தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களால் திணறும் தமிழர் தாயகம்தமிழர் தாயகத்தில் அரசியல்கட்சிகளும், சிவில்சமூக அமைப்புக்களும் பொறுப்பேற்று நடாத்தி வந்த போராட்ட வடிவங்கள் மாறி தற்போது  பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே முன் வந்து போராடுகின்ற ஒரு போக்கை வவுனியாவிலும் முல்லைத்தீவில் காண முடிகிறது. வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம், கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பின் தன்னெழுச்சியான போராட்டங்கள் இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதவுரிமை கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து தமிழ்மக்களால் தொடரப்படும் இத்தகைய போராட்டங்கள்  சர்வதேச ரீதியில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அரசின் முக்கிய அதிகாரமையங்களில் ஒன்றான விமானப்படை முகாமின் வாசலில் தரவை வெளியில் தகரக் கொட்டகை  போட்டு தொடர்ச்சியாக பல நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்த வரலாறு தமிழர் தாயகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.  வீட்டுக்குச் செல்லும் வரை இந்த வீதியை விட்டு அகலமாட்டோம் என அவர்கள் போராட்டத்தின் போது காட்டுகின்ற உறுதி உண்மையில் மலைக்க வைக்கின்றது. 'எங்கள் காணிகளை முழுமையாக விடுவி' என்கிற  ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அம்மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தென்னிலங்கை புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களின் மனதையும் தொட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இவர்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், சிவில், சமூக அமைப்புக்களை சார்ந்தோர், நலன்விரும்பிகள் எனப் பலரும்;; நேரடியாக போராட்டகளத்துக்கு வந்து அம்மக்களின்; போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசுவதும் அவர்களுக்கு உதவுவதையும் காணக்கூடியதாக இருந்தது.   பச்சிளம் குழந்தை முதல் 80 வயதான பாட்டி வரை கிராமத்திலுள்ள அத்தனைபேரும் கடும் குளிரையோ சுட்டெரிக்கும் வெயிலையோ பொருட்படுத்தாமல் வீதிக்கு வந்து    போராடுகின்ற போக்கை அவதானிக்க முடிகிறது.

போராட்டத்தில் பங்கேற்ற வயதான பாட்டியுடன் பேசுகையில், எனக்கு வயதாகிவிட்டது. முட்டு வருத்தமும் உள்ளது. ஆனால், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏன் இங்கே போராடுகிறேன்  என்றால் எங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆவது எமது சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும். எமது காணியைவிட்டு இராணுவம் அகல வேண்டும் என்றார். போராடும் மக்களின் பிள்ளைகளுக்கு மாலை வேளையில் பல தன்னார்வல ஆசிரியர்கள் வந்து வகுப்பெடுக்கும் சூழலும், ஒரு மரத்தடியில் பெண்கள் உட்க்கார்ந்து கூட்டாக சமையல் செய்யும் காட்சியும் ஒரு தொடர்ச்சியான கூட்டுப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் தங்களை தயாராக்கி விட்டனர் என்றே எண்ணத் தோன்றுகின்றது. 

தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருக்கும் இராணுவம் தேசிய பாதுகாப்புக்காக தான் பிடித்து வைத்திருக்கிறோம் என்கிற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. கேப்பாபிலவும் அதனை அண்டிய பகுதிகளையும் பார்த்தால் தமிழர்களின் தாயகம் எவ்வாறு இராணுவ மயமாக்கப்பட்டிருக்கின்ற விடயம் தெரிய வரும்.
2009 தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம்  முடிவுக்கு வந்த பிற்பாடு தமிழ்மக்கள் தங்கள் உரிமைக்காக இனியும் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் என எண்ணியிராத தென்னிலங்கைக்கு இத்தகைய போராட்டங்கள் உண்மையில் அதிர்ச்சி தான். 
செ.கிரிசாந்-
நிமிர்வு மாசி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.