நிலைமாறுகால நீதி?
 நிலைமாறுகால நீதி எனப்படுவது உலகசமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய அனைத்துலக நீதி.  அனைத்துலக நீதி என்பது அனைத்துல அரசியல் தான். அனைத்துலக அரசியல் என்பது  அனைத்துலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மற்றும் வர்த்தக நோக்கு நிலையில் இருந்து தீர்மானிக்கப்படும் ஒன்று. இப்படிப்பார்த்தால் அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கு வழங்கிய நீதிதான் நிலைமாறுகால நீதியாகும்.

நிலைமாறுகால நீதி என்பது ஒருநிலையிலிருந்து இன்னோர் நிலைக்கு மாறிச் செல்லும் போது முன்னைய நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுக்கொடுப்பது. முன்னைய நிலையென்று அவர்கள் கருதுவது கொடுங்கோல் ஆட்சியிருந்து நல்லாட்சி, சர்வதிகாரத்திருந்து ஜனநாயகம், போரிலிருந்து சமாதானம், சமூக ஸ்திரமின்மையில் இருந்து சமூக ஸ்திரம், அரசியல்ஸ்திரமின்மையில் இருந்து அரசியல்ஸ்திரம், கெட்டதிலிருந்து நல்லதுக்கு போகும் பொழுது இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அந்த கெட்டதினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் ஒரு பொறிமுறையே நிலைமாறுகால நீதியாகும்.  ஓரு மக்கள் கூட்டத்திற்கு கிடைக்கும்   நிலைமாறுகால நீதி அனைத்துலக அளவில் அம்மக்களின் பேரம் எப்படி இருக்கின்றது என்பதனைக் காட்டும்.

அந்த வகையில் இப்பொழுது தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகின்ற  நிலைமாறுகால நீதி அனைத்துலக அளவில் அவர்களின் பேரம் பலவீனமாக உள்ளதைக் காட்டுகிறது.  ஏனென்றால் ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கைத்தீவில் வந்திருக்கும் மைத்திரி, ரணில் அரசாங்கம் இதுவரையிலும் இருந்த அரசாங்கத்திற்கும் அதற்கு முன்பு இருந்த அரசாங்கத்தோடும் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அனைத்துலக கவர்ச்சி மிக்க அரசாங்கமாக காணப்படுகிறது. எனவே அவர்களுடைய பேரம் அதிகமாக இருக்கும். இந்த இடத்தில் தமிழ் மக்களுடைய பேரம் தர்க்கபூர்வமாக குறைய வேண்டிய நிலைமையாக உள்ளது.  அதிலும் ஆட்சிமாற்றத்தின் பங்காளிகளாக தமிழ் தலைமைகள் நிற்கின்ற நிலையில் அந்தப்பேரம் தமிழ் மக்களின் தலைமைக்கும் சேரவேண்டும். ஆனால் இங்கே  உள்ள நிலை அப்படியல்ல நாங்கள் கருவேப்பில்லை போல அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறோம்.

 நாங்கள் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு உதவி இருக்கிறோம். எங்களுடைய கேந்திர  முக்கியத்துவம் மிக்க வாக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.  ஆனால் எங்களுடைய பேரம் அதிகரிக்கவில்லை.  மாறாக  எதிர்தரப்பின் பேரத்தை கூட்டியிருக்கிறோம். இவ்வாறு அரசாங்கத்தின்  பேரம் அதிகரித்திருக்கும் ஒரு அனைத்துலக பின்னணிக்குள் தமிழ் மக்களுக்குத் தரப்பட்டது தான் இந்த நிலைமாறுகால நீதி.
  இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், இது உண்மையிலேயே நிலைமாறுகாலமா என்பது? இது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நிலைமாற்றம் அல்ல. தமிழ் மக்களைப்  பொறுத்தவரை மூலகாரணத்தில் மாற்றம் வரும்பொழுதே நிலைமாற்றம் வரும். போர் ஒரு விளைவு, போருக்குப்பின் மகிந்தவும் ஒரு விளைவு, மகிந்தவின் வெற்றிவாதம் ஓர் விளைவு, அதற்குப் பின் வந்த மைத்திரியின் ஆட்சியும் ஒரு விளைவு. இவற்றுள் முன்னைய விளைவுகளை இல்லாது செய்து விட்டு மூலகாரணம் இல்லையென்று அவர்கள் சொல்கின்றார்கள்.

