கட்டுக்கரை: வெளிப்படுத்தப்படும் வரலாறு





இராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் எமது அகழ்வாய்வுகளை மேற்கொண்டோம்.

 இது மன்னார் மாவட்டத்தில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து அண்ணளவாக 14.74மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்குருவில் பகுதி ஆN-33 எனும் இலக்கம் கொண்ட பாலப்பெருமாள் கட்டு கிராமசேவகர் பிரிவினுள் உள்ளடங்கும் ஐந்து சிறுகிராமங்களில் ஒன்று. இது மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகும்.


மன்னார் மாதோட்ட கட்டுக்கரை குளத்தை அண்மித்த குருவில் வான் பகுதியில் பண்டைய கால தொல்பொருள் எச்சங்கள் உள்ளதாக மன்னாரை பூர்வீகமாகக் கொண்ட டேவிட் ஆசிரியர் 2017 பங்குனி மாதமளவில் ஒரு தகவலை வெளியிட்டார். யாழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொல்லியல் துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவன் கிருஷா ந்தன் ஊடாக இத்தகவலை வெளியிட்டார்.  அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்களால் இந்த அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.


1400 வருடங்களுக்கு முன்னர் மக்கள் வசித்தற்கான அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக யாழ்பல்கலைக்கழகப் பேராசிரியர் புஸ்பரட்ணம் கூறுகிறார்.

இந்த அகழ்வாராச்சியில் இரண்டு விதமான குடியிருப்புக்கள் இருந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஒன்று கி.பி 4ம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கின்றது. இதற்கான தொன்மைச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. பெரும்பாலும் குளத்துக்கு உள்ளேயும், நாங்கள் ஆய்வு செய்த இடத்திற்கு அப்பாலும் இந்தச் சான்றுகளுக்கான அடையாளப் பொருட்கள் காணப்படுகின்றன என்றார் பேராசியர் புஸ்பரட்ணம்.



மூன்று மீற்றர் நீள அகலம் கொண்ட மூன்று குழிகளை அகழ்ந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது ஏராளமான தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மட்பாண்டங்கள், கல்மணிகள், நாணயங்கள், சுடுமண் உருவங்கள், ஆயுதக்கருவிகள், சிலைகள், கைவளையல் துண்டுகள், யானையின் கால்கள், மாட்டுக்கொம்புகள், நீர்த்தாங்கிகள், நாகஉருவச்சிலைகள், ஓட்டுத்துண்டுகள், கற்கருவிகள், கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள், சங்குவளையல்கள், 75ற்கு மேற்பட்ட யானைத்தந்தங்கள், குதிரை நந்தா அகல்விளக்குகள், குறியீடுகள், கலசங்கள், சிறுகுடம் என்பவை கண்டுபிடிக்கப்பட்டன.


பல்லினப்பண்பாடு கொண்ட இலங்கை வரலாற்றில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிட்ட ஓர் இனம் அல்லது குறிப்பிட்ட ஒரு மொழிக்குரிய மக்கள் மட்டும் பண்டைய காலத்தில் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் இதனை மாற்றியமைத்த வரலாற்றுச்சிறப்பை இத்தொல்லியல் ஆய்வு கொண்டுள்ளது என்றே கூறவேண்டியுள்ளது.

இன்னுமோர் குடியிருப்புச் சான்றாக இங்கு பெருங்கற்காலப் பண்பாடு நிலவியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனால் இப்பண்பாட்டின் தோற்ற காலத்தைப் பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புபடுத்தி பார்ப்பதற்கு இடமுண்டு. கட்டுக்கரைத் தொல்லியல் மேலாய்வில்  தென்னிந்தியாவிலும், சிறப்பாகத் தென்தமிழகத்திலும், ஈழத்திலும் நாகரிக உருவாக்கத்திற்கு வித்திட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புடைய தொல்லியல் சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பண்பாட்டில் குளம், வான்பரப்பு, குடியிருப்பு, இடுகாடு என்பவை ஒன்றிணைந்து இருப்பது முக்கிய அம்சமாகும்.



இப்பண்பாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டவை எனக் கருதக்கூடிய கல்மணிகள், கல்லினால் வடிவமைக்கப்பட்ட காப்புகள், சங்கு வளையல்கள் என்பனவும் இங்கிருந்து அதிகளவு கிடைத்துள்ளன.

இப்பொருள்களுடன் இவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட கற்கள், கண்ணாடிகள், சங்குகள், மட்பாண்ட அச்சுகள், இரும்புருக்கு உலைகள் என்பனவும் கிடைத்துள்ளன.



