மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் அதிதிறன் வகுப்பறைகள்


முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையானது இலங்கையிலேயே  ஆகக்கூடுதலான அதிதிறன் (Smart) வகுப்பறைகளைக்  கொண்ட பாடசாலையாக விளங்குகின்றது.   அதிதிறன் வகுப்பறை ஒன்றின் அடிப்படை அம்சம் அது அதிதிறன் திரைப்பலகை (Smart board) ஒன்றைக் கொண்டிருக்கும். வழமையான கரும்பலகை/வெண்பலகை அங்கு இருக்காது. இந்த அதிதிறன் திரைப்பலகை தொடுதிரையால் (Touchscreen) ஆனது. இதில் படங்கள், ஒலிவடிவங்கள், காணொளிகள் போன்றவற்றை சுலபமாக உட்சேர்க்கமுடியும். பல்லூடக வசதியுடையது.  இணையத் தொடர்புள்ளது.  அதிதிறன் வகுப்பறைகளின் வினைத்திறனை மேலும் அதிகரிக்க ஒவ்வொரு மாணவருக்கும் மடிக்கணனி அல்லது tablet வழங்கப் படலாம்.அதிதிறன் பலகையைப் பார்ப்பது தொலைக்காட்சி ஒன்றைப் பார்ப்பது போன்ற அனுபவத்தை மாணவர்களுக்குத் தருகிறது.  இதனால் கவர்ச்சியற்ற கரும்பலகைகள் போல் அல்லாது மாணவர்களின் கவனத்தை அது கவர்ந்து வைத்திருக்கிறது.  சலிப்புத் தருகின்ற இரட்டை வர்ண விளக்கப்படங்களை விடுத்து பலவர்ண விளக்கப் படங்களை ஆசிரியர்கள் பயன்படுத்த வசதியளிக்கிறது.  ஆசிரியர்களும் தாம் கற்பிக்கும் விடயம் தொடர்பாக இணையத்தளங்களில் உள்ள உதாரணங்களை மாணவர்களுக்கு இலகுவாக காண்பிக்க கூடியதாக உள்ளது.உலகமெங்கும் இந்த அதிதிறன் வகுப்பறைகள் ஊடான கற்றல் முயற்சிகள் பிரபலமடைந்து வருகின்றன. நவீன உலகின் புதிய புதிய கற்றல் முறைகளை போரால் பாதிக்கப்பட்ட எமது பிள்ளைகளும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதோடு, நவீன தகவல் தொழிநுட்ப யுகத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக அவர்களை மாற்ற வேண்டும் எனும் நோக்கோடு தான் மேற்படி அதிதிறன் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன. 

அதிதிறன் வகுப்பறை முயற்சிகள் எமது மாணவர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. வழமையான எமது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.இந்தப் பாடசாலையை இந்தளவுக்கு உயர்த்திய பெருமை அதன் அதிபர் நல்லையா அமிர்தநாதன் அவர்களையே சாரும். இவர் கடந்த 25 வருடகாலமாக கல்விச் சேவை புரிந்து வருகிறார். கடந்த 15 வருடங்களாக ஆசிரியராகவும், பின் 5 வருடங்கள் ஆசிரிய ஆலோசகராகவும், பின்னரான 5 வருடங்கள் அதிபராகவும் கடமையாற்றி வருகிறார். இவற்றுக்கு மேலதிகமாக புலம்பெயர் உறவுகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து போரால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவும் செயற்திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றார்.அதிதிறன் வகுப்பறை தொடர்பில் அதிபர் நல்லையா அமிர்தநாதன் மேலும் கூறிய விடயங்கள் வருமாறு.

எமது பாடசாலையில் இந்த நவீன முறை 2017 மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 8 வகுப்பறைகள் உண்டு. அதில் ஒன்றில் முழுமாணவர்களும் Tablet கணினிகளை பயன்படுத்துகின்றனர்.

