டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்காவும் சிறுபான்மை மக்களும்
2016ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலைப் புரட்டிப் போட்ட ஒரு ஆண்டாகும். அமெரிக்க அரசியலை மட்டுமல்ல சர்வதேச அரசியலையே டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றி உலுக்கிப் போட்டுள்ளது. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பில் இது மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே தென்படுகின்றன.
2016 தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ட்ரம்ப் வெற்றி பெறுவாரென பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஹிலரி கிளின்டனே வெற்றி பெறுவாரென கருத்துக்கணிப்புகள் கூறின. இக்கருத்துக் கணிப்புகள் மீது பெரிதும் தங்கியிருந்த ஊடகங்களும் ஹிலரியே உறுதியாக வெற்றி பெறுவார் என்ற ரீதியில் தேர்தலுக்கு முன்னரேயே செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தன. செய்தி நிறுவனங்களின் இப்போக்கை உயர்குடி இடது சாரிகளின் சதியென்று ட்ரம்ப் கூறினார். இவ்வாறு இருக்கையில் ட்ரம்ப் எவ்வாறு வெற்றி பெற்றார் எனச் சற்று பார்ப்போம். இந்த ஆராய்வு உலகெங்கிலுமுள்ள சிறுபான்மை இனத்தவருக்கும் பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் முக்கியமான ஒன்றாகும். ட்ரம்பின் வெற்றிக்கான அடிப்படை ஆக்கக்கூறுகள் பொருளாதார உலகமயமாக்கலுடனேயே தோன்றத் தொடங்கி விட்டன.
அமெரிக்காவின் பலம் வாய்ந்த வர்த்தக நிறுவனங்கள் தமது இலாபங்களை அதிகரிப்பதற்காக பல்வேறு நாடுகளிடையே சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துமாறு அடுத்தடுத்து பதவிக்கு வந்த அமெரிக்க அரசாங்கங்களையும் ஏனைய நாடுகளையும் வற்புறுத்தின. இதில் அவை வெற்றியும் கண்டன. இவ்வுடன்படிக்கைகள் நாடுகளிடையே பொருட்களினதும், உழைப்பினதும், அறிவுத்திறன்களினதும் சுதந்திரப் பரிமாற்றத்துக்கு வழிவகுத்தன. இதன் விளைவாகவும், இதற்குத் துணை போகவும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு பாய்ச்சலை எட்டியது. இவற்றால் உலகெங்கிலும் கிடைக்கக் கூடிய பொருளாதார வளங்களைச் சுரண்டவும் மலிவான உழைப்பைப் பெற்றுக் கொள்ளவும், தொழில் நுட்பத்துக்கூடாக மனித உழைப்பிற்கான தேவையைக் குறைத்து இலாபத்தை அதிகரிக்கவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வழி கிடைத்தது. இதனைப் பின் பற்றி ஏனைய நாடுகளும் தமக்கிடையே பொருளாதாரக் கூட்டுகளை ஏற்படுத்திக் கொண்டன. ஐரோப்பிய பொருளாதார வலயம், இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
பாரிய தொழில்நுட்ப வளர்ச்சியும் வறிய நாடுகளில் நிறைந்து காணப்பட்ட மலிவான அதேவேளையில் அறிவுத்திறன் கூடிய கூலியும் அமெரிக்கத் தொழிற்சாலைகளின் புலம் பெயர்வுக்கு வழி வகுத்தன. ஒன்றன்பின் ஒன்றாக தொழிற்சாலைகளும் பல்வேறு உற்பத்தி தொழிற்பாடுகளும் அமெரிக்காவை விட்டு வெளியேறத் தொடங்கின. அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படக் கூடிய எந்தவொரு பொருளுக்கும் மாற்றுப்பொருள் சர்வதேச சந்தையில் மலிவாகக் கிடைத்தது. இதனால் அமெரிக்க உழைப்பாளர்களின் வேலைவாய்ப்புக்கள் குறையத் தொடங்கின.
