"விவசாயப் பெருநிறுவனங்களே வாழ்வாங்கு வாழ்வர்; விவசாயிகள் எல்லாம் தொழுதுண்டு பின் செல்வர்"
இதுதான் இன்றைய உண்மையான நிலைமை! இதை மறைத்து பொங்கல் வாழ்த்து சொல்ல உண்மையில் எம்மால் முடியவில்லை. ( இது எமது தலை தைப்பொங்கல். மண்பானையில் பொங்கி சூரியனுக்கும் படைத்தோம் தான். ஆனாலும் ஏதோ கடமைக்கு செய்தது போன்றதொரு உணர்வு. ஏன் என்று கீழே எழுதியுள்ளோம்)

ஒரு காலப்பகுதி வரைக்கும் வாழ்முறையாக இருந்த விவசாயத்தையும் இயற்கையை கடவுளாக பார்த்த விவசாயியையும்  "Globalisation, Green Revolution" என்றெல்லாம் கதைகளைச் சொல்லி விவசாயத்தில் நவீனம் என்று புரளியைக் கிளப்பி விதைக்கும் உரத்துக்கும் விளைச்சலுக்கும் இப்படி எல்லாவற்றுக்கும் ஏதோ ஒரு வகையில் பெருநிறுவனங்களில் தங்கியிருக்க கூடியவாறு மாற்றி விவசாயியின் வருமானத்தை பறித்து விவசாயிகள் தள்ளிய பெருமை அப்பெரு நிறுவனங்களையே சாரும் !

எப்படியெனின்…,

விவசாயிகள் ஒவ்வொரு முறையும் பயிரிடும் போதும் வீரியமான செடிகளிலிருந்து விதைகளை சேகரிப்பது விவசாயிகளின் வழக்கம். அப்படி சேர்த்த விதைகளை அடுத்தடுத்த போகங்களில் பாவிப்பார்கள். ஆனால்  பெருநிறுவனங்கள் விவசாயிகளை கூவி அழைத்து அறிமுகப்படுத்திய வீரிய விதைகள் விளைச்சலை தந்தன தான் . ஆனால் அடுத்த சந்ததியை தரவில்லை இதனால் விவசாயி மீண்டும் பெருநிறுவனங்களை எதிர்பார்க்கலானான். ஒவ்வொரு முறையும் தனது பணத்தை அவர்களிடம் இழந்தான்.

அதுவரைக்கும் கிடை அடைத்தும் (பட்டி அடைத்தல்) குப்பை போட்டும் (குப்பை சேர்த்து செட்டியாராகியவர்களெல்லாம் முன்பு இருந்தனர்) விவசாயம் செய்துவந்த விவசாயிக்கு செயற்கை பசளைகளை கொடுத்தன. இலாபம் அதிகம் என ஆசை காட்டின. ஏமாற்றின. சோம்பேறி ஆக்கின. செயற்கை பசளைகளை பாவித்த விவசாயி மண்ணில் இருந்து அவனுக்கு உதவி செய்த நுண்ணுயிர்கள் மண்புழுக்கள் அழிவது தெரியாமல் தொடர்ந்தும் பயன்படுத்தலானான். ஒரு கட்டத்தில் பெருநிறுவனங்களின் அசேதன நச்சுப்பசளைகள் இல்லையெனின் விவசாயமே இல்லையென்று ஆன நிலையை விவசாயியும் நம்பினான்...! காடு போல விவசாயம் செய்த விவசாயி தன் பாரம்பரிய விவசாய முறைகளை மறந்தான்.

இவ்வாறு விதை தொடக்கம் விளைச்சல் வரைக்கும் திட்டம் போட்டு விவசாயி ஏமாற்றப்பட்டான். விவசாய கல்வி முறைகள் கூட அவர்களுக்கேற்ப அவர்களே தயாரித்தார்கள். நமக்கு கற்பித்தார்கள். ரோட்டவேட்டர் உழவுகளிலும், செயற்கை விதைகளிலும், செயற்கை இடங்களிலும் தான் இலாபம் உள்ளதென ஆணித்தரமாக கற்பித்து சோதனையும் வைத்தார்கள். வைக்கச் செய்தார்கள். இயற்கை வழி விவசாயத்தால் அதிகரிக்கும் சனத்தொகைக்கு உணவளிக்க முடியாது செயற்கை விவசாயத்தால் மட்டும் தான் முடியும் என (ஆனால் உண்மையில் இயற்கை வழி விவசாயத்தில் தான் விளைச்சல் அதிகம்) அவ்வளவு பேரையும் நம்ப வைத்தார்கள். அதாவது என் கையைக் கொண்டே எம் தலையை குட்ட வைத்தார்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான வியாபாரம் அது.

