மண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு.




ஈழத்தின் மூத்த கவிஞர் கல்வயல் வே.குமாரசாமியின் நினைவஞ்சலி நிகழ்வின் பதிவுகள்


கவிதை என்பது மொழியினுடையதொரு உச்சம். மொழியின் செம்மையான வடிவமே கவிதை. கவிதை கடைந்தெடுத்த பிழிவாய்ச் சாறாய், திரட்சியாய் ஊற்றெடுத்துப் பிரவாகிக்க வேண்டும். அவ்வாறான கவிதைக்குள் ஒருமை, பன்மைப் பிழைகள் போன்றன ஏற்படுவதை  ஏற்க முடியாது. இவ்வாறான, எந்தவிதப் பிசிறல்களும் இல்லாமல் வெளிவந்தவை தான் கல்வயலுடைய கவிதைகள். எங்களுடைய மண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு எனப் புகழாரம் சூட்டினார் ஈழத்தின் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன்.

கடந்த-11.12.2016 யாழ். சங்கத்தானையில் காலமான  ஈழத்தின் மூத்த கவிஞரும், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் வருகை தரு விரிவுரையாளருமான  கல்வயல் வே.குமாரசாமியின் நினைவஞ்சலிக் கூட்டம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் அண்மையில் கொக்குவில் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் மூத்த எழுத்தாளர்  க.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்றது.

  கவிஞர் சோ. பத்மநாதன் மேலும் பேசுகையில், மிக இளம் வயதிலேயே கவியரங்குகளில் பங்குபற்றித் தன்னுடைய பெயரை நிலைநாட்டியவர் கல்வயல் வே.குமாரசாமி. கவிஞர்களான வே. கந்தவனம், பி.நாகராஜன், சொக்கன், முருகையன், காரை சுந்தரம்பிள்ளை போன்ற பலருடனும் சேர்ந்து  ஊர் ஊராகச் சென்று கவியரங்குகளில் இவர் பங்குபற்றியிருக்கிறார்.

அவர் இறப்பதற்கு முன்னர் சுமார் மூன்று ஆண்டுகளாக நடமாட முடியாத சூழலில் வாழ்ந்தவர். கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் சுந்தரம் டிவகலலா முன்பள்ளிச் சிறுவர்களுக்காக சிறுவர் பாடல்களை இறுவட்டாக்கிச் சகல முன்பள்ளிக் கூடங்களுக்கும் வழங்க வேண்டுமென முனைந்தார்.   முதலாவது இறுவட்டிலே கல்வயலினுடைய பாடல்கள்  சிலவற்றையும், ஏனைய யாழ்ப்பாணத்துக் கவிஞர்கள் சிலருடைய பாடல்களையும் சேர்த்து வெளியிட்டார். அதன் பின்னர் கடந்த வருடம் கல்வயல் இயற்றிய பாடல்களைத் தனியாகத் தொகுத்து ஒரு இறுவட்டை வெளியிட்டோம். அதன் பின்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற வடமாகாண சபையின் கலாசார விழாவில் கல்வயல் குமாரசாமியை அழைத்துக் கௌரவித்ததுடன் கொழும்பு தமிழ்ச் சங்கமும் அவருக்கான கௌரவத்தை வழங்கியிருந்தது. இந்தக் கௌரவங்களையெல்லாம் உடல் நலிவுற்ற போதும் மிக்க மகிழ்ச்சியுடன் நேரில் சென்று கல்வயல் குமாரசாமி பெற்றுக் கொண்டார். இவ்வாறான கௌரவங்கள் அவரை இன்னும் சில காலங்கள் வாழ வைத்திருக்கும் என்ற மனப் பதிவு என்னிடத்திலிருக்கிறது. எனவே, கல்வயல் குமாரசாமியின் உடல் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றென்றும் எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் என்றார்.

இளம் எழுத்தாளரும், பருத்தித்துறைப் பிரதேச செயலருமான த.ஜெயசீலன் கருத்துத் தெரிவிக்கையில், ஈழத்துக் கவிதைப் பிதாமகர்கள் என நாங்கள் கருதுகின்ற மஹாகவி உருத்திரமூர்த்தி, முருகையன், நீலாவணன் ஆகியோரில் முருகையனின் நெருங்கிய உறவினர். மஹாகவி , முருகையன் ஆகியோருடைய காலத்தில் ஒரு சிறுவனாக அவர்களுடைய அணுக்கத் தொண்டராக கல்வயல் காணப்பட்டார்.

