காணாமல் ஆக்கப்படும் ஆக்கப்பட்டோர் விவகாரம்




வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழர் தாயகப் பகுதிகளில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. போர் முடிந்து ஏழாண்டுகளாகிய பின்பும் தங்கள் உறவுகள் திரும்பிவராததை அடுத்து வவுனியாவில், கிளிநொச்சியிலும், மருதங்கேணியிலும் தொடர் உணவுதவிர்ப்பு போராட்டங்களை மக்கள் ஆரம்பித்துள்ளனர்.    ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் கூட காணாமல் ஆக்கப்பட்ட சிலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பியதை அடுத்தும், இலங்கையின் இரகசிய சித்திரவதை முகாம்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியதை அடுத்தும் தங்களின் உறவுகளும் இலங்கையில் எங்காவது ஒரு மூலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என்கிற அடிப்படையில் அம்மக்கள் தொடர்ந்தும் தன்னெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இலங்கைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமானது எப்படி கடந்து வந்துள்ளது என்பதனை சுருக்கமாக முதலில் பார்ப்போம். 
இலங்கைக்குள்ளே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஆனது  ஜே.வி.பி கிளர்ச்சியுடன் ஆரம்பமானாலும், வடக்கு கிழக்கில் குறிப்பாக சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் தான் தீவிரம் பெறுகிறது. அந்த நாள்களில் கடைக்கு சென்ற இளம் பிள்ளைகள், படிக்கச் சென்ற மாணவர்கள் என பலரும் திடீர் திடீர் எனக் காணாமல் போனார்கள். இப்படி காணாமல் போனவர்கள் எங்கே என தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் காணாமல் போன பலர் செம்மணி புதைகுழியில் இருந்து எலும்புக் கூடாக மீட்க்கப்பட்டார்கள்.  இப்போதைய ஆட்சி மாற்றத்தின் கிங் மேக்கர் என்று சொல்லப்படுகின்ற சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் தான் தமிழர் தாயகப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது பெரிதும்   பூதாகரமாக பேசப்பட்டது. 
இலங்கைக்குள்ளே குறிப்பாக தமிழர் தாயக பகுதிகளில் நான்கு வகையான சூழல்களில் காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் நடந்தேறியது.
முதலாவது, இந்த நாடு இராணுவ படைபல ரீதியில் இரண்டாகப் பிளவுபட்டு இருந்த சூழல். ஒன்று விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசம். இரண்டாவது இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து உயர்கல்வி, தொழில்வாய்ப்பு, உறவினர்களை பார்க்க என்று இன்னோரன்ன விடயங்களுக்காக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்தவர்கள் முகமாலை, ஓமந்தை பிரதேசங்களில் வைத்து காணாமல் ஆக்கப் பட்டார்கள். 

இரண்டாவது,  இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வசித்த மக்கள் பலர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டும்  பலர் வெள்ளை வான் மூலமும் தெருவில் வைத்தும் பலவந்தமாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு உள்ளார்கள்.

மூன்றாவது, போர் முடிவுக்கு வந்த போது போரில் ஈடுபட்டு நிராயுதபாணிகளாக  சரணடைந்த போராளிகள், பொதுமக்கள்  ஆகியோர் அகதிகள் முகாமை நோக்கி வந்த போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு உள்ளார்கள்.

