வறட்சிமிக்க கட்டத்திலே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்
யாழ் பல்கலைக் கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்ம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், சமகால அரசியல் கருத்தரங்கும் கைலாசபதி கலையரங்கில் கடந்த 14.12.2018 அன்று இடம்பெற்றது. அதில் பங்கேற்று யாழ் பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் ஆற்றிய உரையை இங்கே தொகுத்துள்ளோம்.
ஒரு ஆயுத போராட்ட அமைப்பு என்ற தளத்தைக் கடந்து பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தமிழர்களுடைய அரசியல் வீச்சு எல்லையை முன்னெடுத்த மாமனிதர் தேசத்தின் குரல் என்று மதிப்பீடு செய்யப்பட்ட அன்டன் பாலசிங்கம் அவர்களின் உயர்வான பணிகள் இங்கு நினைவு கொள்ளப்பட வேண்டியன. தனக்கே உரிய தனித்துவமான இயல்புகளோடும் மரபுகளோடும் தமிழர்களுடைய பாரம்பரியங்களை கட்டிக்காக்கக் கூடிய விதத்திலும் அவர் அவற்றை முன்னெடுத்தார். முக்கியமானதாக அவரிடம் இரண்டு பக்கங்கள் எப்போதும் முதன்மையானதாக இருந்தது. ஒரு பக்கம் அவர் ஆயுதப்போராட்டத்தினுடைய தளத்திலிருந்து செயற்பட்ட அதே வேகத்தில் ஒரு புலமைத்தளத்திலும் தன்னை செம்மைப்படுத்திக்கொண்டு தனக்கே உரித்துடைய வடிவத்தினால் இந்த தமிழ் சமூகத்தினுடைய இருப்பிற்கான உழைப்பை செலுத்தியிருந்தார்.
பெருமளவிற்கு இந்த விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகட்டத்திலிருந்து அவருடைய மரணம் வரையிலான காலம் முழுவதும் ஒரு அரசியல் போராளியாக எங்கள் முன்னே வலம் வந்து தமிழர்களின் தனித்துவத்தையும் நிலை நிறுத்துவதில் ஒரு வெற்றிகரமான பங்கெடுப்பாளராக விளங்கினார். அவரை பல்கலைக்கழகத்தில் நினைவு கூருவது பெரும் மதிப்பிற்குரிய அம்சம். இதே அரங்கில் 2003 ஆம் ஆண்டு அவருடைய ‘போரும் சமாதானமும்’ என்ற நூல் வெளியீடு செய்யப்பட்டது. அதே போல் அவருடைய தேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் பல்கலைக்கழகத்திலே வெளியீடு செய்யப்பட்டது. அன்டன் பாலசிங்கத்தின் பதிவுகள் என்ற அந்த நூலை அடேல் பாலசிங்கம் முன்வைத்திருந்தாலும் அந்த நூலும் பெருமளவிற்கு அன்டன் பாலசிங்கத்தின் பின்னூட்டலோடு மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகவே காணப்பட்டது. ஆகவே நிச்சயம் ஒரு புலமைத்தளத்திலும் ஒரு ஆயுதப் போராட்டத்தினுடைய தளத்திலும் ஒரு முனைப்பான பங்கையும் தனித்துவத்தையும் இநத மண்ணுக்காக ஏற்படுத்தியிருந்தார். இந்த நாளில் அவரை நினைவு கொள்வதில் பெருமை கொள்ள வேண்டிய பொறுப்பு இந்த தமிழ் சமூகத்திற்கு இருக்கின்றது.
