சமூகவலைத்தளங்களும் தமிழ் தேசியமும்
காலைஎழுந்தவுடன் பல்விளக்கி கோப்பி குடிக்க முன்னரேயே கைத்தொலைபேசியில் பேஸ்புக்கைப் பார்ப்பது எமது பழக்கம். அப்படியொரு முறை பார்த்தபோது தமிழ்ப்பிரதேசத்தில் ஒரு கடை வாசலில் அமர்ந்திருந்த ஒரு முதியவர் மீது தண்ணீரை வீசியடித்து அவரைத் துரத்தும் கடை ஊழியரின் செயலை வீடியோவாகப் பிடித்து ஒருவர் பதிவேற்றியிருந்தார். நூற்றுக்கணக்கானோர் தமது கண்டனத்தைப் பதிவிட்டிருந்தனர். மறுநாள் ஒரு முதியோர் இல்லஊழியர்கள் அம்முதியவரை வண்டியில் ஏற்றி தமது இல்லத்துக்கு கொண்டு செல்லும் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகி ஆயிரக்கணக்கானவர்களின் பாராட்டுக்களையும் லைக்குகளையும் அள்ளியது. ஒரு தனிமனிதனுக்கு இழைக்கப்பட்டமனிதவுரிமை மீறலை எதிர்த்து சமூக ஆர்வலர்களின் செயற்பாட்டை வெளிக்கொணர்ந்த பேஸ்புக் பங்கீடு இது.
இவ்வாறாக பேஸ்புக் (முகநூல்), ட்விட்டர் (கீச்சகம்) போன்ற சமூக வலைத்தளங்களை ஆரோக்கியமாகவும் வினைத்திறனாகவும் சமூக மாற்றத்துக்காக பயன்படுத்துவது தொடர்பாக யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் உள்ள பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கடந்த 26.02.2017 அன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் சமூக வலைத்தள ஆர்வலர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பாகவே இப்பத்தி எழுதப்பட்டுள்ளது.
அரபு வசந்தத்தில் இருந்து தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் வரை சமூகவலைத்தள அணிதிரட்டல் மூலம் தான் சாத்தியமானது. இன்றைய உலக ஒழுங்கில் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடானது முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஈழத்துதமிழ் மக்களின் நிலையில் இருந்து நோக்கும் போது அது இன்னமும் மிக முக்கியமான வகிபாகத்தை பெறுகின்றமையை மறுக்க முடியாது.
2009 க்குப் பிறகான சூழலில் மரபு ரீதியான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை வைத்து நோக்கும் போது அவை தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு பெரிதாக கைகொடுக்கப் போவதில்லை என்கிற உண்மையினை பகிரங்கமாகவே உணரக் கூடியதாக இருந்தது. ஊடக நிறுவனங்களும், முதலாளிகளும் பொதுவாக ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இயங்கி வருவதை வெளிப்படையாகவே காணக் கூடியதாக உள்ளது. ஏறக்குறைய எல்லா ஊடகங்களும் அரசாங்கத்தின் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகின்றனவாக மாறி விட்டன. இங்கே உள்ள தமிழ் சிங்கள அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் பல அரச நிகழ்ச்சி நிரலின் ஏதோ ஒன்றை நிரப்பி வருகின்றன.
அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இந்த முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களும் இல்லையென்றால் தமிழ் மக்களின் நிலைமை இன்னும் படுமோசமான கட்டத்தை அடைந்திருக்கும் என்பதனை இப்போது ஊகிக்கக் கூடியதாக உள்ளது. உதாரணமாக 2015 இல் ஜனாதிபதியாக மைத்திரியை கொண்டு வந்தபோது அவரை ஒரு மீட்பராகத் தான் எல்லா ஊடகங்களும் காட்டின. ஆனால்,அங்கேஉள்ளசிக்கல்களை,நிதர்சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து சமூக வலைத்தளங்களில் எழுதி வெளியானதால் தான் இன்று அந்த பிம்பம் ஓரளவுக்கு அகற்றப்படும் சூழல் உருவானது.
இப்படியான சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களின் ஊடான கூட்டுச் செயற்பாடு என்பது அத்தியாவசியமானது. சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக இயங்குவதன் மூலம் ஒரே மனோபாவத்துடன் இயங்குகின்றவர்களை அடையாளம் காணக் கூடியதாக இருக்கும். முகம் தெரியாமலே கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவும், அதற்கு ஆதரவளிக்கவும் ,பிடித்திருந்தால் அதனைப் பகிரவும் முடியும். ஒரு பதிவுக்கு விருப்புகளும் (லைக்ஸ்), பகிர்வுகளும் (ஷேர்) என்று வரும் போது கிடைத்த அந்த ஆத்ம திருப்தி திரும்ப திரும்ப இந்த சமூகத்துக்காக எதையாவது எழுத வேண்டும் எனத் தூண்டுகிறது.
