உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களும்





இது உள்ளூராட்சித் தேர்தல் காலம். என்றுமில்லாதவாறு தமிழ் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் இரவு பகல் பாராமல் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு வெளியே வாகனப் பாதுகாப்பிடம் ஒன்று போடும் அளவுக்கு மோட்டார் சைக்கிள்கள், கார்கள் குவிந்து இருக்கின்றன.  காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம், காணி மீட்பு போராட்டம், அரசியல் கைதிகள் பிரச்சினை என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை மக்கள் தாமாக முன்வந்து முன்னெடுத்த போது  தூங்கிக் கிடந்த அரசியல் கட்சிகள் இன்று தேர்தல் அரசியலுக்கு மும்முரமாய் முகம் கொடுத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க அரசினால் வெளியிடப்பட்ட தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசயனமும் இல்லாத  இடைக்கால அறிக்கை விவாதம் இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது. 'உள்ளூராட்சித் தேர்தலில் தாங்கள் வென்றால் மக்கள் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவளித்ததாக அர்த்தப்படும் என'  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் பகிரங்கமாகவே கூறியுள்ளார். அரசியல் யாப்பு மாற்றத்துக்கான இடைக்கால அறிக்கைக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா? இல்லையா என்பதனை நாடி பிடித்து பார்ப்பதாகவும் இந்த தேர்தல் அமையப் போகின்றது என அரசியல் அவதானிகளும் கூறி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வைப் பாதிக்கும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.  ஒன்றை மட்டும் நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்மக்களின் நியாயமான தீர்வுக்கான கோரிக்கைகள் உள்ளடங்கும் தீர்வுத் திட்டமொன்றுக்கு தமிழ்மக்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.  ஆகவே இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி அரசியல் தீர்வு முயற்சியின் தோல்வியல்ல என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி இடைக்கால அறிக்கைக்கு கிடைக்கும் அங்கீகாரமாகப் பார்க்கப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த வகையில் மக்கள் இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்கத் தயங்க கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றால் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு வேண்டாம் என சொல்வதாக அர்த்தம் இல்லை. மாறாக, தமிழ் மக்கள் கூட்டமைப்பு பிரேரித்த தீர்ப்பை ஏற்கவில்லை என்பதே அர்த்தம்.  நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு பரிகார நீதியும், அதிகாரப் பரவலாக்கமும் தான் தீர்வுக்கான அடிப்படையாக இருக்க முடியும். கடந்த 60 வருட கால போராட்டத்தில் இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த தமிழ் மக்கள் கூட்டமைப்பு பிரேரித்துள்ள ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட தீர்விலும் விட மேலான தீர்வை எதிர் பார்க்கிறார்கள் என்பதே அர்த்தம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுக்கின்ற அழுத்தங்களாலும் அவர்களின் பேரம் பேசும் திறமையினாலும் தான் இடைக்கால அறிக்கையில் உள்ள அளவுக்காவது அதிகாரப் பரவலாக்கம் கிடைத்துள்ளது என்று நினைத்தால் அதை விட வேறு ஜோக் கிடையாது. அதே போலவே கூட்டமைப்பு வென்றால் அதன் மூலம் அரசியல் தீர்வு நடவடிக்கைகளுக்கு கூட்டமைப்பினர் சொல்வது போல எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.  ஏனெனில் சிங்கள அரசாங்கம் 'கூட்டமைப்பு வென்று விட்டது. ஆகவே அவர்கள் கேட்பது போல அதிகாரப் பரவலாக்கலை மேலும் அதிகரிக்க வேண்டும்' என்று நினைக்கப் போவதில்லை.  இதனை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

வீதிகளில் இறங்கி தொடர்ச்சியாகப் போராடும் மக்களே நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று தங்களுக்கு வேண்டும் என அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு சர்வதேச முற்போக்கு சக்திகளும்     இணைந்து போராட்டத்துக்கு வலுச் சேர்த்து வருகின்றன.  இவ்வாறான கூட்டு அழுத்தங்களினால் இலங்கை அரசுக்கு சர்வதேச அரசுகள் கொடுக்கும் அழுத்தங்கள் தான் அதிகாரப்பரவலாக்கத்துக்கு அடிப்படையாக உள்ளன.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்ல.

எதற்கும் தலையாட்டும் கூட்டமைப்பின் தலைமையை தான்  சிங்கள அரசாங்கமும், மேற்குலகமும் விரும்புகின்றன. மக்களின் நலன்களை புறந்தள்ளிவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தொடர்ந்து பேண முடியாது என்ற நிலையை மேற்படி தரப்புக்கள் உணர வேண்டும். அதற்கொரு வாய்ப்பாகவும் இத்தேர்தல் அமையும்.

அரசியல் தீர்வுக்கு அடிப்படையில் தலைமை தாங்கி நிற்பவர்கள் போராடும் மக்களே ஆவார். அவர்கள் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரித்துள்ள இடைக்கால அறிக்கை அரசியல் தீர்வுக்கு அடிப்படையாக அமையாது என்று கருதினால் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்க முடியும்.


தீசன்
நிமிர்வு  தை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.