மலையக மக்களின் அடையாளம் எது? மலையகத் தமிழரா? இந்திய வம்சாவளித் தமிழரா?


             
இந்தியாவில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மக்களை   மலையக மக்கள் என்று அழைப்பதா, இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று அழைப்பதா, அவர்களின் அடையாளம் என்ன என்கிற விவாதம் மலையக மக்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது.  புதிய அரசியல் யாப்பு செயன்முறை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வாதங்கள் மீண்டும் களத்திற்கு வந்துள்ளது. ஒரு சாரார் குறிப்பாக இளைய தலைமுறையினர் மலையக மக்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர். இன்னோர் சாரார் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைக்கப்படல் வேண்டும் என்கின்றனர்.

     அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்புக்கள் என்ற வகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் அதன் மரபுவழி வந்தவர்களும் இந்திய வம்சாவளித் தமிழர் என அழைக்கப்படல் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளனர்.  ஆறுமுகம் தொண்டமான், முத்துலிங்கம், சதாசிவம், புத்திரசிகாமணி என்போர் இதற்குள் அடக்குவர். இவர்களைத் தவிர மலையக வம்சாவளி கல்வியாளர்கள் என்ற வகையில் பேராசிரியர் சந்திரசேகரம், பேராசிரியர் சின்னத்தம்பி, பேராசிரியர் தனராஜ், கலாநிதி சந்திரபோஸ், வாமதேவன் மூத்த ஊடகவியலாளர் தேவராஜ் போன்றோரும் இதனை ஆதரிக்கின்றனர். மலையகத்திற்கு வெளியே கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனோகணேசனும் இதனை ஆதரிக்கின்றார்.

     இதற்கு மாறாக மலையக மக்கள் முன்னணி, புதிய பண்பாட்டு அமைப்பு, மலையக சமூக ஆய்வு மையம், மலையக சட்டத்தரணிகள் பேரவை போன்றன மலையத் தமிழர் என அடையாளப்படுத்தல் வேண்டும் என வாதிடுகின்றன. புலமையாளர்கள் என்றவகையில் லோறன்ஸ் லெனின் மதிவாணம், சிவம்பிரபாகரன், பொன்பிரபாகரன், காதர், சாந்திகுமார், ஜோதிகுமார் போன்றோரும் இதனை ஆதரிக்கின்றனர். மலையக மக்கள் முன்னணி முன்னர் உத்தியோகபூர்வமாக இவ் அடையாளத்தை தூக்கிப்பிடித்தாலும் தற்போது அதன் செயலாளர் லோறன்ஸைத் தவிர ஏனையோர் இக் கொள்கையிலிருந்து இறங்கியுள்ளனர் போலவே தெரிகின்றது. அமைச்சர் இராதாகிருஸ்ணன் இலங்கைத் தொழிலாளர் காங்ரஸிலிருந்து வந்தவர் என்பதால் அவரிடம் இந்திய வம்சாவழித் தமிழர் என அடையாளப்படுத்த வேண்டும் என்றே கருத்து உண்டு.

   கட்சி, குழு அரசியலுக்கு அப்பால் மலையக மக்களின் கூட்டிருப்புக்கும், கூட்டடையாளத்துக்கும், கூட்டுரிமைக்கும் எந்த அடையாளம் உகந்தது என்பதனை இந்த உரையாடல் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒரு அடைக்கப்பட்ட பிரதேசத்துக்குள் செறிந்தும், சிதறியும் வாழும் மலையக மக்கள் தங்களுக்கு பக்கபலமாக வலுவான வெளிச்சக்திகளை அணி திரட்டுவதன் மூலமே தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.     

     மலையக மக்களைப் பொறுத்தவரை வடகிழக்குத் தமிழர்கள், தமிழகத்தமிழர்கள், உலகெங்கும் பரந்து வாழும் தமிழக வம்சாவளித் தமிழர்கள் சிறந்த சேமிப்புச் சக்திகளாவர். அதே வேளை சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் சிறந்த நட்பு சக்திகளாவர். இவர்கள் எல்லாம் மலையக மக்கள் பற்றி அவர்களது கூட்டிருப்பு, கூட்டுரிமை பற்றிய தங்களது வாய்களைத் திறக்க வேண்டும். இதனூடாக ஒரு கூட்டு வலிமையை மலையக மக்களுக்குக் கொடுக்க வேண்டும். ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் என்ற வகையில் இந்தக்கூட்டுப் பொறுப்பிலிருந்து எவரும் விலகிவிட முடியாது.

     இனி இந்த அடையாள நெருக்கடிக்கு வருவோம். மலையக மக்களுக்கான எந்தவொரு அடையாளமும் அவர்களது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும் பலப்பபடுத்த வேண்டும். அவர்களது எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த வகையில் இந்திய வம்சாவளித் தமிழர் என்ற அடையாளமா அல்லது மலையகத் தமிழர் என்ற அடையாளமா மேற்கூறியவற்றைப்பலப்படுத்த முடியும்?