விளைவுக்களுக்கிடையிலான மாற்றத்தையே நிலைமாற்றமென்று கூறுகின்றனர்.  உண்மையில் அது நிலைமாற்றமல்ல. தமிழ்  மக்களுக்கு நிலைமாற்றமென்பது மூலகாரண  மாற்றம். மூலகாரண  மாற்றம் என்பது  சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையில் வரவேண்டிய  மாற்றம். அதில் இன்னமும் மாற்றம் வரவில்லை. இலங்கைத்தீவின் அரச கட்டமைப்பில் மாற்றம் வரவில்லை. அப்படிப் பார்க்கையில் தமிழ் மக்களுக்கு இது நிலைமாறு  காலமேயில்லை.

இரண்டாவது, நிலைமாறுகாலமென்று வரும்பொழுது அவர்கள் அதை தமிழ் மக்களுக்கான ஒரு நீதியாக நினைக்கவில்லை. முழு இலங்கைத் தீவிற்குமான ஒரு நீதியாகவே  அதனைப் பார்கின்றனர். அதில் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைவு. ஐநாவின் தீர்மானத்தை  எடுத்துப்  பார்த்தால் அதில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை.  தமிழ்  மக்களுடைய  பிரச்சனைகளை அவர்கள் பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கின்றார்கள்.   இது ஏறக்குறைய இந்திய இலங்கையின் உடன்படிக்கையின் ஒரு வடிவம்தான்.

 ஐ.நா எமக்குத் தருகின்ற பிரதிகளின் படி அல்லது இங்கிருக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் தருகின்ற எழுத்துப்பிரதிகளின் படியும் அரசாங்கம் தருகின்ற எழுத்துப்பிரதிகளின் படியும் நிலைமாறு காலநீதியை நான்கு பெரும் தூண்கள் தாங்குகின்றன. ஒன்று உண்மையை வெளிப்படையாகப் பேசும் ஒரு நிலையினை ஏற்படுத்தல், இரண்டு நீதி நிலைநாட்டுதற்குரிய ஒரு பொறிமுறையை உருவாக்குதல், மூன்று இழப்பீட்டுக்கான ஒரு பொறிமுறை, நான்கு இந்தப் பிரச்சனைகளெல்லாம் ஏன் நடக்கிறதோ அந்த பிரச்சனைகள் மீள நடக்காமைக்கான ஒரு பொறிமுறை.   இந்த நிலைமாறு கால கட்டத்தின் நான்கு பெரும் தூண்களையும் அவர்கள் இலங்கைத்தீவில் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

 ராஜபக்ஷ தனது  காலத்தில் ஒரு கண் துடைப்பாக உண்மையைக் கண்டறியும் ஒரு நல்லிணக்க ஆணைக்குழுவினை  உருவாக்கினார். அதில் உண்மையை நீக்கி விட்டே அதனை  உருவாக்கினார். தென்னாபிரிக்காவில் உண்மை இருக்கிறது.  இலங்கையில் உண்மையில்லை.  மஹிந்த  உருவாக்கிய ஆணைக்குழுவை அவரே கிடப்பில் போட்டார்.  அதற்குப் பிறகு புதிய அரசாங்கம் மேற்கின் தத்துப்பிள்ளையானது.  மேற்கோடு சேர்ந்து ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தீர்மானத்தின் பிரகாரம் 25 பொறுப்புக்களை அரசாங்கம் ஏற்றுக்  கொண்டது. இந்த 25  பொறிமுறைகளுக்கூடாகவும் நிலைமாறுகால நீதியை இலங்கைத் தீவில் ஸ்தாபிக்கலாம் என்று ஐ.நா நம்புகின்றது.

