முழு தமிழ் சமூகத்தையுமே அவமானப்படுத்திய ஊவா முதலமைச்சர்
பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்தின் அதிபர் ஆர். பவானியை அச்சுறுத்தி முழங்காலிட வைத்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்புக் குரல்கள் வலுவடைந்து வருகின்றன.
அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு அடிபணிந்தும், சிபாரிசுக்கு பணம் பெற்றுவிட்டும் பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடிய அதிபர்கள் சிலர் இருக்கும் எமது நாட்டில் முதலமைச்சரின் சிபாரிசை சரியான காரணத்தைக் காட்டி துணிந்து நின்று கடமை தவறாது நிராகரித்த பெண் அதிபரை அதே முதலமைச்சர் மிரட்டி மண்டியிட வைத்திருப்பது அரசியல்வாதி என்றால் எதையும் செய்து விடலாம் என்ற அதிகார ஊழலையே காட்டுகிறது. நல்லாட்சி அரசின் அடுத்த நாடகமும் மக்கள் மன்றில் அம்பலமாகிறது.
உண்மையில் நடந்தது என்ன? ஊவா முதலமைச்சரின் கட்சி சார்பில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் வேட்ப்பாளராக இருக்கிறார். அவரின் உறவினர் ஒருவருக்கு தான் குறித்த பாடசாலையில் அனுமதியளிக்கும் படி ஊவா முதலமைச்சரினால் குறித்த பாடசாலை அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், குறித்த பாடசாலையில் 8 வீதமான முஸ்லிம் பிள்ளைகளையே சேர்க்கலாம் என்கிற விதி உள்ளது. குறித்த 8 வீதமும் ஏற்கனவே நிரம்பியுள்ளன. ஏனைய மாணவ ஒதுக்கீடுகளும் நிரம்பிய காரணத்தால், இங்கே இனி மாணவர்களை சேர்க்க முடியாது இதனை நீங்கள் கல்விப் பணிப்பாளரிடம் சொல்லுங்கோ என கூறியுள்ளார் அதிபர். இதன் பிற்பாடுதான் ஊவா மாகாண முதலமைச்சர் தனது வீட்டுக்கு குறித்த பெண் அதிபரைக் கூப்பிட்டு முழங்காலில் நிற்க வைத்தமையானது மிக மோசமான செயலாகவே பார்க்காப்படுகின்றது. அரச அதிகாரியை தன்னுடைய வீட்டுக்கு கூப்பிட்டது முதல் பிழை. இரண்டாவது அரச அதிகாரிகள் தவறு செய்யும் பட்சத்தில் அதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு பொறிமுறை உள்ளது. அதனை விடுத்து முதலமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டமையினை எவ்வகையிலும் ஏற்க முடியாது.
இதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிக முக்கியமானது,
மலையக மக்களை தொடர்ந்தும் ஒரு அடிமைத்தனமான சமூகமாக பேரினவாதம் கருதிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடே இதுவாகும். இங்கே வெறுமனே ஒரு அதிபர் முதலமைச்சரால் அவமானப்படுத்தப்படவில்லை. முழு அதிபர் சமூகத்தையுமே அவமானப்படுத்தியுள்ளார். முழு ஆசிரிய சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளார். முழு பெண்கள் சமூகத்தையும் அவமானப்படுத்தி உள்ளார். முழு மலையக தேசிய அரசியலையும் அவமானப்படுத்தி உள்ளார். ஒரு இனத்தையே அவமானப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே மலையகம் தொடர்பில் பின்பற்றப்பட்டு வந்த அரசியலின் விளைவு தான் இது. இதை ஒரு சம்பவமாக மட்டும் பார்க்காது, அந்த அரசியலின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தை முதலில் கையிலெடுத்தது இலங்கை ஆசிரியர் சங்கம் தான். அதனைத் தொடர்ந்து ஜேவிபி, மலையக கட்சிகள் எல்லாம் இதனை பெரும் மக்கள் போராட்டமாக மாற்றி உள்ளன. இந்த பிரச்சினையை நாங்கள் ஓரு முழு தமிழ் உலகின் பிரச்சினையாகக் கருதி இதற்கு வலுச் சேர்க்கும் விதமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், தமிழ்நாட்டு தமிழ்மக்கள், ஏனைய புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இணைந்து ஒரு பலமான எதிர்ப்பை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். மலையக மக்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் நிலையில் நாங்கள் எல்லோரும் இருக்க வேண்டும். இது ஒரு வரலாற்றுக் கடமையுமாகும்.
நிமிர்வு தை 2018 இதழ்
Post a Comment