மயிலிட்டிமக்களின் ஏக்கங்கள் எப்போது தீரும்?
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாரம்பரியமாக நல்ல பொருளாதார வளத்துடன் வாழ்ந்த மக்கள் மயிலிட்டியை விட்டு வெளியேறினர். இராணுவத்தினரின் விமானத் தாக்குதலில் சிக்கி அன்றைய தினம் மட்டும் மயிலிட்டி மக்கள் எட்டுப் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலைக் கூட அந்த மண்ணில் தகனம் செய்ய முடியாத சோகத்துடன் ஊரை விட்டே வெளியேறினர். போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டு ஏழரை ஆண்டுகள் முடிவுற்ற போதிலும் அம்மக்களின் நிலங்கள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளன. சும்மா பெயருக்கு சில பகுதிகள் விடுவிக்கப்பட்டாலும் பெரும் பகுதிகள் தொடர்ந்தும் இராணுவ வசமே உள்ளன. மயிலிட்டி ஏன் இப்படி இராணுவத்தினரின் பிடிக்குள் தொடர்ந்தும் இருக்கிறது. பூகோளரீதியில் அதன் முக்கியத்துவம் என்ன? ஆழமாக விடை காணவேண்டிய கேள்விகள் இவை.
அன்று வகைவகையான கடல் மீன்களை சாப்பிட்ட எங்களுக்கு இன்று 200 ரூபாய் கொடுத்தாலும் நல்ல மீன்கள் கிடைப்பதில்லை. அதிகமாக ஆற்று மீனையும், குளத்துமீனையும் சாப்பிட்டு நாக்கே மரத்துவிட்டது. அன்று பனங்காணிகளுக்குள் வாழ்ந்த நாங்கள், இன்று ஆசைக்கு பனங்காய் பணியாரம் சுட்டு சாப்பிடக் கூட ஒரு பனங்காய் 30 ரூபாய்க்கு வாங்கிறோம். மயிலிட்டியில் வாழும் போது, மரவள்ளிக் கிழங்கை பிடுங்கினால் அயலில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுப்போம், பதிலுக்கு அவர்களும் தங்களிடம் உள்ள மரக்கறிவகைகளை தருவார்கள். இன்று எல்லாவற்றுக்கும் இங்கே காசு தான். ஆனால், வருமானமீட்டும் வழி தான் இல்லை.
விமானத்தாக்குதல்களுக்கு பயந்து 90 இல் தற்காலிகமாக உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் வந்துவிடுவோம் என நினைத்து தான் ஊரை விட்டு வெளியேறினோம். இப்படி நிரந்தரமாகவே கலைக்கப்படுவோம் என்று அன்றே தெரிந்திருந்தால் செத்தாலும் அந்த இடத்தை விட்டு ஓரடி கூட நகர்ந்திருக்கமாட்டோம். அரசாங்கம் எமக்கு சொர்க்கத்தைக் காட்டி அங்கு போகச் சொன்னாலும், எங்களுக்கு சொந்த ஊரான மயிலிட்டியின் ஓரடியைக் கூட விடுத்தரமாட்டோம். என்கிறார் மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் வாழ்ந்து வரும் 73 வயதான மூதாட்டி கி.செல்வராணி.
இன்னொரு குடும்பப் பெண்ணான கனகேஸ்வரி கருத்து தெரிவிக்கையில்,
அங்கே ஒரு குடும்பம் கஷ;ரப்பட்டால் கடற்தொழில் செய்பவர்கள் மீன், கருவாடு என்று கொடுப்பார்கள், விவசாயிகள் குரக்கன், மரவள்ளிக் கிழங்கு என்று கொடுப்பார்கள். வறுமையிலும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். இப்போது அப்படி நிலைமை வந்தால் பிச்சையெடுப்பதை தவிர வேறு வழியில்லை. அந்த நிலை வருவதிலும் பார்க்க இறந்துவிடலாம்.
அந்த பெரிய காணி, வீடுகளில் வாழ்ந்த நாங்கள் இங்க முகாமில் உள்ள முற்றத்தில் என்ன செய்ய முடியும். பிள்ளைகள் விளையாடக் கூட இடமில்லை. மழை வந்தால் வீட்டைச் சூழ தண்ணீர் தேங்கி நிற்கும். கழிவறைக் கழிவுகள் வெள்ளத்தில் மிதந்து வீட்டுவாசல் வரை வந்து நிற்கும். குழந்தைகளை நோய் நொடியில் இருந்து காக்க போராடுவதே பெரும் துன்பமாக உள்ளது.
