ஆசிரியர் பார்வை


தமிழர் தாயகத்தில் 50 நாட்களைக் கடந்தும் மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தங்கள் பிள்ளைகள் எங்கே? என  நீதி கேட்டு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலை ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
தங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவிலும், முள்ளிக்குளத்திலும் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். கொதிக்கும் வெயிலிலும், அனல் காற்றுக்கு மத்தியிலும் பெரிதாக யாருடைய ஆதரவுமின்றி தளராமல் மக்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் தான் பெருமளவு போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். இந்தப் போராட்டங்களின் நியாயத்தையும் வரலாற்றுக் கனதியையும் உணர்ந்து ஏனையோரும் இவற்றில் இணைந்து கொள்ள வேண்டும்.

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் முடிவடைந்து இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளன. தமிழ் அரசியல் தலைமைகளோ கூட்டாக இந்தப் போராட்டங்களில் பங்கேற்காமல் தனித்து தனித்து ஆதரவளிக்கிறார்கள். அரசாங்கமோ எந்த தீர்வையும் வழங்காமல் போராட்டத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. மஹிந்தவையும், இராணுவத்தையும் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்கிறது மைத்திரி அரசு. மேற்குலக நாடுகளும் இந்த ஆட்சியைக் காப்பாற்றினால் போதும் என்கிற நிலைப்பாட்டில்  தட்டிக் கேட்க கூட திராணியற்று உள்ளன.

நிமிர்வின் மூன்றாவது இதழ் இதுவாகும். ஜெனீவாவில் தமிழர் தரப்பு நடந்து கொண்ட முறை தொடர்பில் பல்வேறு அதிருப்திகளும் நிலவி வரும் நிலையில் அது தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் தாங்கி இந்த இதழ் வருகிறது.  அத்தோடு அரசியலில் இளைஞர் பங்கேற்பின் அவசியத்தை வலியுறுத்தியும், சிங்களவர்கள் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்பில் எவ்வாறான மனப்பதிவை கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களின் வடக்கு விஜயம் ஊடாக அறிந்தும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் இன்று எந்த நிலையில் உள்ளது, கட்டிளமை பருவத்தினரை எவ்வாறு வழிநடத்துவது என்கிற கட்டுரைகளையும் தாங்கி இம்மாத இதழ் வெளிவருகிறது.

செ.கிரிசாந்-
நிமிர்வு சித்திரை 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.