ஆசிரியர் பார்வை
ஒரே தேசமாக உணரவைத்த வெள்ளம்
வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒரு தேசமாக உணரவைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
எமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விழித்தெழுவதற்கு முன்னராகவே எம் இளைஞர்களும் சில அமைப்புக்களும் தன்னார்வமாக களத்தில் குதித்து விட்டிருந்தனர். சமூக வலைத்தளங்கள் தான் தாயகம்- புலம்பெயர் உறவுகளின் உதவிகளை பெருமளவில் ஒருங்கிணைத்து இருந்தன.
உடனடி வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்த இளைஞர்கள் பின்பு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கிய பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கியிருந்தார்கள். ஒப்பீட்டளவில் சிறப்பான ஒருங்கிணைப்பாக இருந்ததாக பலரும் பாராட்டி இருந்தனர்.
வெள்ளத்தின் பின் சுதாகரித்துக்கொண்டு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரச நிர்வாக இயந்திரங்களும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. இவற்றின் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் கிடைத்து விட்டன.
“தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை முற்போக்கான அம்சங்களின் அடிப்படையில் திரளாக்குவதுதான். வன்னி வெள்ளம் தமிழ்மக்களைத் தற்காலிகமாகவேனும் ஒரு திரளாக்கியிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிகளும் இதற்குக் காரணம். சமூகவலைத் தளங்களும், கைபேசிச் செயலிகளும் தேவைகளையும், உதவிகளையும் பெருமளவிற்கு ஒருங்கிணைத்துள்ளன”. என அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் விவரித்துள்ளார்.
அரசியல் ரீதியாக நாம் பிளவுபட்டு நின்றாலும் நாங்கள் இப்படியான கட்டங்களிலாவது ஒன்றிணைவோம் என்பதனை பகிரங்கமாக பறைசாற்றியிருக்கிறது வன்னி வெள்ளம்.
உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டாலும் நிவாரண முகாம்களில் இருந்து திரும்பிய மக்களுக்கு ஏக்கமே எஞ்சியிருந்தது. அவர்களின் பல வாழிடங்கள் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்து இருந்தன. அதனையும் தவிர நெற்பயிர்களும், கால்நடைகளும் பெருமளவில் அழிவை சந்தித்து இருந்தன. மொத்தத்தில் அவர்களின் வாழ்வாதாரமே அழிந்த நிலைமை தான் உள்ளது.
இனி தேவையானது அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதார உதவிகளே. இவற்றையும் படிப்படியாக செய்வதற்கு எம் இளைஞர்களும், சமூக அமைப்புக்களும், அரசும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்.
செ.கிரிசாந்-
நிமிர்வு தை 2019 இதழ்
Post a Comment