பத்திரிகை, சஞ்சிகைக்கு எழுதினால் கூட தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகம் வராது போகும். ஆனால், முகநூலில் இடும் பதிவுகளுக்கு உடனுக்குடன் பின்னூட்டம் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ வருவதனால் அதன் தொடர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாக அமைகின்றது.
சமூக வலைத்தளங்களை நியூ மீடியா (புதியஊடகம்) என்று அழைப்பார்கள். இன்று முகநூல்ப் பக்கம் வைத்திருக்கிற ஒவ்வொருவருமே ஒவ்வொ
ரு ஊடகத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். ஆங்கில மொழி ஆளுமையுள்ள பல நண்பர்கள் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள நண்பர்களுக்கும், சர்வதேச தளத்தில் வேற்று நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம். அவ்வாறு சில நண்பர்கள் பயன்படுத்தி வருகின்றமை வரவேற்புக்குரியது.
உலகில் எந்த மூலையில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் செய்தியாக, காணொளியாக முகநூல் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இவையும் தவிர ஓவியங்கள், படங்கள் வாயிலாகவும் எமது ஆதங்கங்களை பகிரமுடியும்.
இந்த முகநூலை நாங்கள் எவ்வாறு ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறோம் என நினைக்கிறோமோ அதைவிட புத்திசாலித்தனமாக அரசாங்கமும் அதனுடைய கட்டமைப்பும் பயன்படுத்தி வருகின்றன. அவர்களும் இதனை நன்கு திட்டமிட்டு பயன்படுத்துவதனாலும் சில பதிவுகளை பணம் கொடுத்து தரமுயர்த்துவதனூடாகவும் சில நிமிடங்களில் கோடிக் கணக்கானோரை சென்றடையும் சூழலும் காணப்படுகின்றது. இதனால் அவர்களின் நிகழ்ச்சிநிரல் தான் வெற்றிகரமாக அமையும் சூழலும் இன்று உருவாகி இருக்கின்றது.
நாங்கள் தனித்து தனித்து தான் இயங்கி வருகிறோம். ஆனால், ஏனைய சக்திகள் ஒரு வலைப்பாடாக இயங்கும் சூழல் உள்ளது. எங்களுக்கு எதிரான சக்திகள் முகநூலில் எம்மவர் போடுகின்ற கருத்துக்கு விதண்டா வாதங்களையும், கருத்து என்கிற பெயரில் எமக்கு ஒவ்வாத கருத்துக்களையும் தொடர்ச்சியாக விதைத்துக் கொண்டிருப்பார்கள்.
இதையெல்லாம் தாண்டி இங்கே தாக்குப் பிடித்து தொடர்ச்சியாக எழுதுவதென்பது கடினமானது. தனிப்பட்ட தாக்குதல்கள், தனி மனித அவதூறுகளுக்கு ஆளாகி மனமுடைந்து ஒதுங்கிப் போகும் சூழலும் முகநூல் பலருக்கு ஏற்படுத்தி இருக்கின்றதென்பதை மறுக்க முடியாது. திட்டமிட்டு அநாகரிகமான வார்த்தைகள், வன்முறை சொற்களை பாவிப்பதன் ஊடாக பதட்டமான தொடர்பாடல் முறைமை ஒன்றை உருவாக்கி ஆரோக்கியமான விஷயங்களை பகிர்பவர்களையும் ஒடுக்கப் பார்க்கும் சூழலும் இங்கே உள்ளது. ஆனாலும், இதையெல்லாம் தாண்டி கருத்துக்களை ஒன்றாக்கி நெருக்கமான உறவினை பேணக் கூடியதாக உள்ளமை தான் இதன் சிறப்பாகும்.
முகநூலை இன்றைய காலத்திலே ஆக்கபூர்வமாக பயன்படுத்துபவர்கள் குறைந்த விகிதத்திலேயும், ஆக்கபூர்வமில்லாமல் பயன்படுத்துபவர்கள் கூடிய அளவிலேயும் உள்ளது போலவும் இது எங்கேயோ பிழையாகப் போய்க் கொண்டிருக்கிற மாதிரியும் உள்ளது.