அதேவேளை அமெரிக்க நிறுவனங்கள் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் காட்டின. பங்கு வர்த்தகம் முன்னேறியது. இதனால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதைப் போல் தோற்றமளித்தது. ஆனால் அதன் பலனை சாதாரண மக்கள் அனுபவித்ததாக அவர்களுக்குத் தோன்றவில்லை. நிரந்தர வேலைவாய்ப்புக்கள் அருகிப்போயின. கிடைத்த வேலைவாய்ப்புக்களும் போதிய ஊதியத்தை வழங்கவில்லை. தொழிற்சங்கங்கள் போராடிப் பெற்ற ஓய்வூதியத்திட்டங்கள் கூட நிறுத்தப்பட்டன. இந்நிகழ்வுகள் உலகின் முதலாமிடத்தில் இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களின் மனதில் ஒரு ஆட்டத்தை ஏற்படுத்தின. பெரும்பான்மையான உயர்கல்வியை பெற்றிராத மற்றும் உடல் உழைப்பையே நம்பிக்கொண்டிருந்த மக்களிடையே எதிர்காலம் பற்றிய நம்பிக்கை மருகத்தொடங்கியது.
ஒரு இனம் தன் வாழ்வாதாரங்கள் தன் கண் முன்னாலேயே பறிபோகும் போது தன் இனம் சார்ந்த மற்றைய கூறுகளைப் பற்றிக் கொண்டு தன் இருப்பை நிலைநாட்ட முயற்சிப்பது இயற்கை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய மக்களின் வெளியேற்றம், பிரான்ஸில் தேசிய பழமைவாத கட்சியின் எழுச்சி, துருக்கியில் மத அடிப்படைவாதத்தின் மேலெழுகை, ரஷ்யாவில் ஜனாதிபதி புடினின் வெற்றி என்பவற்றை இங்கு உதாரணங்களாகக் கூறலாம். இதுவே ட்ரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணியாக இருந்தது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஆட்சிமாற்றம் உலகெங்கிலுமுள்ள சிறுபான்மை மக்களுக்கு பாரிய பாதிப்புக்களைக் கொண்டு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன. இன்று உலகைப் பங்கு போட நினைக்கும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றை எடுத்துக் கொண்டால் தம் நலன்களைப் பேணுவதற்காக ஆட்சியிலுள்ள அடக்குமுறையாளர்களை ஆதரிக்கும் போக்கே தென்படுகிறது. இவற்றுள் ரஷ்யா, சீனா ஆட்சியாளர்கள் மனிதஉரிமைகளைப் பற்றி சிறிதளவேனும் அக்கறை காட்டுவதற்கு தயாராயில்லை. இந்த அரசுகள் தமது சொந்தநாட்டு மக்களையே அவர்களின் பொருளாதாரப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்து ஆட்சி செய்து வருகின்றன. பொருளாதார வளங்களைச் சுரண்டுதல் தொடர்பாக மற்றைய இனங்களின் அடிப்படை உரிமைகளைப்பற்றி இவை கவலை கொள்ளப் போவதில்லை. சிரியாவில் ரஷ்யாவின் நடவடிக்கைகளும் தென்கிழக்காசிய கடல் பிராந்தியத்தில் சீனாவின் நடவடிக்கைகளும் இங்கு சிறந்த உதாரணங்களாகும்.
