புதிய தலைமைத்துவங்கள் பிறக்குமா? சந்தர்ப்பவாதிகள் நடைப்பிணங்களாக வாழலாம் ஆனால் உண்மை சாவதில்லை
அறிமுகம்:
‘வலுவான மனதினர் கருத்தியல்களை சிந்திப்பார்கள், மிதவாத மனதினர் நிகழ்வுகளை சிந்திப்பார்கள், பலவீனமான மனதினர் நபர்களை சிந்திப்பார்கள்’ – சோக்ரடீஸ்
இந்த மேற்கோள் எமது இன்றைய யதார்த்த சூழ்நிலையை நன்கு தெளிவுபடுத்துகிறது. 2009 மே இல் ஏற்பட்ட அழிவு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்று வடிவங்களையே கேள்விக்குள்ளாக்கியது. அகிம்சைப் போராட்டங்களை தொடர்ந்து ஆரம்பமான ஆயுதப்போராட்டங்கள் அனைத்துமே சர்வதேச ஆதிக்கவாதிகளின் கூட்டுடன் தோற்கடிக்கப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு இருக்கும் மாற்று வழி என்ன?
சிலர் சில நபர்களைப்பற்றி கதைக்க இன்னும் சிலர் சில நிகழ்வுகளைப்பற்றி கதைக்கின்றனர். இவற்றைக் கடந்து என்ன மாற்றுக்கருத்து முன்வைக்கப்படலாம் என்பதே இன்றைய காலத்தின் தேவை.
ஆரோக்கியமான யதார்த்தம் நோக்கிய கனவு:
ஆரோக்கியமான கனவுகளை மட்டுமல்ல ஆரோக்கிமான கனவுகளை காணுவது தொடர்பான நம்பிக்கையையும் பலர் இழந்துவிட்டமை வரலாறு. சுனாமி மற்றும் போர் ஏற்படுத்திய இழப்புகள் நம்பிக்கையீனம் விரக்தி உருவாக ஒப்பீட்டடிப்படையில் காரணம்.
அப்துல்கலாம் அவர்களின் கனவு பற்றிய கருத்தியல் நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கையை நோக்கி பயணிக்க உதவுகின்றது.‘கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்கவிடாமல் செய்வது’ என்பது ஆரோக்கியமான யதார்த்தங்களைக் கனவு காண்பதற்கும் அதற்காக எல்லா இடையூறுகளையும் தொடர்ந்து எதிர்கொண்டு நல்மாற்றங்களை ஏற்படுத்தவும் அழைக்கின்றது.
தூங்கவிடாத கனவுகளுடன் வாழும், போராடும் எத்தனை பேரை எமது மண் உருவாக்கியுள்ளது என்பது அனைவரும் அன்றாடம் தொடர்ந்தேட்சையாக கேட்க வேண்டிய கேள்வி. பேராசை மைய சுயநலங்களை தூங்கவிடாத கனவாக தவறாகப் புரிந்து போலித்தனங்களில் திருப்தி காண்பது யாருக்கும் பேண்தகு வாழ்வைத் தருவதில்லை.
கட்சி அரசியலின் ஆதிக்கம்:
கட்சி அரசியலில் மூழ்கிவிட்ட மூழ்கடிக்கப்பட்டுவிட்டவர்களிடமிருந்து நன்மை வருமா? இசை பாடிப்பாடி சிலர் தம் இருப்பை தக்க வைக்க வசை பாடிப்பாடி இன்னும் சிலர் அவர்களது இருப்பையும் தக்க வைக்க மாற்றம் எப்படி வரும்?
சவாலுக்குட்படுத்தல் பாதிக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் இப்போராட்டங்கள் கூட ஆதிக்க சக்திகளால் வாங்கப்படுகின்றன என்பதே யதார்த்தம்.
