ஆசிரியர் பார்வை
தமிழர்தாயகம் தற்போது
தன்னெழுச்சியான மக்கள் போராட்டகளங்களாகவே மாறிப் போய்விட்டது. காணாமல்ஆக்கப்பட்டஉறவுகளின் போராட்டம், நிலமீட்புபோராட்டம், வேலைவாய்ப்பு கோரிபோராட்டம் என பன்முகதளங்களில்
தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக நிலமீட்பு
போராட்டத்தில் பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றியளித்துள்ளது. கேப்பாபிலவு மக்களின் போராட்டம் தொடர்ந்து
வருகிறது. இந்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களில்
மக்கள் பிரதிநிதிகள் எனப்படுபவர்கள் ஒவ்வொருவராக சென்று தான் ஆதரவு வழங்கி வருகின்றனர். மக்கள் கூட்டாக போராடுகிறார்கள்.ஆனால், எம் தமிழ் அரசியல்
கட்சிதலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ
திரளாக சென்று அந்த மக்களின் போராட்டங்களில் பங்கேற்க முன்வரவில்லை என்பது தான் வேதனையானது
."பச்சைத் தண்ணியை குடிச்சிட்டு படுத்தாலும்
சொந்த நிலத்தில நிம்மதியாக நித்திரை கொள்ள வேணும்" என்கிற மக்களின் பேரார்வமும், தங்களின் அடுத்த
சந்ததி ஆவது சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வைக்க வேண்டும் என்கிற ஏக்கமும் தான் அந்த
மக்களை தொடர்ச்சியாக போராட வைக்கிறது. இவ்வாறான ஜனநாயக ரீதியிலான தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள்
வெற்றி பெற அனைவரும் கூட்டாக ஆதரவு தரவேண்டும்.
நிமிர்வு முதலாவது
இதழ் வெளியானதும் பல்வேறு விதமான விமர்சனங்கள், ஆரோக்கியமான கருத்துக்களை உள்வாங்க கூடியதாக இருந்தது. அதனை சிரமேற்கொண்டு எமது பயணம் தொடரும். மகுட வாசகத்தை போல் ஆராய்ந்து அறிவை பரப்புதலே
எம் பணியாக இருக்கும்.
எம் மக்களிடம் பங்கேற்பு
ஜனநாயகத்தை ஊக்குவிப்பதற்கு அரசியல் தெளிவுள்ள மக்களாக எம் மக்களைக் கொண்டுவர நிமிர்வு
நிச்சயம் முயலும். மாறி வரும் புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ப புதியவர்களின்
எழுத்துக்களை உள்வாங்கி இதழுக்கு இளரத்தம் பாய்ச்ச முயற்சித்து வருகிறோம். இந்த இதழில் புதியவர்களின் எழுத்துக்களை ஓரளவு உள்வாங்க முயற்சித்தாலும் வரும் இதழ்களில் நிச்சயம்
இளையவர்கள் மீதான எங்கள் துரத்தல்கள் தொடரும்.
வாசகர்களாகிய உங்களின்
உற்சாகத்துடன்நிமிர்வோம்.
செ.கிரிசாந்-
நிமிர்வு பங்குனி 2017 இதழ்
Post a Comment