கூட்டுறவு அமைப்பாக பரிணமித்த பனைத்தொழில்.




பனைத் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு முதலாளிகள் வளம் பெற்ற வேளையில்தான் சமசமாஜக்கட்சியின் யாழ்மாவட்டத் தலைவர் அ.விஸ்வநாதன், செனாட்டர் ஜி.நல்லையா, திரு.க.நடராசா ஆகியோர் நிதியமைச்சர் டாக்டர் என்.என்.பெரேரா அவர்கள் முன் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

1. இத்தொழிலாளர்களுக்கான சங்கங்களின் அதிகாரம் சீவல் தொழிலாளர்களின் கையில் இருக்கவேண்டும்.

2. வேலைவாய்ப்புகள் சீவல் தொழிலாளர் சமூகத்திற்கே கிடைக்க வேண்டும்.

3.இச்சங்கங்களை நிதியமைச்சின் அனுமதியுடன் கூட்டுறவு முறையில் இயங்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட மூன்று கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு நிதியமைச்சரிடமிருந்து  சாதகமான பதிலொன்று கிடைத்ததற்கு அமைவாக இவர்கள் செயற்பட்டதினால் அப்போது யாழ்ப்பாணக் கச்சேரியில் கடமையாற்றிய திரு.க.சண்முகலிங்கம் அவர்கள் பனம் பொருட்களுக்கான கூட்டுறவு உதவியாணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் இதற்கான உபவிதிகள் தயாரிக்கும் நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.. அதில் திரு.க.நடராசா அவர்களும் ஒருவராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டு உபவிதிகள் தயாரிக்கப்பட்டன.

உபவிதிப்படி ஒவ்வொரு சங்கத்திற்கும் தெரிவு செய்யப்படும் நிர்வாகம் ஒன்பது பேர் கொண்டதாக அமையும். அதிகாரம் சீவல் தொழிலாளர்களின் கைகளிலேயே இருக்கும் வகையிலே உபவிதிகள் அமைக்கப்பட்டன. இவ்வாறாக அமைந்து இத்தொழில் கூட்டுறவுக் கட்டமைப்புக்குள் இயங்கத் தொடங்கியது. 1972 மே 1 இல் செயற்படத் தொடங்கியது. அன்று காலை 8 மணிக்கு சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் தவறணை ஒன்றை திரு.க.சண்முகலிங்கம் அவர்களால் திரு.க.நடராசா அவர்களின் அனுசரணையுடன் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்த நிகழ்வுடன் வடபகுதி முழுவதும் கூட்டுறவுத் தவறணை முறை அமுலுக்கு வந்தது. ஏறக்குறைய 200 தவறணைகளை இயங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த உபவிதிகளின்படி யாழ்மாவட்டம் முழுவதும் 31 சங்கங்கள் அமைக்கப்பட்டன.

முதலாளிகள் அமைப்பிலிருந்து கூட்டுறவு அமைப்பிற்கு வரும் போது பல நிந்திப்புக்கள் புறக்கணிப்புக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட சங்கங்கள் மெல்ல மெல்ல முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைத்தன. சிரமங்களை எதிர்நோக்கினாலும் பனைத்தொழில் வல்லுனர்கள் கிழமைக்கு ஒருமுறை தமது கூலியினை சந்தோசமாக கௌரவமாக பெறும் வாய்ப்பை பெற்றனர்.

பல இன்னல்களுக்கு மத்தியில் சங்கங்கள் இயங்கி வந்தன. 1972 ஆம் ஆண்டளவில் நெடுந்தீவு சங்கம் இயங்க முடியாமற் போகும் நிலை ஏற்பட்டது. ஆயினும் 19 கள் விற்பனவு கூட்டுறவுச் சங்கங்கள் பலம் வாய்ந்த சங்கங்கள் உருவாக்கப்பட்டன.     அரியாலை,  யாழ்ப்பாணம்,  வேலணை,  ஊர்காவற்றுறை,  சங்கானை,  பண்டத்தரிப்பு,  சுன்னாகம்,  மானிப்பாய்,  கோண்டாவில்,  கோப்பாய்,  அச்சுவேலி,  பருத்தித்துறை,  கட்டைவேலி,  கொடிகாமம், சாவகச்சேரி, பளை, கிளிநொச்சி, பூநகரி, பாண்டியன்குளம்,  துணுக்காய் போன்ற சங்கங்கள் உருவாக்கப்பட்டன.


