ஈழத் தமிழ்ச் சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளின் அவசியம்




 பண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இதனுள் வாழ்க்கையின் கசல அம்சங்களும்  அடங்கும். அது சமூகவியல் நிலைப்பட்ட வாழ்வியற் களமாகும். அந்த வகையில் பண்பாட்டுச் செயற்பாட்டின் ஊடாக மக்களின் படைப்பாற்றலை, முழு ஆளுமைத் திறனை எவ்வாறு இனம் காணுதல் என்பதைஇக்கட்டுரை ஆராய்கிறது.

பண்பாடு இயக்கும்  தன்மை கொண்டது. புதியவற்றைக் கொள்ளும் போது இதில் இதில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எனவே புதிய உலக ஒழுங்கில் பண்பாட்டு செயற்பாட்டின் ஊடாக மக்களின் அக, புற வாழ்வில் எவ்வாறு முன்னேற்றம் ஏற்படுகின்றது என்பதனை நாம் சரியாக ஆராய வேண்டும்.

 2009 க்குப் பின்பு புதிய நிலை உருவாகி உள்ளது. இந்த நிலைமையில் எல்லோருக்குமாக என்ன செய்யப் போகிறோம் என்பதையும்,  எப்படி அந்த காலப்பகுதியை கையாளப் போகிறோம் என்பதையும் கணித்திருக்க வேண்டும்.   ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை, உண்மையில், போரின் பின்னரான காலப்பகுதியிலேயே மக்களின் மன நெருக்கடி அதிகரித்துள்ளது.  2009 இறுதிப்  போரில் ஏன் எல்லாமே தலைகீழாக மாறியது என்பது தொடர்பாக மக்களுக்கு பெரும் குழப்பம் உள்ளது. போரின் பின்னரான காலப்பகுதியல் ஒவ்வொருவரும் தன்னிச்சையாகவே செயற்படத் தொடங்கி விட்டார்கள்.  இளைஞர்கள்  துடிப்பானவர்கள். அவர்கள் தன்னிச்சையாக செயற்படுகிற சூழ்நிலை  உருவான போது சிலர் தாறுமாறாக செயற்படத்தொடங்கி விட்டனர். 'இளைஞர்கள் வழிதவறிப் போய்விட்டனர்' என்று....  பெரியவர்களும் 'தங்களை புரிந்து கொள்ளவில்லை'   என்று இளைஞர்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர். பண்பாட்டு நியமங்கள் தடையாக இருப்பதனால் இருதரப்பும் தங்களுக்கிடையில் கதைகளை, சம்பவங்களை பகிர்ந்து கொள்வதில்லை.

சமூகம் இளைஞர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பதனால் அவர்களால் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை உள்ளது. இப்படியான பண்பாட்டு நெருக்கடி நிலைமையில் பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம் எனும் ஒரு ஒழுங்கமைப்பூடாக பண்பாட்டு வெளி   ஒன்றை உருவாக்குகிறோம். அந்த வெளி ஒரு சுதந்திரமான வெளியாகவும்,  பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என்று எல்லோரும் கூடி பேசும் ஒரு இடமாகவும் உள்ளது.

அவர்கள் ஒன்றுகூடி புதிதாக உருவாகின்ற அந்த நிலைமைகள் தொடர்பாக தங்களுடைய எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதன் மூலமாக  பல புதிய விஷயங்களை கண்டு பிடிக்கின்றார்கள்.  எல்லாருக்குமாக சேர்ந்து செயற்படுமுகமாக நாங்கள் எங்களை  எப்படியாக எங்களை வளர்த்துக் கொள்ளலாம்? பழையன கழிந்து, புதியன புகுந்து உருவாக்குகின்ற புதிய பண்பாட்டில் முந்திய நல்ல அம்சங்களும், மாறி வரும்; காலத்திற்கேற்றதான புதிய அம்சங்களும் காணப்படும். பழைய மரபுகள் வழியூடாகவே அந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே, பால், வர்க்க, இன, மத, சாதி வேறுபாடுகள் போன்ற பழைய கருதுகோள்கள் மாற்றமடைந்து புதிய பண்பாடுகள் பிறக்கின்ளது. அங்கே, சமத்துவமும், வேகத்துடனும் செயற்படும் ஆற்றலும் உருவாகிறது.

