பலமையமாக உருவெடுப்போம்
ராஜதந்திரம் என்பதை நவீன அர்த்தத்தில் பார்த்தால் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு முன்பு அது போன்ற ஒரு செய்முறை அதுக்குரிய அர்த்தத்தில் எம்மிடம் இருக்கவில்லை. அது ஆங்காங்கே மிதவாத தலைவர்கள் தங்களுடைய கட்சித் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொண்ட சில நகர்வுகள்தான். அல்லது ஹன்டி பேரின்பநாயகம் சொல்வதுபோல கொள்கை வழி நகர்வுகள் மட்டுமே. ஆனால் ராஜதந்திரம் என்ன என்பதை அதன் நவீன அர்த்தத்தில் விளங்கி சரியானதோ பிழையானதோ விமர்சனங்களோடு முன்னெடுத்தது என்றால் ஆயுதப்போராட்டம் தான். ஏனென்றால் ஆயுதப் போராட்டம் தான் தன்னை ஓர் பலமையமாகக் (power source) கட்டியெழுப்பியது. ராஜதந்திரம் எனப்படுவது அதன் பாரம்பரிய அர்த்தத்தில் இரண்டு அரசுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்ளும் இடை ஊடாட்டம். அப்படி பார்த்தால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களுடைய வகிபாகம் என்ன என்ற கேள்வி வரும். ஒரு அரசற்ற தரப்பு அரசுடைய உலகில் எப்படி இடை ஊடாலாம் என்ற கேள்வியும் வரும். ஆனால் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தில் அதை முன்னெடுத்த இயக்கங்கள் தங்களுக்கென்று விடுதலைப் பிரதேசங்களை ஸ்தாபித்த பொழுது குறிப்பாக அதில் நீண்ட காலம் களத்தில் நின்ற புலிகள் இயக்கம் தனக்கொரு கட்டுப்பாட்டுப் பிரதேசம் தனக்கொரு பாதி அரசு என்பவற்றை ஸ்தாபித்த பொழுது அந்த பலமையத்தின் நோக்கு நிலையிலிருந்து பிராந்தியத்தையும் வெளிநாடுகளையும் கையாள வேண்டிய தவிர்க்க முடியாத ஒரு தேவை வருகின்றது. இந்தப் பின்னணியில்தான் அதன் நவீன அர்த்தத்தில் ராஜதந்திரம் என்பது ஈழத்தமிழர்களிடம் மேலெழத் தொடங்குகின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய நவீன ராஜதந்திரிகளில் ஒருவராக அன்ரன்பாலசிங்கம் பார்க்கப்படுகின்றார்.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்ம் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், சமகால அரசியல் கருத்தரங்கும் கைலாசபதி கலையரங்கில் கடந்த 14.12.2018 அன்று இடம்பெற்றது. அதில் பங்கேற்ற அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் இவ்வாறு கூறினார். அவர் ஆற்றிய உரையின் முக்கியமான பாகங்களை இங்கு தொகுத்துள்ளோம்.
விடுதலை இயக்கங்களின் பிரதிநிதிகள் அல்லது அரசற்ற தரப்புக்களின் பிரதிநிதிகள் ராஜதந்திரிகளாக அங்கீகரிக்கப்படும் மாற்றம் என்பது ஒருவகையில் கெடுபிடி போரோடு தான் வந்தது. கெடுபிடிப் போருக்கு முன்னுக்கும் ஆங்காங்கே தெட்டம் தெட்டமாக இருந்திருந்தாலும் கூட கெடுபிடிப்போர் தான் அரசற்ற தரப்பின் பிரதிநிதிகளை ராஜதந்திரிகளின் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. எப்படி என்றால் கெடுபிடிப்போரில் அமெரிக்கா அரசாங்கத்தை ஆதரித்தால் ரஸ்யா விடுதலை இயக்கத்தை ஆதரிக்கும். எனவே பேச்சுவார்த்தை மேசை என்று வரும்போது அரச பிரதிநிதிகளோடு சமநிலையாக விடுதலை இயகத்தின் பிரதிநிதிகளை ரஸ்யா கொண்டு வரும். இது உலகம் முழுக்க நடந்தது. ஆசிய ஆபிரிக்க இலத்தின் அமெரிக்க பிராந்தியங்கள் எங்கும் ஆயுதப் போராட்டத்தின் பிரதிநிதிகளும் மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகளும் பாரம்பரிய ராஜதந்திரிகளுக்கு சமமாக அரங்குக்கு வந்தார்கள். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அப்படி ஒரு அரங்கை திம்புவில் திறந்து ஈழத்தமிழர்களின் இராஜதந்திரிகளுக்கு முதல் அங்கீகாரத்தை கொடுத்தது இந்தியா தான். திம்பு பேச்சு வார்த்தையில் அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. இப்படியாக கெடுபிடி போர் காலகட்டத்தில் விடுதலை இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கு உலகம் முழுவதிலுமே ஒரு அந்தஸ்து வழங்கப்பட்டது.
