அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அரசியல் நிலை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயற்கை வளமும், எழில் கொஞ்சும் இடங்களையும் கொண்டு அமைந்ததுதான் அம்பாறை மாவட்டம். நீண்ட காலங்கள் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டமானது 1961 இல் துண்டாடப்பட்டு தற்போதைய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சனத்தொகை அடிப்படையில் முஸ்லிம்கள் 44 வீதமும், சிங்களவர்கள் 37.5 வீதமும், தமிழர்கள் 18.3 வீதமும் ஏனையோர் 0.2 வீதமாகவும் உள்ளனர். அம்பாறை மாவட்டமானது கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 1978 இல் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தத்தின்படி திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அம்பாறை மாவட்ட தமிழர்கள் காலாகாலமாக வாக்களிக்கும்போது பெரும்பாலும் தமிழ்க் கட்சிகளுக்கே வாக்களிப்பர். 2001 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அக்கட்சிக்கே வாக்களித்து வந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களாயினும் சரி, மாகாணசபை உறுப்பினர்களாயினும் சரி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாயினும் சரி அவர்களெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தே தெரிவுசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தின் ஏக பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பே அண்மைக்காலமாக காணப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் முடிவுகளை அலசி ஆராயும் போது அம்பாறை மாவட்ட தமிழர்களின் அரசியல் செல்நெறி வேறு விதமாக திசை மாறுவதைக் காணலாம்.

அம்பாறை மாவட்டத்தின் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர் தொகை 500573 ஆகும். அதில் சுமார் 89000 தமிழ் வாக்காளர்களாவர். இங்கு மொத்தம் 20 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன. அவற்றுள் கல்முனை மாநகர சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச சபை, ஆலையடிவேம்புபிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எனும் 7 உள்ளூராட்சி சபைகளும் தமிழ்ப் பிரதேச சபைகள். அதிலும் நாவிதன்வெளி, திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச சபைகள் தனித் தமிழ்ப் பிரதேச சபைகளாகும். ஏனையவை தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட சபைகளாகும்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் கல்முனையில் 79 வீதமும், நாவிதன் வெளியில் 75 வீதமும், திருக்கோவிலில் 70 வீதமும், காரைதீவில் 85 வீதமும், ஆலையடிவேம்பில் 67 வீதமும், பொத்துவிலில் 75 வீதமும், சம்மாந்துறையில் 78 வீதமும் வாக்களித்துள்ளனர். எனவே அம்பாறை மாவட்ட தமிழர்களின் சராசரி வாக்களிப்பு 76 வீதமாகும். ஆலையடி வேம்பில் வாக்களிப்பு வீதம் குறைந்தமைக்கு காரணம் அங்கு தமிழரசுக்கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையாக இருக்கலாம். ஏனெனில் அக்கட்சியின் நிலையான வாக்காளர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள். மொத்தமாக 1.5 வீத தமிழ் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட வாக்கு வீதம் ஆலையடிவேம்பில் கூடுதலாகவும், காரைதீவில் குறைவாகவும் காணப்படுகின்றது.

இந்த தமிழ் உள்ளூராட்சி சபைகளுக்காக எல்லாமாக 69 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கட்சிவாரியாகப் பார்ப்போமாயின் இலங்கைத் தமிழரசுக் கட்சி 26 உறுப்பினர்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 10 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி 11 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 09 உறுப்பினர்களையும், தமிழ் சுயேச்சைக் குழுக்கள் 07 உறுப்பினர்களையும், அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் 03 உறுப்பினர்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 02 உறுப்பினரையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 01 உறுப்பினரையும், பெற்றுக் கொண்டுள்ளன. தமிழ் மக்கள் விதலைப் புலிகள் கட்சி ஆசனம் எதனையும் பெறவில்லை.