அந்த நான்கு பெரும் தூண்களுக்குரிய ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்  என்றும்  அவற்றுக்குரிய பொறிமுறைகளும் அலுவலகங்களும்  உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவை வெற்றிகரமாக இயங்குவதற்கு தேவையான ஒரு சமூக, பொருளாதார, அரசியல் சூழலை ஏற்படுத்தக்  கூடிய விதத்தில் ஏனைய செயற்பாடுகள் அமைய  வேண்டும்  என்றும் மேற்படி பொறுப்புக்களில் கூறப்பட்டுள்ளது.   இதில் முக்கியமாக இந்த நான்கு பெரும் தூண்களுக்குமுரிய பொறிமுறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில், தேசிய மட்டத்தில் ஓர் கலந்தாய்வைச் செய்து ஓர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட  வேண்டும் என்றும் அதன் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.  இதற்கென்று  தேசிய  மட்ட  கலந்தாய்வுச்  செயலணி  ஒன்று  உருவாக்கப்பட்டது. இது பின்னர் வலய மற்றும் மாவட்ட, கீழ்மட்ட செயலணிகளை உருவாக்கியது. இது சாதாரண சனங்களோடு பேசி அவர்களிடம் இருந்து அபிப்பிராயங்களை பெற்றுக் கொண்டது. இவ்வாறு பெற்றுக் கொண்ட அறிக்கைகளின் பிரகாரம் கலந்தாய்வுச் செயலணியானது  அண்மையில்  அறிக்கையினை  வெளியிட்டது.  ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது.  இது ஏறக்குறைய மஹிந்த ராஜபக்ஷ ஜ.நாவை பேய்க்காட்ட உருவாக்கிய கற்றுக் கொண்ட பாடங்களுக்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அவரே நிராகரித்தது போலத் தான். அவர்கள் கண்துடைப்பாக ஒரு ஆணைக்குழுவை உருவாக்கினாலும் கூட ஒரு கட்டத்தில் உண்மை வெளியே வருகிறது. அப்படி உண்மை வெளிவரும் போது அவர்கள் தாங்கள் உருவாக்கிய குழந்தையை தங்கள் கையாலேயே குப்பைத்தொட்டியில் போடும் நிலை வருகிறது. இவ்வாறு அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை அதுவே நிறைவேற்றுவதில் ஓர் அடிப்படைப் பிரச்சினை உண்டு.

ஏற்கனவே குறிப்பிட்டபடி இலங்கையில் இப்போது இருப்பது நிலைமாறு காலம் அல்ல.  மூலகாரணம் மாறாமல் அப்படியே இருக்கிறது. இது அப்படியே இருக்கும் வரை இதனை நிலைமாறுகாலச் சூழல் என்று அழைக்க  முடியாது. அப்படிப் பார்த்தால் மூலகாரணம் அகற்றப்படாத அல்லது தவிர்க்கப்பட முடியாத ஒரு சூழல் இருக்கும் வரையிலும் ஏனைய விவகாரங்களையும் முன்னெடுக்க முடியாது. 'இந்த மூலகாரணத்தை மேற்சொன்ன நிலைமாறுகால நீதிச் செயன்முறைக்குள் எங்கே வைத்துப் பார்க்கலாம்' என்று ஒரு கத்தோலிக்க குருவானவர் மனித உரிமைகளுக்கான முன்னணி வழக்கறிஞரும,; தென்னாபிரிக்க மனித உரிமைகள் அறக்கட்டளையின் நிறைவேற்று இயக்குனருமான யஸ்மின் சூக்காவிடம் கேட்டிருக்கின்றார். அதற்கு அவர் மீளநிகழாமைக்குள் அதனை வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். சிங்கள பெருந்தேசியம், தமிழ்த் தேசியம், முஸ்லிம் தேசியம் என்பவற்றை மீளநிகழாமைக்குள் வைக்கலாம் என்று  அவர் சொல்ல வருகின்றார்.

 இது  தான்  மூலகாரணம்.   மூலகாரணத்தை  அதன்  முக்கியத்துவத்தை குறைத்து எல்லா  காரணங்களோடும் பத்தோடு பதினொன்றாக அங்கே முன்வைக்கின்றார்கள். மூலகாரணத்தை மாற்றக் கூடிய நான்காவது பெரும் தூணான மீள நிகழாமை  இலங்கைத் தீவில் ஏற்படுத்தப்படாத வரையிலும், ஏனைய தூண்களை நிறுவ முடியாது. அரசாங்கம் ஏற்றுக்கொண்ட 25 பொறுப்புக்களையும் முழுமையாக செயற்படுத்த முடியாது.  மூலகாரணம் அகற்றப்படாத ஒரு சூழலில் தான் ராஜபக்ச தான் கொண்டு வந்த விசாரணை  அறிக்கையை அவரே நிராகரித்தார்.