இதிலே முக்கியமாக அந்த குறிப்பிட்ட பிரதிநிதி அந்த ராஜதந்திர ஒழுக்கத்திற்குள்ளால் வராதவராக இருக்கலாம். அவருக்கு மொழிப்புலமை மட்டும்தான் இருக்கும். அதற்கும் அங்காலை அவருடைய அடிப்படை ஒழுக்கம் அதற்குரியதாக இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனால் அவர் தன் மக்களுக்கு உண்மையாக இருந்தார். அவர் தன் மக்களுக்கு விசுவாசமாக இருந்தார் என்ற அடிப்படையில் அவர் மக்களின் பிரதிநிதியாக அரங்கிற்கு வந்தார். இது மரபார்ந்த இராணுவ அணுகுமுறையிலிருந்து ஒரு புதிய தோற்றத்தை கொண்டு வந்தது. கெடுபிடி போருக்குப் பின் குறிப்பாக இணையப் புரட்சிக்குப் பின் இந்த அரசற்ற தரப்புக்களின் இராஜாதந்திர வெளி எனப்படுவது வெகுசன இராஜதந்திரம் என்ற துறையில் மேலும் ஆழமாக பார்க்கப்படுகின்றது.
வெகுசன இராஜதந்திரம் ஒருகாலம் அரசு இரகசியங்களாக இருந்த பலவற்றை பரகசியமாக்கிவிட்டது. அரசுக்கு மட்டுமே தெரிந்திருந்த இரகசியங்கள் பொதுமக்களுக்கும் தெரியக்கூடிய வாய்ப்புக்களை டுவிட்டர் பேஸ்புக் போன்றன ஏற்படுத்தின. இதற்கு நல்ல உதாரணம் ஒசாமா பின் லேடனை கொலை செய்வதற்கான தாக்குதல். உலகின் மிகப்பெரும் பேரரசால் வடிவமைக்கப்பட்ட அது அமெரிக்க ஜனாதிபதி, பாதுகாப்புத்துறைச் செயலர், மற்றும் சம்பந்தப்பட்ட தளபதிகள் என்பவர்களுக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது. இவர்கள் ஓர் அறைக்குள் இரகசியமாக இருந்து கொண்டு கொமான்டோக்களின் தாக்குதலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அகமதாபாத் நகரில் ஒசாமாவின் வீட்டை நெருங்கி கொமான்டோக்கள் ஹெலிகொப்டரிலிருந்து குதிக்கின்றன. குதிக்கும் பொழுது அதனை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு பேரரசின் மிகச்சில பிரதிநிதிகள் மட்டும்தான். அதற்கும் அப்பால் அகமதாபாத் நகரின் சற்றுத் தொலைவில் ஒரு 28 வயது இளம் இஞ்சினியர் அப்பொழுது டுவிட் செய்து கொண்டிருந்திருக்கின்றார். திடீரென்று அந்தச் சத்தத்தைக் கேட்கின்றார். அசாதாரணமாக வேறு திசையிலிருந்து ஒரு ஹெலிகொப்டர் போகுது. பிறகொன்று வருகிறது. அது லான்ட் பண்ணுது. பிறகு சூட்டுச் சத்தம் கேட்கிறது. பிறகு தொடர்ச்சியாக கேட்கிறது. அவர் எல்லாவற்றையும் நேரடி வர்ணனை போல தொடர்ந்து டுவிட் செய்து கொண்டேயிருக்கிறார். பிறகு தான் தெரிய வந்தது அது பின்லேடனை கொல்வதற்கான ஒரு தாக்குதல் என்று. இங்கே சமூக வலைத்தளங்கள் ஒரு பேரரசின் இரகசியத்தை ஒரு சாமானிய மனிதனும் அறியும் வகையில் கொண்டு சேர்க்கின்றன. அது என்னவென்று தெரியாவிட்டாலும் சிறு எண்ணிக்கையான அதிகாரவர்க்கத்தினருக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வுக்கு ஒரு சமானியன் சாட்சியாக இருந்தான். எனவே சமூக வலைத்தளங்களின் எழுச்சியோடு தகவல் அபிப்பிராயம் போன்றன வெகுசன மயப்பட்டுவிட்டன. இது வெகுசன இராஜதந்திரத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு வந்துவிட்டது.