இக்காலகட்டத்தில் உலகசந்தையில் சீனியின் விலை பெருமளவு உயர்வடைந்தது. இதனால் அன்றைய பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களினால் உள்ளூர் சீனி உற்பத்தி அல்லது அதற்கு பிரதியீடான பொருட்களின் உற்பத்திக்கு ஊக்கமளிக்குமாறு அறைகூவல்விடப்பட்டது. அக்காலகட்டத்தில் குடிசைக் கைத்தொழிலாக பதநீரிலிருந்து பனை வெல்லம் உற்பத்தி செய்து பனங்குட்டான்களில் போட்டு விற்பனவு செய்து வந்தனர். குடிசைக் கைத்தொழிலாக இருந்த பனைவெல்லத் தயாரிப்பை பெருமளவில் செய்வதற்கு திரு.சண்முகலிங்கம் அவர்களின் ஒத்துழைப்புடன் வடபகுதியில் 50 பனை வெல்லத்தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. இதற்கு யாழ்ப்பாணம் கச்சேரியில் (யாழ்மாவட்டச் செயலகம்) திட்டமிடல் உத்தியோகத்தராக இருந்த திரு.சிவலிங்கம் அவர்களின் ஒத்துழைப்பும் திரு.க.நடராசா அவர்களின் ஊக்கமும் பெருமளவு உதவின. இதன் பயனாக சங்கங்களின் வருமானம் அதிகரித்தது. 1975, 1976 காலப்பகுதிகளில் மாத்திரம் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டது. இது அன்றைய அமைச்சரின் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து கள்விற்பனை மட்டுமல்லாமல்,  பனைவெல்லம்,  பனஞ்சீனி,  வினாகிரி, பனஞ்சாராயம் போன்ற உற்பத்திகளை மேற்கொள்வதற்கான பணிகளை மேற்கொள்ள முனைந்தனர். யாழ்ப்பாணம் கச்சேரியில் பிரதிதிட்டமிடல் அதிகாரியாக இருந்த திரு.கே.சி.லோகேஸ்வரன் அவர்களின் ஒத்துழைப்பும் இருந்ததால் முன்னேற்றகரமான செயற்பாடுகளை, மேற்கொள்ள உந்துதலாக இருந்தது. இதன் பலனாக பல நோக்கங்களைக் கொண்ட “தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச் சங்கம்” என்ற பெயர் மாற்றத்துடன் சங்கங்கள் முன்நோக்கி பயணித்தன.

1975 ஆம் ஆண்டு அரச வடிசாலைக் கூட்டுறவுத் தாபனத்தின் அனுசரணையுடன் கைதடியில் பனை வடிசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வடிசாலையினை அப்போ நிதியமைச்சராக இருந்த கலாநிதி என்.எம்.பெரேரா அவர்கள் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்தார்.

அக்காலப்பகுதியில் இவ்வடிசாலை உலகில் உள்ள ஒரே ஒரு பனஞ்சாராய வடிசாலை என்று பெருமைப்பட அழைக்கப்பட்டது. அப்போ 15 லட்சம் ரூபாவுக்கு மேல் வருடவருமானமாக பெற்றது என்பது அறியப்படக்கூடியதாக உள்ளது. ஏனையசாராயங்களைவிட பனம் சாராயம் தரம் வாய்ந்தது எனவும் கூறப்பட்டது.

1977 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைகளால் தகுதியான உதவி ஆணையாளர், உத்தியோகத்தர்களுமின்றி சங்களில் தளம்பல்நிலை ஏற்பட்டது.  B.T.T       வரி போன்ற காரணங்களும் சங்கங்களை பாதித்தன.

அச்சமயம் திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் கூட்டுறவு உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அவருடைய சீரிய செயற்பாட்டினால்  B.T.T   (விற்பனை வரி) 10% ஆகக் குறைக்கப்பட்டமையால் சங்கங்களின் வரிப்பழு 20 இலட்சம் ரூபாவால் குறைந்தது. இதனால் இப்பணம் அத்தொழிலாளர்களைச் சென்றடையும் வாய்ப்பு மேற்பட்டது. இவர்களில் ஆக்கபூர்வமான செயற்பாட்டினால் சங்கங்கள் மீண்டும் விறுவிறுப்பாக நடைபோடத்தொடங்கின.

இவ்வாறு சங்கங்கள் இயங்கத் தொடங்கி தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தி வரும்போது இயங்கிய 18 சங்கங்கள் இணைந்து ஒரு சமாசம் உருவாக்கத்திட்டமிட்டனர். இதற்கான அனுமதியை திரு.க.நடராசா மற்றும் சங்கானை சங்க தலைவர் சு.நடேசு அவர்களும் இணைந்து அமைச்சர் கௌரவ ஹேரத் அவர்களிடம் பெற்றுக் கொண்டனர்.அதற்கிணங்க அதே ஆண்டிலே 18 சங்கங்களையும் இணைத்து சமாசம் பதியப்பட்டு இயங்கத் தொடங்கியது. இச்சமாசம் 12.10.1979 இல் வடமாகாண தெங்கு பனம் பொருள் கூட்டுறவுச் சமாசம் என்ற பெயரில் பதியப்பட்டது. அதன் தலைவராக செனட்டர் ஜி.நல்லையா, செயலாளராக திரு.க.நடராசா அவர்கள் அதன் பொதுமுகாமையாளராக திரு.அ.ம.யேசுராசா அவர்களும் நியமிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் தெங்கு பனம் பொருள் காரியாலயத்தின் மேல்மாடியில் இயங்கத் தொடங்கியது. திரு.அ.ம.யேசுராசா அவர்கள் அரியாலை தெங்குபனம் பொருள் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளராகக் கடமையாற்றியவர். இச்செயற்பாட்டை சரியான முறையில் விரைவாகச் செயற்படுத்துவதற்காக சமாசத்தின் பதில் பொதுமுகாமையாளராக இவர் கடமையாற்றி சமாசத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்தி இயங்க ஒத்துழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமாசம் 1980 ஆம் ஆண்டு விபத்து நல ஓய்வூதியத்திட்டத்தை செயற்படுத்த முனைந்து அதற்கான நடைமுறை விதிகளையும் அமைத்து வெற்றி கண்டனது. 01.02.1982 அன்று இலங்கையின் பிரதமர் கௌரவ பிரேமதாசா அவர்களினால் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் விபத்திற்குள்ளான ஒரு சீவல் தொழிலாளிக்கு விபத்து நிதியை வழங்கி இத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ‘பனை அபிவிருத்திச் சபை’ தேவை என அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கமைவாக பெருந்தோட்டத் தொழிற்துறை அமைச்சின் கீழ் 1978.08.08 அன்று பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்த கௌரவ எம்.டி.ஏச்.ஜெயவர்த்தனா அவர்களால் பனை அபிவிருத்திச் சபை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதன் தலைவராக திரு.கனகசூரியர் அவர்கள் அங்கத்தவர்களாலும் அரசினாலும் நியமனம் செய்யப்பட்டார்.