 புதிய பண்பாட்டை  உருவாக்குதல், தங்களின் அடையாளத்தை மீள ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல், தங்களுக்கிடையில் ஒரு கூட்டை உருவாக்கிக் கொள்ளுவது, எல்லோரும் சேர்ந்து செயற்படுவது  போன்ற கூட்டுச் செயற்பாடுகளால் கிடைக்கும்; வலிமை காரணமாக அசாதரணமான செயல்களை செய்து முடித்தல் சாத்தியமாகிறது. நெருக்கடி மிகுந்த வழமையான பண்பாட்டில் களைத்துப் போய்விடும் மனிதர்களை இப்படியான பண்பாட்டு அரங்குகள் செயல்வலிமை உடையவர்கள்  அந்த நிலையில் இப்படியான பண்பாட்டு அரங்குகள் செயல்வலிமை உடையவர்களாக மாற்றும்.

 அண்மையில்  வேலணையில் இடம்பெற்ற பண்பாட்டு அரங்கில,; நீங்கள் இங்கு வந்து இப்படி ஒரு ஆற்றுகையை செய்வதே பெரிய விஷயம், நாங்கள் புதுப்பிக்கப் பட்டவர்களாக, மனதிலிருந்த பாரத்தை இறக்கி வைத்ததாக உணர்கிறோம் என வயதான அம்மா ஒருவர் கண்கலங்க கூறியதனை மறக்க முடியாதுள்ளது. இப்படியாக மக்களுக்கான ஒரு பண்படுத்திய புதிய பண்பாட்டை உருவாக்கும் போது தான் அதில் இருந்து கிடைக்கும் விளைச்சல், சிறப்பானதாக இருக்கும். இந்த தொழிற்பாட்டினூடாகவே எல்லாம் விளையும், ஆனால், நாங்கள் பண்பாட்டை ஒரு செழுமை இல்லாத, ஒடுக்குமுறைப் பண்பாடாக வைத்திருக்கும் போது, அது ஆளுக்காள் பிரச்சனையும், குரோதமும் உள்ள பண்பாடாக உருவெடுக்கும், அந்த நிலைமை ஆரோக்கியமானதல்ல.

  ஆரம்ப காலங்களில் எம் முன்னோர்கள் விவசாயம், மீன்பிடி ஆகியவை ஊடாக ஒருகுழுச்செயற்பாடாக தம்மை ஒருங்கிணைத்து வாழ்ந்து வந்தனர், ஒருவரின் தோட்டத்தில் வந்து அயலில் வசிப்பவர்கள் ஒன்று சேர்ந்து வேலை செய்வதும், பின்னர் அப்படியே ஒவ்வொருவரின் தோட்டத்துக்கும் சென்று வேலை செய்வதுடன் தாங்கள் பயிரிடும் மரக்கறி வகைகளையும் ஒருவருக்கொருவர் பண்டமாற்று அடிப்படையில் பகிர்ந்து ஒரு இயல்பான மற்றவர்களின் துயரத்தில் பங்கெடுக்கின்ற ஒரு கூட்டு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.  அதே போல் மீன்பிடியும் இருந்துள்ளது. 

 ஆனால், இப்போதுள்ள குடும்ப சூழல், வாழ்க்கை முறை ஆகியன மனிதர்களை தனித்தனி தீவாக்கியுள்ளது. பக்கத்து வீட்டுக்காரர்களை கூட அறிமுகமில்லாத தனி மரமாக்கியுள்ளது.  இந்தச் சூழலில் தான பண்பாட்டு செயற்பாடுகள் அவசியமாகின்றன.