இப்படி ஒரு பின்னணிக்குள் தான் 2009 ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த அந்த பாதி அரசு தோற்கடிக்கப்பட்டது. ஒன்றை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். புலிகள் இயக்கம் நிர்வகித்த அந்த பாதி அரசின் தோல்வி என்பது அந்த இயக்கத்தால் வழி நடத்தப்பட்ட இராஜதந்திர நகர்வுகளின் தோல்வியும் தான். அந்த இராஜதந்திர நகர்வுகள் வென்றிருந்தால் 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஓர் இனப்படுகொலையில் தமிழ் மக்களுடைய ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருக்காது. எனவே அங்கே இராஜதந்திரப்போரின் தோல்வி இருக்கின்றது. முதலில் அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த தோல்வியிலிருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டும். நாங்கள் நிறைய விடயங்களை தமிழ் மையமாகவே யோசிக்கின்றோம். இல்லை விரிவுரையாளர் குருபரன் சொன்னது போல தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டும் அந்த இடத்தில் தோற்கடிக்கப்படவில்லை. எமது இராஜதந்திரமும் தோற்கடிக்கப்பட்டது. பலர் சொல்லுவார்கள், அது தோல்வியல்ல, அந்த தோல்வியோடு எங்களுடைய போராட்டம் சர்வதேச மயப்பட்டுவிட்டது என்று. அப்படி அல்ல: சர்வதேச மயப்படுத்தப்பட்டபடியால் தான் எங்களுடைய ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் 11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு பின்னர் ஆயுதப் போராட்டங்கள் அனைத்துக்குமான ஒரு சர்வதேச வியூகம் வந்துவிட்டது. அதனாலே தான் தோற்கடிக்கப்பட்டது.
தோற்கடிக்கப்பட்டது தனிய ஒரு விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல. அதற்கு முன்னுக்கே செச்சினியாவில் டுடாயெவ் (Dudayev) செய்மதித் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது பங்கர் வாசலில் வைத்து கொல்லப்படுகின்றார். டுடாயெவ் ஒரு கதாநாயகத்தனமாக காட்சியளிக்கும் ஒரு தலைவர். செச்சினியப் போராட்டம் அதோடு பெருமளவிற்கு ஒடுக்கப்பட்டது. அதற்குப்பின் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படையின் (FARC) இரண்டாம் நிலைத்தலைவர் றாஉல் றேயே(Raul Reyes) கொல்லப்பட்டார் அவரிடம் இருந்து அகப்பட்ட மடிக் கணணிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏனைய இயக்கங்களின் ஆயுதக் கடத்தல் வழிகளையும் அவர்கள் பிடிக்கக்கூடியதாக இருந்தது. அதற்கு பின்னர்தான் 2009 ஆம் ஆண்டில் மே மாதம் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவரும் ஒரு பாதுகாப்பான வீட்டில் இருக்கும் பொழுது பின்லேடன் பாணியிலேயே கொல்லப்பட்டார்.
கெடுபிடி போரின் முடிவுக்கு பின்னரான ஒரு புதிய உலகச் சூழல் என்பது ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக திரும்பியிருக்கின்றது. அதேவேளை, தகவல் யுகத்தின் எழுச்சி தகவலைக் கையாள்பவனுக்கு நல்ல சேவகனாகவும் மோசமான ஒற்றனாகவும் இருக்கின்றது. எங்கள் கையில் வைத்திருக்கும் கைபேசி எங்களை பின் தொடர்வதற்கு நாங்கள் கொடுக்கும் ஒரு அனுமதி. அது ஒரே நேரத்தில் சேவகனாகவும் ஒற்றனாகவும் இருக்கிறது. நாங்கள் பொக்கெற்றுக்குள் ஒற்றர்களை கொண்டு திரிகின்றோம். தலைமாட்டில் ஒற்றர்களை வைத்துக்கொண்டு உறங்குகின்றோம். ஒற்றர்களோடு படுக்கின்றோம். ஒற்றர்களோடு திரிகின்றோம். இது ஒற்றர்களின் உலகம். எனவே ஆயுதப்போராட்டங்கள் அவற்றுக்கெதிரான சூழல் என்பது இந்த தகவல் வெடிப்போடு வருகின்றது. எனவே தமிழர்கள் கருதுவது போல தனிய அவர்களுடைய ஆயுதப் போராட்டம் மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் அப்படியொரு நிலமை வந்துவிட்டது. அந்தப் பின்னணிக்குள் தான் புலிகள் இயக்கமும் தோற்கடிக்கப்பட்டது.