இந்த கருத்து அமர்வினுடைய மிக பிரதானமான கருப்பொருள் இராஜதந்திரம். இந்த சொல் பற்றிய கலந்துரையாடலுக்குள் போவதற்கு முன்னர் இந்த சொல் எங்களுக்கு தந்திருக்கின்ற புரிதல் என்ன என்பது உரையாட வேண்டியது மிக முக்கியமாகும். இராஜதந்திர வெளி என்பதை நாங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் அல்லது எவ்வாறு பயன்படுத்திக் கொண்டோம்? இந்த இராஜதந்திரம் என்ற சொல்லை நாம் உச்சரிக்க முடியுமா? இன்று ஓர் அரசற்ற சமூகம், ஆனால் ஓர் அரசிற்காக ஒரு காலப்பகுதியில் பெருமெடுப்பாக போராடிக்கொண்டிருந்த சமூகம், இப்பொழுது ஒரு சாத்வீகத் தளத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஜனநாயக வெளிக்கான ஒரு அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான விருப்போடு இருக்கின்ற ஒரு சமூகம் இத்தகைய உரையாடல்களை செய்ய முடியுமா என்பது முதல் கேள்வி.
இந்த சூழலுக்குள் பிரவேசிக்கின்ற போது இரண்டு பிரதானமான உலகவியல் அனுபவங்களை நான் முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. ஒன்று யூதர்கள் மற்றது பலஸ்தீனர்கள். இவர்கள் இருவருமே அரசற்ற சமூகங்களாக இருக்கின்ற பொழுது உலகப் பரப்பை தங்களுடைய எல்லைகளுக்குள் தந்திரோபாய ரீதியாக நகர்த்தி பெருமளவிற்கு தங்களுடைய இருப்பின் உறுதிப்பாட்டையும் தேசத்தின் உறுதிப்பாட்டையும் நிலைநிறுத்திக் கொண்டவர்கள். அவர்களுடைய பாதையில் தமிழர்கள் தங்களுடைய இருப்பு பற்றிய தேடலை இந்த தளத்தில் முதன்மைப்படுத்த முடியும் என்பது என்னுடைய வாதமாக இருக்கின்றது.
ஒரு சந்தர்ப்பத்திலும் ராஜதந்திரம் என்ற உரையாடலை தனித்து முன்னெடுக்க முடியாது. அரசபங்கெடுப்பாளர்கள் அல்லது அரசு சார்ந்திருக்கின்றவர்கள் அல்லது அரசிற்கு எதிராக இருப்பவர்கள் அல்லது அரசற்ற மனித உரிமை சார்ந்து மனிதாபிமான சட்டங்கள் சார்ந்து சர்வதேச விதி முறைகள் சார்ந்து இருப்பவர்கள் என்போரைக் கொண்ட ஒரு வெளி எங்களுக்கு முன்னே நிறைவாக இருக்கின்றது. அந்த வெளியின் அடையாளப்படுத்தல்கள் தான் இராஜதந்திரத்தினுடைய உண்மையான பின்னணியும் வலுவும்.
நிச்சயமாக ஈழத்தமிழர்களை பொறுத்த வரையில் ஒரு நீண்ட தொடர்ச்சியான மிதவாத தளத்திலும் அதேபோன்று ஆயுதத்தளத்திலும் பயணித்தவர்கள் அவர்கள். இந்த அடிப்படையில் மிக உயரிய பட்சம், குறைந்த பட்சம் ஆகிய இரு எல்லைகளுக்குள் பயணிக்க கூடிய விதத்தில் அவர்களுடைய இருப்பும் அவர்களுடைய இயல்பூக்கமும் காணப்படுகின்றது. அவர்களுக்கென்று சில தனித்துவமான நிலப்பரப்பும் பண்பாடு சார்ந்திருக்கக் கூடிய அம்சங்களும் முதன்மை அடைந்திருக்கின்றன. அவர்கள் தம்மைஇலங்கையில் முதல் தர பிரஜைகளாக்கிக் கொள்வதற்கு இத்தகைய வெளிகளை பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை நிச்சயம் இந்த களம் ஏற்படுத்தும் என்று கருதுகின்றேன்.