  அதே போல் இந்த அரசாங்கமும் தான் கொண்டு வந்த கலந்தாய்வுச் செயலணி அறிக்கையை ஏன் நிராகரிக்கிறது என்று பார்த்தால், அவ்வாறு நிராகரிக்காது விடின் அது இறுதியில் மூலகாரணத்தில் கை வைக்கும்.  இதனால் தான் தாங்கள் உருவாக்கிய கலந்தாய்வுச் செயலணி அறிக்கையை அமுல்படுத்த முடியாமல்  இருக்கின்றார்கள். செயலணி அறிக்கையின்படி படையினருக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று சொன்னால் அது தென்னிலங்கையில் வெற்றி வீரர்களாக கொண்டாடப்படுபவர்களை புனர்வாழ்வுக்கு உரியவர்களாக காட்டும். இது சிங்கள பெருந்தேசியத்தின் இதயத்தில் கை வைக்கும். வெற்றி வாதம் எனப்படுவது சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தின் ஆகப்பிந்திய வடிவம். வெற்றிவாதத்தில் கைவைக்கலாம் என்று சொன்னால், வெற்றி வீரர்களை விசாரணைக்கும் உட்படுத்தலாம் என்று பொருள். அது மூலகாரணத்தில் கை வைக்கும். எனவே அரசாங்கம் தான் கொண்டு வந்த கலந்தாய்வுச் செயலணி அறிக்கையை தானே நிராகரிக்கிறது.

இலங்கைத் தீவின் கள யதார்த்தத்தை பொறுத்தவரை   மூலகாரணம் அகற்றப்படாத ஒரு சூழ்நிலையில் நிலைமாறு காலம் இல்லை என்கிற படியால் மீளநிகழாமை என்ற அந்த பெருந்தூணைநிறுவுவது கடினம். அந்த  தூணில்லாமல்  ஏனைய  மூன்று  தூண்களிலும்  தான்  நிலைமாறுகாலம் என்ற அந்தக் கட்டடம் நிற்கப் போகின்றது. இது இலங்கைத் தீவின் நிலைமாறுகால செயற்பாடுகளில் இருக்கும் ஓர் அடிப்படையான பிரச்சினை.

மூல காரணத்தை அகற்றவில்லை என்றால் நிலைமாறுகால நீதியை செய்முறைப்படுத்த முடியாது.   அதனை முன்னெடுக்கவும் முடியாது. இதனால் அரசாங்கம் விசுவாசமின்றியே அதனைச் செய்யும். அதனை ஒவ்வொரு அமைச்சுக்களிடமும், அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் அல்லது தானே உருவாக்கிய அமைப்புக்களிடமும்  கொடுக்கும். இந்த அமைப்புக்களிடையே போதிய ஒத்துழைப்பு இருக்காது. ஒன்றுக்கொன்று முரணாக அவை செயற்படும். ஒட்டுமொத்த வரைபடமும், ஒட்டு மொத்த திட்டமும் இதில் இருக்காது. இதனைத் தான் கடந்தாண்டு ஐ.நா மனிதவுரிமைச் செயலாளர்  தன் வாய்மூல அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதிச் செய்முறையில் இருக்கக் கூடிய இந்த அடிப்படையான பலவீனத்தையும் வரையறையையும் விளங்கிக் கொண்டு  நிலைமாறுகால  நீதிச்  செய்முறையின்  ஒவ்வொரு  தூண்களையும் ஸ்தாபிப்பதற்கு உரிய சவால்களைப் பார்க்கலாம்.