வழமையான பண்பாட்டில் வராத, வழமையான பண்பாட்டில் எமது கைக்கும், மூளைக்கும் அகப்படாத விடயங்கள் அந்த வெளியில் அகப்படும். 'இதுவரை இப்படி யோசிக்கேல்ல, இப்ப தான் இப்படி யோசிக்கிறேன். இது நல்ல ஐடியாவா இருக்கு' என்று கதைப்பார்கள்.  இளைய தலைமுறையினர் கூட படிப்பிலும் சரி, தொழில் வாய்ப்பிலும் சரி, வாழ்க்கையிலும் சரி முக்கியமான முடிவுகளை எடுப்பதில் திண்டாடுவதனை கண்கூடாக காண்கிறோம்.  வழமையான பண்பாட்டில் ஒருவருக்கொருவர்  சரியாக மனம் விட்டு கதைத்து பேச முடியாத நிலை காணப்படுகின்றது. அதனை தீர்த்து வைக்கும் நோக்கில் குழுக்களை உருவாக்கி அவர்களுக்கிடையில் ஒரு இணைப்பை உருவாக்குவதன் ஊடாக அவர்களுக்கிடையே ஒரு தூண்டுதல் வருகிறது. அவர்கள் மனதில் பட்டதனை செய்து கொண்டு போவார்கள். அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் அடிமனதில் இருக்கின்ற பிரச்சினைகள் கூட வெளியே வரும். ஒவ்வொன்றுக்கும் என்ன செய்யலாம் என்கிற ஐடியா கூட அவர்களிடம் இருந்தே வருகிறது.

  எங்கள் தலைவர்களும், அதிகாரிகளும்  வழமையாக யோசிப்பதனை தான் இப்போதும் யோசிக்கிறார்கள். வெளிப்படுத்துகிறார்கள்.  புதிய எண்ணங்கள் அங்கே உருவாவதாக தெரியவில்லை. ஆகவே நாம் யோசிக்கும் இந்த வெளி  புதிதாக எண்ணங்கள் உருவாகின்ற ஒரு இடமாக இருக்க வேண்டும்.

  குறிப்பாக  பெண்களை எடுத்துக் கொண்டால் யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் வாரத்துக்கு ஒரு தடவை பொது இடத்தில் கூடி தங்களின் பிரச்சினைகள், முன்னற்றங்கள் தொடர்பில் தங்களுக்குள் கூடிக் கதைத்தனர். தாங்களாகவே ஒரு சுய முன்னேற்ற  வாய்ப்பினை கண்டுபிடிக்கும் சந்திப்பாக அது அமைந்திருந்தமையை நாம் கண்கூடாகவே பார்த்துள்ளோம். அதில் தென்மராட்சியில் இருந்து சுயதொழில் வாய்ப்பின் மூலம் தும்பிலிருந்து பொருட்கள் தயாரித்தல், அதே போல் தீவகத்தில் இருந்து நெசவு மூலம் துணிகள் தயாரித்தல், வலிகாமத்தில் களிமண்ணில் இருந்து களிமண் அலங்கார பொருட்கள் தயாரித்தல், யாழ்ப்பாணத்தில் பற்றிக் துணியில் இருந்து ஆடைகள் தயாரித்தல்   போன்ற தொழில்களை 20 பெண்கள்  ஒரு குழுவாகச் சேர்ந்து 100 பெண்களுக்கு மேல் இணைந்து மேற்படி உற்பத்திகளை வினை திறனாக மேற்கொண்டனர். அதில் முக்கியமானது அந்த சிறு தொழிலையும் முழு மன விருப்பத்தோடும் ஈடுபாட்டோடும், மேற்கொள்வதாகும். அதில் விருப்பத்தோடு ஈடுபட்டதால் அவர்களால் சாதிக்க முடிந்தது. வணிக ரீதியிலும் வெற்றி பெற முடிந்தது.

  கடந்த காலங்களில் சிங்கள பெருந்தேசியவாதத்தின் நோக்கம் தமிழின அழிப்பை மேற்கொள்வதாகவே இருந்தது.   தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்பு அவர்களின் இருப்பை தாங்கிப் பிடிக்கும் தூண்களான நிலம், மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை இல்லாதொழிப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. தமிழினத்தை சரியான திசையில் வழிப்படுத்தக் கூடிய தலைவர்களை வேண்டாம் என்கிறார்கள். 