2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சூழலைப் பார்த்தால் இரண்டு கட்டமாக பிரித்துப் பார்க்க முயற்சிக்கின்றேன். ஒன்று பனிப்போர்க்காலம். மற்றையது பனிப்போருக்கு பிந்திய புதிய உலக ஒழுங்குக் காலம் என்றுதான் வகைப்படுத்தியிருக்கின்றேன். காரணம் அந்த இரண்டு காலத்திலும் இராஜதந்திரத்திற்கான உரையாடல் என்பது தனித்தனியாகவும் வேறுபட்ட தளத்திலும் அவற்றுக்கே உரிய இயல்புகளோடும் பயணிக்கத் தொடங்கியது. பனிப்போருக்கு பிந்தி புதிய உலக ஒழுங்கு உருவாக்கப்பட்ட பிற்பாடு பிரபல்யமாக பேசப்பட்ட தடம் 2 டிப்ளோமேசி அறிமுகமாகிறது. குழுக்கள் சார்ந்து இனங்கள் சார்ந்து பிரிவுகள் சார்ந்து எதிர்நோக்கக்கூடிய சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பினை அது ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதே போன்று பனிப்போர் காலப்பகுதியிலும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் பயணிக்க கூடிய ஒரு ஆரோக்கியமான பெரும் வெளிஅமைந்திருந்தது. அதுவும் ஈழத்தமிழர்களுடைய இராஜதந்திர ரீதியான நகர்வுகளுக்குரிய நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அவ்வாறான சூழல்கள் இல்லாத ஒரு வரட்சி மிக்க கட்டத்திலே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். தலைமைகளின் செயற்பாட்டாளர்கள்தான் ராஜதந்திரத்தினுடைய மிகப் பிரதானமான ஊக்கி. சர்வதேச அரசியல் அரங்கில் பிரவேசிக்கின்ற பொழுது புவிசார் அரசியல் பூகோள அரசியல் அதே போன்று வெளிநாடு சார்ந்திருக்கக்கூடிய வெளிவிவகாரம் சார்ந்திருக்கக்கூடிய அரசியல் போன்ற தளங்களில் புலமைசார்ந்த தேடலும் அந்த புலமைசார்ந்த தேடலுக்குள்ளால் ஏற்படக்கூடிய கட்டுமானமும் செயற்பாட்டாளர்களுக்கு மிகமிக முக்கியமானதென்று கருதுகின்றேன்.
ஏனெனில் உலக அரசியலையும் பூகோள அரசியலையும் புவிசார் அரசியலையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடிய ஒரு தேசிய இனத்தின் இருப்பு நியாயமானதாக இருந்தாலும் அதற்குரிய தலைமைகளும் அதற்குரிய புத்திகூர்மையான சமூகமும் நின்று உழைக்கக் கூடிய ஒரு தனித்துவமான குழுக்களும் இந்த இடத்தில் மிக அவசியமானவை. இந்தப் பொதுவெளி அரங்குக்கு சர்வதேசம் பற்றிய உரையாடல்களை ஏற்படுத்தக்கூடிய வல்லமை மிக மிக அவசியமானது. 1980 ஆம் ஆண்டு 1990 ஆம் ஆண்டுகளில் இந்த அரங்கம் அவ்வகையான சூழலை நோக்கி நகர்ந்தது.
அது ஒருவகையில் சாத்வீகத்திற்கும் ஆயுதப்போராட்டத்திற்கும் இடையிலான காலப்பகுதி. இதே அரங்கத்தில் இதே தளத்தில் ‘மறுமலர்ச்சி கழகம்’ உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களால் ஆயிரக்கணக்கான நூல்களையும் பதிப்புக்களையும் அந்த தளம் செய்திருந்தது. சர்வதேசரீதியில் எல்லைகளைப்பற்றிய உரையாடல்களையும் தனக்குள்ளே முதன்மைப்படுத்த தொடங்கியது. அதனுடைய தொடர்ச்சி பெருமளவுக்கு ஆயுதப் போராட்டத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தது எனக் கொள்ள முடியும். 1980 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்த அரசியல் வெறும் உள்நாட்டுத் தளத்திலேயே நின்று கொண்டிருந்தது. அது ஜீ.ஜீ.பொன்னம்பலமாக இருக்கலாம் அதே போன்று தந்தை செல்வாவாக இருக்கலாம் அல்லது அதனுடைய தொடர்ச்சியாக இருந்த அமிர்தலிங்கமாக இருக்கலாம். இவர்கள் மூன்று பேருடைய காலகட்டங்களிலும் பெருமளவிற்கு உள்நாட்டு அரசியலையும் சற்று முன்நோக்கி ஒருபிராந்திய அரசியல் களத்தையும் கையாளுகின்ற ஒரு உத்தியே அவர்களிடம் மேலோங்கி இருந்தது.