இப்போது இடையில் நிவாரணம் என்ற பெயரில் தந்த அரிசியை வாயில் வைக்க கூட முடியவில்லை. ஒருவித மணம் வீசுவதால் பிள்ளைகள் சாப்பிட மறுக்கிறார்கள். ஈச்சம்பழத்தை பிடுங்கி வந்து பசியுள்ள நேரம் சாப்பிட்டு பசியாறும் எங்களின் நிலை இன்று பெரும் துன்பமாக உள்ளது. என்னுடைய மகளை 3 வயதில் போட்டிருந்த சட்டையோடு மட்டும் கொண்டு வந்தேன். இன்று அவக்கு ஐந்து குழந்தைகள் பத்துக்கு பத்தடி வீட்டில் மூன்று தலைமுறைகள் எப்படி வாழ்வது? இதுவும் எங்களுக்கு ஒரு நவீன சித்திரவதையாகத் தான் உள்ளது.
அன்று கடலோடியாகவும் இன்று மீன் விற்கும் தொழில் செய்யும் வேலும்மயிலும் கருத்து தெரிவிக்கையில், அங்கே இருக்கும் போது எல்லோரும் ஒரு சமநிலையான வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருந்தோம். கஷ;டப்பட்டும் வாழவில்லை. பெரும் செழிப்போடயும் வாழவில்லை. ஆனால் அது ஒரு நிம்மதியான வாழ்க்கை. சொந்த மண்ணில் இருந்து வெளியேறியதால் இருந்து ஒரு மரத்தை வைத்து அது கிளை பரப்ப பரப்ப வெட்டப்பட்ட வாழ்க்கையைத் தான் இன்று வரை நாம் வாழ்ந்து வருகிறோம். நிலத்தில் இருந்து திரும்ப திரும்ப பிடுங்கி எறியப்பட்டு இருக்கிறோம். எங்களின் இடம் திரும்பவும் கிடைக்குமாக இருந்தால் மீண்டும் பழைய வாழ்க்கை வாழுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அங்கே மண் கொத்தியும் பிழைக்கலாம், மீன் பிடித்தும் பிழைக்கலாம்.
பொருளாதார இராணுவ அரசியல் கேந்திர முக்கியத்துவம்
அந்த காலப்பகுதியில் இலங்கையிலேயே மூன்றில் ஒரு பகுதி மீனை மயிலிட்டிதுறைமுகம் தான் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் வகையில் மீன் பிடிகாணப்பட்டது. 3 மீன் பதனிடும் ஐஸ் தொழிற்சாலைகளும், கொழும்புக்கு மீனை உரிய முறையில் பதப்படுத்தி ஏற்றுவதற்கான வசதிகளுடன் ஐந்திற்கும் மேற்பட்ட முகவர்களும் இருந்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தான் மேற்படி மீன்பிடித் துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மயிலிட்டிதுறைமுகமானது புவியியல் ரீதியிலும் எந்தக் புயலுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் தான் அமைந்துள்ளது.
இப்போது மயிலிட்டியை விடுவிக்க இராணுவம் பின்னடிப்பது ஏன் என அம்மக்களிடம் வினவியபோது, எங்களுக்கு மீன்பிடியாலும், விவசாயத்தாலும் அள்ளித்தந்தபூமி. அதே போல் தான் இராணுவத்தினரும் அங்கு விவசாயம் செய்து நிறைய வருமானங்களை ஈட்டிவருவதாக கேள்விப்படுகிறோம். அதனால் தான் அவர்களும் அந்த வளம ;கொழிக்கும் பூமியில் இருந்து வெளியேற மறுக்கின்றனர் என்கின்றனர்.
அங்கே உற்பத்தி செய்த மரக்கறி வகைகளை கடந்த வருடங்களில் படையினரே நேரடியாக கொண்டு வந்து சுன்னாகம், மருதனார்மடம், திருநெல்வேலி ஆகிய சந்தைகளில் விற்கிறார்கள். அவற்றை நாம் காசு கொடுத்து வாங்கி சாப்பிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.
