மக்கள் நலன்களை புறந்தள்ளிய கட்சி அரசியல் கலாச்சாரம்




உள்ளூராட்சித் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளுமே வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தமது அரசியல் நலன்களை மட்டுமே கருதி தங்களது நடவடிக்கைகளை முன்னெடுப்பது கண்கூடு. அடிப்படையான மக்கள் தேவைகள் நலன்கள் அவர்களது வாழ்வாதாரங்களை என்பவை பின்தள்ளப்பட்டுள்ளன. தனிநபர் செல்வாக்கு பணபலம் அரசியல் குரோதம் இனவாதம் என்பன இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்ற நிலை இன்னும் மாற்றமடையாமல் இருக்கின்றது. இது ஒர் ஆரோக்கியமான நிலையாகாது.

கடந்த அரசாங்கத்தின் சீர்கேடுகளை நிவர்த்திப்பதாகவும் மக்கள் நலம்சார்ந்த நல்லாட்சியைக் கொண்டு வருவதாகவும் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் மக்களின் அதிருப்திக்கு ஆளாகி நிற்கின்ற யதார்த்த நிலை தற்போது தோன்றியிருக்கின்றது.

கடந்தகால ஊழல் நடவடிக்கைகள், அரசியல் பழிவாங்கல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் என்பவற்றுக்கு நீதியானதும் நேர்மையானதுமான விசாரணைகள் நடாத்தப்படும். தவறிழைத்தோர் தண்டிக்கப்படுவர். இவ்வாறெல்லாம் மார்ததட்டி நின்ற தற்போதைய அரசாங்கத்தின் நேர்மையை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் விமர்சனத்திற்குள்ளாக்கியிருக்கிறது. இதில் அமைச்சர்கள் உட்பட பிரதம மந்திரி ஆகியோரும் விசாரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பிணைமுறி விவகாரத்தில் நிதி அமைச்சர் இராஜினாமா செய்தார்.  வெளிவிவகார அமைச்சராக்கப்பட்டு பின்னர் அதிலிருந்தும் அவர் பதவி விலகியிருக்கிறார். முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சம்மந்தமான விசாரணைகள் மந்தகதியில் நடைபெறுவதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.  இந்தப் பொறுப்புக்கள் தன்னிடம் தரப்பட்டால் விசாரணைகளை விரைவாக நடாத்தி தவறிழைத்தவர்களைத் தண்டிக்க முடியும் என்றும் கூறினார். விசாரணைக்குப் பொறுப்பான நீதி அமைச்சர் விலக்கப்பட்டதும் பின்னர் அவர் எதிர்த்தரப்பிற்குத் தாவியதும் அண்மையில் நடந்தேறிய நிகழ்வுகள்.

அரச எதிர்ப்பாளர்களின் குறுகிய இனவாத அரசியல் அரசை கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்துகின்றது. அரசாங்கம் அவர்களுக்கு பதிலளிப்பதிலேயே பெருமளவு நேரத்தை செலவிடுகின்றது. அதனையொட்டிய அரசியல் காய்நகர்த்தல்களிலேயே கவனத்தைச் செலுத்துகின்றது. மக்கள் இவற்றைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. தேர்தல் காலங்களில் எவ்விதமான நியமனங்களோ இடமாற்றங்களோ இடம்பெறக்கூடாது என்று சட்டம் இருக்கின்றது. ஆசிரியர் இடமாற்றங்கள் கூட இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.  ஆனால்  அரசாங்கத்தின் பக்கம் கட்சிதாவியவர்களுக்கு அரசில் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை அதிருப்தியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. இதற்கு சட்டரீதியான நியாயப்படுத்தக் கூடிய காரணங்கள் இருக்கலாம். இருந்தும் இவ்வகையான நடவடிக்கைகள் கட்சி அரசியலையே முன்னிறுத்துகின்றன.

நல்லாட்சி என்ற பெயரில் நடக்கும் அரசின் பங்காளிக் கட்சிகள் தங்களுக்குள்ளே ஒரு முறுகல் நிலைக்கு வந்திருப்பது இந்த தேர்தல் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஐ.தே.கவைச் சேர்ந்த கடும் போக்காளர்கள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டவர்களாக காணப்படுகின்றனர். ஜனாதிபதி அவர்கள் சுதந்திரக் கட்சியினருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இவ்விடயத்தில் பிரதம மந்திரியும் ஜனாதிபதியின் ஆணைக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் ஐ.தே.க. வினர் விசனமடைந்திருக்கின்றனர்.  சு.கட்சியின்  அமைச்சர்கள் சிலர் அக்கட்சியில் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக செயல்பட்டவர்கள். இவர்கள் தங்களது சுய நலன்களுக்காக பொது எதிரணியுடன் கூட்டுச்சேரும் முனைப்புடன் இருக்கின்றனர். இதனாலேயே பொது எதிரணியினர் எவ்வளவுதான் அரசாங்கத்தை விமர்சித்தாலும்கூட  அந்தவிமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் ஐ.தே.கட்சியையும் பிரதமரையும் நோக்கியதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன.

