வடகொரிய - அமெரிக்க போர் சீனாவின் கைகளில்


   


வடகொரியா - அமெரிக்கா இடையிலான போர் இறுதி எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் மே-13 போர் என பிரகடனப்படுத்தும் அளவுக்கு ஊடக மிரட்டல் ஏற்பட்டு விட்டது. இத்தகைய போர் நிச்சயமாக அணுவாயுதப் போரின் எல்லையை நோக்கியே நகரும் என்பதும் அதன் பாதிப்புகள் உலகம் முழுவதும் தாக்கத்தை விளைவிக்கும் என்பதையும் இந்தஊடகப் போர் நிலைவாதிகள் உணரத்தவறுகின்றனர். ஏனைய போர்களைப் போல் அல்ல அணுவாயுதப் போர் என்பதை இரண்டாம் உலக யுத்தத்தின் போதே ஜப்பான் உணர்ந்திருந்தது. இக்கட்டுரை வடகொரிய-அமெரிக்கப் போரின் உண்மை நிலையை வெளிப்படுத்த முயலுகிறது.

அமெரிக்காவைப் பொறுத்த வரை வடகொரியா மீதான நகர்வு அதற்குப் பல சாதகமான விளைவுகளை  ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த கடந்த ஏறக்குறைய இரண்டு மாதகால போருக்கான தயார்ப்படுத்தல் அமெரிக்கத்தரப்புக்கு இலாபகரமானது. இத்தகைய இலாபம் வடகொரியா அணுவாயுதம் பாவிக்கும் நிலையை தவிர்க்கும் வரை சாதகமானது ஆனால் வடகொரியா திட்டமிட்டு அணுவாயுதத்தினை பிரயோகித்தால் அது மிக அபாயகரமான தாக்கத்தை அமெரிக்காவுக்கும் உலகத்திற்கும் ஏற்படுத்தும்.  காரணம் வடகொரியா அணுவாயுதத்தைப் பாவித்தால் ஏனைய அணுவாயுத பலங்கொண்ட நாடுகளும் உலகம் முழுவதும் குவித்திருக்கும் ஆயிரக்கணக்கான அணுவாயுதங்களை பாவிக்கத் தூண்டப்படும். அதனால் அணுவாயுதப் பாவனை நிகழாதவரை அமெரிக்காவுக்கு தன் நலனை பேணிக்கொள்ள அதிகமான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதுவும் யுத்தம் நிகழாமல் யுத்த நிலைக்கான கொதிநிலை நீடித்தால் அமெரிக்காவுக்கு மேலும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

தற்போது அமெரிக்காவின் இரண்டு பாரிய யுத்தக்கப்பல்களுடன், நீர்மூழ்கிகளும், விமானம் தாங்கி நாசகாரியும் கொரியக் குடாவில் குவிந்துள்ளன. இத்தகைய யுத்த கப்பல்களுக்கு அனுசரணை வழங்குவதென்ற பெயரில் ஜப்பானிய கப்பல்களும் கடற்படையும் அமெரிக்காவுடன் இணைந்துள்ளன. கடந்த 2010 வரையும் ஜப்பானிய இராணுவ வளர்ச்சியை அமெரிக்கா முற்றாக தடுத்து நிறுத்தியிருந்தது.  கொரியக்குடாவிலும், தென்கிழக்கு சீனக்கடல் பகுதியில் நிலவிய நெருக்கடியையும் கருத்தில் கொண்டு இக்கட்டுப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியது. இவற்றைவிட அமெரிக்க எதிர்ப்புவாதிகள் இல்லாத ஒரு நாடாக ஜப்பானை கடந்த அறுபது ஆண்டுகளில் அமெரிக்கா மாற்றியுள்ளது. ஜப்பானை அமெரிக்காவின் கூட்டு நாடாக மாற்றி கொரியக்குடாவை கூட்டமாக கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.  ஜப்பானின் வளர்ச்சியானது அமெரிக்க நலனுக்கானது. அதுவே எதிர்கால அமெரிக்காவின் இருப்புக்கு வலு சேர்க்கும்.

