிந்தனையாகஇருக்க வேண்டும்.திரளாக உள்ள தமிழர்களை மதம், மொழி, வரலாறு, பால், படிப்பு, காசு, சொத்து, கட்சி, பிரதேசம்என எல்லா வகைகளிலும் கூறு போட முயற்சிகள் மிக மிகவேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கு தமிழ்களே முகவர்களாகி விட்டனர். பிரிவினைகளின் தொகுப்பாக தமிழர்களின் வரலாற்றையே பொய்யாக்க சிலர் முயல்கின்றனர். சிலர் தமிழ் பௌத்தத்தைப் பற்றிக் கதைக்காமல் இனவாதம் கதைக்கின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க சிலர் மதப்பிளவுகளை உருவாக்க முயல்கின்றனர். இவை அடையாளங் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும். இவை கட்சி அரசியலைக் கடந்து நடைபெற வேண்டும். சுயநலத்திற்காக பிரிவினையை வளர்க்க முனைவோர், அடையாளங்காணப்பட்டு அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

தொகுப்பு:

இலங்கை நாட்டுக்குள் உள்ள ஒரு தேசமாக, இலங்கை அரசின் சலுகைகளை தேடாத தமிழ்ச் சமூகமாக, சுயநிர்ணயத்துடன் வாழ போராட வேண்டும். அப்போராட்டத்தை முன்னெடுக்கஅரசியல், சமூக, பொருளாதார, சமய, கலாசார, கல்வி மட்டங்களில் ஆய்வுகள் செய்ய வேண்டும். தேர்தல் அரசியலுக்குள் தொலைந்து போய்விடக் கூடாது. தேர்தல்களைப் பாவிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலை சிங்களபௌத்தம்  செய்யட்டும்.

தமிழர்களாக, சிறுபான்மையினராக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களில் பிரிவினைகளைக் கடந்து அதிகமான அதிகாரங்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழர்களின் பிள்ளைப்பேற்று வீதம் அதிகரிக்க வேண்டும். கல்வி,சுகாதாரம் என அனைத்தும் வளர வேண்டும். வாழ்வு மைய ஈடுபாட்டு அரசியலில் ஈடுபட, இளைய சமூகத்தை வளர்க்க வேண்டும். அரசியல் அனுபவமுள்ளவர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் பாரிய மாற்றத்தை தந்து விடும் என எண்ணுவது மீண்டும் ஒரு ஏமாற்றத்தையே எதிர்கொள்ளச் செய்யும் என்பது வரலாறுபூர்வமான யதார்த்த உண்மை. ஜனாதிபதித் தேர்தலில் சிங்களபௌத்த ஆதிக்கவாதத்தை தெரிவு செய்து, அது அல்லது அதன் மூலம் அரங்கேற்றப்படும் ஒடுக்கு முறையை (சிங்கள பௌத்த ஆதிக்கம்) எதிர்கொள்ள முயற்சிப்பது அர்த்தமற்றது. சிங்களபௌத்த ஆதிக்கம் சிறுபான்மைக்கு விடுதலை தரும் என எண்ணி மேற்கொள்ளப்படும் எதுவும் நன்மை தராது. அது மீண்டும் ஒரு ஏமாற்றத்தை நோக்கி மட்டுமே அழைத்துச் செல்லும்.


அருட்பணி S.D.P.செல்வன்
புனிதமரியாள் ஆலயம்,
கோப்பாய்.
நிமிர்வு ஒக்டோபர்  2019 இதழ்  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.