பொது எதிரணியினரோ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் என்ற மார்தட்டலில் இனவாத கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர். தங்கள் மீது நடைபெறுகின்ற விசாரணைகள் பழிவாங்கும் நடவடிக்கைகளே என்ற ரீதியில் பேசிவருகின்றனர். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதில் நிலவுகின்ற தாமதங்களையிட்டு மக்கள் விடுதலை முன்னணி பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கின்றது. தமது கட்சி நலன்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் முன்னின்று செயல்பட்டு தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்த இவர்கள் அரசில் சேர்ந்து கொள்ளவில்லை.  ஆனால் அரசாங்கத்தின் கருத்துகளுக்கும் பொது எதிரணியின் கருத்துக்களுக்கும் அவ்வப்போது ஆதரவையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டி தங்கள் கட்சியின் தூய்மையை பேணுவதாக நினைக்கின்றனர்.

எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில் அது தனது கடமைகளை சரிவர நிறைவேற்றுகின்றதா என்ற கேள்வி இருக்கின்றது. தமிழ்த்தரப்பு எதிர்க்கட்சியாக வந்து விட்டதே என்ற காழ்ப்புணர்வில் பொது எதிரணியினர் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழர்களாகிய நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.   ஆனால் ஒரு பொறுப்புள்ள எதிர்ககட்சியாக அது செயற்படத்தவறிவிட்டது என்பதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இந்த ஆட்சியைக் கொண்டுவர நடந்த அரசியல் சதுரங்கத்தின் விளைவுகள் தமிழ்க்கூட்டமைப்பை சட்டரீதியிலான எதிர்க்கட்சியாக ஆக்கியிருக்கிறன. ஆனால்  தமிழர் நலம் சார்ந்த விடயங்களைத் தவிர்த்து ஏனையவற்றில் அரசசார்புள்ள கட்சியாகவே அது செயற்படுகின்றதாக பொது எதிரணியினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.  இதில் நியாயமிருப்பதாகவே தெரிகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழர்கள் முஸ்லிம்கள் நலன் சார்ந்து செயற்படுவதாக பொது எதிரணி பிரச்சாரம் செய்கிறது.  இவ்வாறான ஒரு மாயையை தெற்கில் உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் அரசின் சகல நடவடிக்கைகளையுமே எதிர்த்து நிற்கின்றது. அவர்கள் எந்நேரமும் செய்திகளில் தாமே இடம்பெற்று நிற்கின்ற மாதிரி ஓர் அரசியல் நேரசூசியை உண்டு பண்ணியிருக்கிறார்கள். இந்த நிலைமை அரசாங்கத்திற்கு பெரும் தலையடியாக அமைந்திருக்கிறது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் பொது எதிரணியினருக்கு மேலும்  வலுச் சேர்த்திருக்கின்றது.

முன்னைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாக கருதப்படுகின்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது தங்களுக்கும் இதற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்றும் இவையெல்லாம் தற்போதைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளே என்றும் கூறுகிறார்கள். அவர்கள் விசாரணைக்கு வருவதும் போவதும் ஊடகங்களுக்கு இவ்வாறு பேட்டியளிப்பதும் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. இதோ இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் உண்மைகள் வெளிப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று அரசதரப்பினர் கூறி வருவது கேலிக்கூத்தாகியிருக்கின்றது.

இந்த விசாரணைகளிலிருந்து எதிர்த்தரப்பினரை காப்பாற்ற பிரதமர் முயற்றிக்கின்றார் என்றும் அதன்மூலம் பிளவுபட்டிருக்கின்ற சுதந்திரக்கட்சியை தொடர்ந்து அதே நிலையில் வைத்திருப்பதே அவரது நோக்கம் என்றும் ஐ.தே.கட்சி எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள்.

