ஒளிவிளக்கு




“சில வாரங்களுக்கு, மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு மட்டும் தொண்டாற்றுவோம் என நாம் புறப்படவில்லை.  தொண்டாற்றுவது எமது வாழ்க்கைமுறை.” இது 2013 ஆம் ஆண்டு நான் முதல் முறையாக அருட்தந்தை ஹரி மில்லரை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியில் அவரது அலுவலகத்தில் சந்தித்த பொழுது அவர் கூறியது. அவரைச் சந்தித்த வேளை வெளியே காகங்கள் இடைவிடாது கரைந்து கொண்டிருந்தன. எனக்கோ அது பெரும் தொந்தரவாக இருந்தது. ஆனால் அருட்தந்தையோ அவற்றைச் சட்டை செய்யவில்லை.  காகங்களைக் கலைக்க நான் எடுத்த முயற்சிகளைப் பார்த்து புன்னகைத்தவாறே “அவையும் மட்டக்களப்பு மண்ணின் கதையின் பங்காளிகளே” என்று சொன்னார்.   இவ்வாறு மட்டக்களப்பு மண்ணுடன் ஒன்றாக கலந்திருந்த அருட்தந்தை ஹரி மில்லர் (Harry Miller) இம்மாதம் முதலாம் திகதி அதிகாலை தனது 93 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.


அருட்தந்தை மில்லர் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலிருந்து தனது நண்பன் அருட்தந்தை இயூஜின் ஹேபட் (Eugene Hebert) உடன் புறப்பட்டு 1948 ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஜெசுயிட் அறப்பணிக்கு வந்து சேர்ந்தார்.  அன்றிலிருந்து 60 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மக்களுக்கு ஒரு கல்வியாளனாக, பாதிரியாராக, பாதுகாவலனாக திகழ்ந்தார்.  மட்டக்களப்பு மண் சந்தித்த சொல்லவொண்ணா துயரங்களின் போது அவர்களுடன் இருந்து அத்துயரங்களின் முக்கிய சாட்சியாக இருந்தார்.

1990 களின் காலப்பகுதி மட்டக்களப்பு பல பயங்கரங்களையும் படுகொலைகளையும் சந்தித்தது. காலத்தின் தேவைகருதி அருட்தந்தை தன்னுடைய பாதிரியார் என்ற கடமையைத் தாண்டி பல பொறுப்புக்களை கையில் எடுத்துக் கொண்டார்.  மட்டக்களப்பில் மதநல்லிணக்கத்தைப் பேண மதங்களின் ஒருங்கிணைப்பு சபையை உருவாக்கியது மட்டுமல்லாமல் பின்னர் மட்டக்களப்பு சமாதானக் குழுவிலும் இணைந்து பணியாற்றினார்.  “எம்மை எமக்கெதிராக திருப்புவதன் மூலம் மட்டுமே அவர்களால் எம்மை வெற்றி கொள்ள முடியும்” என்று அடிக்கடி எல்லோருக்கும் சொல்லிக் கொள்வார்.

அக்காலப்பகுதியில் மட்டக்களப்பில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்படுதல் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது.  தமிழ் இளைஞர்கள் புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அல்லது பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்படுதல் என்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்தனர்.  நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் பள்ளிவாசல்கள் மீது புலிகளின் தாக்குதல்களும் அவற்றுக்கு பழிவாங்கும் வகையில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் தமிழ் மக்களின் மீதான தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்தன.


தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த பாரதூரமான மனிதஉரிமை மீறல்களைத் தம்மால் தடுக்க முடியாது சக்தியற்று இருப்பதை எண்ணி அருட்தந்தை வேதனைப்பட்டார். ஆயினும் அந்த துயர நிகழ்வுகளுக்கு தான் சாட்சியாகவாவது இருக்கவேண்டும் என்று நினைத்தார். அவ்வேளையில் மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட 8,000 பேர்களின் விபரங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தார்.  இவற்றுக்கு நடுவில் அவரது நண்பன் அருட்தந்தைஹேபட்டும் 1990 ஆம் ஆண்டுகாணமல் ஆக்கப்பட்டதுமிகப்பெரியசோகம்.  அருட்தந்தை ஹேபட் புனிதமைக்கேல் கல்லூரியில் கூடைப்பந்து பயிற்றுனராக இருந்தவர். அவர் மட்டக்களப்பு மக்களின் அபிமானத்தைப் பெற்றவராகவும் மாணவர்களும் இளைஞர்களும் காணாமல் ஆக்கப்படாமல் தடுத்துப் பாதுகாப்பவராகவும் இருந்தார்.

2009 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான அமெரிக்காவின் நியுஓர்லியன்சுக்கு ஓய்வு பெறுவதற்காக சென்ற அருட்தந்தைமில்லரால் அங்கு இருக்க முடியவில்லை.  அங்கு சென்ற பின்னர் தனது உண்மையான தாய்வீடு மட்டக்களப்பு தான் என்பதை உணர்ந்து கொண்டு மீண்டும் மட்டக்களப்புக்கே வந்து விட்டார்.  தனது இறுதி நாள் வரை மட்டக்களப்பு மக்களின் நல்வாழ்க்கைக்காக உழைப்பையும் பிரார்த்தனையும் மேற்கொண்ட அருட்தந்தை ஹரி மில்லரை மட்டக்களப்பு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.

Ground Views நன்றி: கண்ணன் அருணாசலம், 
தமிழில்- ரஜீவன்
நிமிர்வு தை 2019 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.