பனை அபிவிருத்திச்சபை ஒரு கூட்டுறவு அமைப்பு அல்ல. இலங்கையில் இயற்கை வளமாகக் காணப்படும் பனையினை அபிவிருத்தி செய்தல், பனையிலிருந்து பெறப்படும் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தல் உற்பத்திகளில் ஈடுபடுபவர்களுக்குரிய தொழில்நுட்ப ஆலோசனை வழங்கல், காலத்திற்கு காலம் பனை நடுகையினை மேற்கொண்டு இவ்வளத்தை அழியவிடாமல் பாதுகாத்தல் போன்ற பணிகளை நிறைவேற்றவே பனை அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டது. அது தேசிய வீடமைப்புச் செயலகக் கட்டிடங்களில் தனது பிராந்தியக் காரியாலயங்களை அமைத்து செயற்பட்டு வந்தது.

அன்றுதொட்டு இன்று வரை சொந்தமாக ஒரு தலைமை அலுவலகக் கட்டிடம் இல்லாத சபையாக இச்சபை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இச்சபைக்கு காலத்திற்கு காலம் அரசியல் மாற்றம் ஏற்படும்போது தலைவர் நிர்வாக சபை என்பன மாற்றப்பட்டன. இவ்வாறு இயங்கினாலும் ஆரம்பத்தில் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சின் கீழிருந்து மகாவலி அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, இந்துசமய விவகார அமைச்சு போன்ற அமைச்சர்களின் கீழ் பனை அபிவிருத்திச் சபை கைமாற்றப் பட்டு வந்தது. எவ்வாறெனினும் கைதடியில் சொந்தக் கட்டிடத்தில் பனை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இச்சபை திறம்பட இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் 12.07.2012 அன்று தொடக்கம் பனை ஆராய்ச்சி நிறுவனம் இயங்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

1980ஆம் ஆண்டு யாழ்மாவட்டத்தில் பனஞ்சீனித் தொழிற்சாலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கச்சேரியில் திட்டமிடல் அதிகாரியாக இருந்த திரு .க.சிவலிங்கம் அவர்களின் முழுமையான செயற்பாட்டினால் யாழ்மாவட்டத்தில் ஐந்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவையாவன சங்கானை,  அச்சுவேலி,  மந்திகை,  சாவகச்சேரி,  கொடிகாமம் ஆகும். ஒவ்வொரு இடங்களிலும் பெரியளவிலான இரண்டு சீனிவேறாக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. இதற்கு தேவையான உபகரணங்கள் யாவும் கொள்வனவு செய்யப்பட்டு மின்சார இணைப்புக்கள் பொருத்தப்பட்டன. ஆயினும் சில அசாதாரண சூழ்நிலைகளால் இத்தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் போனது. இத்தொழிற்சாலைகள் யாவும் உருத்தெரியாமல் அழிக்கப்பட்டன. இத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் யாவும் அச்சுவேலி பனை தென்னை வள கூட்டுறவுச் சங்க உற்பத்தி நிலையத்தில் களஞ்சியப்படுத்தி ஏனைய இடங்களிற்கு விநியோகிப்பது என முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  இச்செயற்பாடுகள் செயற்படுத்த முடியாதவாறு அப்போதைய சூழ்நிலை அமைந்தது துரதிஷ்டமே.

தியாகராஜா பன்னீர்செல்வம் 
ஓய்வுபெற்ற அதிகாரி, பனை அபிவிருத்திச் சபை 
நிமிர்வு மாசி 2019 இதழ்


1 comment:

  1. பொருளாதாரம் சம்பந்தமான இது போன்ற கட்டுரைகள், பதநீர், கள்ளு போன்றவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்திய சுகந்தன் சண்முகநாதன் போன்றவர்களை தோற்றுவிக்கும். வரவேற்கிறோம் இக்கட்டுரையை.

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.