அனைத்து மட்டங்களிலும் புதிய தலைமைத்துவங்களின் வருகை இன்றியமையாதது. காலத்துக்குக்காலம் புதிய தலைமைத்துவங்கள் யதார்த்தத்துக்குள்ளாகும் போது மாற்றங்கள் நிகழ்வதும் புதிய வரலாறு எழுதப்படுவதும் இயல்பே. இந்த வரலாறு எமது மண்ணிலும் சாத்தியா? அல்லது சாத்தியமாக்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
நல்ல யதார்த்த உருவாக்கம்
நல்ல யதார்த்தங்களை உருவாக்க அவசியமான பலவற்றுள் பின்வருவன முக்கியமானவை:
1. பங்கேற்பு Participation
2. சட்ட ஆளுகை Rule of law
3. வெளிப்படைத்தன்மை. Transparency
4. மறுமொழி Responsiveness.
5. ஒற்றுமை நோக்குநிலை. Consensus orientation
6. நியாயம் / சமசந்தர்ப்பம். Equity
7. திறன் மற்றும் செயல்திறன். Effectiveness and efficiency
8. பொறுப்புடைமை. Accountability
போர் யதார்த்த கட்டமைப்புகள் பலவற்றையும் கட்டுடைப்பு செய்துவிட்டதால் பல இடங்களிலும் ஒருவர் மற்றவரை அந்நியராக நோக்கும் நிலை தோன்றிவிட்டது. அந்நியராக நோக்குவதை வாய்ப்பாக்கிக் கொண்டு சமூக அநீதிகள் நடைமுறைப்படத்தப்படுகின்றன. போதைப்பொருள் சந்தையாக்கல், வன்முறையாக்க களமாக்கல், என்பனவும் போரினால் ஏற்பட்ட விளைவுகளான நிலவளஇழப்பு, கல்வி இழப்பு, உறவுஇழப்பு(அரசியற்கைதிகள், காணாமலாக்கப்பட்டோர்) உணர்வு இழப்பு (விரக்தி, மனக்கனங்கள்) என்பனவும் இன்றைய வடக்கு கிழக்கின் இருப்பாக்கப்பட்டுவிட்டன. இது நிச்சயமாற்ற, தோல்வி எண்ணப்போக்கை உருவாக்கிவிட்டது.
ஆனால் இனஅழிப்பு முள்ளி வாய்க்காலில் நடந்து 10வது ஆண்டுக்குள் நல்மாற்றங்களை உருவாக்க முனைவது எமது வரலாற்றுக்கடமை.
மாற்றுத் தேடிய சோக்கிரடீஸ்:
மேற்கத்திய தத்துவயியலில் பாரிய செல்வாக்கை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் சோக்ரடீஸ். கிரேக்க ஏதென்ஸில் கி.மு. 470 இல் பிறந்தார். இவரது தந்தை சோஃப்ரோனிஸ்கஸ் (Sophroniscus) ஒரு மேசன் - சிற்பி, தாயார் பேனாரே (Phaenarete) ஒரு மருத்துவச்சி. இவர் செல்வந்தராக இல்லாததால், சாதாரணமான அடிப்படை கிரேக்க கல்வியையே பெற்றிருந்தார். இவரது தலைமைத்துவ உருவாக்கம் சாதாரண வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்தது. தந்தையின் கைவினையைப் படித்தார். தாயுடைய மனித நேயத்தில் வளர்ந்தார். பின்னர் சோக்ரடீஸ் சன்திப்பியை (Xanthippe) திருமணம் செய்து, சாதாரண வாழ்வை வாழ்ந்து மூன்று மகன்மாருக்கு தந்தையானார்.
சமுதாயத்தின் நல்வாழ்வை உறுதி செய்யமுடியும் என நம்பி போராடினார். யதார்த்தத்தை ஆழமாக நோக்கினார், கலந்துரையாடினார், உண்மைகளை உரத்துச் சொன்னார். வாழ்க்கை நெறியை அழுத்தமாக விளக்கினார். சிந்தித்து, காரணத்தை தேடி, பொருத்தமான தெரிவுகளை மேற்கொள்ள சமூகத்தை ஊக்குவிக்க முயற்சித்தார். எதென்ஸ் வாழ் பலருக்கும் இவர் சவாலானார், இவரை அச்சுறுத்தலாக பலர் உணர்ந்தனர். கிமு 399 இல் கிரேக்கத்தின் அரசியல் சூழ்நிலை, இவருக்கு விஷம் கொடுத்து மரண தண்டனைக்கு உட்படுத்தியது. சோக்கிரட்டீஸ் அன்று நிலவிய யதார்த்தத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் இன்றும் அவர் வாழ்கிறார். அவரது நிலைப்பாட்டின் அடிப்படையான உண்மை சாகவில்லை.