இவற்றுக்கு சற்றுமாறாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வாயளவிலேனும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாய உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளன. இவை தம் சுயநலம் சார்ந்து தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான குரல் கொடுப்புக்கள் இருந்த போதிலும் பல சந்தர்ப்பங்களில் சிறுபான்மை மக்கள் இவற்றால் நன்மையடைந்தே வந்துள்ளனர். உலகமயமாக்கப்பட்ட வர்த்தகத்தில் சிறுபான்மை மக்கள் உரிமைகளை பேரம் பேசும் பகடைக்காய்களாக இந்நாடுகள் பயன்படுத்தினாலும் இப்பேரம்பேசல் இல்லையென்றால் சிறுபான்மை மக்களுக்கு எந்தவிதமான காப்பரண்களுமில்லை. மறுபுறம் அமெரிக்கா, ஐரோப்பாவில் வாழும் மக்கள் தமது கல்வி பொருளாதாரச் செழுமைகளின் காரணமாக வேற்று நாட்டு மக்களின் உரிமைகளில் அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். மேலும் வேற்று நாடுகளில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கு நேரமும் பண பலமும் அவர்களுக்கு உள்ளன. ஆகவே அவர்களின் அரசாங்கங்களும் அம்மக்களின் அழுத்தங்களுக்கு செவிமடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆனால் இன்றோ நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா ஐரோப்பாவில் வாழும் மக்களே தமது பொருளாதார இருப்புத் தொடர்பாக பெரும் கேள்வியை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் ஏனைய நாடுகளில் நடக்கும் ஜனநாயக மறுப்புக்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு முன்னதாகத் தமது இருப்பை உறுதி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏனைய நாடுகளில் நடக்கும் ஒடுக்கு முறைகளைப்பற்றிய இவர்களது கவனம் குறைந்து போகவே வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி ட்ரம்ப் தனது பழமைவாதக் கொள்கைகளை மேலும் இறுக்கிப்பிடிக்க முற்படுவார். அந்நிய நாடுகளிற்கான பொருளாதார உதவிகளை குறைத்தல் அந்நாடுகளில் முதலீடுகளை முடக்குதல், இவற்றைக் காட்டி அந்நாடுகளுடன் பேரம் பேசுதல், அமெரிக்காவுக்கு சாதகமான பேரத்தில் அந்நாடுகளின் அடக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பலிகொடுத்தல் என்பவற்றை அவர் நிறையவே மேற்கொள்வார். அமெரிக்கவின் பொருளாதார மீளமைப்புக்கென எந்தவிதமான சர்வாதிகார ஆட்சியுடனும் அது கை கோர்க்கத் தயங்காது. அமெரிக்க மக்களின் பொருளாதார நலன்களை முன்னிறுத்தி, ரஷ்யாவின் சர்வாதிகார ஆட்சியுடன் கூட ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. அமெரிக்க மக்களுக்கு அது நன்மை பயக்கும் என்ற கோசத்தின் கீழ் அதனைச் செய்யும் போது பெரும்பான்மை அமெரிக்க மக்களும் அதற்கு உடன்படுவர். ட்ரம்ப் தன்னைச் சுற்றி அமைத்துள்ள ஆலோசகர் கூட்டத்தினைப் பார்க்கும் போது அதன் சாத்தியக்கூறுகள் தெரியவரும். ட்ரம்ப்பின் முதன்மை ஆலோசகர் ஸ்டீவ் பானன் வெள்ளை மேலாதிக்க அமைப்பின் உறுப்பினர். முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளின் ரஷ்யாவுடன் அமெரிக்கா இணைந்து செயற்படுவதை விரும்புவர். முஸ்லிம் மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதை எதிர்ப்பவர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் ரில்லர்சன் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான எக்சான் மொபிலின் முன்னால் அதிபர். ரஷ்யாவில் பல முதலீடுகளை மேற்கொண்டவர். ரஷ்யா ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவர்.
இந்த ஆட்சி வட்டத்துள் முக்கியமாக இரு கோட்பாடுகள் இழையோடியுள்ளன. முதலாவது சீனா உட்பட ஏனைய நாடுகளுடன் மறுபேரம் பேசுதல். உலகமயமாக்கலினூடாக அமெரிக்க மக்கள் தாம் முன்னர் அனுபவித்து வந்த சுகபோக வாழ்க்கையை இழக்கத் தொடங்கியுள்ளனர். உலகமயமாக்களின் நன்மைக் கூறுகளின் எல்லையை அவர்கள் அடைந்துவிட்டனர். அவர்கள் பார்வையில் ஏனைய நாடுகள் அதனால் பொருளாதார நன்மைகளையடைவதை அவர்களால் பொறுக்க முடியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை உலகமயமாக்கல் தேனிலவு முடிவுக்கு வந்து விட்டது. அமெரிக்கா பிரித்தானியா போன்ற வெள்ளை மேலாதிக்க நாடுகளின் தனித்தன்மையை மீண்டும் நிலைநாட்ட வேண்டிய தேவை ட்ரம்புக்கு உள்ளது. இரண்டாவது இஸ்லாமிய எதிர்ப்பு. இஸ்லாம் மக்களிடையே பிரிவினையும் வன்முறையையும் விதைத்து அவர்களைப் பயன்படுத்துவன் மூலம் அமெரிக்கா அனுபவித்து வந்த போலிப்பாதுகாப்பு 11.09.2001 தாக்குதலுடன் முடிவுக்கு வந்தது. விழித்துக் கொண்ட முஸ்லிம் மக்கள் இனியும் அமெரிக்காவுக்கு பகடைக்காயாக இருக்கப் போவதில்லை எனத் தெளிவாகவே அறிவித்துள்ளனர். இந்தச் சவாலை முறியடிப்பதற்கு ரஷ்யா ஒரு சிறந்த கூட்டாளி என ட்ரம்பும் அவரைச் சுற்றியுள்ளவர்களும் நம்புகிறார்கள்.
