கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் ‘நினைவின் நிழலில்’
1960 களின் பிற்பகுதியிலேயே கவிதை உலகத்துக்குள் பிரவேசித்த சண்முகம் சிவலிங்கம் அவர்கள் சாதாரண மொழியில் அசாதாரண உணர்வுகளை வெளிப்படுத்திய ஓர் உன்னத கவிஞர். சமூகப் பிரக்ஞையும் புரட்சிகர அரசியல் நோக்கும் இவரது கவிதைகளில் முதன்மை பெற்றிருந்தன. 1977 க்குப் பிந்திய காலங்களில் சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இன ஒதுக்குதல்களால் வளர்ச்சியடைந்த தமிழ்த் தேசியவாதம் ஆயுதப் போராட்ட நிலைக்குச் சென்றது. இராணுவ ஒடுக்குமுறையும் ஆயுதப் போராட்டமும் ஏற்படுத்திய எதிர்விளைவுகள் இவரது கவிதைகளில் பெரும் தாக்கத்தை செலுத்தின.
‘இன்று இல்லெங்கிலும் நாளை’ என்கிற தலைப்பிலான கவிதையில் தமிழ்மக்களின் நிலையை அச்சு அசலாக வெளிப்படுத்தி இருப்பார். இந்தக் கவிதை மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்திலும் இடம்பெற்று பலரது கவனத்தையும் பெற்றது.
இன்று இல்லெங்கிலும் நாளை
எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக.
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.
அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரைஉங்கள் வல்லபம் ஓங்குக.
இதையும் விட “படாத பாடல்கள”,; “பிள்ளைக் கறி” போன்ற கவிதைகள் அன்றைய போராட்ட வாழ்வின் குரூரங்களின் படிமங்களை கொண்டுள்ள வீச்சான கவிதைகளாகும். இப்படியான ஏராளமான கவிதைகளை கவிஞர் எழுதியிருந்தாலும் அன்றைய கால கட்ட அரசியல் நிலைகள் உயிராபத்தான சூழ்நிலைகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பெயரளவுக்கு கூட இல்லாதிருந்த நிலைமைகள் காரணமாக அவற்றை கவிதைத் தொகுப்புக்களில் கூட அவர் சேர்க்கவில்லை. ஆனால் இத்தனையும் தாண்டி இவரது பல கவிதைகளில் சமூக அரசியல் பிரச்சினைகள் கூர்மையாக எதிரொலித்தன. அவை சமூகமாற்றத்திற்கும் வித்திட்டன.
தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அதனை நேசித்தவராக காணப்பட்ட இவர் போராட்ட களத்தில் தனது ஒரு மகனை இழந்தவர் . அந்த வலியையும் மன உணர்வுகளையும் இவரின் பெரும்பாலான படைப்புகளில் காணலாம்.
நீர்வளையங்கள் என்ற கவிதை தொகுப்பில் 82 ஆம் ஆண்டு எழுதிய கவிதை தரப்பட்டுள்ளது. அந்தக் கவிதை முள்ளிவாய்க்காலை எங்களின் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் தீர்க்கதரிசனப் பார்வையோடு அமைந்திருக்கிறது.
மீண்டும் எழுந்திருக்கையில்
எனது மயிர் பொசுங்கி விட்டது
எனது தோல் கருகி விட்டது
எனது காதுச் சோனைகள் எரிந்து விட்டன
இந்த ரணங்களோடு தான்
மீண்டும் எழுந்திருக்கிறேன்
இந்த ஊனங்களின்
தழும்புகளுடன் தான் நான் இனி வாழ வேண்டும்
எனது மன வெளியோ
வெந்த வனம் போல் உள்ளது
தீப்பிடித்து கருகிய புற்கற்றைகள்
இங்கொன்று அங்கொன்றாய் தெரிகிறது
இடையே சாம்பல் கலந்த மண்
ஆடி கருகிய புற்கற்றைகளில் இருந்து
இரண்டொரு பசும் முளைகளை
சின்ன சின்ன பச்சைப் படர்கள்
தெரிகிறதா?
உற்று உற்றுப் பார்க்கிறேன்
இந்த மனவெளி இனியும் பசுமை பூக்குமா?
வெந்து தணிந்த இந்தக்
கரியும் சாம்பலும், வெளியும்-
இதனிடையே தான்
நான் இனி உலாவப் போகிறேனா?