இதுவரை காலமும் அம்பாறை மாவட்ட தமிழ் உள்ளூராட்சி சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பெரும்பாலான உறுப்பினர்களைப் பெற்றதுடன் பல சபைகளில் தனித்து அக்கட்சியே ஆட்சியும் அமைத்தது. ஆனால் இத்தேர்தலில் அக் கட்சி 69 உறுப்பினர்களில் 26 உறுப்பினரையே பெற்றுள்ளது. இது வெறும் 37.6 வீத உறுப்புரிமையாகும். அத்துடன் எந்தவொரு சபையிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு அக்கட்சி பின் தள்ளப்பட்டுள்ளது. இதேநேரம் இக்கட்சியின் மேலிருந்த அதிருப்தியால் த.வி.கூட்டணி 10 ஆசனங்களையும், சுயேச்சைக் குழுக்கள் 07 ஆசனங்களையும், அ.இ.த.காங்கிரஸ் 03 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி  02 ஆசனங்களையும் பெற்றுள்ளன. பௌத்த சிங்கள தேசியக் கட்சிகள் இரண்டும் 20 ஆசனங்களைப் பெற்றுள்ளன. அக்கரைப்பற்றிலும், சம்மாந்துறையிலும் த.தே.கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையும் இக்கட்சியின் பின்னடைவுக்கு இன்னொரு காரணமாகும்.

தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக புதிய பாதையில் செல்ல முயற்சிப்பதைக் காணலாம். இங்கு தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மூவின மக்கள் வாழும் இம்மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏனைய இனங்களின் நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் பூர்வீககாணிகள் பறிபோதல், அரசியல் ரீதியான அழுத்தங்கள், அரசஅலுவலகங்களில் பாராபட்சங்கள், மதமாற்றப் பிரச்சனைகள் போன்ற இன்னோரன்ன பிரச்சனைகள் இங்கு பொதுவாகக் காணப்படுகின்றன. மேலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பிரச்சனைகளாக கல்முனை தமிழ்ப் பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படாமை, கல்முனை தமிழ் நகர சபை உருவாக்கப்படாமை, காரைதீவை சம்மாந்துறைத் தொகுதியுடன் இணைத்தமை, வட்டமடு மேய்ச்சல் தரைப் பிரச்சனை, கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் அத்துமீறிப்போகும் காணி அபகரிப்புக்கள் போன்ற பிரச்சனைகளும் இன்னும் பல இவை போன்ற பிரச்சனைகளும் இம்மாவட்டத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாகும்.

காலாகாலமாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் அரசியல் தலைமைகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை. 30 வருடங்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவதாக தேர்தல் காலங்களில் இங்கு வந்து உறுதியளிக்கின்றனர்.

ஆனால் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மற்ற இன அரசியல்வாதிகளின் செல்வாக்கால் நில அபகரிப்புக்கள் இடம்பெறும்போது தமிழ் அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர். கடந்த வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்திற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு தமிழரசுக் கட்சிஆதரவு வழங்கியமையானது இப்பிரதேச தமிழ் மக்களை வெறுப்புக்குள்ளாக்கிய செயலாகும். மேலும் தமிழரசுக் கட்சியின் பொதுவான தமிழ்த் தேசியம் என்ற கொள்கை மட்டும் இவ்வாறான சூழலில் வாழும் தமிழர்களை பாதுகாக்கப் போவதில்லை. இங்கு வித்தியாசமான அணுகுமுறைகளையே கையாள வேண்டியுள்ளது. மேற்கூறப்பட்ட விடயங்களினால் பெரும்பாலான அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழங்கியுள்ளனர். அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் இதன் தாக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.

எனவே இனியாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளில் கரிசனை கொண்டு அவற்றைத் தீர்க்க முன்வர வேண்டும். அக் கட்சியின் தலைமைப் பீடங்களில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும் எல்லாத் தமிழத் தரப்பினரும் ஒன்று கூடி ஓரணியின் கீழ் அணிவகுக்க வேண்டும். வாக்கு வேட்டைக்காக மட்டும் இங்கு வருவதை நிறுத்தி களத்தில் நின்று பிரச்சனைகளைக் கையாள வேண்டும். இல்லாவிடின் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அரசியல் பாதை வேறு திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது. இந்தப் படிப்பினையினையே நடந்து முடிந்த அம்பாறை மாவட்ட தமிழ் உள்ளூராட்சி சபைகளின் முடிவுகள் காட்டுகின்றன.

வை.சுந்தரராஜா, கல்முனை
அரசறிவியல் ஆசிரியர்
நிமிர்வு மாசி  2018 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.