இது தொடர்பில் மயிலிட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கசெயலாளர் ந. ரட்ணராஜாவுடன் பேசிய போது, இப்போது மயிலிட்டி என்ற பெயருக்கு 500 இலிருந்து 1000 மீற்றருக்குள்ளான பிரதேசத்தை இராணுவத்தினர்; விடுத்துள்ளனர். அதுவும் நிலப்பகுதியை மாத்திரமே விடுத்துள்ளனர். கடல் பிரதேசத்ஐத விடுவிக்காத காரணத்தினால் மீனவமக்கள் அப்பகுதிக்கு சென்று மீளக் குடியேற முடியாத நிலையில் உள்ளனர். ஆகவே எங்களை மயிலிட்டிக்கு விடும் போது எல்லாவற்றையும் ஒன்றாக விடுவிக்க வேண்டும். கரையை விட்டு கடலை விடுவிக்காமல் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விடுவித்தால் தான் எங்களால் முன்பு போல நிம்மதியாக தொழில் செய்து வாழ முடியும்.
மயிலிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பிரதேசத்தின் மயிலிட்டித்துறை எனும் தற்காலிக முகாமில் இப்போது வசித்து வருகிறோம். இங்கே ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று தலைமுறைக்கு மேல் சந்ததிகள் பெருகி விட்டதால், இடப்பற்றாக்குறை பெருமளவுக்கு உள்ளது. இதனால், பொருளாதாரவளக் குறைவாலும், இடமின்மையாலும் பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிலக்குடியிருப்பு மக்களின் நிலமீட்ப்புக்கான தொடர் போராட்டம் எங்களுக்கு பெருத்த நம்பிக்கையை தந்துள்ளது. இனி நாமும் அந்த வழியின் மூலம் தான் எமது மண்ணை மீட்கபோராட உத்தேசித்துள்ளோம்.
யாழ்ப்பாணப் பல்கலையின் புவியியல்துறை பேராசிரியரும், கடல் வள ஆய்வாளருமான கலாநிதி சூசைஆனந்தனிடம் பேசிய போது, இது இலங்கையிலேயே அமைக்கப்பட்ட முதலாவது மீன்பிடித் துறைமுகமாகும். மயிலிட்டி என்கிற பெயரில் மீன்பிடிக் கப்பலும் அன்று ஓடியது. அந்தளவுக்கு முக்கியமானதொரு துறைமுகம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் முதலாவது மீன்பிடித்தளம் மயிலிட்டி ஆகும்.
பலாலி படைத்தளம், விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவை அருகில் இருக்கும் சூழ்நிலையில் மயிலிட்டியை விடுவித்தால் அது தங்களுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இராணுவத்தினர் கருதுகின்றனர். யாழ்ப்பாண பிரதேசத்தில் ஒரு பெரும்பகுதியை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இராணுவத்தினர் விரும்புகின்றார்கள் . அவர்களுக்கு தேவையான முழுமையான வளங்களும் மயிலிட்டியிலும் அதனைச் சூழவும் கிடைக்கின்றன.
அப்பகுதியில் உல்லாச விடுதிகளும், கலையரங்குகள், மின் உற்பத்தி நிலையங்கள், கடற்பொறியியல் அலுவலகங்கள் மற்றும் விடுதிவசதிகள் சிறியயோக்கற் தொழிற்சாலைகள் என்பன இராணுவத்தினரால் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. இராணுவத்தினரால் பயிர்கள் விளைவிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்துக்கென விமானநிலையமோ, துறைமுகமோ இல்லை. அவற்றை இன்று இராணுவம் மட்டுமே வைத்திருக்கிறது.
ஓட்டுமொத்தத்தில் இப்பகுதி குட்டி இராணுவ சிற்றரசு போலவே இன்று தொழிற்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது. இப்பகுதியில் நடைபெற்று வருகின்ற இடித்தழிப்பு நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது நிரந்தரமாகவே மத்திய அரசின் கீழ் இயங்கும் யூனியன் அரசாக அல்லது வத்திக்கான் நகர அரசுபோல ஒரு அரசாக வடமாகாண சபை எல்லைக்குள் இயங்கும் துளையிடப்பட்ட அரசாக மாறலாம் என்கிற அச்சம் புத்திஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது. இதனை அரசுக்குள் அரசு என்றும் அழைக்கலாம். ஒரு நாட்டினுள் வருகின்ற அரசுகள் துளையிட்ட அரசு (Pநசகழசயவநன ளுவயவந) என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தெற்கில் அம்பாந்தோட்டையில் பெரும் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிப்பதைப் போல் வடக்கிலும் மயிலிட்டியையும் தொடர்ந்து இராணுவம் வைத்திருந்தால் அதன் ஒரு பகுதி சீனாவிடம் போகும் வாய்ப்புக்கள் அதிகம் என எச்சரிக்கிறார் கலாநிதி சூசைஆனந்தன்.
செ. கிரிசாந்
நிமிர்வு பங்குனி 2017 இதழ்
Post a Comment