இப்படியாக உலகறிந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவாக ‘நினைவின் நிழலில்’ நிகழ்வு 07.05.2017 அன்று அவரது பிரதேசமான கல்முனையில் நடைபெற்றது. கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் எழுத்தாளர் உமாவரதராஜன் தலைமையில் கல்முனை பற்றிமா தேசிய பாடசாலை கிளணி மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் சி .மௌனகுரு அவர்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு அரங்கு ஆய்வு கூடம் வழங்கிய ‘அப்பா’ கவி நாடகம் அரங்கேற்றப்பட்டது. சிறப்புரையை விரிவுரையாளர் கவிஞர் சோ .பத்மநாதன் நிகழ்த்தினார். அத்துடன் ஜோயல் குழுவினரால் கவிஞரின் சில கவிதைகள் உள்ளடங்கிய ஒளித்தொகுப்பான ‘வரிகளும் வடிவமும்’ திரையிடப்பட்டது. இவ்வாறு எம்மோடு தொடர்ந்து நகரும் சம்பவமாக “நினைவின் நிழலில்” எனும் பொருத்தமான தலைப்பில் இந்நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
ஈழத்தின் கிழக்கே கல்முனை மாநகர் பாண்டிருப்பில் 1936 மார்கழி பத்தொன்பதில் பிறந்த இவர் 2012 சித்திரை 20 இல் தனது எழுபத்தியாறாவது வயதில் மரணித்தார்.
தமிழ் இலக்கியத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பை போன்றே கல்வித்துறைக்கும் அவர் பெரும் பங்காற்றியிருந்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியரான இவர் இந்தப் பிரதேசத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றிய போதும் இறுதியில் தனது சொந்த ஊரான பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆங்கில மொழியில் மாத்திரமின்றி பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்ற ஒரு மனிதராக அவர் விளங்கினார். இவரை மாணவர்கள் ஸ்டீபன் மாஸ்டர் எனவும் இலக்கிய துறைசார்ந்தோர் சசி எனவும் அவரை அழைத்தனர்.
கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் படைப்புக்கள் இந்திய இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளின் கவனத்துக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. காலம் நகர்ந்தாலும் அவரின் படைப்புகள் நிலைத்து நிற்கின்றன. அவற்றின் மூலம் அவரோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நவீன கவிதைகள் சிறுகதைகள் ஆழமான விமர்சனக் கட்டுரைகள் மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான அடையாளங்களை பதிவு செய்த ஆழுமைமிக்க கவிஞராக அவர் விளங்கினார். “நீர்வளையங்கள்” (கவிதை தொகுப்பு) “சிதைந்து போன தேசமும் தூர்ந்து போன மனக்குகையும்” (கவிதைதொகுப்பு) “காண்டாவனம்” (சிறுகதைத் தொகுப்பு )ஆகியவை இவருடைய வெளிவந்த நூல்களாகும் . இவரின் பல படைப்புகள் ஆங்கிலம் உட்பட பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பல கவிதைகளை அவர் தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார். ஆங்கில மொழியிலும் அவர் கவிதைளை எழுதியிருக்கிறார். இவரின் ‘காட்டுத்தோடை’ சிறுகதை, எழுத்தாளர் உமாவரதராஜனின் 'எலியம்' சிறுகதை என்பன அஷ்லி ஹல்பே, ரஞ்சினி ஒபேசேகர, எம்.ஏ. நுஃமான் ஆகியோர் தொகுத்த A Lankan Mosaic என்னும் ஆங்கிலத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன .
‘நீக்கம்’ என்ற கதையும் ‘ஆக்காண்டி’ ‘சமாதானச் சாக்கடை’ போன்ற இவரது படைப்புகள் பிறரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. கனடாவிலிருந்து செல்வா கனகநாயகம் தொகுத்தLutesong And Lament என்னும் ஆங்கிலத் தொகுதியில் இவை இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் சிவசேகரம் ‘துருவத் தரையின் வசந்தப் பூவுக்கு’ என்னும் கவிதையையும் இன்னும் சில கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை Saturday Review இல் வெளிவந்தன. இவரது ஆக்காண்டி கவிதை சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.
இவர் சுயவிளம்பரத்தை விரும்பாத ஒரு மனிதர் .எனினும் இன்று அவரைப் பற்றி பேசுவதற்கும் நினைவு கூர்வதற்கும் நாம் விழைகிறோம் எனில் அதற்குக் காரணம் அவருடைய கலை -இலக்கிய ஆற்றலும், நேர்மையையும், சமூகப் பற்றும் அவரின் தமிழ்த் தேசிய உணர்வுமேயாகும்.
புவிநேசராஜா கேதீஸ்-
பாண்டிருப்பு-
நிமிர்வு வைகாசி 2017 இதழ்
Post a Comment