தமிழர் ராஜதந்திரம் இந்த சூழலை ஏன் வெற்றிகொள்ள முடியாது போய்விட்டது என்பதனை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒன்பதாண்டுகள் ஆகிவிட்டது. அதை நாங்கள் சரியான படியாக ஆய்வு செய்திருந்தால் அந்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்றிருந்தால் இந்த ஒன்பதாண்டுகளிலும் சரியான வழித்தடத்தை நாங்கள் போட்டிருந்திருக்கலாம். எவ்வளவோ சாதனைகள் செய்த ஆயுதப்போராட்டம் எத்தனையோ ரெஜிமென்டுகளை வைத்திருந்த ஆயுதப்போராட்டம் வெளிவிவகார கொள்கையை கவனிப்பதற்கு ஒரு ரெஜிமென்டை வைத்திருக்கவில்லை. அன்ரன்பாலசிங்கம் ஒரு தனிமனிதனாகத் தான் அரங்கில் நின்றார். அவரைச் சுற்றி ஐரோப்பியாவைச் சேர்ந்த அந்த அமைப்பைச் சேர்ந்த கொஞ்சப்பேர் நின்றார்கள். அது ஒரு குழுச் செயற்பாடாக இருக்கவில்லை. அந்த நவீன தமிழ் இராஜதந்திரம் என்பது நிறுவன மயப்படுத்தப்படவில்லை. அங்கு ஒரு சிந்தனைக் குழாம் இருக்கவில்லை. கொள்கை ஆய்வு மையங்களோ யுக்தி ஆய்வு மையங்களோ அது போன்ற மூலோபாய மையங்களோ அங்கே இருக்கவில்லை. மூலோபாய ஆய்வு மையங்கள், கொள்கை ஆய்வு மையங்கள் இருந்தால் தான் ஒரு வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கலாம். வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்கினால் தான் அதற்கேற்ப அடுத்தடுத்த கட்டங்களை நகர்த்தலாம். ஆனால் அப்படியொரு ஆய்வு மையங்களற்ற வெற்றிடத்தில் தான் அன்ரன் பாலசிங்கம் ஒரு தனிமனித ஆளுமையாக மேலெழுந்தார். அவருக்குப் பிறகும் கூட எங்களிடம் கொள்கை ஆய்வு மையங்களோ மூலோபாய ஆய்வு மையங்களோ இல்லை. குருபரன் தொடங்கி வைத்திருக்கின்ற ஒரு அடையாளம் மட்டும் இருக்கின்றது.
நாங்கள் இராஜதந்திரப்போர் இராஜதந்திரப்போர் என்று பொய்க்கு சொல்லுகின்றோம். அது போரல்ல. இராஜதந்திரமே இல்லை. நடந்து கொண்டிருப்பது கட்சிகளுக்கு இடையிலான ஒரு அரசியல் ஊடாட்டம் தான். இராஜதந்திரம் என்பது அடர்த்தியான சொல். அது முழுக்க முழுக்க அறிவு பூர்வமான சொல். அந்த அடர்த்தியான சொல்லை ஒரு செயலூக்கம் மிக்க துறையாக மாற்றுவதென்று சொன்னால் அதற்கு முதலில் ஆய்வு வேண்டும். ஆய்வு முடிவுகள் வேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் நாம் எங்களை ஒரு பலமையமாக கருத வேண்டும்.
எல்லா ஆயுதப் போராட்ட இயக்கங்களும் ஒரு பலமையத்தைத் தான் உருவாக்க முயற்சித்தன. ஒரு விடுதலைப்பிரதேசம் அதற்குள் ஒரு நடைமுறை அரசு. அது தான் அவர்களுடைய இலட்சியமாக இருந்தது. புலிகள் இயக்கம் தான் அதில் வெற்றி கண்டது. அந்தப் பலமையத்தை வைத்துக் கொண்டு நாங்கள் ஏனைய பலமையங்களோடு இடையூடாட்டத்தை செய்யலாம். ஒரு பலமையத்தோடு தான் ஏனைய பலமையங்கள் இடையூடாட்டத்தை செய்யும். அப்படி என்றால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் எங்களை ஒரு பலமான மையமாகக் கருதுகின்றோமா? இல்லை. நாங்கள் எங்களை ஒரு தரப்பாகக் கருதுக்கின்றோமா? இல்லை. நாங்கள் எங்களை ஓர் அரசாகக் கருத வேண்டாம். அது கொஞ்சம் கூடிப் போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுவோம். ஏன், ஒரு தேசமாக வைத்திருப்பது கூட கூடிவிட்டது என்று வைப்போமே. குறைந்தது எங்களை நாங்கள் ஒரு பலமையமாகக் கட்டியெழுப்ப ஏன் தவறினோம்? வரலாறு எங்களுக்கு தொடர்ச்சியாக சந்தர்ப்பங்களைத் தந்த போதும் இதனை செய்ய ஏன் தவறினோம்?