      பலர் மலையகத்தமிழர் என்ற அடையாளமே மேற்கூறியவற்றை பலப்படுத்த முடியும் என்று வாதிடுகின்றனர். இதற்கு முதலாவது காரணம் இலங்கையில் வசிக்கும் மக்களில் வேடர்களைத் தவிர ஏனையவர்கள் சிங்களவர்கள் என்றாலும் சரி, இலங்கைத் தமிழர் என்றாலும் சரி, முஸ்ஸீம்கள் என்றாலும் சரி அனைவரும் இந்தியாவிலிருந்து வந்தவர்களே. மலே இனத்தவர், ஆபிரிக்க இனத்தவர், முஸ்ஸீம்களின் சிறு பிரிவினர் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம்.  தமிழ் நாட்டிலிருந்து 18 மைல் தொலைவில் இலங்கை இருப்பதனால் இந்தக் குடிப் பெயர்வுக்கு வரலாறு முழுவதும் சாத்தியங்கள் அதிகம். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக இக்குடிப்பெயர்வு இடம்பெற்றிருக்கின்றன. 
  
    சிங்கள மன்னர்களும் தமிழ் நாட்டின் அரச குடும்பங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருக்கின்றது. அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து பெண்களை வரவழைத்து திருமணம் செய்திருக்கின்றார்கள். சிங்கள மன்னர்களின் படைத்தளபதிகளாக தமிழ் நாட்டுத் தமிழர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களில் மலையக மக்கள் மட்டும் சற்றுத் தாமதமாக இலங்கைக்கு வந்தவர்கள். அவர்களை மட்டும் ஏன் இந்திய வம்சாவளியினர் என அழைக்க வேண்டும்? இந்தியாவிலிருந்து வந்தவர்களை இந்திய வம்சாவளியினர் என்று அழைப்பதாயின் இந்திய வம்சாவளி சிங்களவர்கள், இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளி முஸ்ஸீம்கள் எனப்பல இந்திய வம்சாவளியினர் இலங்கையில் இருப்பர்.

    இரண்டாவது காரணம் மலையக மக்களில் 8 ஆவது தலைமுறையினரே தற்போது வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோருக்கு இந்தியாவுடன் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்களது வாழ்வு முழுவதும் மலையகமும், இலங்கையும் சார்ந்ததே. அவர்கள் தமது வாழ்வாதாரங்களை மலையகத்தில் தேடிக் கொண்டிருக்கின்றனர் அல்லது கொழும்பில் தேடிக் கொண்டிருக்கின்றனர். வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் இந்தியக்காரணி பெரியளவில் பங்களிப்புச் செலுத்தியதில்லை.
  
    மூன்றாவது மலையகத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்றியவர்கள் மலையக மக்களே! மக்களே புக முடியாத காடுகள் தமது உதிரத்தால்வளமாக்கியவர்கள் அவர்கள். தற்போதுள்ள தலைமுறையினருக்கு மலையகம் தான் அவர்களது தாயகம். மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்தினால் மலையகத்தைத் தாயகம் என உரிமை கொள்ள முடியாது. ஒரு தாயகம் இல்லாத மக்களை தேசிய இனம் எனக் கூற முடியாது.

    சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையும் முன்வைக்க முடியாது. மலையக மக்களை ஒடுக்குபவர்களுக்கு இந்நிலமை மேலும் இலகுவாகிவிடும். இந்தியர்களுக்கு இங்கென்ன உரிமை? எனக் கூறி மலையக மக்களின் உரிமைக் கோரிக்கைகளை இலகுவாகவே தட்டிக்கழித்துவிடுவர்.
   
    நான்காவது இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளம் மலையக மக்களை உளவியல் ரீதியாகவே அவர்களது மண்ணிலிருந்து அந்நியப்படுத்தி விடுகின்றது. இந்த அந்நியத் தன்மை ஏற்கனவே நிலமற்று இருக்கும் அவர்களின் நிலைமையை மேலும்மோசமாக்கிவிடும். நிலக் கோரிக்கையையும் பலவீனப்படுத்தி விடும். இது எங்களுடைய சொந்த மண் என நெஞ்சை நிமிர்த்தி அவர்களால் கூற முடியாத நிலை ஏற்படும். இலங்கைத்தீவில் வசிக்கும் ஏனைய தேசிய இனத்தவர்கள் இவர்களை அந்நியமாகப் பார்க்க முற்படுவர். குறிப்பாக மலையகம் சிங்கள மக்களினால் சூழப்பட்ட பிரதேசம் அவர்களுடனான உறவுகளிலும் நெருக்கடிகள் வரப்பார்க்கும். உங்களைப் போல நானும் இந்த மண்ணில் சொந்தக்காரன் என மலையக மக்களால் கூற முடியாத நிலை ஏற்படும்.
  