இவற்றை பேராசியர் இரகுபதி தமிழக தொல்லியல் அறிஞர்களான இராசன், செல்வகுமார், இராசவேலு முதலானோர் ஆராய்ந்துள்ளனர்.  பண்டைய காலத்திலேயே கட்டுக்கரைப் பிரதேசத்தில் இரும்புருக்கு, கல்மணிகள், கண்ணாடிப்பொருட்கள், மட்பாண்டங்கள் என்பவற்றை உற்பத்தி செய்யும் சிறுதொழில் கூடங்கள் இருந்ததற்கான முக்கிய ஆதாரங்கள் இவை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கட்டுக்கரையில் வாழந்த மக்கள் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அயல் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கு நம்பகமான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் இருந்து கட்டுக்கரை மக்கள் தொழில்நுட்பத் திறனும், நாகரிக முன்னேற்றமும் கொண்ட மக்களாக வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் முகமாக பிறநாட்டு நாணயங்கள், இறக்குமதி செய்யப்பட்ட மட்பாண்டங்கள், கண்ணாடிப் பொருட்கள் என்பவை காணப்படுகிறன.

தமிழரின் பூர்வீக வரலாறும் பண்பாடுகளும் தொல்லியல் அகழ்வாய்வுகளால் வெளிக்கிளம்பும் என்பதற்கு கட்டுக்கரைப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கட்டுக்கரை தொல்லியல் சின்னங்கள் உணர்த்தும் சமயநிலை பற்றி பார்க்கும் போது அவ்விடம் ஆலயம் அல்லது சமய சடங்குகள் இடம்பெற்ற இடமாக இருக்கலாம் என சிந்திக்க வைக்கிறது. சுடுமண் சிற்பங்கள், சிலைகள், மணிகள், அகல்விளக்குகள், தீபங்கள் சமயச் சின்னங்கள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட சுடுமண் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஐயனார் தெய்வத்தினை இங்குள்ள மக்கள் முக்கிய தெய்வமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள். ஏனைய தெய்வங்களை வழிபட்டு வந்த மக்கள் தமது பொருளாதார வளம், பாதுகாப்பு என்பவற்றை வேண்டி ஐயனாரை வழிபட்டுள்ளார்கள் எனகருத இடமுண்டு.  அவர்கள் தமது குலதெய்வமான சிவன், அம்மன், முருகன், விநாயகர் முதலான தெய்வ உருவங்களை மண்ணிலே செய்து காணிக்கையாக அவ்விடத்தில் வழங்கியிருக்கலாம். அல்லது அவ்விடத்தில் வைத்தும் வழிபட்டிருக்கலாம் எனக்கருத இடமுண்டு. இதற்கு இங்குக ண்டுபிடிக்கப்பட்ட சிவன் வடிவங்கள், நந்தி, நந்தியின் பாகங்கள், முத்தலைச் சூலங்கள், பிறைச்சந்திரன் ஆதாரங்களாக உள்ளன. வேல் மற்றும் மயில் சின்னங்கள் முருகனை நினைவுபடுத்துகின்றன.

நாகவடிவங்கள் இங்கு நாக வழிபாடு இருந்திருக்கலாம் என்பதனைக் காட்டுகின்றன. தொல்லியல் அகழ்வாய்வின் மூலம் கிடைத்த தொல்பொருட்சான்றுகள் புதைந்துபோன தமிழரின் வரலாற்றை உலகத்திற்கு பறைசாற்றுகின்றன. இது இன்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை தெட்டத் தெளிவாக உணர்த்துகிறது. தமிழர்களை வந்தேறு குடிகளாக பார்க்கின்ற கருத்தியலுக்கு இது பெரும் சவால் விடுத்துள்ளது.

திருமதி சுயன் விஜயதர்சினி
உதவிவிரிவுரையாளர்
தொல்லியல் துறை
யாழ் பல்கலைக்கழகம்
நிமிர்வு மாசி  2018 இதழ்-

2 comments:

  1. இங்கே கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் பாகங்கள் இப்போது எங்கே வைக்கப்பட்டுள்ளது பார்வையிடலாமா?

    ReplyDelete
  2. இந்த நாகரீகம் 38,000 ஆண்டுகளுக்கு முன் நுண்கற்கால நாகரிகமாக இருந்துள்ளது, பின்னர் 4000,3000 ஆண்டுகளுக்கு முன் பொருங்கற்கால ஈழத்தமிழர் நாகரிகம் இருந்துள்ளது

    ReplyDelete

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.