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எங்களுக்கு ஐந்துக்கும் குறையாத சந்தர்ப்பங்கள் தரப்பட்டன. அதற்குப் பின் வந்த ஜனாதிபதித் தேர்தல், பிறகு ஆட்சி மாற்றத்திற்கான ஜனாதிபதித் தேர்தல், பிறகு அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தல், பின்னர் ரணில்விக்ரமசிங்கவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், கடைசியில் ஒக்டோபர் 26 ஆட்சிக் கவிழ்ப்பு. கிட்டத்தட்ட ஐந்து சந்தர்ப்பங்கள் இது தவிர எல்லா வரவு செலவுத்திட்ட விவாதங்கள். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ் தரப்பிற்கு பேரம்பேச சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் நாங்கள் பேர அரசியலை வைக்கவில்லை. ஏன் நாங்கள் எங்களை ஒரு பலமையமாக கருதவில்லையா? ஏன் நாங்கள் ஒரு பேர அரசியலை செய்யாமல் போனோம். அப்படி ஒரு பேர அரசியலை செய்ய வேண்டுமென்று சிந்தித்திருந்தால் அதற்கேற்ப கொள்கை ஆய்வு மையங்களையும் மூலோபாய ஆய்வு மையங்களையும் உருவாக்கியிருந்திருப்போம். ஏனென்றால் அதன் தொடக்கம் சிந்தனைக் குழாம் தான். சிந்தனைக்குழாம் இல்லாமல் ஒரு ராஜதந்திரப்போரை முன்னெடுக்கவே முடியாது. அது கற்பனை அல்ல. அது திருப்பம் அல்ல. அது இலட்சியவாதம் அல்ல. அது முழுக்க முழுக்க தூய அறிவும் நடைமுறையும். ஒரு கனவு இருக்க வேண்டும். அந்தக் கனவினை நோக்கி யதார்த்தத்தை வளைத்து எடுக்க வேண்டும். அதற்கு இடையில்தான் இராஜதந்திரம் இருக்கின்றது.
ஆனால் எங்களிடம் அப்படி ஒரு அறிவுபூர்வ இராஜதந்திரத்தை முன்னெடுக்கக் கூடிய அறிவு சார்ந்த தயாரிப்புக்கள் எதுவுமே இருக்கவில்லை. எமக்கு பேரம் பேச கிடைத்த சந்தர்ப்பங்களிலும் நாங்கள் பேரம் பேசவில்லை. ஆனால் இந்த ஐந்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைத் தீவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வாக்குகளைப் கொண்ட மக்கள் நாம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பில் யார் ஆட்சி செய்வது என்பதனைத் தீர்மானிக்கும் மக்களாக நாங்கள் இருக்கின்றோம். அப்படி யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று வெளித்தரப்புக்கள் விரும்புகின்றனவோ அந்த வெளித்தரப்புக்களோடு பேரம் பேசக்கூடிய வல்லமை எமக்கு உண்டு. ஒரு தோல்வியிலிருந்து மீண்டெழுக்கூடிய பேரம் எங்களுக்கு அதிகரித்திருக்கின்றது.
2002 ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தப் பிராந்தியம் ஏசியா பசுபிக் என்று அழைக்கப்பட்டது. முன்பு இந்தப் பிராந்தியத்திற்குள் இந்தியா உள்வாங்கப்படவில்லை. இன்று இப்பிரதேசம் இந்தோ பசுபிக் என அழைக்கப் படுகிறது. இப்பொழுது இதற்குள் இந்தியா வந்துவிட்டது. இது சீனாவை சமப்படுத்துவதற்கு அமெரிக்க மேற்கொண்ட ஒரு புதிய வியூகம். இந்த வியூகத்திற்குள் ஈழத்தமிழர்களுக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்று இருக்கிறது. உலகின் ஆகப்பெரிய கடல் வழி வலையமைப்பின் பாதுகாப்பு இந்தப் பிராந்தியத்தில் தங்கியுள்ளது. இந்த ஆண்டின் முடிவின் பின் அமெரிக்க கடல் படையின் அறுபது வீதமான கலங்கள் இந்தப் பிராந்தியத்திற்குள் வந்துவிடும். எனவே கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். ஈழத்தமிழர்களின் பேரம் பேசும் பலம் என்பதே அவர்களுடைய கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அரசியல் இருப்புத்தான். எனவே கேந்திர முக்கியத்துவ ஸ்தானத்தில் இருக்கம் நாங்கள் அந்த முக்கியத்துவததைக் கையாளலாம்.
ஆகப்பிந்திய உதாரணம் சொல்லுகின்றேன். ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தவுடன் கனேடிய பிரிட்டிஸ் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிய ராஜதந்திரிகள் வடக்கு கிழக்கு வந்தார்கள். இவர்கள் இங்கே அரசியல்வாதிகளை மட்டும் சந்திக்கவில்லை. அரசியல் ஆர்வலர்கள், கருத்துருவாக்கிகள் எல்லோரையும் சந்தித்தார்கள். எல்லோரிடமும் அபிப்பிராயங்களைத் திரட்டினார்கள். நாடாளுமன்ற நடைமுறைகளை நேரில் போயிருந்து பார்த்தார்கள். நீதிமன்ற அமர்வுகளையும் நேரில் போயிருந்து பார்த்தார்கள். டுவிட்டர் தளங்களில் தங்களுடைய அபிப்பிராயங்களை சாடைமாடையாக முன்வைத்தார்கள். சில நேரங்களில் நாமல் ராஜபக்~வோடு மோதலிலும் ஈடுபட்டார்கள். பொதுவைபவங்களில் தங்களுடைய கருத்துக்களை சாடைமாடையாக சொன்னார்கள். புலிகள் இயக்கத்திலிருந்து புனர்வாழ்வு பெற்று வந்தவர்கள் உருவாக்கிய கட்சி அலுவலகத்திற்கு போய் அவர்களைச் சந்தித்து படம் எடுத்துக்கொண்டார்கள். இந்த ஆண்டு கூட ஒரு நாடு ஒரு கல்வியாளர் அந்த நாட்டுக்குப் போகவிரும்பிய போது அவருக்கு இருக்கும் அரசியலை காரணம் காட்டி விசாவைக் கொடுக்காமல் விட்டது. அந்த நாட்டின் தூதுவர் புலிகள் இயக்கத்தின் கட்சியை வந்து சந்தித்து படம் எடுத்தார். இதெல்லாம் மாறுகிறது.