ஆக, உலகமயமாக்கலில் அமெரிக்காவிற்கு மறுபேரம், இஸ்லாமிய எதிர்ப்பு ஆகிய இவ்விரண்டு குறிக்கோள்களை அடைவதன் மூலம் அமெரிக்க பொருளாதாரத்தை மீளமைப்புச் செய்ய முடியுமென ட்ரம்பும் அவரைச் சூழவுள்ள வெள்ளை மேலாதிக்கவாதிகளும் நம்புகின்றனர். இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து பலியாகப் போவது பல்வேறு நாடுகளிலும் அடக்கு முறைகளுக்குள் உள்ளாக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை இனங்களே.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஜனநாயக சக்திகள் இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும், அடக்குமுறை மேலாதிக்கத்திற்கும் எதிராக தமது நாட்டிலேயே போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏனைய நாடுகளில் வாழும் அடக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இவர்களால் குரல் கொடுக்க முடியுமா என்பது பெரும் ஐயப்பாடே. தமது நலன்கள் சார்ந்திருந்த போதிலும் இந்த ஜனநாயகசக்திகள் உலகின் பல்வேறு இடங்களிலும் நடந்த நீதிக்கான போராட்டங்களில் பொருளாதார ரீதியாவும் தார்மீகரீதியாகவும் ஆதரித்து வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று ட்ரம்பின் மேலாதிக்க நடவடிக்கைகளை எதிர்ப்பதிலேயே இவர்களது பெருமளவிலான கவனம் திசை திரும்பியுள்ளது. இவர்களிடமிருந்து ஏனைய நாடுகளிலுள்ள போராட்ட சக்திகள் குறைந்தளவு ஆதரவையே எதிர்பார்க்க முடியும்.
ஜனநாயகசக்திகளின் கவனம் ட்ரம்ப் மீது திரும்பியிருக்கும் வேளையில் அமெரிக்காவுடனான மறுபேரம் பேசுவதனூடாக பல்வேறு அடக்கு முறை அரசாங்கங்கள் கேட்பாரற்று தாம் நினைத்தவற்றை தமது நாட்டில் செய்வதற்கு துணிய முற்படுவர். இன்று உலகெங்கும் ஓரளவேணும் மதிக்கப்படும் மனிதஉரிமைகள் காற்றில் பறக்கவிடப்படும்.
தனது அடிப்படை உரிமைகளுக்காக தன் தேசியத்தை பற்றிக் கொண்டிருக்கும் தமிழினம் இந்நிலையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கனடா, ஐரோப்பா எனப் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தம்மை பலப்படுத்த வேண்டிய தேவை வந்துள்ளது. இதன் மூலமே மறு பேரம் பேசலின் போது பகடைக்காய்களாக இருக்கப் போகும் எம் மக்களின் உரிமைகள் பறி போவதைத் தடுக்க முடியும். ஒருங்கமைக்கப்பட்ட அணியொன்றின் மூலமே திசை திரும்பிப் போய்க்கொண்டிருக்கும் மேற்குலக ஜனநாயக சக்திகளின் கவனத்தை எம் பக்கம் திருப்ப முடியும். அவர்களுடன் இணைந்து ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்குமான ஒரு முகமான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முடியும். அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த மஞ்சு விரட்டு தடைக்கெதிரான போராட்டம் இது சாத்தியமானது என்பதை எமக்கு காட்டி நிற்கின்றது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இலங்கையிலும், முக்கியமாக தென்னிலங்கையிலும், தன்னிச்சையாக நடைபெற்ற போராட்டங்கள் எம்மினத்தை ஒரு கொள்கையின் கீழ் ஒன்று திரட்டுதல் முடியாத காரியமல்ல என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
லிங்கம்-
நிமிர்வு மாசி 2017 இதழ்
Post a Comment