 ஈழத்துக் கவிதைத் துறையிலே மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் கல்வயல் குமாரசாமி.  அவர் தமிழ் இலக்கணம், இலக்கியம்  முதலியவற்றில் விற்பன்னர். மரபுக் கவிதைகளின் யாப்புக்கள், மரபுகள் என்பவற்றில் அவருக்கு நல்ல அனுபவமிருக்கிறது.  1970 ஆம் ஆண்டில் தமிழ் வாசகப் பரப்பில் புதுக் கவிதையின் தோற்றம் ஏற்பட்ட பின்னர் அதனுடைய பண்புகள் என நாம் எவற்றைச் சொன்னோமோ அவற்றையெல்லாம் தன்னையுடைய மரபுக் கவிதைகளில் கல்வயலார் மிகவும் இலாவகமாகக்  கையாண்டிருக்கிறார். மிகச் சாதாரணமாக எம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களை அவர் தன் கவிதைகளில் பயன்படுத்துவார். அது மாத்திரமன்றி எங்களுடைய பிரதேசங்களுக்கேயுரிய சில சொல் வழக்குகளைப் பயன்படுத்துவதும் அவருக்கேயுரிய தனிச் சிறப்பாகவிருந்தது.

கல்வயலார் எழுதிய கவிதைகள் முழுவதும் இன்னமும் தொகுதிகளாக வெளிவரவில்லை. அவர் எழுதிய கவிதைகளில் 'சிரமம் குறைகிறது' என்ற கவிதைத் தொகுதி 1986 ஆம் ஆண்டிலும், மரண கனவுகள் 1990 ஆம் ஆண்டளவிலும் வெளிவந்திருக்கின்றன. குறியீடு, படிமக் கவிதைகளில் கணிசமான கவிதைகள் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அவரால் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கவிதைகள் இன்னமும் தொகுக்கப்படவில்லை என்ற குறையிருக்கிறது. அந்தக் குறையை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்றார்.

மூத்த எழுத்தாளர் க. தணிகாசலம்  கருத்துத் தெரிவிக்கையில், கல்வயல் வே. குமாரசாமியின் கவிதைகளில் சமூக மாற்றத்திற்கான ஆவல் நிறையவே தொக்கி நின்றது.

'புதியதான உலகம் அமைக்கவும் 
பூரணச் சுடர் ஏற்றி மகிழவும்,
விதியனைத்தையும் மாற்றித் திருப்பியும்,
 வேக ஞான  விளை நில மேடையில் 
மதியினால் உயர் மானிட மேதைகள்  மல்கவும்,
 கொடுமைக்கனல் தீயவும் சதியினாடும்  
திறமுடனே எழும் தகமை வாய்ந்துயர் நாம் 
புதுச் சிற்பிகள்.'   
எனக் கவிஞர்களைச் சிற்பிகளாக உருவகித்து 'பிரம்மாக்கள்' எனும் தலைப்பில் அவர் கவி இயற்றியுள்ளார்.

சமூக அநீதிகளைச் சாடுகின்ற போக்கு அவருடைய கவிதைகளில் அதிகம் காணப்படுகிறது. அவருடைய கவிதைகளில் விமர்சனத்துடன் கூடிய கோபம் வெளிப்பட்டு நிற்பதை அதிகம் காண முடியும். கவிஞர் முருகையன் அவருடைய சீற்றம் ஒரு அறம் சார்ந்த சீற்றம். தவிர மறம் சார்ந்த சீற்றமல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதைய நவீன யுகத்திலும் எங்களுக்கெதிரான பல்வேறு ஒடுக்கு முறையிலிருந்து நாங்கள் விடுபடவில்லை. சாதிப் பிரச்சினை, இனப் பிரச்சினை, பெண்ணியம் போன்ற அடிமைத்தனங்களுடனேயே நாம் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சமுதாயத்தில் வாழ்ந்து  மக்களின் மோசமான   பிற்போக்குத்தனங்களையும், துன்பங்களையும் காணக் கூடிய கவிஞனுக்கு  சாதாரண மனிதர்களை விட அதீதமான உணர்ச்சி காணப்படும். மகாகவி பாரதியார் கூட இவ்வாறான உணர்ச்சி தேவை என்பதை வலியுறுத்துகிறார். இவ்வாறான வேகத்துடன் மொழிப் பயிற்சியும் சேரும் போது தான் சிறந்த இலக்கியங்கள் உருவாகுவதற்கு வித்திடுகின்றன. அந்த வேகம் கல்வயல் குமாரசாமியிடம் நிறையவே காணப்பட்டது. என்றார்.

தொகுப்பு: செல்வநாயகம் ரவிசாந்-
நிமிர்வு பங்குனி 2017 இதழ் 


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.