முன்னர் இந்தியாவிலிருந்து யாராவது வந்தால் அவருக்கு ஒரு பட்டியல் கொடுக்கப்படும் இன்ன இன்ன காரியம் செய்யக்கூடாது என்று. பொதுமேடையில் கதைக்கக் கூடாது, பேட்டி கொடுக்கக் கூடாது, அரசியல் கதைக்கக் கூடாது இப்படி ஒரு பட்டியல் கொடுத்துத் தான் விசா கொடுக்கப்படும். ஆனால் திருமாவளவன் வந்து கிட்டு பூங்காவில் அட்டகாசமாக அரசியல் கதைத்தார். அதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து கொஞ்ச அறிவாளிகள் வந்தார்கள். எல்லா இடங்களிலும் அரசியல் சந்திப்புக்களில் ஈடுபட்டார்கள். எல்லோரும் இப்பொழுது தமிழ் மக்களை நோக்கி வரத்தொடங்கிவிட்டார்கள்.
வவுனதீவில் இரண்டு பொலிஸார் கொடூரமாக கொல்லப்பட்ட பின் முன்னாள் இயக்கத்தவர்களுக்கு பிரச்சனை வரலாம் என்ற நிலைமை தோன்றியது. இதே காலகட்டத்தில் தான் ராஜபக்~க்கள் மறுபடியும் அதிகாரத்துக்கு வரலாம் என்ற ஒரு சூழல் ஏற்பட்டிருந்த பின்னணியில் இந்த உயர்ஸ்தானிக அதிகாரிகள் முன்னாள் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களைக் கண்டு கதைத்து படம் பிடித்துக்கொண்டார்கள். இதற்குள் ஒரு செய்தியை அவர்கள் வெளிக்கொண்டு வருகிறார்கள். எங்களைக் கையாள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது.
காலத்திற்கு காலம் அவர்களே எங்களைக் கையாள்வதா? நாங்கள் கையாள்வோம். அப்படிக் கையாள்வது என்றால் நாங்கள் முதலில் தரப்பாக உணரவேண்டும். எங்களை ஒரு பலமையமாக கட்டியெழுப்ப வேண்டும். புலிகள் இயக்கம் ஒரு பலமையமாக இருந்தது. அது தன்னை ஒரு அரசாக விருத்தி செய்தது. அது முதுநிலைக்கு வரமுன்னரே அழிக்கப்பட்டுவிட்டது.
அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு என்பது அரசுகளைக் காப்பாற்றுவதற்கானது. மக்கள் அழிந்து போனாலும் பரவாயில்லை. அதனால்தான் கார்ல்மாக்ஸ் அரசற்ற தன்மை வேண்டும் என்று சொன்னார். அரசு எப்பொழுதும் ஒரு அதிகார மையம். அது இன்னொரு அதிகாரத்தை பாதுகாக்கும். வர்க்க நலனோடு பாதுகாக்கும். வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வில்லங்கம் வந்த பொழுது எப்படி எல்லாம் அறிக்கை விட்டார்கள். கடைசியில் இருவரும் கண்டு கதைத்தார்கள். ஏன் வடகொரியா தென்கொரியாவை அழித்துவிடும் என்ற அச்சம் உண்டு. அது யப்பானையும் சேதமாக்கும் என்ற அச்சம் உண்டு. அதேநேரம் வடகொரியா முற்றாக பசுமமாகிவிடும் என்பதும் உண்மை. ஆனால் இவ்வளவு வீரம் கதைத்த வடகரியாவும் அமெரிக்காவும் ஒருகட்டத்தில் சந்திக்கின்றன. கட்டமைப்புச் சார் அரசுக்கும் அரசுக்கும் உறவு என்பது அரசுகளைப் பாதுகாக்கும் நோக்கத்திலானது. அது தான் நடந்தது. அதாவது ஒரு பலமையத்திற்கும் இன்னொரு பலமையத்திற்குமான உறவு ஒரு கட்டத்தில் அவற்றை பாதுகாத்துக் கொள்ளும். தமிழ் மக்கள் தங்களை ஒரு பலமையமாக கட்டியெழுப்பும் போதுதான் பேரமும் அதிகரிக்கும். எங்களை நாங்கள் எப்படி ஒரு பலமையமாக கட்டியெழுப்ப வேண்டும்? எங்களுடைய பலம் எது? பிராந்தியத்தின் பலம் எது? பலவீனம் எது? உலகத்தின் பலம் எது பலவீனம் எது? ஏன்பது பற்றிய ஆய்வுகள் எங்களுக்கு வேண்டும். கற்பனையில் நாங்கள் தளத்தைக் கட்டியெழுப்ப முடியாது. அது வீர வசனம் அல்ல. அது முழுக்க முழுக்க அறிவுபூர்வமான செயல். அது ஒரு அறிவு. எனவே தமிழ் மக்கள் தங்களை ஒரு பலமையமாக கட்டியெழுப்பும் போதுதான் பேரம் அதிகரிக்கும்.