பெருநிறுவனங்கள் வேண்டுமென்றால் இதனை "வியாபார சாமர்த்தியம்" என்று சொல்லிக் கொள்ளட்டும் . அவர்களின் சாமர்த்தியத்துக்கு எமது பொருளாதாரத்தை அடகு வைக்க முடியாது . கிராமங்கள்தான் எமது பொருளாதாரம். விவசாயம் தான் எமது பொருளாதாரம். விவசாயி நட்டம் அடைந்தால் கிராமங்கள் பாதிப்படையும். எமது பொருளாதாரம் அழிவடையும். (அழிகிறது இப்போ) இறுதியில் எல்லாமே அழிவடையும்.

இதனை சரிப்படுத்த ஒரே வழி நிலைபேறான விவசாயம் Sustainable Agriculture. இதனை இயற்கை விவசாயம் அல்லது சேதன விவசாயம் என்ற தளங்களிலும் நோக்கலாம். இயற்கை விவசாயம் என்றால் செயற்கையான அனைத்து பொருட்களையும் தவிர்த்து முழுக்க முழுக்க பாரம்பரியமான இயற்கையான பொருட்களை பாவிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. விவசாயிக்கு பாதிப்பில்லாத, அந்த உணவுகளை உண்ணும் மக்களுக்கு பாதிப்பில்லாத, மக்களை பொருளாதார அடிமைகள் ஆக்காத, சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, நோய்களை ஏற்படுத்தாத பொருட்களை பயன்படுத்த முடியும். ஏனெனில் இங்கே சிலர் இயற்கை விவசாயம் செய்பவர்கள் மேற்கத்தேய நாடுகளின் நீளக் காற்சட்டைகளை கூட அணியக்கூடாது என்ற பார்வையில் பார்க்கிறார்கள். தயவு செய்து அவ்வாறு பார்க்காதீர்கள். இயற்கை விவசாயிகள் ஒன்றும் மதபோதகர்கள் கிடையாது . அவர்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாடுபடுபவர்கள் . உங்களது பொருளாதாரத்தையும் தான் .


பெருநிறுவனங்களின் இந்த விவசாய வியாபாரத்துக்கு பெருமளவில் துணை போனது எமது விவசாயிகளின் போதியளவான கல்வியறிவின்மை என்றுதான் கூறவேண்டும். ஏனைய நாடுகளில் படித்தவர்கள்தான் விவசாயம் பார்க்கிறார்கள். எமது நாட்டில் மட்டும்தான் படிக்காவிட்டால் விவசாயம் பார்க்க வேண்டும் என்று சொல்லி சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிறோம். இவ்வாறு படிக்காதவர்கள் செய்யும் ஒரு தொழிலாக விவசாயத்தை பார்த்தமை விவசாயியின் பொருளாதாரத்தை அழித்து விவசாய பெருநிறுவனங்களின் பொருளாதாரத்தை வளர்த்து வைத்துள்ளது. நமது பெற்றோர்களும் ஆசிரியர்களும் "படிக்காவிட்டால் மாடுதான் மேய்ப்பாய்" என்று கூறி வளர்த்தமை இன்னும் உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் மாடு வளர்ப்பு இன்று 442.32 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தொழில்துறை. இந்த நிலையை மாற்றி விவசாயம் செய்பவர்கள் உணர்வுரீதியாக கௌரவமாக பார்க்கப்படுதல் வேண்டும் விவசாயிகளும் அதற்கேற்றவாறு அக்கௌரவத்துக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

எமது அயல் நாடான இந்தியாவில் விவசாயி தற்கொலை என்பது ஒரு பெரும் தலையங்கமாக உள்ளமை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அதனைப்போல எமது நாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தற்கொலைகள் முளைவிடத் தொடங்கியுள்ளன நுண் கடனால் தற்கொலை என்ற தலையங்கத்தில் அவை தற்போது பேசப்படுகின்றன. ஆனால் நாம் மேற்சொன்ன விவசாய பொருளாதார கட்டமைப்பு அடைந்தமை தற்கொலைகளுக்கு ஆகலும் அடியில் உள்ள காரணமாகும். விவசாயம் பொய்த்துப் போனதால் தான் விவசாய நுண்கடன் என்னும் வலையிலேயே போய் விழுகிறான் விவசாயம் பொய்க்காது விட்டால் நுண்கடன் அவனுக்குத் தேவையே இல்லை

