காவாலிகளை ஏவி விட்ட அரசை சர்வதேச கடைத்தெருவுக்கு இழுப்பதே பொறுப்புக் கூறல்
16-1-2018 யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வில் தலைமை வகித்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை இந்த இதழில் வேறுபக்கங்களில் வெளிவந்துள்ளது. அந்த உரையில் அதிகாரப் பரவலாக்கமும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலும் தமிழரின் விட்டுக் கொடுக்க முடியாத கோரிக்கைகள் என்று குறிப்பிட்டார். மிகச் சரியானவை. ஆனால் பொறுப்புக் கூறல் விடயத்தை இராணுவத்தில் இருந்த அல்லது இருக்கின்ற சில காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுப்பதே நோக்கம் என சுருக்கி விட்ட முதல்வரின் கருத்து ஏற்புடையதல்ல.
முள்ளிவாய்க்கால் குறுகிய நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான மக்களை ஒதுக்கி அவர்கள் மீது ஆட்டிலரிகளாலும் பல்குழல் ஏவுகணைகளாலும் விமானங்களாலும் நாட்கணக்காக குண்டு வீசி இனப்படுகொலை நடத்தியவர்கள் வெறும் காவாலிகளல்ல. இந்த இனப்படுகொலையைச் செய்வதற்கு இராணுவத்திற்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர்கள் இராணுவத் தலைமைப்பீடமும் அவர்களுக்கு தலைமை தாங்கிய சிவில் அதிகாரிகளுமே. இவர்கள் வெறும் காவாலிகளல்ல. சர்வதேச போர்ச்சட்டங்களுக்கு முரணாக போரை முன்னின்று நடத்திய சிங்கள அரசாங்க தலைவர்கள் வெறும் காவாலிகளல்ல. இவர்கள் ஆண்டாண்டு காலமாக புரையேறியுள்ள சிங்கள பேரினவாத்தின் இனவழிப்பைத் திட்டமிட்டு நடத்தியவர்கள். இவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
நடந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என்று சர்வதேசத்தை நோக்கி தமிழ் மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய எல்லாக் கட்சிகளினதும் நிலைப்பாடாக இது இருக்கிறது. இந்த நிலையில் இனப்படுகொலை நடத்தியது ஒட்டுமொத்த இராணுவமல்ல, அதிலிருந்த சில காவாலிகள் மட்டுமே என்று சுருக்குவது எமது நீதிக்கான கோரிக்கையைப் பலவீனப்படுத்துவதாகவே முடியும்.
பல சமயங்களில் பேச்சாளர்களின் தவறான வார்த்தைப் பிரயோகங்களால் அவர்கள் சொல்ல வந்த விடயம் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. அந்த வகையில் முதல்வர் தவறான வார்த்தைப் பிரயோகங்களால் தான் சொல்ல வந்ததை சரியாக சொல்லத் தவறிவிட்டாரா என்று மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். அல்லது முதல்வரும் அவர் இணைத்தலைவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவையினரும் யுத்தத்தின் போது அட்டூழியம் செய்த காவாலிகளைத் தண்டிப்பது தான் பொறுப்புக் கூறல் என்பதாக கொள்கை ரீதியில் சுருக்கி விட்டார்களா என்று தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களாக உள்ளனர்.
புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். தொடரும் அரசியல், ஆயுதப் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. நல்லாட்சி அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி தனது நியாயத்தன்மையை இழந்து வருகிறது. சிறிலங்காசுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. மகிந்த தலைமையிலான பொதுமுன்னணி பலமடைந்து வருகிறது. சிங்கள அரச ஆட்சிக் கட்டமைப்பில் நிகழ்கின்ற இம்மாற்றங்கள் தமிழ் மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுத்தரமாட்டாது. சிறிலங்காவின் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகள் மீண்டும் குப்பைக்கூடைக்குள் வீசப்படக் கூடியதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே தென்படுகின்றன.
தென்னிலங்கை அரசியலும் தமிழ் மக்களின் அரசியலும் பல மாற்றங்கள் நிகழும் ஆண்டாக இந்த ஆண்டு எதிர்வு கூறப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
கிரிசாந்-
நிமிர்வு தை 2018 இதழ்
Post a Comment