இலங்கையில் ஆகக்கூடுதலான அதிதிறன் வகுப்பறைகளைக் கொண்ட பாடசாலையாக விரைவில் மாற்றுவோம் இலங்கையின்  முதல் அதிதிறன் பாடசாலை (Smart School) என்ற இலக்கை 2018 முதல் காலாண்டில்  அடைவோம். புலம்பெயர்வாழ் உறவுகளின் ஆதரவால் அதற்கான வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய முறையில் கற்றல் கற்பித்தல் நுட்பம் பற்றி இணையத்தில் தேடிய போது அதிதிறன் வகுப்பறையினை பற்றி அறிந்து கொண்டேன். அப்போது தான் அதனை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது.


முல்லைத்தீவு போன்ற போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இப்படியான கற்றல் முறைக்கு மாணவர்கள் மத்தியில் இருந்து நல்ல ஆதரவு உள்ளது.  மாணவர்கள் வரவு வீதம் அதிகரித்துள்ளதனை கண்கூடாக பார்க்க முடிகிறது.  கற்றலுக்கு ஆர்வத்துடன் சுயமாக முன்வரும் தன்மை அதிகரித்துள்ளது. இதனூடாக இடைவிலகல் முற்றாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆற்றலும் அதிகரித்துள்ளது.  தேர்ச்சி மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


வழமையான கற்றல் முறைக்கும்   அதிதிறன் கற்றல் முறைக்கும் இடையிலான வேறுபாடுகள் பல உள்ளன. முக்கியமாக எரிமலை, சுனாமி போன்ற நேரில் காட்டமுடியாத விடயங்களை சுலபமாக விளங்கச்செய்ய முடியும்.  முப்பரிமான காட்சிகளைக் காட்ட முடியும். இணையம் மூலமான கற்றல் வசதியூடாக நடைமுறை அறிவினையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். தூசு அற்ற சூழலில் கற்கலாம்.


போர் இடம்பெற்ற காலங்களில் பெருமளவிலான அறிவுஜீவிகள் வெளியேற்றம் தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்ந்தது. அப்படி வெளியேறிய ஏராளமான புத்திஜீவிகள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் சிறப்பாக கற்பித்து வருகின்றார்கள். அப்படியான ஆற்றல் மிக்கவர்கள் மூலம் எம் தாயகத்து மாணவர்களுக்கு நவீன தொழிநுட்பங்களின் உதவியுடன் சிறப்பாக கற்பிக்க முடியும். குறிப்பாக ஸ்கைப் காணொளியூடாக தற்போது அமெரிக்காவில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. வேறும் பல புலம்பெயர் தமிழர்கள் இந்த திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.

இதன் மூலம் புலம்பெயர் உறவுகளிற்கும் ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுகின்றது. எங்களிற்கு கிடைக்கும் இவ்வாறான புதிய கற்றல் வளங்களை நாம் அனைவரும் வினைத்திறனுடன் கற்றுக் கொள்ள  வேண்டும். கல்வித்திணைக்களம் இவ்வாறான செயற்பாட்டை ஊக்கிவிக்கின்றது. இவ்வுபகரணங்கள் விலை அதிகம். எல்லாப் பாடசாலைகளும் இவற்றை வாங்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டிருப்பதில்லை. இவற்றை பயன்படுத்த உயர் தொழில்நுட்ப அறிவு தேவை என்ற பிழையான எண்ணங்களும் அதிபர், ஆசிரியர் மத்தியில் உள்ளது. இவை தான் அதிதிறன் வகுப்பறையை அனைத்து மாணவர்கள் மத்தியிலும் எடுத்துச் செல்ல சவால்களாக உள்ளன.


கரும்பலகை அறிமுகம் ஆகும் போதுகூட இந்த நிலமை இருந்திருக்கும். ஆனாலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இவ்வாறு அதிபர் அமிர்தநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிதிறன் வகுப்பறைகள் பல பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை 'டிஜிட்டல் வழிக் கற்றல்' முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து வகுப்பறைகளும் கணனி மயத்துடன், அதிதிறன் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.