 தங்களுக்கு இசைவானவர்களையே அருகில் வைத்திருக்க இலங்கை அரசும், சர்வதேசமும் விரும்புகிறது. எல்லாவற்றையும் சனங்களின் மனதில் இருந்து அகற்றும் வேலையை அவர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள்.   தமிழனின் முதுகெலும்பை முறித்துவிட்டு விட்டாலும் மீண்டும் துடித்தெழுவதனை இல்லாமல் செய்யும் கைங்கரியத்தை செய்து வருகிறார்கள். இந்த சூழலில் பண்பாட்டு செயற்பாடுகளை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப் போகின்றோம் என்பது தான் சவாலானது.

கலாநிதி க.சிதம்பரநாதன்-
நிமிர்வு மாசி 2017 இதழ் 
       

 பண்பாடு என்றால் என்ன?

 பண்பாடு என்பது வெறும் வசதியோ அடையாளமோ மட்டும் அல்ல. அவையெல்லாம் புறக்கூறுகள். பண்பாடு என்பது அகம் சார்ந்தது. அதை இழக்கும்போது நம் இழப்பது அடையாளத்தை மட்டும் அல்ல. நம்முடைய அடிப்படையான அகக்கட்டுமானத்தைத்தான்.

 நம் மனம் என்பதை கவனித்தால் அது எப்போதும் படிமங்கள் மற்றும் குறியீடுகள் வழியாகவே செயல்படுகிறதென்பதைக் காண்பீர்கள். அப்படிமங்கள் நமக்கு நாம் வாழும் சூழலில் இருந்து கிடைக்கின்றன. அச்சூழல் என்பது நம்முடைய பண்பாட்டால் உருவாக்கப்பட்டது. பல்லாயிரம் வருடங்களாக மெல்லமெல்ல உருவாகி வந்த ஒரு மாபெரும் கட்டுமானம் அது.  இந்த கட்டுமானம் நம் மொழியில் புறவயமாக உள்ளது. நம்மைச்சுற்றியிருக்கும் சடங்குகளில் உள்ளது. நம் பழக்கங்களில் உள்ளது. அவற்றில் இருந்து நம் ஆழ்மனம் அந்தப்படிமங்களை வாங்கியபடியே உள்ளது. அவற்றின் வழியாகவே நாம் சிந்திக்கிறோம். நாம் கற்பனை செய்கிறோம். கனவு காண்கிறோம்.

 நம்முடைய உணர்ச்சிகள் அந்தப் படிமங்களால்தான் உருவாக்கப்படுகின்றன. படிமங்கள் வழியாகவே வெளிவருகின்றன. படிமங்கள் இல்லாமல் நாம் பேசவே முடியாதென காண்பீர்கள். ஒரு சிறு விஷயத்தைக்கூட பண்பாடு சார்ந்த படிமம் இல்லாமல் நம்மால் பிறருக்கு தெரியப்படுத்த முடிவதில்லை. பண்பாடு என்பது நாம் அணிந்திருக்கும் ஆடை போன்றதல்ல. நாம் மீன்களாக நீந்தும் கடல் அது.

மொழி என்பது பண்பாட்டின் புற வடிவம். மொழியை இழக்கும்போது நீங்கள் இழப்பது ஒரு வகை ஊடகத்தை அல்ல. ஒரு மாபெரும் தொடர்ச்சியை. எங்குசென்றாலும் எப்படி வாழ்ந்தாலும் பல்லாயிரம் வருடத்து மரபின் நீட்சியாக உள்ள ஒரு பெரும் செல்வத்தை, நம் ஆழ்மனத்தை, அதில் உள்ள ஆழ்படிமங்களை, நாம் ஏன் இழக்க வேண்டும்?
எழுத்தாளர்-ஜெயமோகன்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.