புதிய அரசியலமைப்பும் வடகிழக்கு இணைப்பும்


புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் பரிசீலனைக்காக கல்முனையிலிருந்து அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான எஸ்.அரசரெத்தினம் அனுப்பிவைக்கப்பட்ட ஆவணம அப்படியே வருமாறு.
புதிய அரசியலமைப்பு சம்பந்தமான அறிவித்தல் அரசால் வெளியிடப்பட்டதும் வட கிழக்கு இணைப்பு பற்றியே இப்போதும் பலராலும் பேசப்பட்டு வருகின்றது. சாதாரண தமிழ் முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி சிங்கள அரசியல்வாதிகள் பலரும் கட்சி வேறுபாடின்றி இதனை இப்போது விவாதப் பொருளாக்கியிருக்கின்றனர்.
வடகிழக்கு இணைப்பென்பது பலரும் விமர்சிப்பதற்கு அது ஒரு அரசியல்  சார்ந்த விடயம் மட்டுமன்றி அது தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையுமாகும். இலங்கை சுதந்திரமடைந்த 1948 இலிருந்து வெள்ளையர்கள் விட்டுச் சென்ற சோல்பரி அரசியல் யாப்பை எதிர்த்து கிட்டத்தட்ட 1950 இலிருந்தே தமிழ் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கிவிட்டனர். இதற்காக இன்றுவரை தமிழ்மக்கள் தமது சுதந்திரத்தைக் கேட்டு ஆட்சியிலிருந்த அனைத்து அரசுகளுக்கெதிராகவும் போராடி வருகின்றனர். மிதவாதத் தலைமைகளின் கீழ் அஹிம்சைப்போரில் 1980 வரையிலும் ஈடுபட்ட அவர்கள் பின்னர்  2009 வரை தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கினர். 
இப்போராட்டங்கள் யாவும் கடந்தகால அரசுகளால் ஆயுதமுனையில் அடக்கி ஒடுக்கப்பட்டன. அவற்றால் நாடு பெரும் உயிரழிவுகளையும் பொருளாதார அழிவுகளையும் எதிர் கொள்ள நேரிட்டது. பெருந்தொகையான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்ததுடன், இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர். இதனால் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்டதுடன் இப்போது ஜெனீவாவில் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணையையும் எமது நாடு எதிர்நோக்கியுள்ளது.
மேற்கூறிய சம்பவங்கள் அனைத்திற்கும் நாட்டில் நடைமுறையிலிருந்த அரசியல் யாப்புக்களுடன் இப்போதைய அரசியல் யாப்புமே காரணமென புதிய நல்லாட்சி அரசு இனங்கண்டுள்ளது. எனவேதான் சிறுபான்மை இனங்களெவையும் இனிமேல் அரசுக்கெதிராக உரிமைப் போராட்டங்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென்ற நோக்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு முன்மொழிந்துள்ளார்.
இவ்வரசியல் யாப்பில் இடம்பெறவேண்டிய தமிழ் மக்களின் குறைந்த பட்சக் கோரிக்கைகள் கீழே தரப்படுகின்றன.
01.மக்களின் இறைமை உறுதிப்படுத்தப்படுவதுடன் தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
02.சிறுபான்மை மக்களின் மொழி, மதம் போன்ற அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
03. இப்போதுள்ள ஒற்றையாட்சி முறை நீக்கப்பட்டு சம~;டி முறையிலான மாகாண அரசுகள் உருவாக்கப்பட வேண்டும்.
04. வடகிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகங்களாக அங்கீகரிக்கப்பட்டு அவை இணைக்கப்பட வேண்டும்.
05. இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களுக்கு இப்போது மாகாண அரசுகளுக்குள்ள அதிகாரங்களை அர்த்தமுள்ளதாக்குவதுடன் நிதி, நீதி, காணி அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.
வடகிழக்குமாகணங்களின்இணைப்பு
வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பென்பது இப்போது ஒரு புதிய விடயமல்ல. இலங்கை இந்திய ஒப்பந்தங்களின் கீழ் 1987 இல் இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்கள் விடுதலைப்புலிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஓரளவு சிறப்பாக இயங்கின. ஆனாலும் நாட்டில் அமைதியை விரும்பாத தூரநோக்கமற்ற சிலரின் செயல்பாடுகளினால் அவற்றைப் பிரித்து வைத்து 2006 இல் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா, மாகாணங்களின் இணைப்பைப் பிழையெனத் தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. மாறாக, அவை இணைக்கப்பட்ட விதமே பிழையெனக் குறிப்பிட்டார். இவ்விடயம் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
01. வடகிழக்கு மாகாண இணைப்புக்கு அங்குள்ள எந்தவொரு இனமாவது தமது  எதிர்ப்பைத் தெரிவிக்குமானால் அங்கு வசிக்கும் நிரந்தர வாக்காளர்களிடம் அபிப்பிராயம் கோரப்படல் வேண்டும்.
02. அபிப்பிராய வாக்கெடுப்பின் போது வடகிழக்கு மாகாணத்திலிருந்து புலம்பெயர்மக்களின் அபிப்பிராயமும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
03. கிழக்கு மாகாணத்தில் மட்டுமின்றி வடக்குமாகாண தமிழர், முஸ்லிம், சிங்கள மக்களிடமும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.
அபிப்பிராயவாக்கெடுப்புநடாத்தப்படும்முறைகள்
01. கிழக்கு மாகாணத்திற்குத் தனியாகவும் வடக்கு மாகாணத்திற்குத் தனியாகவும் மூன்று இனங்களுக்கும் வாக்கெடுப்பு ஒரே தினத்தில் நடாத்தப்பட வேண்டும்.
02. அரசியல் கட்சிகளை அல்லது தனியாட்களை குழுவாகவோ அல்லது தனித்தோ சுயாதீன முறையில் வடகிழக்கில் பிரசாரம் செய்ய அனுமதித்தல் வேண்டும்.
03. வாக்கெடுப்பு தினத்தில் உள்நாட்டுÆ வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துதல் வேண்டும்.
04. தமிழ் வாக்காளர்களுக்கு மஞ்சள் நிறத்தினாலான வாக்குச் சீட்டும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு பச்சை நிறத்தினாலான வாக்குச் சீட்டும் சிங்கள மக்களுக்கு வெள்ளை நிறத்தினாலான வாக்குச் சீட்டும் வழங்கப்பட வேண்டும். (இந்நிறங்கள் வேறுபடலாம்)