முதலாவது  உண்மையை  வெளிக்கொண்டு  வருதல.; 'உண்மை வெளிப்படையாக பேசப்படுவது என்பது நீதி வழங்கப்படுதலின் ஒரு பகுதி.' ஆகவே, உண்மையை நாங்கள் வெளிப்படையாகப் பேசும் போது அது முன்பே சொன்னது போல் மூலகாரணத்தில் கை வைக்கும். காணாமல் போன பிள்ளையை யார் பிடித்தது என்று சொல்ல வரும் போதே உள்ளே இருந்த உண்மை வெளியே வந்துவிடும். ஆனால், அது தென்னிலங்கையில் வெற்றியாளர்களாக கொண்டாடப்படுபவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடும். இலங்கையில் உண்மையினை வெளிப்படையாகப் பேசும் ஒரு சூழல் இன்னும் வரவில்லை. 

 மன்னாரில் ஒரு சந்திப்பில் ஒரு தாய் கூறியதாவது, 'உண்மையாகச் சொல்லப்  போனால்  யாரால் எமக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வதே  எமக்குப் பாதுகாப்பு இல்லை.' இது தான் இலங்கைத் தீவின் உண்மை பேசும் சூழல்.  ஏனெனில் மூலகாரணம் மாறவில்லை. மூலகாரணத்தில் மாற்றம் வராத வரைக்கும் இந்நிலைமை தொடர்ந்தும் நீடிக்கும்.   உண்மையை ஏற்றுக்கொள்வதன் ஊடாகத் தான் நல்லிணக்கம் உருவாகலாம்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.  இந்த  உண்மை  மகிந்த உருவாக்கிய கற்றுக்கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவிலேயே சொல்லப்பட்டுள்ளது.  ஆணைக்குழுக்களின் இறுதிப் பகுதியில்  உள்ள ஆவணங்களை தொகுத்து விட்டாலே அது கற்றுக்கொண்ட பாடங்கள் அறிக்கைக்கு எதிராகப் போய் விடும். ஏனெனில் இலங்கைத்தீவில் காலம் காலமாக இனரீதியான பாகுபாடும் மோசமான நிலைமையும் காணப்பட்டது என்பதனை அந்த ஆவணங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.   அவை ஆணைக்குழுவின் கருத்தில்லை.  சாட்சியமளித்த மக்களின் கருத்து. உண்மையான கருத்து.  உண்மையை வெளிப்படையாகப் பேசப்பட முடியாத ஒரு சூழலுக்குள்ளும் சேர்க்கப்பட்ட அந்த ஆயிரக்கணக்கான  ஆவணங்களே ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் கைவிடக் காரணமாகும்.

இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டால் இராணுவத்தினரும் குற்றவாளிகளாக்கப்படுவார்கள். அது அரசாங்கத்திற்கும் கூடாது. வெளிநாடுகளுக்கும் கூடாது. ஏனெனில் சீனாவை தூர வைக்கிற அரசாங்கம் இப்பொழுது தேவை. உண்மை வெளிப்படையாகப் பேசும் நிலை இலங்கையில் உருவாகினால்  மேற்கின் நண்பனான இந்த அரசாங்கத்தின்  அடித்தளத்தை பலவீனப் படுத்தக்கூடிய ஒரு மாற்றமாக அது அமையும்.  உண்மை வெளிப்படையாக பேசப்படுவதை அரசாங்கமும் விரும்பாது, மகிந்தவும் விரும்பார், மேற்கு நாடுகளும் விரும்பாது.  தமிழ் மக்கள் மட்டும்தான் அதைக் கேட்கின்றனர்.  இது முதலாவது.

இரண்டாவது நீதிவிசாரணைப் பொறிமுறை இது ஏற்கனவே இலங்கையில் சர்ச்சைக்குள்ளாகி  உள்ளது. தமிழர்கள் கேட்டது பரிகார நீதி, தமிழர்கள் கேட்டது பன்னாட்டு விசாரணை. இலங்கை அரசாங்கமும், ஐநாவும் ஒத்துக்கொண்டது கலப்பு விசாரணை. அதிலேயும் இலங்கை அரசாங்கம் இப்போது சொல்லிக் கொண்டிருப்பது உள்நாட்டு  விசாரணை. ஆனால், தமிழ்மக்கள் உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை கொள்ள வேண்டுமாக இருந்தால் மூலகாரணம் அகற்றப்பட வேண்டும். மூலகாரணம் அப்படியே இருக்கும் என்று சொன்னால் அந்த மூலகாரணத்துக்கு கீழ்ப்படிவான நீதிபதிகள், அந்த மூல காரணத்தால்   வெற்றி வீரர்களாக கொண்டாடப்படுகின்ற சம்பந்தப்பட்ட படைத்தரப்பினர் தண்டிக்கப்படப்  போவதில்லை. அந்த மூலகாரணம் தான் நீதிபதிகளையும் நியமிக்கப் போகிறது. அந்த மூலகாரணம் தான் படைத்தரப்பையும் போற்றப் போகிறது. எனவே மூலகாரணம் அப்படியே இருக்கும் வரை உள்நாட்டு நீதி என்பது தமிழ்மக்களுக்கு  கிடைக்காது. இதன் சமீபத்தைய உதாரணங்கள் தான் குமாரபுரம் படுகொலை வழக்கு, ரவிராஜ் படுகொலை வழக்கு.