இதேநேரம் கடந்த ஆட்சியின் தவறுகளுக்காக சட்டப்படியான நடவடிக்கைகளை இறுக்கமாக முன்னெடுப்பதிலும் அரசதரப்பில் அங்கம் வகிக்கின்ற சுதந்திரக் கட்சியினருக்கு அவ்வளவு உடன்பாடில்லை. சுதந்திரக்கட்சியின் சார்பில் தற்போது அரசில் அங்கம் வகிக்கின்ற கணிசமான அளவு அமைச்சர்கள் ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவை ஆதரித்தவர்களே. இவர்கள் 'கட்சியின் நலன்', 'கட்சியின் நலன்' என்று சுதந்திரக்கட்சியை காப்பாற்றுவதாக கூறி அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கின்றனர்.  தாங்களும் அங்கம் வகித்த கடந்தகால அரசின் தவறுகள் தண்டிக்கப்பட்டால்  பொது எதிரணியினரின் அதிருப்தி கட்சியை பாதித்துவிடும் என்ற நிலைப்பாட்டிலேயே இவர்கள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றச்சாட்டுகிறார்கள். ஆக இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே பொது எதிரணியினருக்கு சாதகமான நிலைகளையே தோற்றுவித்திருக்கின்றன. இந்த நிலையை சாதகமாகப் பயன்படுத்தி பொது எதிரணியினர் பிணைமுறி விவகாரத்தில் தீவிரமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கட்சி நலன் சார்ந்த நடவடிக்கைகள் என்று பார்க்கின்றபோது நாங்களும் எந்தக் கட்சியினருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற தோரணையில் தமிழ்க்கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பிற்குள் இதுவரை கண்டிராத அளவிற்கு தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றது. இதனால் பங்காளிக்கட்சிகளான ரெலோ ஈபி.ஆர.;எல்.எவ்(சுரேஸ் அணி) புளொட் ஆகியன அதிருப்தியடைந்திருக்கின்றன. ஈபிஆர்எல்.எவ்(சுரேஸ் அணி) கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கின்றது. வெளியேறும் என்று கருதப்பட்ட ரெலோ சமரசம் அடைந்திருக்கின்றது. ரெலோவின் வெளியேற்றம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதும் அது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் போன்ற பதவிகளுக்கு ஆபத்தாகிவிடும் என்று கருதியும் கூட்டமைப்பு பிரச்சனையை சமாளித்திருக்கின்றது.

இதில் ஒன்றை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். கூட்டமைப்பில் பலமான கட்சியாக இருப்பது தமிழரசுக்கட்சியே என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருந்தபோது தலைமைப்பதவியில் எழுந்த பிரச்சனையால் கூட்டணியினரின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் ஆதரவை இழந்த தமிழ்க்காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்ததும், அதனைத்தொடர்ந்து கூட்டமைப்பு உருவாகியதும், உதயசூரியன் சின்னமின்றி கூட்டணியினரின் பெரும்பான்மையினர் தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டதும், இதுவரை கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்படாமல் இருப்பதும் வரலாற்று உண்மைகளே. கூட்டமைப்பை பதிவு செய்வதால் ஒரு புதிய சின்னம் கிடைத்து வீட்டுச்சின்னம் மறக்கடிக்கப்பட்டுவிடும் என்ற காரணத்தினாலேயே பதிவு தவிர்க்கப்படுகின்றது என்பது பங்காளிக்கட்சிகளின் அதிருப்தியாக அமைகின்றது.

கூட்டமைப்பு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் என்றுமில்லாதவாறான பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்து நிற்கின்றது. பங்காளிக் கட்சியினருக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலை, தமிழ்மக்கள் பேரவையின் தோற்றம், தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தலையீடு என்பவை இந்தச் சவால்களைத் தந்து நிற்கின்றன. எப்படியிருந்தபோதும் வரலாற்றின் தீர்க்கமான ஒரு கட்டத்தில் தமிழ் அரசியல் நின்று கொண்டிருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆயுதப்போராட்டம் மௌனித்த நிலையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு நோக்கிய புதிய அரசியல் அமைப்பிற்கான நடவடிக்கைகள் பலமாக பேசப்படுகின்ற நிலையில் தமிழ்க் கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

தொடருகின்ற அவலமாக நிற்கின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சனை, அரச ஆக்கிரமிப்புக்குள்ளான நிலங்களை மீட்கும் போராட்டம், அரசியல் கைதிகளின் பிரச்சனை போன்றவற்றில் கூட்டமைப்பினர் ஓர் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து உள்ள நிலையிலும் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.

இது தவிர மீள்குடியேறியுள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகளில் மற்றும் உட்கட்டமைப்புக்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் அவ்வப்போது ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான வசதியற்ற கிராம மக்கள் கூட்டமைப்பின் மீதுபெரும் அதிருப்தியும் சினமுமடைந்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அவற்றில் பெரும்பாலானவை போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் ஆகும். பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கின்ற நிலையில் மக்களின் இவ்வகையான அதிருப்திகள் அவர்களது செல்வாக்கிற்கு பலத்த சவாலாக அமைகின்றன. இது இந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெளிப்படுமா..? அவ்வாறான வெளிப்பாட்டின் விளைவினால் பாதிக்கப்படப்போவதும் அல்லது இலாபமடையப்போவதும் யார்...?

மாற்று அணியினாரல் ஒரு பலமான அணியை கொண்டுவரமுடியாமலுள்ள யதார்த்தத்தையும் அதனால் வாக்குகள் சிதறி அது எதிரிகளுக்கு சாதகமான நிலைகளைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சத்தில் மீண்டும் கூட்டமைப்பிற்கே வாக்களிக்க வேண்டிய நிலையில் தமிழ்மக்கள் உள்ளனரா?  அல்லது மாற்று அணியினருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமா? அல்லது எது எப்படியிருந்தபோதிலும் வெறுமனே வரலாற்றுக் காரணங்களுக்காக மட்டும் கூட்டமைப்பிற்கே மக்கள் வாக்களிக்கப் போகிறார்களா?

சபேஷன்
நிமிர்வு  தை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.