மேற்குலகத்தவர் முகநூலைப் பயன்படுத்துகிற மாதிரி நாங்களும் பயன்படுத்தி விட்டு நின்றுவிட முடியாது. அவர்கள் தாங்கள் ரசித்தவற்றையும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விடயங்களைப் பகிரவும் தான் கூடுதலாக முகநூலை பயன்படுத்துகின்றார்கள். நாங்கள் அவற்றையும் தாண்டி எமது சமூகத்தின் இன்றைய நிலைகருதி சமூகவலைத்தளத்தை ஒரு தேசிய இனமாகத் தான் பாவிக்க வேண்டும். நாங்கள் இடுகின்ற ஒவ்வொரு பதிவும் இந்த சமூகத்தின் பிரதிநிதியாக, அவர்களை கூட்டி அரவணைத்து செல்கின்ற விதத்தில் அல்லது நாங்களும் சேர்ந்து ஒன்றாக செல்கின்ற மாதிரி தான் அமைய வேண்டும். இல்லாவிட்டால் நாங்களும் முன்னேற முடியாது. இந்த சமூகமும் முன்னேற முடியாது.
ஒவ்வொரு தனிநபரின் வளர்ச்சியும் ஆளுமையும், ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சியில் தங்கியுள்ளது. நாங்கள் ஒரு உரிமையற்ற கூட்டு வாழ்க்கை அற்ற சமூகமாக தான் தொடர்ந்து வாழப்போகின்றோமா? வெளிநாடுகளிலும் நாம் ஒரு கூட்டாக இல்லை, இங்கேயும் ஒரு கூட்டாக இல்லை. இப்படியே இருந்து இறுதியில் என்னத்தை சாதிக்கப் போகிறோம்.
நாங்கள் முகநூலை சரியாக பயன்படுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு கூட்டமாக சமூகத்துக்கு பயன்படும் விதத்தில் வினைத்திறனுடன் பயன்படுத்த முன் வரவேண்டும்.
சமூக வலைத்தளங்களுக்கும் பண்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஏனெனில், எங்களுடைய பண்பாடு சுதந்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில் சமூக வலைத்தளங்களில் பொது வெளியில் இயங்குகின்றவர்களின் கருத்துக்கள் எங்களின் சரியான நிலைப்பாடுகளை சார்ந்து இருக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களை ஆரோக்கியம், ஆரோக்கியமில்லாமல் பயன்படுத்தல் என்கிற விடயம் உண்மையில் அந்தந்த நபர்களின் குடும்பம், சமூகத்தில் இருந்து தான் வருகிறது. இந்த பின்புலம் தான் பண்பாடு. பண்பாடு என்றால் கலாச்சாரம் மட்டுமல்ல, அவர்களின் உளவியல் பிரச்சினையும், மனஅழுத்தம் மனவிரக்தி இயல்புகளும் சேர்ந்து கொள்கிறது. முகநூலை சரியான முறையில் பயன்படுத்தாமல் தீயவழியில் பயன்படுத்தும் ஒருவரை பார்த்தால் அவரின் குடும்பம், சூழல், வளர்க்கப்பட்ட விதம், நண்பர்கள் என்று பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. பண்பாடானது ஆரோக்கியமாகவும் செழுமையாகவும் இருக்கும் என்றால் இவற்றை தவிர்க்க முடியும்.
முகநூலை வினைத்திறனாக பயன்படுத்துதல் என்பதில் மொழி ஆளுமை முக்கிய பங்கை வகிக்கிறது. பண்பாடான தொடர்பாடல் முறைமை ஒன்று எங்களுக்கு தேவையாக உள்ளது. குறிப்பாக முகநூலின் தொழிநுட்பங்களையும், அதன் பொறிமுறைகளை தெளிவாக நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு இனத்தை அழிக்க வைக்க அந்த மக்களுக்கிடையே இருக்கிற தொடர்பாடலை பிழைக்க வைத்தால் போதுமானது. அதற்கான திட்டங்களை எமக்கு எதிரான சக்திகள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன.
ஆகவே ஒரே நோக்கத்துக்காக செயற்படுபவர்கள் முகநூலில் தனித்து தனித்து இயங்கினால் மட்டும் போதாது. இயன்றவரை சந்திக்கவேண்டும். பல்வேறுவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும்.
ஆகவே, சமூகவலைத்தளங்களை நாங்கள் ஆரோக்கியமாகவும், வினைத்திறனாகவும் பயன்படுத்துவதும், அதற்குள்ளால் நாங்கள் ஒரு தேசிய இனம் என்கிற விடயம் அடிக்கடி வலியுறுத்தப்படுவதும், பல்வேறு வகைகளில் நிறுவுவப்படுவதும் அவசியமானதாகும்.
ஞானதாஸ் காசிநாதர்-
மட்டக்களப்பு
நிமிர்வு பங்குனி 2017 இதழ்
Post a Comment