    ஐந்தாவது சிங்கள மக்கள் வரலாற்று ரீதியாகவே இந்தியாவை எதிரியாகப்  பார்க்கின்றனர். சுதந்திரத்தின் பின் இந்தியா தனது பிராந்திய வல்லரசுக்கனவினால் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தவே முற்படுகின்றது. இது இலங்கையின் சுயாதீனத் தன்மையை பலமுறை கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது. மலையக மக்கள் தங்களை இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்தினால் சிங்கள மக்கள் அவர்களையும் எதிரிகளாகப் பார்க்கவே முற்படுவர். ஏற்கனவே ஆரம்பகால ஜே.வி.பி இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு கருவியாகவே மலையக மக்களைப்பார்த்தது என்பது இங்கு குறிப்பிடக்கூடியது.

     ஆறாவது மலையக மக்கள் இன்று ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து 'இலங்கையர்' என்ற பொது அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இலங்கையைத்தமது தாயகம் எனக் கூறுபவர்கள் தான் இலங்கையர் என்ற பொது அடையாளத்திற்குள் வரமுடியும். இந்திய வம்சாவளியினர் என்ற அடையாளம் இந்த முயற்சியையும் பலவீனப்படுத்திவிடும். மலையக மக்கள் ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து உருவாக்க நினைக்கின்ற கூட்டும், சுயாட்சியும் என்ற கோட்பாட்டு அடிப்படையையும் இல்லாமல் செய்துவிடும்.

     தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மலையகம் இலங்கைத் தீவிற்குள் இன்னோர் தீவு என்ற நிலை மாறி தேசிய நீரோட்டத்திற்குள் உள்வாங்கப்படுகின்றது. மலையயகப்பாடசாலைகளை இலங்கை அரச பாடசாலைகளுடன் இணைத்தல் என்பதுடன் ஆரம்பமாகிய உள்வாங்குகை உள்ளூராட்சிக்கட்டமைப்புக்குள் உள்வாங்குகை, வீடு, நிலத்திட்டத்திற்குள் உள்வாங்குகை எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகின்றது. இந்திய வம்சாவளியினர் என்ற அடையாளம் இந்த முயற்சிகளையும் பலவீனப்படுத்திவிடும்.

    இந்த உள்வாங்குகையினை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் 'இலங்கை- இந்தியர் காங்கிரஸ் என்ற பெயர்' இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றப்பட்டது. இவர்கள் இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்த விரும்பினால் 'இலங்கை - இந்தியர் காங்கிரஸ் என்ற பெயரைத் தொடர்ச்சியாக பேணியிருக்கலாம். 'மலேசியாவில் தற்போதும் இந்தியர் காங்கிரஸ்' 'என்ற பெயரில்தான் இந்தியர்களுக்கான பிரதான கட்சி செயற்படுகின்றது என ஒரு வாதம்முன்வைக்கப்படுகின்றது. இந்த அடையாளம் மலேசியத் தமிழர்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் மலையத் தமிழர்களுக்கு பொருத்தமானது எனக் கூற முடியாது.
  
    இந்திய அரசாங்கத்தைத் திருப்பிதிப்படுத்த இந்த அடையாளம் தேவை என்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது. இந்த வாதம் தவறானது. இந்தியா என்றைக்குமே மலையக மக்களுக்கு சார்பாக நடந்ததில்லை. பிரஜாவுரிமைச்சட்டத்தையும், வாக்குரிமைச்சட்டத்தையும் இந்தியா நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தைத் தவித்திருக்க முடியும். சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தினால் மலையக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் இருப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதனை ஒரு வகை இன அழிப்பு என்றே கூறலாம். இந்தியா தனது புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்த இனப்படுகொலையைச் செய்தது. இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர்களையும் அங்கு இந்திய அரசு ஒழுங்காகக் கவனித்தது எனக்கூறமுடியாது. சமூகமாக வாழ்ந்த மக்கள் இந்தியாவில் சிதறி விடப்பட்டனர்.

   இங்கு இந்தியாவைத் எதிரியாக்க வேண்டும் எனக்கூற வரவில்லை. மலையக மக்களினை ஒரு கருவியாகப் பயன்படுத்தி தனது நலன்களை மட்டும் அடைந்து கொள்வதையே நோக்கமாக கொண்டு இயங்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையே இங்கு குறை கூற வேண்டியிருக்கின்றது. மலையக மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை இந்தியா அங்கீகரித்தால் இந்தியாவை திருப்திப்படுத்துவது பற்றி யோசிக்கலாம். அதில் கூட சுயத்தை இழக்கும் நிலைக்குச் செல்லக் கூடாது. 
  
   எனவே மலையக மக்களின் கூட்டிருப்புக்கும், கூட்டுரிமைக்கும் மலையக் தமிழர் என்ற அடையாளமே பொருத்தமானதாகும்.  முன்னர் கூறியது போல இந்த வாதங்களும், பரசீலனைகளும் தொடரும்போதுதான் சரியான அடையாளத்தைக் கண்டறியக் கூடியதாக இருக்கும். இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இந்தப் பத்திரிகையில் மேலும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மலையகன்-
 நிமிர்வு மாசி 2017 இதழ்     




No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.