அதிதிறன் வகுப்பறைகளை உருவாக்குவது ஓர் இலகுவான காரியமல்ல.  அதற்கு வழமையிலும் விட பெரிய முதலீடு வேண்டும்.  அந்த வகுப்பறை வசதிகளை திறமையாகப் பயன்படுத்த ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.  அங்கு பயன்படுத்தும் கணனிகள் போன்ற உபகரணங்கள் விரைவில் பழுதாகாதவாறு பராமரிக்கப்பட வேண்டும்.  அவை பழுதாகுமிடத்து அவற்றைத் திருத்துவதற்கு போதிய பணம் வேண்டும்;  தொழில்நுட்ப அறிவு வேண்டும்.  மின்சாரம் தடைபடுமிடத்து அதற்கு மாற்றீடான மின்னுற்பத்தி வசதிகளை ஏற்படுத்த வேண்டும் இணையத் தொடர்பு துண்டிக்கப்படுமிடத்து அதற்கான மாற்று கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் அறிந்திருத்தல் வேண்டும்.

அதிதிறன் வகுப்பறைகளினால் கிடைப்பவை எல்லாமே நன்மையானவையல்ல.  முக்கியமாக அதிதிறன் வகுப்பறைகளுக்குப் பழக்கப்பட்ட மாணவர்கள் முன்னைய கல்வி முறைக்கு மாற சிரமப்படுவார்கள்.  மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஒரு முக்கியமான தூண் அவர்களின் கற்பனாவள வளர்ச்சியாகும்.  இந்த கற்பனை வளம் தான் அவர்களை பின்னர் புதிய விடயங்களின் கண்டுபிடிப்பாளர்களாக மாற்றுகிறது. கலைப்படைப்பாளிகளாக மாற்றுகிறது. கலைகளை ரசிக்க கற்றுக் கொடுக்கிறது.  அதிதிறன் வகுப்பறைகளில் ஏறத்தாழ எல்லா விடயங்களுமே கட்புலனூடாக மாணவர்களுக்கு கிடைப்பதால் அவர்களின் கற்பனா சக்தி மழுங்கிப் போக வாய்ப்புள்ளது.


அதிதிறன் வகுப்பறைகளில் பாவிக்கப்படும் மடிக்கணனிகள், tablet போன்றவை இன்று இளைய சமுதாயத்தினரைக் கட்டிப் போட்டிருக்கும் திறன்பேசிகள் (smartphone) போன்றவையே.  இவற்றை அளவான முறையில் பயன் படுத்தாவிட்டால் மாணவர்களும் இவ்வுபகரணங்களில் அதிக நேரத்தைச் செலவிடத் தொடங்க வாய்ப்புள்ளது.  அதனால் மாணவர்கள் இயல்பாகவே களிப்படையும் விளையாட்டுக்கள் பொழுதுபோக்குகள் போன்றவற்றில் ஈடுபடுவதில் நாட்டம் குறைய வாய்ப்புள்ளது.

தமக்குத் தேவையான தரவுகள் எல்லாவற்றையுமே இணையத்தில் பெற முற்படுவதன் மூலம் மாணவர்களுக்கிடையேயான உரையாடல்களுக்கு சந்தர்ப்பங்கள் குறைய வாய்ப்புள்ளது.  இதன் விளைவாக பெரியவர்களாக வரும் பொழுது சமூகத்தில் உள்ள ஏனையவர்களுடன் உறவுகளைப் உருவாக்குவதிலும் பேணுவதிலும் அவர்கள் சிக்கல்களை முகம் கொடுக்க வாய்ப்புள்ளது.  குறிப்பாக இந்த விடயம் மேலைநாடுகளில் ஒரு பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தவரை அதிதிறன் வகுப்பறைகள் எமது மாணவர்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமே.  யுத்தத்தில் மாபெரும் அழிவைச் சந்தித்த எமது மாணவர்களின் கல்வியை மேம்படுத்த உலகெங்கிலும் உள்ள வளங்களை பயன் படுத்த இது வசதியளித்துள்ளது.  இந்தக் கல்வி முறையில் உள்ள சாதக பாதக அம்சங்களை நாம் நன்றாக விளங்கிக் கொண்டால் இதனை எமது வளர்ச்சிக்கு உரிய முறையில் பயன்படுத்த முடியும்.  அதற்கு பொருத்தமாகக் கட்டமைக்கப்பட்ட பாட விதானமும் இந்தக் கல்விமுறையின் எல்லைகளை விளங்கிக் கொண்ட ஆசிரியர்களும் மிக முக்கியம்.

                                             தொடர்புகளுக்கு- நல்லையாஅமிர்தநாதன்
                                                                                  0770879730


துருவன்
நிமிர்வு  தை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.