தந்தை செல்வா அவர்கள் 1962 ஆம் ஆண்டு சீன இந்திய யுத்தம் வர இருந்த பொழுது ஈழத்தமிழர்களை இந்தியாவிற்கு ஆதரவாக அணி திரட்டி இந்தியாவிற்கு ஆதரவளிக்கின்ற ஒரு முயற்சியை முன்னெடுக்கின்ற பொழுது அத்தகைய அரசியல் உரையாடலுக்குரிய களம் உருவாக்கப்பட்டது. இதனுடைய தொடர்ச்சி 1971 ஆம் ஆண்டு 1972 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அமிர்தலிங்கம் அவர்களுடைய காலப்பகுதியில் வங்கம் அல்லது வங்காளதேசம் உருவாக்கப்பட்ட போது ஏற்பட்டது. அப்பொழுது நடந்த உரையாடல்கள் இங்கு பெரும் எழுச்சிகரமான எண்ணத்தையும் அரசியல்ரீதியான இருப்பையும் அரசியல் ரீதியான பிரச்சாரத்தையும் ஏற்படுத்துவதில் ஒரு வலிமையான காரணிகளாக அமைந்திருந்தன.
இந்த மூவருடைய காலப்பகுதிகளும் ஒரு பிராந்திய எல்லையோடு கடந்து போனது. அதற்கு அடுத்த கட்டம் பெருமளவிற்கு சர்வதேச தளத்தை தரிசிக்க வேண்டிய பொறுப்பாண்மையும் அதற்குரிய களமும் பெருமளவிற்கு விடுதலைப்புலிகளுடைய காலமாக அமைந்தது. அன்டன் பாலசிங்கம் சார்ந்திருக்கக்கூடிய அரசியல் அரங்கில் அவருடைய தனித்துவமான பிரயோகத்திற்குள்ளேதான் அது ஓரளவிற்கு முன்நிறுத்தப்படுகின்றது. அதிலும் கூட எங்களிடம் ஒரு முழுமைப்படுத்தப்பட்ட ஒரு தெளிவான ஒரு சிந்தனைக் குழுக்களோ (Think Tank) அவை சார்ந்திருக்க கூடிய எண்ணங்களோ இருக்கவில்லை. அவற்றிற்கும் அரசியல் களத்திற்குமான உறவாடல்களோ அல்லது அவற்றில் மிடுக்குடனான ஒரு ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒரு வளர்ச்சியை அவை பெற்றிருக்கவில்லை.
அந்த வறுமையின் பிரதிபலிப்புத்தான் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட நெருக்கீடுகளுக்கு பின்னால் இருந்த அம்சம் என்பதை பதிவு செய்ய வேண்டியது துர்ப்பாக்கிய நிலைதான். அத்தகைய துர்ப்பாக்கிய நிலைக்கு செல்லவதைத் தவிர்க்கக்கூடிய உண்மையான களத்தை 2009 ஆம் ஆண்டிற்கு முன் பலர் அடையாளப்படுத்தியிருந்தார்கள். அந்த களத்தினுடைய அவசியப்பாட்டை உணர்த்தியிருந்தார்கள். 2009 ஆம் ஆண்டிற்கு முன் நடந்த உரையாடல் என்பது மிக ஆரம்பகாலகட்டமே. 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் முழுக்காலத்திலும் அதற்குரிய வாய்ப்பான காலமும் அதற்குரிய சூழலும் அமைந்திருந்தன. ஆனால் இன்றுகூட ஆரம்பகால பொறிக்குள்ளேதான் எங்களுடைய அமைப்பும் அதன் தொழிற்பாடுகளும் காணப்படுகின்றன என்பது வருந்தத்தக்கது.
தொகுப்பு-விக்னேஸ்வரி
நிமிர்வு மாசி 2019 இதழ்
Post a Comment