நான்காவது, போர் முடிந்த பல நாட்களின் பின்னர் புலிகள் இயக்கத்தில் ஒரு நாள் இருந்தவர்களையும் சரணடையுமாறு இராணுவம் அறிவித்தது. அவர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய உள்ளதாகவும் இராணுவமும், இலங்கை அரசும் கூறியது. அதனை நம்பி  சர்வதேச போர் நியமங்களின் படி கணவனை மனைவியும், பிள்ளைகளை பெற்றோரும் இறுதியுத்தம் இடம்பெற்ற வட்டுவாகல் பிரதேசத்திலும், ஓமந்தையிலும், செட்டிகுளம் அகதிகள் முகாமிலும் வைத்து இராணுவத்தினர் முன்பாக கையொப்பம் வைத்து ஆதாரத்துடன் இராணுவத்திடம் கையளித்தனர். அவர்களில் பலர் இன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சாட்சியங்கள் இன்றும் சளைக்காமல் போராடுகின்றன.
காணாமல் ஆக்கப் பட்டோர் விடயம் என்பது எமது இனத்தின் தேசியப் பிரச்சினை. கடந்த தேர்தல்களில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கல், அரசியல் கைதிகள் விடுதலை என்பவற்றை சொல்லி தான் எங்களின் பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் வாக்கு கேட்டன. அந்த அடிப்படையில் வாக்களிப்பு வீதத்தை கணிசமானளவு தீர்மானிப்பதில் இந்த மக்கள் செல்வாக்கு செலுத்தி உள்ளார்கள். இதையும் தாண்டி, மேற்குலகம் தனது அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் நாடெங்கும் கருத்தரங்குகளை நடாத்தி ஆட்சிமாற்றத்துக்கு வித்திட்டது.         முன்னைய ஆட்சியாளரான ராஜபக்சவை அகற்றுவதற்கு இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்ட இந்தியாவும் மேற்குலகும் இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டுவிட்டு, ஒரு நீதியை பெற்றுக் கொடுக்காமல்  தங்களின் தத்துப் பிள்ளையான மைத்திரி அரசை காப்பாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதனைக் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கைத்தீவில் யாரால் யார் காணாமல் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்கிற விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் என்பது இலங்கைத்தீவில் திட்டமிட்ட  இன ஒடுக்குதலுக்கும், தமிழரை இலங்கையிலிருந்து அகற்றும் நோக்கிலும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் தனித்தேசக் கோரிக்கையை முறியடிக்க இலகுவான வழி அவர்களைக் காணாமல் போனோர் ஆக்குவதே என சிங்கள அரசு செயற்பட்டது. இவை அரச உயர்மட்டத்தினரின் பூரண ஆசீர்வாதத்துடன் தான் செயற்படுத்தப்பட்டுள்ளன. தமிழரைக் கைது செய்யாமல் காணாமல் போனோர் ஆக்கிவிட்டால் எவ்வித நீதி விசாரணைக்கும் முகம் கொடுக்க வேண்டியதில்லை என அரசு நினைத்தது. ஆனால் எம்மவர்களின் அசமந்தப் போக்கினால் அதனை இலங்கை அரசு இன்று சாதித்து வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த உறவுகளை நாங்கள் தேசிய சொத்தாக தான் பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் அனைவரும் சாட்சியங்கள். போரின் பின்னர் மனித உரிமை மீறல் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய சர்வதேச அழுத்தங்களை அரசு எதிர்நோக்கியுள்ளது. சர்வதேச மனித உரிமை மீறல் அல்லது போர்க்குற்ற விசாரணை வரும் போது எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்குச் சொல்லக் கூடிய நேரடிச் சாட்சிகள் இவர்கள் தான். இந்த சாட்சியங்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களிடமிருந்து ஒரு முழுமையான வாக்குமூலத்தை பதிவு செய்து வைப்பதற்கான எந்த திட்டமும் எங்களது அரசியல் தலைமைகளிடமோ, சிவில் சமூக அமைப்புக்களிடமோ இல்லை. உள்ளக விசாரணை, காலநீட்டிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறப்பு போன்றவற்றில் கூட அந்த மக்கள் விரக்தியும் சலிப்பும் அடைந்த நிலையிலேயே இருக்கின்றார்கள்.  ஆனால், எங்களுக்கோ சாட்சியங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள். வயதான அம்மாக்கள் நோய்வாய்ப்பட்டோ, வயதாகியோ இறக்கிறார்கள். இந்த விசாரணைகளை துரிதகதியில் நடத்தாமல் எவ்வளவுக்கெவ்வளவு அரசாங்கம் இழுத்தடிக்கிறதோ அதற்கு எங்கள் அரசியல் தலைமைகளும் துணை போகின்ற விடயம் வேதனையானது. இவையெல்லாம் அரசுக்கே சாதகமாக அமைகின்றது.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரும் எம் சமூகத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். பக்கத்து வீட்டில் ஒரு பிறந்தநாளோ, கலியாணவீடோ சந்தோசமாக நடக்கும் போது தனது மகனுக்கு இவையெல்லாம் செய்து பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என்கிற வயதான தாயின் ஏக்கம் அவரின் ஒட்டுமொத்த உளவியலையுமே சிதைத்து விடுகிறது. அப்படியான நிகழ்வுகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கவியலாத  பெரும் உளச் சிக்கலுக்கு முகம் கொடுக்க நேர்கிறது.    பிள்ளைகளின் நினைவுகள் அவர்களை நித்தமும் துரத்துகின்றன.
மக்கள் உள்@ரில் இருந்து உலகநாடுகள் வரையிலான அமைப்புக்கள் மீது நம்பிக்கை வைத்து இவர்களுக்கு பின்னால் போனால் என் பிள்ளை வருவான் என்கிற நோக்கில் கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக அலைந்து திரிந்து கிலோ மீற்றர் கணக்கில் ஓடிக் களைப்படைந்து சலிப்படைந்து இறுதியில் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்டனர். இதை தான்  சிங்கள அரசும் எதிர்பார்த்தது.

தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக இறுதிப் போர் காலப்பகுதியை முன்வைத்தாவது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் முழுமையான பெயர் விபரங்களோ, அல்லது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடமிருந்து ஒலிப்பதிவு,  ஒளிப்பதிவு, எழுத்தில் ஆவணமாக கூட தமிழ் அரசியல் தலைமைகளிடமோ, அமைப்புக்களிடமோ இல்லை என்பது தான் வேதனையானது. இந்த தகவல்களை குறைந்த பட்சம் வடமாகாண சபையாவது திரட்டி இருக்கலாம்.
அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உதாரணமாக மஹிந்தவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு சில சாட்சியங்களை பதிவு செய்திருந்தாலும், பெரும்பாலான மக்கள் தங்களுக்கு உள்@ரில் நடத்தப்படும் எந்தவொரு உள்நாட்டு பொறிமுறைகளிலும் விசாரணைகளிலும் நம்பிக்கை இல்லை எனக் கூறி நிராகரித்துள்ளார்கள். கண்கண்ட சாட்சியங்களில் பலர் சர்வதேச அமைப்புக்களுக்கும், ஊடகங்களுக்கும் சாட்சியமளித்துள்ளனர். அவர்களில் பலர் உள்நாட்டில் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் தங்களின் ஏனைய பிள்ளைகளையும், குடும்ப உறுப்பினர்களையோ பாதுகாக்கும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.   

ஒரு பிரஜையின் மனித உரிமையானது தாயின் வயிற்றில் கருக்கொள்ளும் போதே உறுதிப்படுத்தப்பட்டு ஆரம்பமாகி விடுகிறது. கருவாகியிருக்கும் போதே தாய் ஆரோக்கியமான உணவுகளை உட்;கொள்ள வேண்டும். கருவை கலைக்க முடியாது. இல்லாவிட்டால் சட்டம் பாயும். கர்ப்பமான இளம் தாய் தாய் கடத்தப்பட்டு இருந்தால் அங்கே இரட்டை உயிர்கள் கடத்தப்பட்டுள்ளன. அந்த நுணுக்கமான மனித உரிமை பற்றியும் நாம் இங்கு பேச வேண்டியது அவசியமானது. ஆனால், கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கே இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாத நாம் வயிற்றில் இருந்த சிசுவுக்கு நீதியை எங்ஙனம் எதிர்பார்ப்பது? 

இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது  என்.ஜி.ஒக்களுக்கு பணம் காய்க்கும் மரமாகி விட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றுகிறோம். அவர்களுக்கு குரல் கொடுக்கிறோம் எனக் கூறி நிறைய அமைப்புக்கள் அதற்கென அலுவலகங்களையும், பணியாளர்களையும், வாகனங்களையும் ஒதுக்கி அவர்களுக்கு உயர்தர ஹோட்டல் சாப்பாடுகளையும் வழங்குகிறது. இன்று இது ஒரு தொழில் துறையாக மாறி விட்டது. இதில் பெரும்பாலானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக குரல் கொடுப்பதாக கூறி இந்த விடயங்களை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதனை கண்கூடாகவே பார்க்க கூடியதாக உள்ளது.     

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலான மீதி விடயங்களுடன் அடுத்த இதழில் இக்கட்டுரை நிறைவு பெறும். 

அ. ஈழம் சேகுவேரா 
நிமிர்வு பங்குனி 2017 இதழ் 



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.