சரி நடைமுறைக்கு வருவோம், இருக்கின்ற கட்சி தன்னையொரு பலமையமாகக் கருதவில்லை. அது பேர அரசியலை முன்னெடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றோம் அல்லவா? அப்படி என்றால் நாங்கள் புவிசார் அரசியலை கையாளப்போகின்றோம். பலமையமாக ஏனைய உறவுகளை கையாளப்போகின்றோம் என்று நம்புகிறவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுங்கள். சர்வதேச உறவு என்று சொல்லுவார்கள். உறவைப் பேண். நட்பும் பாராட்டாதே பகையும் பாராட்டாதே. உறவைப் பேண். அதனை நவீன ராஜதந்திரிகள் ஊடாட்டம் (engage) பண்ணு என்று குறிப்பிடுவார்கள். யாரையும் வெட்டிவிடாதே. எல்லா உறவுகளையும் பேண். நீ ஒரு தோற்கடிக்கப்பட்ட சிறிய மக்கள் கூட்டம். அரசற்ற தரப்பு. சிதறிப்போனாய் உலகம் முழுவதும். எனவே எல்லா உறவோடும் பேண். யாரோடையும் பகை பாராட்டாதே. யாரோடும் நட்பும் பாராட்டாதே.
கருணாநிதி இறந்த பொழுதும், வாஜ்பேயி இறந்த பொழுதும் தமிழ் முகநூல் தளங்களில் எப்படி எப்படியெல்லாம் கருத்துக்களை குவித்தோம். தோல்வியினால் நாங்கள் அப்படிப்பட்ட நிலைக்கு வந்துவிட்டோம். கருணாநிதியையும் வாஜ்பேயையும் நாங்கள் எப்படி அணுகினோம். குறிப்பாக புலம்பெயர்ந்த தரப்புக்களிலிருந்து இறக்கிற காலத்திலும் இறந்த பின்னும். கருணாநிதியை நோக்கி எவ்வாறான வசவுகள் வெளிவந்தன. கருணாநிதியிடம் விமர்சனத்திற்குரிய பகுதி உண்டு. ஆனால் அவர் ஆறு கோடித் தமிழர்களின் தலைவர். இந்தியாவைக் கையாள்வதற்கு தமிழகம் முக்கியம். அது எங்களுடைய தொப்புள்கொடி உறவு. அண்மையில் வந்து போன திருமாவளவன் ஒரு கருத்தை வடிவாக சொன்னார். தமிழகம் உங்களுக்குப் போராடித்தரும் என்று கற்பனை செய்ய வேண்டாம். நீங்கள் போராடுங்கள். நீங்கள் வலுவான நிலைக்கு வாங்கோ. அப்படி வந்தால் தமிழகம் உங்களுக்குப் பின்னுக்கு வரும். இப்படித்தான் தமிழகம் புலிகளுக்கு பின்னுக்கு போனது. நாங்கள் ஒரு பலமையமாக வரவேண்டும் என்றுதான் அவர் சொல்லுகின்றார். உண்மை அதுதான். நாங்கள் பலமையமாக வந்தால் நாங்கள் ஒரு வலு மையமாக வந்தால் தமிழகமும் எங்களோடு சேரும். புலம்பெயர்ந்தவர்களையும் நாங்கள் ஒன்று திரட்டலாம். இரண்டு பலங்களையும் வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் தமது பேரத்தை அடுத்த கட்டத்திற்குள் கொண்டு போகலாம்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் நாங்கள் எந்த வெளிக்குள்ளால் முன்னேறலாம் என்பது தான். எங்களால் முடிந்ததெல்லாம் பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிக்குள் இயலுமானதை செய்வதுதான். பங்கேற்பு ஜனநாயக வெளிக்குள் கூட நாங்கள் எதுவும் செய்யவில்லை. அந்த தரிசனம் எங்கள் தலைவர்களில் எத்தனை பேரிடம் இருக்கிறது என்ற கேள்வி உண்டு. பிரதிநிதித்துவ ஜனநாயக வாதிகளாகத்தான் எல்லோரும் காட்சியளிக்கிறார்கள். இந்த பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிக்குள் எங்கள் பேரத்தை அதிகரிக்க வேண்டும். இருக்கின்ற கட்சி பிழைவிடுகின்றது என்று சொன்னால் அந்த பிழையை சுட்டிக்காட்டுகின்ற நீங்கள் ஐக்கியப்பட வேண்டும். ஒரணியில் திரளுங்கள் தமிழ் வாக்குகளை