05. வடகிழக்கு மாகாணங்களில் ஒருமித்து வாழச் சம்மதமா அல்லது பிரிந்து வாழச் சம்மதமா எனப்பொருள் பட இரண்டு சின்னங்களையும் ஒதுக்கி தேர்தலை நடாத்தலாம்.
06. தேர்தல் முடிவில் இரண்டு மாகாண வாக்குச் சீட்டுக்களும் தனித்தனியாக இன ரீதியில் பிரித்து எண்ணப்படல் வேண்டும்.
தேர்தல் முடிவுகளும் நடைமுறைகளும்
01. தேர்தல் முடிவுகளின்படி கிழக்கு மாகாண மூவின மக்களும் வடக்கு மாகாணத்துடன் இணைய விரும்பினால் கிழக்கை வடக்குடன் இலகுவாக இணைத்து விடலாம்.
02. ஏதாவது இரண்டு இனங்கள் வடக்குடன் இணைய விரும்பினால் கிழக்கில் எஞ்சிய ஒரு இனத்திற்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வை வழங்கலாம்.
03. கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மட்டும் வடக்குடன் இணைய விரும்பினால் அவர்கள் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்படல் வேண்டும்.
கிழக்கிலுள்ள நிலத் தொடர்பான திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களுடன் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பிரதேசங்கள் நிலத் தொடர்பற்ற விதத்தில் இணைக்கப்பட்டு வடக்குடன் இணைக்கப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்கள் உள்ளுராட்சி சபைகள் மூலம் அல்லது பிரதேச செயலகங்கள் மூலம் இனங்காணப்படலாம்.
04. கிழக்கிலுள்ள முஸ்லிம் சிங்கள மக்கள் அல்லது வடக்கிலுள்ள முஸ்லிம் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வடகிழக்கு மாகாணங்களுக்குள் தமிழ் மக்களுடன்; இணைந்து வாழ விரும்பாவிட்டால் அவர்களுக்கு சகல அதிகாரங்களையும் கொண்ட விதத்தில் ஒரு பிராந்திய சபையை உருவாக்க முடியும்.
05. வடகிழக்கிலுள்ள முஸ்லிம், சிங்கள மக்களும் வெவ்வேறாக இன ரீதியாகப் பிரிந்து வாழ விரும்பினால் முஸ்லிம், சிங்கள அரசியல் கட்சிகள் அவற்றிற்கான தீர்வை மத்திய அரசுடன் பேசி உருவாக்கிக்கொள்ள முடியும்.
ஆவை பின்வருமாறு அமையலாம்.
தேர்தல் முடிவைப் பொறுத்து வடமாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களையும் கிண்ணியா, மூதூர், ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற வடகிழக்கில் இனங்காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களையும் நிலத்தொடர்பற்ற விதத்தில் ஒன்றிணைத்து அம்பாறை மாவட்டத்தை மையமாக வைத்து ஒரு முஸ்லிம் மாகாணசபையை அமைக்கலாம்.

