ஆக்கிரமிக்கப்படும் மத்தாளமலை
திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலுள்ள மத்தாளமலையை தொல்பொருள் திணைக்களத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளது. இது தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி. தமிழ் மக்களின் பூர்வீக கடவுள் முருகனுக்கு கோயில் அமைந்துள்ள புண்ணிய பூமி. கடந்த மார்கழி மாதம் 22 இல் பக்தர்கள் இந்தக் குன்றத்தூர் முருகன் கோவிலில் கூடினர். கோயிலைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக கோலமிட்டு, பொங்கி, பூசை செய்ய முற்பட்டனர். திடீரென அங்கு கிழக்கு மாகாண ஆளுனர் போகல்லாகமவும் மனைவி தீப்தி போகல்லாகமவும் வந்து சேர்ந்தனர். தீப்தி போகல்லாகம அங்கு கூடியிருந்த மக்களைத் தகாத வார்த்தைகளால் பேசினார். அவர்கள் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என மிரட்டினார். மக்கள் பக்தியுடன் போட்டிருந்த கோலத்தை பாதணிகளால் மிதித்து அசிங்கப்படுத்தினார். இவையனைத்தும் பொலிஸ் பாதுகாப்புடன் நடந்தது.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின் சம்பூர் மக்கள் தமது பாரம்பரிய நிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். போரினால் சொல்ல முடியாத இழப்புக்களை இம்மக்கள் சந்தித்து இருந்தனர். மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பின்னரும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இருந்த போதும் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல தமது ஊரை சிறிது சிறிதாக மீளக் கட்டியமைத்து வருகின்றனர். இவர்களின் இந்த முயற்சி பற்றி பங்குனி 2017 நிமிர்வு இதழில் எழுதியிருந்தோம். சம்பூர் மக்கள் தாம் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த குன்றத்தூர் முருகன் ஆலயத்தை கடந்த மார்கழி மாதம் புனரமைக்க முற்பட்டனர். தீப்தி போகல்லாகமவின் அட்டூழியத்திற்கு முன்னராக மார்கழி மாதம் 19 இல் இரு சிங்கள பௌத்த பிக்குகள் அங்கு வந்திருந்தனர். அவ்விடம் ஒரு புராதன சிங்கள பௌத்த விகாரை இருந்த இடம் என உரிமை கோரினர். அங்கு முருகனுக்கு கோயில் கட்டுவதை நிறுத்துமாறு அச்சுறித்தனர்.
அதனையடுத்து அங்கு கட்டுமானப் பணிகளுக்கு உதவி செய்த சிங்கள இனத்தைச் சேர்ந்த பாரவூர்தி சாரதியை சம்பூர் பொலிசார் கைது செய்தனர். அங்கு பௌத்த தொல்பொருட்கள் உள்ளன எனக்கூறி அங்கு கோயில் கட்டுவதை நிறுத்தக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கைத் தொடர்ந்து அங்கு கட்டடம் கட்ட நீதிபதி தடையுத்தரவு வழங்கியிருந்தார். இந்தநிலையில் அப்பிரதேசம் முழுவதும் அரச தொல்பொருளியல் திணைக்களத்தால் கையகப்படுத்தப்படும் என அதன் ஆணையாளர் பேராசிரியர் பி. மடவல மார்கழி 29 இல் தெரிவித்தார்.
ஆலய பரிபாலன சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை 2018 பிறந்த முதலாம் நாளன்று விசாரணைக்கு வருமாறு சம்பூர் பொலிசார் அழைத்தனர். அங்கு தடையுத்தரவை மீறியதாக குற்றம் சுமத்தி அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மூவரும் பாரவூர்தி சாரதியும் தை 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட தகவல் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.
தை 4 ஆம் திகதி இவர்களைப் பிணையில் விடுவிக்க சிரேஷ;ட சட்டத்தரணி ஜெகசோதி அவர்கள் முயற்சி எடுத்தார். இவர்கள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டு மற்றும் தொல்பொருளழிப்புக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்திருப்பதாக தெரியப் படுத்தப் பட்டுள்ளது. பிணை வழங்க முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினரால் குறித்த வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. குறித்த கோவில் பிரதேசமானது தொல்பொருட்துறைக்கானது என ஏற்கனவே வர்தமானிப்பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது என தொல்பொருட்துறையினரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.
அதனை ஆட்சேபித்த சட்டத்தரணி ஜெகசோதி அவர்கள் அவ்வாறாயின் குறித்த வர்த்தமானியை முன்நிலைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து தை 11 வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தை 5, 2018 காலை கொழும்பில் இருந்து தொல்பொருட்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மத்தாள மலைக்குச் சென்று தடயப்பொருட்களாக சிதிலங்கள் சிலவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இந்தத்தடயங்களை ஆய்வு செய்து பௌத்த கோவில் இருந்ததா என்பதை உறுதிப்படுத்துவோம் என்று கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து பெரிய பொங்கலொன்றைச் செய்து பிரித்தும் ஓதவேண்டி வரும் எனவும் தெரிவித்துச் சென்றுள்ளனர்.
தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் சிங்கள அரசாங்கத்தின் திட்டத்தில் இன்னொரு அங்கம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. காணி பறிப்புக்கு சர்வதேச சமூகத்திலிருந்து கண்டனங்கள் எழுமாயின் தொல்பொருள் திணைக்களத்தை முன்னிறுத்தி அதனை நியாயப்படுத்த அரசு நினைக்கிறது. இயற்கை எய்திய நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை யாழ்ப்பாண முற்றவெளியில் தகனம் செய்வதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்ட போது கூட முற்றவெளி தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான படியால் ஒன்றும் செய்ய முடியாது என வழக்கு நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அப்பாவிகளான குன்றத்தூர் முருகன் ஆலய நிர்வாகிகள் சிறையில் அடைக்கப் பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்து மக்களைப் பயமுறுத்தி மத்தாளமலை ஆக்கிரமிப்புக்கு அவர்களிடம் இருந்து எழக்கூடிய எதிர்ப்பை அடக்கலாம் என அரசு நினைக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் தனது சேவைகளை இலவசமாக வழங்கும் சிரேஷ;ட சட்டத்தரணி ஜெகசோதி அவர்கள் பாராட்டுக்குரியவர். அவருக்குத் துணையாக நிற்கும் இளைஞர் குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்.
மத்தாளமலையில் புராதன பௌத்த விகாரை இருந்ததாகவே வைத்துக் கொண்டாலும் அது சிங்கள பௌத்த விகாரையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கணிசமான தமிழ் மக்கள் பௌத்தர்களாக இருந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் போன்ற பல இடங்களிலும் பலவாறாகவும் பரவி இருக்கின்றமை குறிப்படக் கூடியது.
தமிழ் மக்களின் பாரம்பரிய பூமியான மத்தாளமலையைப் பறிகொடுக்காமல் நாம் பாதுகாக்க வேண்டும். இதற்கு சம்பூர் மக்களுக்கு எல்லாவிதமான தார்மீக, பொருளாதார மற்றும் சட்ட உதவிகள் தேவை. உலகம் எங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இதற்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறான அராஜகங்களை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவை தொடர இடமளித்தால் பாதுகாப்பானவை என்று இன்று நாம் நம்பியிருக்கும் எமது வீட்டு கொல்லைப்புறக் காணிகளிலும் புராதன விகாரைகள் கண்டுபிடிக்கப்படும். எமது வீட்டுக்காணிகளும் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாகும்.
ரஜீவன்-
நிமிர்வு தை 2018 இதழ்
Post a Comment