இனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்


அரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால் பார்க்க முடியும். அரசிற்காக நாட்டு மக்கள் மீது நேரடி அதிகாரத்தை பிரயோகிப்பது அரசாங்கமே.

ஒரு அரசாங்கத்திற்கு மூன்று பெரும் கடமைமைகள் உள்ளன. சட்டங்களை இயற்றுவது, இயற்றப்பட்ட சட்டங்களுக்கேற்ப நிர்வாகத்தை நடாத்துவது, அரசிற்கும் மக்களிற்குமான விவகாரங்களிலும், மக்களுக்கிடையிலான விவகாரங்களிலும் நீதியைச் செலுத்துவது என்பதே அம்மூன்று கடமைகளுமாகும்.

ஜனநாயக முறையில் இதற்காக சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பன உருவாக்கப்படுகின்றன. அதேவேளை சட்டத்துறை, நிர்வாகத்துறையில் உள்ளவர்களை மக்களே தேர்ந்தெடுத்தல் வேண்டும். காலத்திற்குக் காலம் தேர்ந்தெடுப்பவர்களை மதிப்பீடு செய்தல் வேண்டும் இதற்காக காலத்திற்குக் காலம் தேர்தல்களும் அவசியமாகின்றன.
அரசிற்கும் மக்களிற்குமிடையிலான உறவுகளில் மக்களின் உரிமைகளும் கடமைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவையெல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்கு விதிகள் தேவையாக உள்ளன. அரசியல் யாப்பு அதற்காகவே உருவாக்கப்படுகின்றது. இது காலத்திற்குக் காலம் செம்மைப்படுத்தப்படல் வேண்டும்.

இங்கு அரசியல் யாப்பு என்பதற்கு அரசொன்றின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பவற்றின் அமைப்பு, அதிகாரங்கள், அவற்றிற்கும் மக்களிற்குமிடையேயான தொடர்புகள், மக்களின் உரிமைகள் கடமைகள், தேர்தல் முறைகள், யாப்பு திருத்த முறைகள் என்பவற்றை தொகுத்துக்கூறும் ஆவணம் என வரைவிலக்கணம் கூறலாம்.
இந்த அரசியல் யாப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசியல் யாப்பு அறிஞர்களுக்கும், அரசியல் அறிஞர்களுக்குமிடையே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

அரசியல் யாப்பு அறிஞர்கள் யாப்புச்சட்டங்களுடன் தொடர்பான பிரதான சட்டக்கருத்துக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதன்படி அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும் தாபனங்களின் கட்டமைப்பு, ஒவ்வொரு தாபனத்தினதும் அதிகாரம், அதனை நடைமுறைப்படுத்தும் முறை, அதன் வரையறை,  தாபனங்களுக்கிடையிலான தொடர்பு, அரசதாபனங்களுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையும், யாப்புத்திருத்தப் பொறிமுறை  என்பன அடங்கியிருக்க வேண்டும் என கூறுகின்றனர். இது யாப்புறுதத்துவம் என அழைக்கப்படுகின்றது.

இதற்கு மாறாக அரசியல் அறிஞர்கள் யாப்பு ஆட்சி முறையோடு தொடர்பான அரசியல் கருத்துக்களுக்கும் மனித உரிமைகளுக்கும் பிரதான இடம் வழங்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதன்படி அரசு பின்பற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், பன்முக சமூகமாயின் அரசு நடு நிலையாளனாக செயற்படுவதற்கான வழிவகைகள், மக்களின் உரிமைகள், அவற்றினைப் பாதுகாப்பதற்கு வேண்டிய வழிவகைகள் என்பன உள்ளடக்கப்பட வேண்டுமெனக் கூறுகின்றனர். இது யாப்பு பற்றிய அரசியல், பொருளாதார, சமூகதத்துவம் எனவும் அழைக்கப்படுகின்றது.
நவீன அரசியல் யாப்புக்கள் பொதுவாக இவ்விரண்டு தத்துவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் அரசு பின்பற்றும் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை வழிகாட்டிக் கோட்பாடுகள் பக்கத்தில் அவை இருக்கின்றன.  பெரியளவிற்கு சட்டப்பெறுமதிகள் அவற்றிற்குக் கொடுப்பதில்லை.

இன்று பெரும்பான்மையான நாடுகள் பன்மைச் சமூகங்களாகக் கொண்டிருப்பதனால் அவற்றின் நலன்களைப் பேணுவதற்கான பொறிமுறைகளும் அதன் மூலம் அரசு நடுநிலையாக செயற்படுவதற்கான விதிமுறைகளும் முக்கிய பேசுபொருளாகின்றன.

அரசின் நடுநிலை இதன் மூலமே பேணுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. சமஸ்டிக் கோட்பாடுகள், கூட்டுச் சமஸ்டிக் கோட்பாடுகள் இது விடயத்தில் தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வேறுபாடுகள் மத்தியில் ஐக்கியத்தைப் பேணுவதற்கு இந்த ஆட்சிமுறைகள் பங்களிக்கும் எனக் கூறப்படுகின்றன. இங்கு கூட்டுச் சமஸ்டி ஆட்சிநாடுகளே மிகக் குறைவு, சமஸ்டி ஆட்சிநாடுகளே அதிகமாக உள்ளன.