சிங்கள மக்களும் வடகிழக்கிலுள்ள தமது பகுதிகளை நிலத்தொடர்பற்ற விதத்தில் இணைத்து ஒரு அதிகாரங்கொண்ட பிராந்திய சபையை அம்பாறை அல்லது கந்தளாயை மையமாக வைத்து அமைத்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு விரும்பினால் சிங்கள மக்கள் வாழும் அம்பாறைத் தொகுதியை ஊவாமாகாணத்துடன் சேர்க்கலாம். அதேபோன்று திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களை வடமேல் மாகாணத்துடன் இணைக்கலாம்.
06. பொதுவானவை :
இம்முறை உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டில் சமாதானம் நிலைத்திருக்க வேண்டும். இவ்வரசியல் அமைப்பு தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அல்லது அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்களைக் கொண்டிருக்கக் கூடாது.
கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்களும் சேர்ந்திருக்க விரும்பாவிடில் அவர்களின் விருப்புக்கேற்ப அரசியலமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும்.
ஒரு இனத்துடன் இன்னுமொரு இனம் வடகிழக்கு இணைப்புக்காக பேரம் பேசுதலை நடாத்தக் கூடாது.

ஒரு இனத்தின் சுதந்திரத்திற்குக் குறுக்கே இன்னுமொரு இனம் இருத்தல் கூடாது.
நீண்டகாலத்திற்கான தீர்வு இது என்பதால இது தவிர்க்க முடியாததாகும். இங்குள்ள வேறு இனமக்கள் அம்மாகாண சபைக்குள் மற்றைய இனங்களுடன் சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அல்லது தமது வாழ்விடங்களையும், சொத்துக்களையும் ஏனைய மாகாணசபைகளுக்கு இடமாற்றிக் கொள்ளலாம்.
அரசாங்கம் ஒரு போதும் இனவாதிகள் அல்லது அமுக்கக் குழுக்களுக்கு அடிபணிந்து புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியில் பின்வாங்கக் கூடாது.
நாட்டில் இனங்களுக்கிடையே சமாதானமும் சாந்தியும் நிலைத்திருக்கட்டும்

நிமிர்வு பங்குனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.