சிதறவிடாமல் அப்படியே கொத்தாக பெறுங்கள். அதனூடாக நீங்கள் பலமான தரப்பாக அரசியலை அறிவு பூர்வமாக அணுகும் தரப்பாக கொழும்போடையும் பிராந்தியத்தோடும் அனைத்துலக சமூகத்தோடும் பேரம் பேசுங்கள். திரும்பத் திரும்ப அவன் செய்வது பிழை என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. நீங்கள் நல்ல இலட்சியங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு பலமையமாக இல்லாத மட்டும் அது வெறும் கற்பனை தான். அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் நீங்கள் ஒரு வலு மையமாக மாற வேண்டும். எங்களிற்கு இப்பொழுது இருக்கின்ற ஒரே ஒரு வழி அந்த பிரதிநிதித்துவ ஜனநாயக வெளியில் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து அதன் மூலம் கொழும்பை யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பதும் அதன் மூலம் கொழும்பில் யார் ஆளவேண்டும் என்று விரும்புகின்ற வெளித்தரப்புக்களோடு பேரத்தை வைத்துக்ககொள்வதும் தான் உடனடிக்கு முடியும். தமிழர் ராஜதந்திரம் என்பது 2009 ஆம் ஆண்டிற்கு பின்னரான புதிய தரிசனங்களோடு ஒரு புதிய தளத்தில் பிரவேசிக்க முடியும்.
இந்தியா எங்களிற்கு பகை. அமெரிக்காவும் பகை. உலகம் அரசுகளின் அரங்கம். இவை எங்களுக்கு உதவாது. எல்லோருமே எங்களை நசுக்கத்தான் பார்க்கிறார்கள். சரணடை அல்லது செத்துப்போ என்று இரண்டு தெரிவுதான் எங்களுக்கு முன் வைக்கின்றார்கள் என்று திரும்ப திரும்ப எதிர்மறையாக தொடர்நது தோல்விவாதம் கதைத்துக் கொண்டிருக்க முடியாது. இரண்டு தெரிவுதான் இருக்கிறது என்றால் அது எங்களுடைய இராஜதந்திர மரபின் பலவீனம். புதிய தெரிவுகளை உருவாக்க எங்கள் இராஜதந்திரம் தவறிவிட்டது என்று அர்த்தம். புதிய தெரிவுகளை உருவாக்குங்கள். உலகம் கொடியது என்று சொல்லிக் கொண்டிருந்தால் யாரோடு ஊடாட்டம் செய்யப் போகின்றீர்கள். யாரையும் காதலிக்க வேண்டாம் யாரையும் பகைக்கவும் வேண்டாம். எல்லோருடனும் உறவைப் பேணுங்கள். அதன்மூலம் எதிரியையும் எதிரியையும் மோத விடுங்கள். நண்பர்களின் தொகையை அதிகரியுங்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னோம். யாதும் ஊராக போய்விட்டோம். ஆனால் யாவரும் கேளீரா? இல்லை. எங்களுக்கு பகைவர் அதிகம். எனவே எல்லா உறவுகளையும் கைளாளும் எல்லைக்குள் வைத்திருப்போம். நாங்கள் ஒரு சிறிய மக்கள் கூட்டம். கையாளப்படக்கூடிய எல்லைக்குள் உறவுகளை வைத்திருப்போம். அதன்மூலம் ஒரு புதிய இராஜதந்திரத் தளத்தை உருவாக்குவோம். இருக்கின்ற கட்சி பிழைவிடுகின்றது என்று சொன்னால் புதிய சிந்தனை கொண்வர்கள் பூகோள அரசியல் தொடர்பிலும் புவி சார் அரசியல் தொடர்பிலும் பொருத்தமான அறிவுபூர்வமான விளக்கங்களைக் கொண்டவர்கள் ஒன்று திரளுங்கள். பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிக்குள் உங்கள் பலத்தை அதிகரியுங்கள். கொழும்பையும் பிராந்திய அரசியலையும் தீர்மானிக்கின்ற சக்திகளாக மாறுங்கள். ஏனென்றால் ஈழத்தமிழர்களின் புவிசார் அமைவிடம் தான் ஈழத்தமிழர்களின் மிகப்பெரிய பேரம்பேசும் பலம் ஆகும்.
தொகுப்பு - விக்னேஸ்வரி
நிமிர்வு தை 2019 இதழ்
Post a Comment