பெண்களை வலுவூட்டும் நுண்கடன் நிவாரணத் திட்டம் 
கடன் சுமைகளைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதென்பது சமாதானத்திற்கான ஒரு முதலீடாகும். இக் கடன் நிவாரணத் திட்டத்தினுடாக இறுக்கமான ஒழுங்குபடுத்தல் பிரமாணங்களை கொண்டுவரும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 14.02.2018 வியாழக்கிழமை அன்று வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் பேசிய ஐக்கய நாடுகள் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கா் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்நிகழ்வின் ஒரு அங்கமாக 36 கிராமிய வங்கிகளுக்கான கணினி, மென்பொருள் மற்றும் இதர உபகரணங்களை ஹனா சிங்கர் அவர்கள் அன்று வழங்கி வைத்தார்.

ஆரம்பத்தில் 34 வங்கிகள் இவ்வாறு கணினி மயப்படுத்தப்பட்டன. தற்போது மேலும் 36 கூட்டுறவு கிராமிய வங்கிகளை கணினி மயப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி அலுவலகம் நிதி உதவி வழங்கியுள்ளது.
                                                                                                                                                           
இவ்வாறு 70 கூட்டுறவு கிராமிய வங்கிகள் கணினி மயப்படுத்தப்படுவதன்
மூலம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்த கூட்டுறவு
கிராமிய வங்கிகள் அனைத்தும் வடக்கு மாகாணத்தில் கணினி
மயப்படுத்தப்படும்.

ஹனா சிங்கா் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: சமாதானத்தைக் கட்டியெழுப்புவதும் அதனைத் தொடர்ந்து நிலைபெறச் செய்வதும் இலகுவான காரியமல்ல. பொருளாதார ரீதியிலான வலுவூட்டலும் அதற்கு முக்கியமானது.

அந்நியக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சுயாதீன நிபுணர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, சூறையாடும் நோக்கில் வழங்கப்படும் கடனினால் குறிப்பாகப் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதைக் கண்டார். அதிகூடிய வட்டியுடன் கடன் கொடுப்பனவைச் சேர்ப்பதற்கு கடன் வழங்கியவர்கள் எடுக்கும் முயற்சிகளினால் அவர்கள் எவ்வாறு உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இம்சைக்கு ஆளாகக்கூடும் என்பதையும் அவதானித்தார்.

ஆகவே, இந்த முக்கியமான பிரச்சினையில் கவனம் செலுத்த தக்க தருணத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முன் முயற்சியை ஐ.நா. வரவேற்கின்றது. இத் திட்டத்தை நிர்வகிக்கவிருக்கும் கூட்டுறவுக் கிராமிய வங்கிகளுக்கு ஐ.நா. சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியத்தின் ஊடாக உதவுவதன் மூலம் இத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

யுத்தத்திற்குப் பின்னரான மீட்சி என்பது வெறுமனே கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது மட்டுமல்ல. மனித வாழ்வாதாரங்கள், சமூகங்கள் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதும் அதில் உள்ளடங்கும். இதன் காரணமாகவே கடன் நிவாரணத் திட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இது வறுமையை ஒழிப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பெண்களை வலுவூட்டுவதுடன் ஆண்-பெண் சமத்துவத்தை ஊக்குவித்து மிக முக்கியமாக சமாதானத்தையும் ஊக்குவிக்கின்றது.

 கிராமிய கடன் சுமைகள், குறிப்பாக வடக்கில் ஒரு பிரதான சவாலாக விளங்குகின்றன. ஆகவே, பிரதேச சமூகங்களுடன் பின்னிப் பிணைந்துள்ள கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் மூலம் கடன் நிவாரணத்தையும் மலிவான முறையில் கடன் பெறுவதற்கான மாற்று வழிகளையும் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியை நாம் பாராட்டுகின்றோம்.

இந்த நிகழ்ச்சித்திட்டம் பெண்களுக்கு, குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, முன்னுரிமை அளிக்கின்றது. நுண்ணளவு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுடன் வேலை செய்த போதே அபிவிருத்திப் பணி சம்பந்தமான முதலாவது தொழில் அனுபவத்தை நான் பெற்றுக்கொண்டேன்.

பெண்களில் முதலீடு செய்வது வெறுமனே ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வது மட்டுமல்ல. குடும்பங்களில், சமூகங்களில் மற்றும் எதிர்காலங்களில் செய்யப்படும் முதலீடாகவும் அது அமையும். பெண்களைக் கடன் சுமையிலிருந்து மீட்பது அவர்கள் வன்செயல்களுக்கு இலக்காகும் சாத்தியத்தைக் குறைக்கும். அத்துடன், தத்தமது குடும்பங்களுக்குச் சிறந்த பக்கபலமாக விளங்கவும் தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி இலங்கையின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யவும் அது அவர்களை வலுவூட்டும்.

உங்களில் அநேகமானோர்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதையும் உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப இன்னும் எவ்வளவோ செய்யப்பட வேண்டியுள்ளது என்பதையும் நாம் அறிவோம். ஆகவே, கடன் சுமைகளைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதென்பது சமாதானத்திற்கான ஒரு முதலீடாகும். இக் கடன் நிவாரணத் திட்டத்தினுடாக இறுக்கமான ஒழுங்குபடுத்தல் பிரமாணங்களை கொண்டுவரும் அரசாங்கத்தின் திட்டத்தையும் நாம் வரவேற்கின்றோம்.

நலிவடைந்த சமூகங்கள் சந்தர்ப்பவாத கடன் வழங்குனர்களின் சூறையாடல்களிலிருந்து தப்பவும் பிரஜைகளின் நலன்களைக் கவனிப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையின் மீது நம்பிக்கை வைக்கவும் இது உதவும். பொருளாதார நன்மைகளைப் போலவே இதுவும் உறுதியான, சமாதானமான சமுதாயத்தை உருவாக்க உதவும். அத்துடன், சகல சமூகத்தினருக்கும் சுபீட்சத்தைக் கொண்டு வருவதற்கு  நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சமாதானத்தின் அனுகூலங்களையும் இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

கிடைக்கக்கூடிய இந்த நன்மைகள் அனைத்தையும் நன்கறிந்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், கடன் நிவாரணத் திட்டத்தின் செயற்பாட்டிற்கு முக்கியமாகத் தேவைப்படும் கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் கணனிமயமாக்கத்திற்கு உதவுவதன் மூலம் இந்த முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றது. நான் இன்று காலை கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் முகாமையாளர்களைச் சந்தித்தேன். இத் திட்டத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அவர்களையும் கூட்டுறவு வங்கிகளையும் நான் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

உங்கள் சமூகங்களை மேம்படுத்துவதற்கு உதவுகின்ற மாற்றத்தின் செயல்வீரர்கள் நீங்களே, தொழில்நுட்பத்தில் இந்த முதலீட்டைச் செய்வதன் மூலம் செயற்றிறனை முன்னேற்றவும் சமூகத்திற்கான உங்கள் சேவைகளை அதிகரிக்கவும் உங்களால் முடியுமென நாம் நம்புகின்றோம்.

இன்று இங்கு வந்துள்ள அநேக பயனாளிகளுக்கு நான் கூற விரும்புவது, இத் திட்டம் இறுதியில் உங்களுக்கானதே. இதனை ஒரு புதிய ஆரம்பமாகக் கருதுங்கள். உங்களிலும் உங்கள் சமூகத்திலும் நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கும் ஏனையோருக்கும் சிறப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முயலுங்கள்.

நிமிர்வு மாசி 2019 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.