உலகில் உள்ளசமஸ்டி ஆட்சிநாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல அந்தந்த நாடுகளிலுள்ள பல்சமூகப்பிரச்சினைகளின் கனதிற்கேற்பஅவை வேறுபடுகின்றன.
சுவிஸ்லாந்து, கனடா, இந்தியா, பெல்ஜியம், பொலினியச் சமஸ்டி முறைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். ஒரே அரசியல் சிந்தனை கூட உட்பிரிவுகளால் நாட்டிற்கு நாடு வேறுபட்டிருக்கலாம் என்பதை இவை அடையாளப்படுத்துகின்றன.

பொதுவாக சமஸ்டிமுறை என்பது அரசின் இறைமை அதிகாரங்கள் மத்தியஅரசும் மாநிலஅரசும் பங்கிட்டுக் கொள்ளும் முறையாகும். மாநிலங்கள் உருவாக்கப்படும் போது பல் சமூகங்களின் திரட்டுக்கேற்ப அவற்றிற்குரிய மாநிலங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் சமூகங்கள் தனியான நலன்களை தனியாகவும் கூட்டாகவும் பேணுகின்ற பொறிமுறை உருவாக்கப்படுகின்றது. அதிகாரங்கள் அரசியல் யாப்பின் மூலம் பிரிக்கப்படுவதாலும், மத்திக்கும் மாநிலங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் வரக்கூடிய சூழல் இருப்பதனாலும் இவற்றைத் தீர்ப்பதற்கு பக்கம் சாராத நீதித்துறை அவசியமாகும். இந்த நீதித்துறை சமஸ்டியில் இணைந்த தேசிய இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவையாக இருக்க வேண்டும்.

இனப்பிரச்சனைக்குத்  தீர்வுதொடர்பான சமஷ்டி ஆட்சிப் பொறிமுறையைப் பொறுத்தவரை கோட்பாட்டு ரீதியாகவும் சட்டரீதியாகவும் ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.  அதாவது கோட்பாட்டு ரீதியாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்கின்ற பொழுது அதனுடைய இறைமை, சுயநிர்ணயம், அதை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பது அவசியம்.
இதன்படி பார்க்கும் போது தேசிய இனம், இறைமை, சுயநிர்ணயம், சமஷ்டி என்பன கோட்பாட்டில் அடங்க வேண்டியதாக இருக்கின்றது. சட்டரீதியாகப் பார்கின்ற பொழுது நான்கு விடயங்கள் கவனத்தில் செலுத்த வேண்டியதாக இருக்கின்றது.  ஒன்று அந்த சமஷ்டியினுடைய அதிகார அலகு. அதிகார அலகைப் பொறுத்தவரை அந்த இனத்தினுடைய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அந்த அதிகார அலகு உருவாக்கப்படுதல் அவசியமானதாகும்.

சிலவேளைகளில் அதற்கு தொடர்ச்சியான நிலப்பரப்புக்கள் இல்லாமல் இருக்கலாம்.  தொடர்ச்சியான நிலப்பரப்புக்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களை தொடர்ச்சியற்ற வகையிலாவது இணைத்து அந்த அதிகார அலகுகளை உருவாக்குவது அவசியமானதாகும். இதற்கு உலகநாடுகளில் பல உதாரணங்கள் இருக்கின்றன.
குறிப்பாக பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை எடுத்தோமென்றால் அது ஒரு நிலத்தொடர்ச்சியற்ற பிரதேசமாக இருப்பதனைப் பார்க்கலாம். அங்கு காரைக்கால், பாண்டிச்சேரி என்பன தமிழ் நாட்டிலும் ஏனாம் என்பது ஆந்திராவிலும் மாஹி என்ற பிரதேசம் கேரளாவிலும் இருப்பதை நாங்கள் பார்க்கலாம்.  நிலத்தொடர்ச்சி இங்கு இல்லை என்பதற்காக அதிகார அலகு கொடுக்கக் கூடாதென்ற முடிவுக்கு வரக்கூடாது.
 
இரண்டாவது விடயம் அந்த தேசிய இனம் தங்களின் நலன்களை தாங்களே பார்க்கக் கூடிய சுயநிர்ணயமுடைய அதிகாரங்கள்; அவசியமாகும். இதில் எல்லா மாநிலங்களையும் இணைக்கின்ற பொழுது பொதுவான விடங்களைத் தவிர ஏனைய விடங்களை மாநிலங்களினுடைய அதிகாரங்களாக விட்டுவிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும்.
 சுவிஸ்லாந்தின் அரசியல் யாப்பு, கனடாவின் அரசியல் யாப்பு, பெல்ஜியம் அரசியல் யாப்பு போன்றவற்றில் இத்தகைய நிலைமை இருப்பதைக் காணலாம்.

மூன்றாவது விடயம் இங்கு சமஷ்டி ஆட்சி என்பது கூட்டும் பகிர்வும் என்ற தத்துவத்தை உள்ளடக்கியது.  மத்திய அரசில் தேசிய இனமாக பங்கு கொள்வற்கு அதிகாரம் தேசிய இனங்களுக்கு தேவையயாகவுள்ளது.  இதற்கான பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும்.
நான்காவது விடயம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பு இது மிக முக்கியமானதாகும்.  அதாவது அந்தந்த இனங்களினுடைய சம்மதம் இல்லாமல் அந்த இனங்களுக்கென பகிரப்பட்ட அதிகாரங்களை பறிக்கக்கூடாது என்ற நிலைமை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.
இந்த நான்கு விடயங்களும் உறுதியாக இருக்கின்ற போதுதான் ஒரு இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு சமஷ்டிப் பொறிமுறைக்குள்ளாலே ஒழுங்காக செயற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

சி.அ.யோதிலிங்கம்-
நிமிர்வு மாசி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.