இங்கே வெளிநாட்டு நீதிபதிகள் வரும் போது மூலகாரணம் அகற்றப்படவில்லை என்கிற உண்மை வெளியே  வந்துவிடும்.  உண்மை பேசப்படுவதாக இருந்தால் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று முடிவாகி விடும்.  தென்னிலங்கையில் வெற்றியாளர்களாக கொண்டாடப்படுபவர்கள் வடக்கில் குற்றவாளியாகப் பார்க்கப்படும் நிலை வரும்.  இது ஆட்சியை பலவீனப்படுத்தும். அதனை  இந்த அரசாங்கமும் விரும்பாது.  மகிந்தாவும் விரும்பார், மேற்குநாடுகளும் விரும்பாது.  இது இரண்டாவது. அதுவும் இல்லை.

மூன்றாவது விடயம் இழப்பீடு.  இழப்பீடு என்கிற விடயத்தில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தலாம். ஏனெனில் தண்டனைக்கு பதில் நிவாரணம் என்கிற போக்கை வளர்த்து விடலாம். இந்த இழப்பீடு விடயத்தில் அவர்கள் குறிப்பிடத்தக்களவு முன்னேற முடியும். ஆனால் எங்களுடைய மக்கள் நினைப்பது என்னவென்றால் இழப்பீடும் வேண்டாம், நீதியும் வேண்டாம், விசாரணையும் வேண்டாம் மிகுதியாக உள்ள பிள்ளைகளை பாதுகாத்தால் போதும் என்கிற மனநிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். இயல்பின்மையை நாம் இயல்பாக ஏற்றுக்கொண்டு விட்டோம்.  ஓர் சிவில் உரிமையற்ற வாழ்க்கையை நாம் வாழப்பழகி விட்டோம். இயல்பின்மையை இயல்பாக ஏற்றுக் கொண்டுள்ள சூழலில் உண்மையும் வெளிவராது, நீதியும் கிடைக்காது.

இழப்பீடென்று வரும்போது மக்களுக்கு இழப்பீட்டின் முக்கியத்துவம் விளங்கவில்லை.  அதை விளங்கப்படுத்தாமல் இருப்பதற்காகவே அரசாங்கம் கணிசமான அளவு பங்களிப்புச் செய்கின்றது. இந்த விடயத்தை அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கொடுத்துள்ளது. நிலைமாறு காலம் என்பதே ஓர் அரசியல்.  அதை அரசியல் நீக்கம் செய்து அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கொடுத்ததே ஓர் அரசியல். இதை அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டமாக மாற்றுகின்றனர். அதற்கு கோடிக்கணக்கான காசு கொட்டப்படுகின்றது. எந்த மக்களுக்கு நீதி  வழங்கப்பட வேண்டுமோ அந்த மக்கள் பார்வையாளர்களாக்கப்பட்டுள்ளனர்.  ஒரு  தாய்க்கு  இழப்பீடு வழங்குவதாயின் அவரது கணவர் காணாமல் போனதிலிருந்து இன்று வரைக்கும் அவர் உழைத்திருந்தால் எவ்வளவு உழைத்திருப்பாரோ அதற்குரிய பணத்தினை வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். நிதி வழங்கப்பட்டதிலிருந்து ஓய்வூதியம் கொடுக்கப்படல் வேண்டும்.