தமிழர்களின் எதிர்காலம்: ஆரோக்கியமான கருத்துருவாக்கம்
தேசியத்தையும் அரசியலையும் நீக்கிவிட்டுசாதியம், அபிவிருத்தி, பெண்ணியம், பொருளாதாரம், சமயம், ஆன்மீகம்… என ஒரு கட்டமைக்கப்பட்ட அந்நியமயமாக்கல் இன்று திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டுவருகிறது. மேற்கத்தேய நவீன காலனித்துவவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பல சக்திகள் நவீன அடிமைத்தனத்தை உறுதி செய்துவருகின்றன. தனிநபர்களை வணங்குதல், சில நாடுகளுக்கு எடுபிடியாதல், சில கருத்தியலுக்கு விலைபோதல் என்பன மலிந்துவிட்டன.
இச்சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்படவேண்டும். மேட்டுக்குடிகள் பேராசையை விட்டு விலகிபாதிக்கப்பட்டோரின் ஈடுபடலை அங்கீகரிக்க வேண்டும்.
வன்னி உட்பட பல இடங்களிலிருந்தும், உறவு – உடைமை இழப்புகளால் நொந்துபோயுள்ள பலர் கற்க வசதிகள் செய்யப்பட வேண்டும். அவர்கள் இயல்பாக வளர்ச்சியடைய இடம் கொடுக்கப்படவேண்டும்.
அரசியலாக்கத்தில் ஈடுபட பொருத்தமான கருத்துருவாக்கங்களை செய்ய விரும்புவோரை தள்ளிவிடாமல் சந்தர்ப்பங்களை வழங்க இன்றுள்ள தலைவர்கள் முன்வரவேண்டும். பதவிகளை துறந்து ஆலோசகர்களாக செயற்பட வேண்டும்
கற்றவர்கள் வேற்றுநாடுகளுக்கு சென்று கற்றபின் அங்கேயே தங்குவது நிறுத்தப்பட்டு தாயகம் திரும்பி நல்ல தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். காசுக்காக பணி வேலை செய்யமல் மனித நேய இருப்புக்காக அவரவர் பங்கு உறுதி செய்யப்பட வேண்டும். அத்துடன் தமிழர்களின் குடித்தொகை (குழந்தைகளை பெறும் வீதம்) அதிகரிப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆணாதிக்கம் ஆரோக்கியமற்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்வது முக்கியம். முறையான விஞ்ஞான ஆய்வுகள் செய்யப்படுவதுடன் ஆணும் பெண்ணும் சமத்துவத்துடன் வாழ்வது இயல்பாக வேண்டும். குடும்பங்கள் பாடசாலைகள் ஆலயங்கள் என எல்லா இடங்களிலும் ஆண்களுக்கு கொடுக்கப்படும் இடம் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
அனைத்து மட்டங்களிலும் அனைவரும் அங்கீகாரத்துடன் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் சமூக பொருளாதார கல்வி, சமய, பண்பாட்டுக்குறியீடுகளுடன் இயல்பாக வாழ பொருத்தமான கருத்துருவாக்கம் தொடர வேண்டும்.
தொகுப்பு:
மக்கள் பங்கேற்பு அரசியல் உருவாகும்போது மட்டும் நல்மாற்றம் ஏற்படும். அதனை செய்ய அங்கீகாரமும் திறந்த மனமும்வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் தேவை. வரலாற்றில் எப்போதும உண்மைகள் சாவதில்லை. குறித்த காலம் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டாலும் பின்னர் யதார்த்தத்தை தூய்மைப்படுத்தலில் அவை பங்குபெறுவது வரலாறு. சந்தர்ப்பவாதிகள் நடைப்பிணங்களாக வாழலாம், ஆனால் உண்மை சாவதில்லை. புதிய தலைமைத்துவங்கள் நிச்சயம் பிறக்கும்.
அருட்பணி S.D.P செல்வன்.
புனித மரியாள் ஆலயம், கோப்பாய்.
நிமிர்வு மாசி 2019 இதழ்
Post a Comment