இது பற்றி மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விளக்க வேண்டியது நமது எல்லோரதும் கடமை நாட்டுக்கான கடமை. நிலைபேறான விவசாயத்தில் விவசாயி தனது விதைகளே பயன்படுத்துவார். தனது கால்நடைகளை பயன்படுத்துவர் தனது கால்நடைகளின் கழிவுகளையும் குப்பைகளை உரமாக பயன்படுத்துவர். விவசாயி எதற்கும், எதனிலும், யாரையும், யாரிலும் தங்கியிருக்க தேவையில்லை. சந்தை கூட விவசாயியின் கையில் இருக்கும் விவசாயி சொன்னதே விலையாக இருக்கும்.

பசுமைப்புரட்சியின் விவசாயத்தில் மாதம் 20 ஆயிரத்துக்கும் 50 ஆயிரத்துக்கும் அல்லோலகல்லோலப்பட்ட விவசாயிகளுக்கு இப்படியொரு பொருளாதார முறையில் மாதவருமானம் நான்கு ஐந்து இலட்சங்களை எட்டும். எண்ணிப் பாருங்கள் இந்த மாற்றம் வரின் எப்படி இருக்கும் நமது பொருளாதாரம்.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறோம். இரணைமடுக்குளம் திருத்த வேலைக்காக மூடப்பட்டிருந்த பொழுது நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. இது கிளிநொச்சியின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும், கிளிநொச்சி மாணவர்களின் கல்வி முறையையும் கூட குறித்த வீதத்தில் பாதித்தது. இதற்கான தரவுகளை சென்ற ஆண்டுகளின் மத்திய வங்கி ஆண்டறிக்கைகளில் நீங்கள் பார்க்கலாம். ஒரு குளத்தில் தண்ணீர் இல்லாத போனமையே ஒரு நகரத்தின் பொருளாதாரத்தை உலுக்க முடியும் எனின் (இதன் உண்மைத்தன்மையினை கிளிநொச்சி பிரதேசத்தில் வர்த்தக நிலையங்களை வைத்திருக்கும் எமது வியாபாரிகளையே கேட்டு அறியலாம்) நிலைபேறான விவசாய முறைகளில் விவசாயின் வருமானம் பத்து இருபது மடங்கு பெருகினால் நகரின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என நாம் சொல்லி நீங்கள் தெரியத் தேவையில்லை!

போர் முடிவுக்கு வந்து எமது மக்கள் எமது விவசாயிகள் நிவாரணங்களும் இலவசங்களுக்கும் பழக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவ்வாறான விழிப்புணர்வுகள் நாளையை மாற்றும் என்று திடமாக நம்புகிறோம். என்றைக்கு விவசாயியின் கட்டுப்பாட்டில் விவசாயம் வருகிறதோ அதாவது இன்றைக்கு விவசாயியின் பொருளுக்கு விவசாயி சொன்ன விலை சந்தையில் ஏற்றுக்கொள்ள படுகிறதோ, அன்றைக்கே விவசாயத்துக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். இது நஞ்சற்ற விவசாயத்தில்தான்/  நிலைபேறான ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளில்தான் சாத்தியம்.

அதுவரைக்கும் நாம் பெருநிறுவனங்களின் வியாபார சாமர்த்தியங்களில் தான் சிக்கிக் கிடக்க போகிறோமா? என சிந்தித்துப் பார்ப்போமாக.

இந்த ஆண்டின் தைப்பொங்கல் சபதமாக இம்மாற்றத்தை செய்வோம் என உறுதி எடுத்தால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் எமது பொருளாதாரத்தை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தூக்கி நிறுத்தி, அப் பொருளாதாரத்தின் மூலமாகவே இழந்த உரிமைகளை கூட பெற்றுக்கொள்ள முடியும் என்பது கூட உண்மை.( உலகில் பல நாடுகளில் நிதர்சனம் இது)

அப்போதுதான் எமக்கு உண்மையான தைப்பொங்கல்.....!

மாற்றம் காண விரும்பும், துடிக்கும் அனைவருக்கும் வரும் தைப்பொங்கல்கள் இனிய தைப்பொங்கலாக இருக்க எமது வாழ்த்துக்கள்!மகேஸ்வரன் ரஜிதன், யதுகுலா
தொடர்புகளுக்கு- 0777906383
நிமிர்வு தை 2019 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.