இராணுவத்தின் தலையீட்டை நிறுத்தி சிவில் வாழ்க்கையை உறுதி செய்யவேண்டும்.  தமிழ் மக்கள் தங்களை மனிதராக, சிவிலியன்களாக வாழ என்னென்ன தேவையோ அவற்றை உறுதிப்படுத்த வேண்டும். யுத்தக் கூட்டுக்காயங்களிலிருந்து விடுபடல். யுத்தத்தை பற்றிய கடுமையான மனச்சிதைவுகளிலிருந்து  விடுபடல். அப்படிப் பார்க்கும் பொழுது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் தமிழ் மக்கள் முழுக்க முழுக்க ஒரு  இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கு எல்லாவற்றையும் உறுதிப்படுத்துவதுதான் இழப்பீடு.  இழப்பீடு என்பது பரந்தது. எவ்வாறு  ஒரு  பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு இழப்பீடில்லையோ  அது   போல  சில இpழப்புக்களுக்கு எந்த மருந்தும் போட்டுக் கட்டமுடியாது.

காணாமல் போனோர் அலுவலகம் இயங்கினால்  உண்மைகள் வெளிவரும்.  அந்த உண்மையை ஏற்றுக் கொண்டால்  அதற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டியிருக்கும்.  அவ்வாறு இழப்பீடு வழங்குவதால் திறைசேரியே காலியாகிவிடும்.  போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன்றைய காலத்திலும் பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கிக் கொண்டிருக்கின்ற பட்ஜெட்டுக்குள் இதற்கு  பட்ஜெட்டை எங்கே  கொண்டு போய் பொருத்துவது?

நான்காவது மீள நிகழாமை, மீள நிகழாமை என்ற அந்த தூணை நிறுவுவதே கடினம். இதனைத் தான் நாங்கள் திரும்ப திரும்ப கதைக்கின்றோம். தமிழ்த் தேசியமோ, முஸ்லிம் தேசியமோ விளைவுகள் தான். மூலகாரணம் சிங்கள பெருந்தேசியவாதம். இந்த சிறிய தீவுக்கு ஒரு பெரிய மதமும், பெரிய இனமும் உரிமை கோருவது  பெருந்தேசியவாதம். மூலகாரணத்தை அகற்றாமல் ஏனைய மூன்று பொறிமுறைகளும் சாத்தியப்படாது. அப்படி நான்காவது தூணை நிறுவ வேண்டும் என்று சொன்னால் நல்லிணக்கத்தை விகாரைகளில் இருந்து தொடங்க வேண்டும். இலங்கையில் இருக்கின்ற பௌத்த தேரர்கள் அனைவரும் உண்மையான பௌத்தர்களாக மாறினால் தான் அந்த நான்காவது தூணை நிறுவ முடியும். மூலகாரணத்தை அகற்ற வேண்டியது தென்னிலங்கை தான். அப்படிப் பார்த்தால் அந்த நான்காவது பெருந்தூணை நிறுவவே முடியாது.

சாராம்சமாகச் சொன்னால் நிலைமாறு கால நீதி என்பது அனைத்துலக சமூகம் தமிழ் மக்களுக்கு  வழங்கும் நீதி. யாருக்கு நீதி? வழக்கறிஞர்களுக்கா? அல்லது நீதவானுக்கா? இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் இந்த நீதி  என்பதை முதலில் உணர்த்துவோம்.  நிலை மாறுகாலம் என்பதற்கு எங்கள் மக்களிடம் சரியான விளக்கமில்லை. அதற்கு விளக்கம் கொடுப்பதற்கு அரசியல்வாதிகளால்  முடியவில்லை. எங்கள் ஊடகங்களும் அதனைச்  செய்யவில்லை. எல்லோருமாக அதனை அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கையளித்து விட்டனர்.  அவை என்ன செய்கின்றன? உயர்தர ஹோட்டல்களில் சந்திப்புக்களை நாடாத்துகின்றன. அங்கு வரும் வளவாளர்களில் பலருக்கு தாம் என்ன பேசுகிறோம் என்பது தெரியாது. சில இடங்களில் மக்களிடம் கொடுக்கப்படும் மொழிபெயர்ப்பானது மிக மோசமானதாக உள்ளது.   மொழிபெயர்ப்பை கொடுப்பவர் மக்களிடம் அது போய்ச் சேர வேண்டும் என உண்மையில் முடிவு செய்திருந்தால் அப்படிப்பட்ட ஒரு மொழிபெயர்ப்பை கொடுத்திருக்க முடியாது.