 அடுத்து அமெரிக்கா அடைந்த பாரிய வெற்றியாக ஏவுகணை எதிர்ப்பு கோபுரத்தை தென்கொரியாவில் நிறுவியமையைக் கொள்ளலாம்.  ஐரோப்பாவுக்கு வெளியே அல்லது ஆசியாவில் முதல் முதலாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏவுகணைத்திட்டத்தின் பிரிவான Thaad  (Terminal High Altitude Area Defense)  எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை நிறுவுவது சாத்தியப்படடுள்ளது. இதற்கான செலவாக ஒரு பில்லியன் டொலர்களை தென்கொரியா அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுள்ளார்.  இவ்வாறான பொருளாதார ஆதாயம் போக இந்த இராணுவத்தளம் தென்கொரியாவில் அமைந்திருப்பதனால் கிழக்காசியா முழுவதையும் கண்காணிப்பதற்கான வல்லமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. இது சீனாவின் அமெரிக்காவுடனான போட்டியில் அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.  இந்த ஏவுகணைத் திட்டத்தை நிறுவுவதற்காக முதலில் உக்ரேனுடன் அமெரிக்கா நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரஷ்யாவின் எழுச்சி அதனை சாத்தியமற்றதாக்கி விட்டது.

தென்கொரியா விவகாரத்தில் சீனாவின் எல்லாவகை உத்திகளையும் அமெரிக்கா தகர்த்துவிட்டதாக சொல்லப்படுவது எந்தளவுக்கு சரியானது என்ற வாதம் நிகழுகிறது. அமெரிக்கா ஏவுகணைத் தடுப்பு நடவடிக்கையானது கொரியக் குடாவில் ஏற்படுத்தியுள்ள தந்திரமான நகர்வை சீனாவில் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வடகொரிய-அமெரிக்க போரைத் தூண்டுவதில் சீனா முனைப்புச் செலுத்த வேண்டியதாகியுள்ளது. அமெரிக்காவின் ஏவுகணைத் திட்டத்தை தகர்ப்பதற்கு ஒரு போரா, அல்லது அத்தகைய மிரட்டலை ஏற்படுத்தி அமெரிக்காவை பின்வாங்கச் செய்யும் உத்தியா, என்ற நிலைக்குள் சீனாவின் வடகொரிய திட்டமிடல் சென்றுள்ளது. இதனை சரிசெய்ய போர் அவசியமானதாக மாறிவிட்டதென கருதும் சந்தர்ப்பத்தில் அணுவாயுதப் போர் எழாத வண்ணம் நிலைமையைக்  கையாண்டு கொண்டு சீனா வடகொரியாவை அமெரிக்காவுடன் போர் செய்யவும் அதேநேரத்தில் அமெரிக்காவுடன் சமதளத்தில் பேசவும் முயற்சிக்கின்றது.

 இந்தக்கணம் சீனாவின் எழுச்சிக்கான தருணமாக கருதப்படுகின்றது. அமெரிக்க ஏவுகணைத்திட்டத்தை உக்ரேனிலிருந்து பின்வாங்கச் செய்தது போல் தென்கொரியாவிலிருந்தும் பின்வாங்கச் செய்ய முடியும் என்பது தவறான கணிப்பாகவே அமையும். அமெரிக்காவின் நகர்வில் பாரிய வெற்றியை எட்டியுள்ள இந்நிலையிலிருந்து அது பின்வாங்குமா? அமெரிக்காவின் வீழ்ந்து கொண்டிருக்கும் உலக அதிகாரப் போட்டியில் இது ஒரு நிமிர்வு மட்டுமல்ல. ஒரு பாரிய நிமிர்வென்றே கூறமுடியும். இது படிப்படியாக ஆசியக்கண்டம் முழுவதையும் அமெரிக்காவின் செல்வாக்குக்குள் கொண்டு வருவதை சாத்தியமாக்கும்.

படிப்படியாக ஏனைய ஆசிய நாடுகளில் எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்படுமாயின் சீனாவின் ஆசியா நோக்கிய எழுச்சி அர்த்தமற்றதாகும். இதனால் சீனா நிச்சயம் போரைத் தூண்டும். அதாவது சமாதான பேச்சுக்களுக்கான தூண்டலை ஏற்படுத்துவது போல் போரைத் தூண்டும். அதில் ஒரம்சமாகவே சென்யாங் நகரில் ஒரே நாளில் ஆறு தடவை அபாயச் சங்கினை சீனா ஊதியுள்ளது. மேலும் வடகொரியாவை சீனா எச்சரிப்பதன் மூலம்  சீனாவும் அமெரிக்காவும் சேர்ந்தே வடகொரியாவை தாக்குவது போலான இராஜதந்திர நகர்வுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வடகொரியாவைப் போருக்குள் செல்லத் தூண்டுகிறது. இது சீனாவின் வியூகம்.

கலாநிதி கே.ரி. கணேசலிங்கம்
நிமிர்வு வைகாசி 2017 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.