நிலைமறுகால கட்ட நீதியில் சாட்சிகள் தான் நடுநாயகம்.   சாட்சிகள் தான் கதாநாயகன், கதாநாயகி.  அவர்கள்தான் மையப்பாத்திரங்கள,;;;.  அந்த மையப்பாத்திரத்தை பார்வையாளராக மாற்றிவிட்டனர்.   இலங்கையில் நிலைமாறுகாலநீதி என்பது எந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமோ அந்த மக்களைப் பார்வையாளராக மாற்றியுள்ளது.  அந்த மக்களை Nபுழு க்கள் மாணாக்கராக பார்க்கின்றனர்.  இவர்களின் கூட்டங்களில்  அந்த மக்கள் மாணாக்கர்களாக இருந்துவிட்டு அவர்கள் வழங்குகின்ற உணவை சாப்பிட்டுவிட்டு பயணக் கொடுப்பனவையும் வாங்கிச் செல்கின்றனர்.  பொதுவாக பயணக் கொடுப்பனவு 500 ரூபாயாகவே உள்ளது.  இதனால் அங்கு ஆண்கள் வரமாட்டார்கள்.  ஏனென்றால் அவர்களுடைய உழைப்பு வீணாகிவிடும் என்று பெண்களை அனுப்பி விடுகின்றனர்.  இங்கு வருபவர்கள் வெறும் பார்வையாளர்களாகவே காணப்படுகின்றனர். பங்காளிகளாக இல்லை.

 நிலைமாறுகால நீதியை அரச சார்பற்ற  நிறுவனங்களிடம் ஒப்படைத்ததன் மூலம் எந்த மக்களுக்கு நீதி வேண்டுமோ அந்த மக்கள் பார்வையாளர்களாகவே மாற்றப்பட்டு இருக்கின்றார்கள்.  அவர்களுக்கேயான நீதியிலிருந்து அவர்கள் அன்னியமாக்கப்பட்டுள்ளாரகள்;. புங்காளிகளாயிருக்க வேண்டிய மக்கள் பார்வையாளர்களாக அல்லது செயலற்ற பயனாளிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.   கூட்டங்களுக்குச் சென்று விட்டு தங்களுக்குரிய நீதியையே தங்களுக்குரியதென்று தெரியாதிருக்கின்றார்கள்.  இதுவே அரசியல்.  அரசாங்கம் நிலைமாறுகாலத்தில் உண்மையாக இல்லை என்பது அனைத்துலக சமூகத்திற்கும் தெரியும்.  அனைத்துலக நீதி என்பது இதுதான் எங்களுக்கு.

எங்களுடைய பேரம் தாழ்ந்திருக்கிறது.  தமிழ் மக்களுடைய உரிமையை கதைத்தால் அரசாங்கம் கவிழ்ந்துவிடும்.  எனவே அனைத்துலக நீதி என்பது தமிழ் மக்களுக்கு பாதகமாகவே உள்ளது. நிலைமாறுகால நீதி என்பது தமிழ் மக்களுக்கே உரியது.  எந்த மக்களுக்கு நீதி வேண்டுமோ அந்த மக்கள் அந்நீதி பற்றி விழிப்பற்றிருக்கிறார்கள். இந்த விடயத்தை கையாள்வதற்கென்று எங்கள் கட்சிகள் யாரிடமும் ஒரு குழு உருவாக்கப்படவில்லை.  நிலைமாறுகால நீதி என்பது என்ன என்பது  ஊடகங்களுக்கும் தெரியாது. நிலைமாறுகால நீதியை ஒரு புரியாத பொருளாக வைத்திருக்கின்றனர்.  அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான செயற்திட்டமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.  அதனை அலுவலகங்களில் நடக்கும் வெறும் கோப்பு  வேலை (file work) ஆக  மாற்றியிருக்கின்றனர்.

 "சுருக்கமாகச் சொன்னால் இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதி என்பது ஒரு என்.ஜி.ஓ புரொஜெக்ட்"

நிலாந்தன்-
நிமிர்வு மாசி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.